வலைப்பதிவர் விழாவில் எல்லோரும் மகிழ்ந்து பாராட்டிய உணவுக்குழு தலைமை தோழி ஜெயாவின் மகன் விபத்துக்குள்ளாகி உயிருக்குப்போராடி இன்று பிழைத்துவிட்டான்...முகநூலில் இச்செய்தியைப்பகிர்ந்ததும் ஏராளமானோர் அவனுக்காக நேர்மறை எண்ணங்களையும் வேண்டுதல்களையும் அள்ளித்தந்ததால் இன்று ஜெயா நிம்மதியான மூச்சு விடுகின்றார்..
இணையத்தளம் தந்த உறவுகளின் வலிமையை உணருகின்றேன்..
முகநூல் பதிவை இங்கு பகிர்கின்றேன்.
17.12.15 அன்று மதுரையில் விபத்துக்குள்ளாகி இரவு திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் சேர்த்து உடனே அறுவை சிகிச்சை செய்தும் மூச்சு விட முடியாது போராடி தவித்த மூன்று நாட்களும் ஜெயாவின் தவிப்பை சொல்லிமாளமுடியாது...வினோத் பிழைத்துவிட்டான்.
மருத்தவத்தினால் மட்டும் இது நிகழவில்லை...
அனைவரின் வேண்டுதல்களாலும் என்பதே உண்மை.
நாள் 19.12.15..
வினோத் விரைவில் நலமடைவார்மா..
தோழி இரா.ஜெயா அவர்களின் மகன் வினோத் விபத்துக்குள்ளாகி திருச்சி பிரண்ட்லைன் மருத்தவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு இன்னும் கண்விழிக்கவில்லை. ஜெயாவின் வேதனையை அளவிடமுடியாதது.
எண்ணங்களின் வலிமையால் அவன் விரைவில் நலமடைய உங்களது வாழ்த்துகளும் ,வினோத்தை சென்றடையட்டும்..
எப்போதும் தன்னம்பிக்கையுடன்,முகச்சிரிப்புடனே காணப்படும் தோழியை இப்படி வேதனையுடன் காண முடியவில்லை...
எழுந்திடு வினோத் உன் அம்மாவை தேற்ற..
நம் அனைவரின் நம்பிக்கையால் வினோத் நலமடையட்டும்..
நாள் 20.12.15
கவலை வேண்டாம் ஜெயா..காலையில் ஜெயா கண்ணீர் விட்டதும் மனம் தாளாமல் கிளம்பி விட்டேன்.நேற்று நீங்க வந்த பின் தான் கொஞ்சம் நல்லாருக்கேன்மா என்றதும் தேறிடுவாங்கன்னு நினச்சு வந்துவிட்டேன்.
உங்களின் வாழ்த்துகள் இன்று வினோத்தை சுவாசிக்க வைக்கும் என்று நம்புகின்றேன்.முகநூல் பொழுதுபோக்கு தளம் அல்ல என்பதை அடிக்கடி உணர்கின்றேன்.எத்தனை உள்ளங்கள் ஆறுதல் கூறி ஜெயாவின் கண்ணீரைத்துடைக்கின்றன...மனம் நெகிழ்ந்து போகின்றேன்.உனக்காக இத்தனை தோழமைகள்...இருக்கும் போது கவலை அழிம்மா...நன்றி தோழமைகளே..
21.12.15
உங்களின் மனம் நிறைந்த நம்பிக்கை நிறைந்த வாழ்த்துகளால் வினோத்தின் உடல்நிலையில் மெல்ல முன்னேற்றம் வருகின்றது ..தானாகச் சுவாசிக்க துவங்கியுள்ளான்....ஆக்சிஜன் துணையுடன்...
இரவு முழுதும் இப்படியே இருந்தால் நாளை அறைக்கு மாற்ற வாய்ப்புள்ளது..என கவலை குறைந்த குரலில் ஜெயா கூறினார்கள்..
உங்களின் அன்பை எண்ணி மனம் நெகிழ்ந்து உள்ளார்கள்...முகம் தெரியாமல் என் மகனுக்காக வேண்டியவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என தழுதழுக்கின்றார்கள்....
இன்னும் கொஞ்சம் நம்பிக்கையை வினோத்துக்கு அளிப்போம்..அவன் அம்மா கலங்காமல் சிரிக்க...மிக்கநன்றி அனைவருக்கும்..
நாள் 22.12.15
பிழைத்துவிட்டான் வினோத் உங்களாலும்,மருத்துவர் இராதாக்கிருஷ்ணன் அவர்களாலும்....
மதுரையில் விபத்து நடந்து மண்ணீரல் சிதைந்து உள்ளேயே இரத்தம் சுற்றிச்சுழல...
வெளியே காயம் இல்லாத காரணத்தால் ஏதோ மயக்கம் என்றெண்ணி மதுரையிலிருந்து தன்னந்தனியாக ஏதோ ஒரு நம்பிக்கையில் திருச்சி கொண்டுவந்து பிரண்ட்லைன் மருத்துவனையில் சேர்த்த உடன்...பார்த்த மருத்துவர்..உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் இல்லையெனில் காப்பாற்ற முடியாதென கூறி 20% நம்பிக்கைதான் உள்ளது....முடிந்தவரை காப்பாற்றுகின்றேன்..என்று கூறி உள்ளே சென்றார்..
12 மணிநேரம் குருதி உடலெங்கும் பாய்ந்து ஆங்காங்கே உறைந்து நிற்க ,அதை வாட்டர் சர்வீஸ் பண்ணுவது போல் அலசி எடுத்து அறுவை சிகிச்சை முடிந்து இயந்திரங்களால் உயிரோடு இருந்தான்.
நேற்று இரவு மட்டும் அவனாக மூச்சு விட்டால் மட்டுமே நல்லது என மருத்துவர் கூறிச்சென்ற நிலையில் ...விடிய விடிய தூங்காமல் ஓடி ஓடி பார்த்து மகன் தானாக மூச்சு விடுவதைப்பார்த்து மகிழ்ந்த ஜெயா விடிந்ததும், கீதா நீங்கள் அனைவரும் தந்த குழந்தை அவன் எல்லோரின் வேண்டுதல்களால் ,நம்பிக்கைகளால்,மட்டுமே அவன் பிழைத்து விட்டான்மா...என மகிழ்வான அழுகையுடன் கூறிய பொழுது மனதிலிருந்த சுமை விலகியது..
உங்களது வாழ்த்துகளால் மட்டுமே அவன் பிழைத்து உள்ளான் என்பதை உணர்கின்றோம்...
என்ன சொல்ல...உங்களின் கரம் பிடித்து கண்கலங்குவதை விட...
இனி கவலையில்லை.....நன்றி மட்டும் சொல்லி ஒதுக்க முடியாது உங்களைத்தோழமைகளே...
தொடர்வோம் .கூடுதலான அன்புடனும்,நட்புடனும்...மகிழ்வாய்..