World Tamil Blog Aggregator Thendral: April 2014

Wednesday, 30 April 2014

பெண்களும் அரசியலும்

20.04.14 அன்று விஜய் டி.வி. நீயா ?நானா? விவாதம் .

பெண்களுக்கு அரசியல் அறிவு தேவையா ?இல்லையா?என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக கவிஞர்.குட்டி ரேவதியும்,வழக்குரைஞர் அஜிதா அவர்களும் கலந்து கொண்டனர்.

பெண்மையின் இரு பக்கமும் அன்று உணரப்பட்டது.

தேவை இல்லை என்பவர்களின் கருத்துக்களாய்
-----------------------------------------------------------------------------
*என் குடும்பம் நல்லாருக்கு எனக்கு ஏன் அரசியல்  தெரியனும் ?தேவையில்லை என்பதே பெரும்பாலோரின் கருத்தானது.எனக்கு அழுத்தும் வேலைச்சுமையில் இது தேவையில்லை,அரசியல் ஆர்வமூட்டுவதாக இல்லை,அழகு முக்கியமாகக் கருதுவதால் தேவையில்லை என பெண்களின் அறியாமையை வெட்டவெளிச்சமாக்கின.
*ஆசிரியரின் கூற்றாய்  அரசியியலைப் பற்றி மாணவிகளுக்கும் சொல்லித்தரமாட்டேன் என்றது அதிர்ச்சியைத் தந்தது.நாட்டின் அரசியியலையும் ,பொருளாதாரத்தையும் உணராத மாணவர்கள் எப்படி வருங்காலத் தூண்கள் ஆவார்கள்.

தேவை என்பவர்களின் கூற்று மகிழ்வைத் தந்தது.-
-----------------------------------------------------------------------------

*எனக்குத் தேவையான,நான் விரும்பும்  கல்வி எனக்கு கிடைக்கவில்லை எனில்காரணமென்ன என விளக்கி.கல்விக்கொள்கையை உருவாக்கும் அரசியியல் அறிவு கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும் .அரசியியல் பற்றி பெண்கள் தெரிந்திருக்கூடாது என்பதிலும் ஒரு அரசியியல் உள்ளதென ஒரு கல்லூரிப்பெண் அழக்காக பொறுமையுடன் எடுத்துக்கூறியது சிறப்பாக அமைந்தது.
தன் மகளுக்கு அண்மையில் உள்ள பள்ளியில் ஆர்.டி.இ.ஆக்ட்டின் படி கல்வி கேட்டுப் போராடியப்பெண் அழகாக அரசியியல் அறிவு ஏன்  தேவை என்பதைப் பற்றி விளக்கினார்.

வழக்குரைஞர் அஜிதா
---------------------------------------
தரமற்ற பொருளை வாங்க வேண்டிய கட்டாயத்தை அரசியியல்
 உருவாக்கியுள்ளது.

தாய்ப்பாலில் கூட 17%விசம் கலந்துள்ளதென ஆய்வு கூறுகின்றது.

டி.வி.க்கள் எந்த பென்ணும் ஒல்லியாக அழகாக ,வெள்ளையாக இருக்க வேண்டுமென தூண்டுகின்றது.இதை பார்க்கும் பெண்கள் அழகு நிலையம்,அழகு சாதனப்பொருட்களுக்காக அதிகம் செலவு  செய்ய வேண்டிய
கட்டாயத்திற்கு தள்ளப்படுவதும் ஒரு அரசியியல் தான்.நாம் நாமாக இருப்பதை தவறு எனக் கற்பிக்கப்படுகின்றது.நமக்கு நடக்கும் வன்முறைகளை தட்டிக் கேட்க அரசியியல் அறிவு தேவையாக உள்ளதென கூறினார்கள்.

கவிஞர் குட்டி ரேவதி
--------------------------------
தற்பொழுது உள்ளாட்சி அரசியியலில் 44,000 பெண்கள் பதவியில் உள்ளனர்.
கொஞ்சம் அரசியியல் அறிவுள்ள பெண்கள் உள்ளனர்.ஆனால் பிரதிநிதித்துவம் எடுப்பதில்லை என்பதே குறை.
பிறருக்குத் தெரியாமல் வீட்டிற்குள் நடக்கும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள பழக்கப்பட்டுள்ளனர்.
தன் உரிமை எதுவென அறியாத நிலையில் பென்கள் உள்ளனர்.
150வருடங்களுக்கு முன் சாவித்திரி பாய் என்ற பெண்மணி தெருவில் இறங்கிப் போராடியதன் விளைவே இன்று நாம் கற்கும் கல்விக்கு அடிப்படை என்பதை உணரவில்லை.எதுவும் போராடியே பெண்கள் இந்த நிலையை அடைந்துள்ளனர்.
பெண்களின் சுயநலம் அடியோடு அழிக்கப்பட வேண்டும்.
சமூகம் பெண்களை ஒதுக்கி வைத்துள்ளதை அறியாத நிலையிலே இன்று பெண்கள் உள்ளனர்.
என விவாத களம் பெண்களுக்கு அரசியியல் அறிவு தேவை என்பதை அவர்கள் வாயிலாகவே சொல்லவைத்த விதம் அழகு.
----------------------
 என் கருத்தாய்

மனித இனத்தில் சரிபாதி உள்ள பெண்கள் ஈடுபடாத எதுவும் சிறக்காது

உரிமையோடு வாங்கண்ணே.வாங்கக்கா என அழைத்து வியாபாரம் செய்யும் அண்ணாச்சி கடைகள் தொலைந்து போய்க்கொண்டுள்ளது.பேரம் பேசி ,உறவை வளர்க்கும் நம் சிறு வணிகர்கள் பன்னாட்டு வணிகத்தின் பளபளப்பின் முன்னால் நிற்கமுடியாமல் அழிந்து கொண்டுள்ளனர்.

ஒரே இடத்தில் எளிதாக வாங்கலாம் அவன் என்ன விலை விற்றாலும் பரவாயில்லை என ஓடும் நாம் நம் நாட்டு வணிகர்கள் அழிவது பற்றி சற்றும் யோசித்தோமில்லை.

கல்விக்கு விலை கொடுக்க பணத்தை நோக்கி பறக்கும் நாம்  ,தவறவிடுவது நம் உறவுகளை என்பதை உணர்ந்தோமில்லை.

இவ்விவாதத்தில் கலந்து கொண்டு அரசியியல் அறிவு வேண்டும் என கூறிய பெண்கள் எளிமையாக இருந்தது அழகு.மகிழ்வாகவும் இருந்தது.அறிவை நாடும் பெண் ஆடம்பரத்தை நாடமாட்டாள் என்பதைக்காட்டியது.

தெளிவாக கருத்துக்களை பொறுமையாக எடுத்துக்கூறிய விதமும் அருமை.

அவர்களின் விரிந்த விசாலமான பார்வை பெண்மையின் சிறப்பை மேலும் கூட்டுவதாக அமைந்தது.வாழ்த்துக்கள் கூறவைத்தது.

தேவையில்லை என வாதிட்டவர்களின் ஆடம்பரமும்,தெளிவில்லாத பதட்டமான பேச்சும்,தான் பிடித்த முயலுக்கு மூணுகால் தான் என பிடிவாதமாக இருந்ததும்,சுயநலமான தன்மையும்  பெண் வளர வேண்டிய பாதை நெடுந்தூரம் என்பதை சுட்டிக்காட்டியது

.நாம் வாழும் வாழ்க்கையில் அரசியியல் கலந்துள்ளது .இதை அறிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் பெண்ணினம் உள்ளது என உலகுக்கு உணர்த்தும்  விதமாய்

 விஜய் டி.வி.யின் நீயா?நானா?
அமைந்தது நிகழ்ச்சி தயாரித்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றியும்.


 
 

Tuesday, 29 April 2014

ஆண்களுக்காக

ஆண் சந்ததி பற்றி ஆண்கள் சிந்திக்கவே மறுப்பது ஏன்?பெண்கள் தான் விழிப்புணர்வின்றி ...ஆண்களுமா?
வருங்காலச் சமுதாயம் மதுவின் பாதையில் ...மயக்கத்தில் தள்ளாடும் நிலை விரைவில்...

அப்பா மகன் பேரன் என்று மதுவின் வரிசை நீளப் போகின்றது.தடுக்க முயற்சி பண்ணுவது யார்?

ஒரு பெண் நந்தினி குரல் கொடுக்கின்றாள் .இணைந்திருக்க வேண்டாமா?

மதுவால் அழியும் குடும்பங்களில் ஒன்றாய் நாளை உங்கள் குடும்பமும் இருக்கலாம்...
யாரும் செய்ய மாட்டார்கள் .நாம் தான் நம் சந்ததிக்காக போராட வேண்டும்...

மேஜர் வரதராஜன்

காசுக்கு விலை போகும்
களவாணி கூட்டமே
காவலுக்கு உயிர்தந்த
சோதரன் வரதராஜனின்
கால்தூசுக்கு இணையாவீரோ...?

Monday, 28 April 2014

ஒரு நிமிடம் நினைப்போமா..!


 -காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்தார்....
அவர் மகளின் குரலாய்....

அப்பா டாட்டா
-------------------------
உன் கைகளில் தவழ
உன் மடியில் தூங்க
உன் கைகோர்த்து நடக்க
தாடி குத்தும் முகத்தை
தாங்கி முத்தமிட
உன் பார்வையில்
உலகு காண
கனவுகளுடன் காத்திருந்தேன்.....
பறந்து வந்து அணைத்து மகிழ்வாயென
பாதை நோக்கி காத்திருந்தேன்
அம்மாவின் கை பிடித்து....

பெட்டியில் தூங்குறியே
வெயில் அதிகமுன்னா
பனிக்கட்டியில் உறங்குற...

எனை தூக்கும் கைகளில்
எந்திரத்தை தூக்கி
எல்லை காக்கையில்
எதிரியவன் சுட்டான்னு
எல்லாரும் சொல்றாங்கப்பா..

கண்விழித்து நீ காக்க
கண்டபடி சுத்துற
அண்ணன்களுக்கும் ,அக்காக்களுக்கும்
என் தவிப்ப எப்படி சொல்ல...

அம்மாக்கு துணையிருப்பேன்
நானும் உன்வழியில்
நடந்திடுவேன்....
அன்னை நிலம் காத்திடுவேன்
போய் வா அப்பா..!













Sunday, 27 April 2014

மனிதம்2

வெப்பப் படுக்கையில்
நிற்கமுடியாமல் விரைய


தனல் மேல் சட்டியாய்...
கால்களின்றி தரையில்
அமர்ந்து விற்கும் வியாபாரியின்

ஓங்கி ஒலித்த குரலை
ஒதுக்கி பறக்கும் மனிதம்


Saturday, 26 April 2014

சமூகம்2

பொருளற்ற ஒலியையும் புரிந்து

ஒலி எழுப்பும் குழந்தைக்கு

பொருளற்ற வாழ்வை கற்பிக்கிறது

சமூகம்

Friday, 25 April 2014

பற்று

பற்று விடல்
பற்றற்று வாழ்தல்
பற்றை அறுத்தல்
எளிதாயில்லை
எதுவும்,
மதுவில்லா
அரசாய்..

சமூகம்

பொருளற்ற ஒலியும் புரிந்து
ஒலி எழுப்பும் குழந்தைக்கு
பொருளற்ற வாழ்வை கற்பிக்கிறது
சமூகம்

Wednesday, 23 April 2014

தேர்தல் நாள்

இந்தியாவின் தேர்தல் நாள் 24.04.2014
------------------------------------------------------------------
மனிதன் மதிக்கப்படும் நாள் இன்று மட்டுமே.கண் தெரியாதவர்,முதுமையில் தள்ளாடும் தாத்தா பாட்டிகள் நடக்க முடியலன்னா கட்டிலோடு தூக்கி கொண்டு வந்து விட்டு போகும் வாசல் வரை மனித நேயம். உள்ள போய்ட்டு திரும்பிய பின் இவர்களாகவே செல்லவேண்டும்.திடீர் பாசத்தின் காரணம் தெரிந்தாலும் அதை வரவேற்கும் முதுமை.தள்ளாடுபவர் எல்லாம் காத்திருந்து கறை வாங்கி பெருமையோடு செல்வர்.புதிதாய் ஓட்டு போடுபவரோ பதட்டத்துடன் வந்து போகும் போது காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு பெருமிதம் பொங்கச் செல்வர்.

அறிவொளியில் கற்றவர் பெருமையாய் கையெழுத்திட பொறுமை தாங்காத அலுவலர் கை பிடித்து இழுக்க சுவையான போராட்டம்.

கிராமத்து மக்கள் ஓட்டு போடுவதை பெருமையாக நினைக்க.வசதி உள்ள,அரசை குறை கூறி பொழுதை களிக்கும் சிலர் என்னத்த போட்டு என்னத்த செய்ய என்ற அலட்சியத்தில்.

சுவாசம்

பூக்களுடனான வாழ்விற்கு
விடுமுறை விட்டு
புத்தகங்களுடனான வாழ்க்கை
உதயம்....
இரண்டுமே என் இனிய
சுவாசமாய்...

கைநாட்டு

கைகள் நடுங்க
கண்கள் தடுமாற
கைநாட்ட மாட்டேன்
கையொப்பம் தானென
அடம்பிடித்து தன் பெயரை
அரைமணிநேரமாய் வரைவார்
அலுவலரும்,வெளியில் நிற்போரும்
பொறுமை கடந்து போக
வாக்குச்சாவடியில் நாளை...
அயல்நாட்டிலோ கைநாட்டினால் தான்
உள்ளேயே....
கைநாட்டுன்னா கேவலமா?

கோடை விடுமுறை


பஞ்சாயத்து தலைவராய் பெற்றோர்கள்
போர்க்களமாய் வீட்டை ஆக்கி
போரடிக்குதுன்னு பாவமாய் குழந்தைகள்....

Tuesday, 22 April 2014

வீதி கலை இலக்கியக் களம் 20.04.14 ஏப்ரல் மாதக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட நூல் விமர்சனம்



           


        பெயரிடாத நட்சத்திரங்கள்
                   ஊடறு +விடியல் வெளியீடு
  ஈழப் பெண் போராளிகளின் கவிதை நூல்
-------------------------------------------------------------------------

                                             ”பெண்ணின்

                                               அழகு ,அன்பு,தாய்மையென
                                                கடிவாளமிட்ட குதிரையென
                                                கவிதைகளின் பாதையில்...
                                               பெண்ணின் 
                                               அறிவு,வீரம்,தெளிவு,அரசியல்
                                              போற்றும் கவிதைகள் காணாமல் 
                                              கலைந்தோடுகின்றேன்
                                               பாலை நிலத்தின் 
                                               சுழல் காற்றாய்... ”

என்ற என் கவிதைத் தேடலின் முத்தாய் கிடைத்த புதையல் இந்நூல்.

சமையல் ,குழந்தை ,குடும்பம் என்ற வட்டத்திற்குள்ளேயே சுழலும் சராசரி பெண்ணின் வாழ்வியல் அல்ல இது.
வேலுநாச்சியும்,குயிலியும் விதையாய் விதைத்து எழுந்த வீரியப்பெண்கள்.
தாய்நாட்டைக் காக்க போர்க்களம் கண்ட வீரப்பெண்கள்.களத்தில் கண்டதை கவிதையாய் வடித்து ஆவணப்படுத்தியுள்ளனர் ஈழப்பெண்போராளிகள்

Sunday, 20 April 2014

வீதி கலை இலக்கிய களத்தின் ஏப்ரல் மாதக் கூட்டம்







இன்றைய வீதி கூட்டம் மிகச் சிறப்பாய் நிகழ்ந்தது.மனதிற்கு நிறைவாகவும் அமைந்தது.

மரபுக்கவிதையில் அருவியென சுவாதிஅனைவரையும் வரவேற்ற விதம் அருமை.
சென்ற மாத கூட்ட அறிக்கையை பொன் .கருப்பையா அய்யா தனக்கே உரிய நடையில் வாசித்தார்,
உறுப்பினர்கள் அறிமுகத்தை அடுத்து” மோசம்” என்ற தலைப்பில் சமூக சிக்கல்களை கவிதையாக வடித்தார் முனைவர்.வி.கே.கஸ்தூரிநாதன் .






2795ல் நிலவில் பூமியில் வாழும் மனிதர்களைப் பற்றிய முற்போக்கு சிந்தனையுள்ள சிறுகதையினை காலம் கடந்தும் நிற்கும் சாதீயப் பாகுபாடுகளை காட்டும்வகையில் எழுத்தாளர் சுஜாதாவின் பாணியை   நினைவு கூறும் வகையில் எழுத்தாளர் ராசி.பன்னீர்செல்வம் தந்தவிதம் மிகச்சிறப்பு.





ஈழப் பெண்போராளிகளின் கவிதை தொகுப்பு நூலை நான் விமர்சனம் செய்தேன் .என் வாழ்வில் மறக்க முடியாத நூலாய் ஆனது.அதை முத்துநிலவன் அய்யா கொடுத்து இது சாதாரணக்கவிதைகள் அல்ல வாழ்வியல் போராட்டம் இதை படித்து கூறுங்களென்றபோதுகூட நான் பெரிதாக நினைக்கவில்லை ஆனால் படிக்க படிக்க என்னை ஈழநாட்டின் போர்க்களத்தில் தன்னம்பிக்கை நிறைந்த மாபெரும் பெண்போராளிகளை அடையாளம் காட்டியதுடன் தமிழ் பெண்களின் வீரத்தை காட்சிப்படுத்தியது.



சுரேஷ்மான்யாவின்  தொலைதூரம் சென்றவர்களின் அன்பைப்பற்றிய கவிதை பாராட்டுக்குரிய ஒன்றானது.

சிசிலியன் நாவல் எவ்வாறு பீமா மற்றும் சுப்ரமணியபுரம் திரைப்படமாக மாறியதை கூறிய விதம் மூலம் படம் பார்த்த அனுபவத்தை தந்து பாராட்டுக்களைப் பெற்றார்  கஸ்தூரிரெங்கன்.






”தாழ்ந்த என் நாயகமே “என்ற நூலை திருப்பதி அய்யா விரிவாக அறிமுகம் செய்தார்.

வீதியின் அடுத்த கட்ட செயலாய் சங்க இலக்கியங்களில் புதுகையின் பெருமையை வெளிப்படுத்தும்  செயல் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும்,திட்டங்களை அமைக்கும் முறை குறித்தும்,நிகழ்வுகள் செம்மையாக அமைய ஆலோசனைகளையும் முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர்.அருள்முருகன் அவர்கள் கூறினார்கள்.









விழாவில் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வீதியின் தனித்தன்மையினை பாராட்டி ,ஆலோசனைகளையும் நல்கினார்.
முகவரிகள் கிடைக்காத நிலையில் அலைபேசியில் அழைத்தமைக்காகவே வந்து கூட்டத்திற்கு பெருமை சேர்த்தார் இலக்கிய ஆர்வலரான கம்பன் கழக சம்பத்குமார்அவர்கள்.
,பாண்டியன்{ புத்த அகம்} அவர்கள் கருத்துக்கள் கூறியதுடன் ஒரு சிறுகவிதையும் வாசித்தார்.கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறினர்.

 ,எழுத்தாளர் நீலா, ஜெயலெட்சுமி ஏ.இ.ஓ,கெஜலெட்சுமி,கார்த்தி நண்பா அறகட்டளை மற்றும் தமிழாசிரியர்கள் என புதியவர்கள் வருகையினால் வீதி களை கட்டியது.
இறுதியாக பிரியதர்ஷினி நன்றிகூற கூட்டம் நிறைவாக முடிந்தது.

செவிக்குணவோடு சிறிது வயிற்றுக்கும் அளிக்க  கோதுமைப்பால் வழங்கப்பட்டது அதற்கான செலவை உரிமையோடு ஏ.இ.ஓ ஜெயலெட்சுமி அவர்கள் நான் தான் தருவேனென பகிர்ந்து கொண்டார்கள் .

இக்கூட்டம் சிறப்பாக அமைய முத்துநிலவன் அய்யா முழுமுதற்காரணம்.
கூட்டச் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் அக்கறை கொண்டு வழிநடத்தினார்.வீதிக்கான பதாகையை வடிவமைத்து கூட்டத்தின் சிறப்பை மேலும் கூட்டினார்.தான் வளர்வதை விட மற்றவர்கள் முன்னேற வழிகாட்டுவதில் அவருக்கு நிகரில்லை.

புதிதாக வண்ணம் பூசப்பட்ட ஆக்ஸ்போர்ட் கல்லூரி வீதியின் எழிலைக்கூட்டியது.மறுக்காமல் இடம் தந்து உதவிய ஆக்ஸ்போர்ட் சுரேஷ் அவர்களுக்கும் எனது நன்றி
 கூட்டம் சிறப்புடன் நடக்க ஒத்துழைத்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.முகநூலில் வாழ்த்து கூறிய தோழமைகளுக்கும் மிக்க நன்றி.




Thursday, 17 April 2014

சுழல்காற்றாய்

பெண்ணின்
அழகு ,அன்பு, தாய்மையென
கடிவாளம் போட்ட குதிரையென
கவிதைகளின் பாதையில்....

பெண்ணின்
அறிவைப் போற்றிய
வீரத்தை வியந்த
தெளிவைப் பாரட்டிய
அரசியல் அறிந்த
கவிதைகள் காணாமல்
கலைந்தோடுகின்றேன்
பாலை நிலத்தின்
சுழல்காற்றாய்....!
வீதி
கலை இலக்கிய அமைப்பு -துவக்க விழா
நாள்:20.04.14
இடம்:ஆக்ஸ்போர்ட் சமையற்கலை கல்லூரி, புதுக்கோட்டை.
விழைவு:வாசிப்பை சுவாசிப்போருடன் வருக...

Wednesday, 16 April 2014

ஆழ்துளைப்பலி

பூமிக்குள் துளை
தண்டனையாய்
பூக்கள்.....
 பலிகளின் தொடர்ச்சியில்
சுஜித்....
உச் கொட்டி மறந்து
மீண்டும் பலி கொடுப்போம்...

Sunday, 13 April 2014

சித்திரைத்திருநாளில் ஓரு நற்செய்தி.



தமிழின் தொன்மையையும்,புதுகையின் தொன்மையையும் உலகறியச் செய்ய ஓர் அரிய வாய்ப்பு.
புதுகையில் வாழும்,வாழ்ந்த ,வாழப்போகும் நல் இதயங்கள் ஒன்று சேர்ந்து தமிழ்த்தேர்  இழுக்க திரள்வோம்.

பத்தாயிரம் ஆண்டுக்களுக்கு மேலான தொன்மை வாய்ந்த புதுகையின் சிறப்புகளை ஆதார பூர்வமானச் செய்திகளுடன் உலகறியச் செய்யும் முயற்சியில் நீங்களும் உங்கள் நண்பர்களும் பங்களிப்பை அளிக்க அழைக்கின்றோம்.முடியாது என ஒன்று உண்டோ தமிழரால் ...!

விரைந்து முடிக்க விரைவோம்...

அலைபேசி..9443193293

தமிழ் புத்தாண்டு

வெப்ப காற்றினால்
வியர்வையில் குளியல்.
குளமோ மனித மனம் போல் வறண்டு
நீர்தொட்டியும்...
சாதியினால் சரிகின்றது மனிதம்
மதம் பிளக்குமதை..
ஊழல் அரசியல்
ஊழலுக்குள் அதிகாரிகள்
சொல்லவே முடியாத
பெண்களின் பாதுகாப்பற்ற நிலை
சந்ததிகளை சீரழிக்கும் சமூகம்
இவைகளுக்கிடையில்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தை யா?,சித்திரையா?
சொல்வதா வேண்டாமா
குழப்பத்தில் தமிழரின் நிலை
என்ன கெட்டுப்போச்சு
இரண்டையும் கொண்டாடுவோம்னு ...
வாழ்த்துக்கள் குவிகின்றது..
உண்மையறியாமலே!



Saturday, 12 April 2014

காலம்

கருணையின்றி
உலகை ஆட்டுவிக்கும்
ஹிட்லர் ..



Thursday, 10 April 2014

சாதி


 கடல் கரைக்க
கரையாமல்
கரை
சாதியாய்...





Wednesday, 9 April 2014

குறைகளின் தொகுப்பை கேட்க முடியவில்லை...சீராக்கும் நபர்களும் தேடலில்.....

வந்தேறிகள் வாழ
நாட்டோர் வீழ
நாக்கைத் தொங்கப்போட்டு
நக்கிப் பொறுக்க காத்திருக்கு
நாதாரிகளின் கூட்டம்
நல்லவரைத்தேடி
நைந்து போகுது
நோட்டில்
நோட்டா...!

Tuesday, 8 April 2014


இன்றைய பெண் குழந்தையின் கதறலாய்...முடியாது தொடரும் வன்முறையின் வலியாய் மீள்பதிவு



அப்பான்னு நினச்சேன்
அசிங்கமாய்த் தொட்டான்
சகோதரன்னு பழகினேன்
சங்கடப்படுத்தினான்
மாமான்னு பேசினேன்
மட்டமாய் நடந்தான்
உறவுகள் அனைத்தும்
உறவாடவே அழைக்கின்றது...


பாதுகாப்பை நாடி
பள்ளிக்குச் சென்றேன்
ஆசிரியனும் அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண்ணும்
குறையுமென்றான்...

நட்புக் கரமொன்று
நண்பனாய் தலைகோதி
தூங்கென்றான்
மரத்த மனம்
மருண்டு சுருண்டு
மயங்கித் தூங்கையில்
கைபேசியில் படமெடுத்தான்
அவனும் ஆண்தானே...

கதறி அழ
கடவுளைச் சரணடைந்தேன்
ஆறுதலாய் தொட்டுத்தடவி
ஆண்டவன் துணையென்றான்
சாமியாரும்...

அலறி அடித்து
ஓடுகின்றேன்
எங்கே போவேன்?
சமத்துவம் வந்ததென
சத்தமாய்க் கூவுகின்றார்

பெண்ணை
பெண்ணாய் பாராமல்
மனிதராய் பார்க்கும் நாள்
எந்நாளோ?
பாவிகளின் பாலியல் வன்முறை
எப்போது ஓயுமோ?

Sunday, 6 April 2014

காத்திருப்பு

அந்நியநாட்டு மோகம்
அந்நியமானது உறவு
காத்திருந்தனர் பெற்றோர்
இறந்தும்.....
மழை நோக்கும்
உழவனாய்...

பைந்தமிழ்




 








வணக்கம்
    
முகநூலில்  பைந்தமிழ் குழு இன்றுபிறந்துள்ளாள்.இவளின்வளர்ச்சியில்உங்களின்பங்களிப்பையும்மகிழ்வுடன்வரவேற்கிறேன்.கவிதைகளும்,கட்டுரைகளும், தமிழ் வளர்ச்சி குறித்த கருத்துக்களும் ,பெண்மையைப் போற்றும் கருத்துக்களும் இதில் இடம் பெற்று வளர வரவேற்கின்றேன்.

தமிழ் மொழியை நேசிப்பவர்களை,பெண்மையை மதிக்கும் தோழமைகளை இணைக்கும் பாலம் பைந்தமிழ்.மேன்மையான சிந்தனைகளை பகிரும் குழுவாகும்.கைகோர்க்கும் தோழமைகளுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்.தரமற்ற சிந்தனைகளைத் தவிர்ப்போம்.
          நன்றி

Saturday, 5 April 2014

Friday, 4 April 2014

ஏன் படிக்கல?

ஏன் படிக்கல?
------------------
கலங்கிய சிறுமியை
தலைவருடி இதமாய்
ஏண்டாம்மா?
என்னாச்சு?
சாப்டியா?
பதமாய் கேட்க
விழி மேகம் மடைதிறக்க
சாப்டல டீச்சர்...பசிக்குது!

குடிகார அப்பனால் சூடுபட்ட அம்மா
வலியில் சுருண்டு படுத்தவளிடம்
பசிகூற மனமின்றி......
தண்ணீரால் பசியாற்றி
சண்டை மறக்கவே
பள்ளிக்கு வந்தேன்

ஏதும் புரியல டீச்சர்..
ஏது படிக்க?
என்ன செய்ய...?

Thursday, 3 April 2014

5.என் வண்ணத்தூறலில் ....ஐந்தாவது தூறல்



முத்தாய் பல
முகநூல் நட்பு
முகம் சுளிக்க வைக்கும்
சொத்தையாய் சில
எட்டி பார்க்கிறது
என் குணம் அறியாது

பூனைக்கே வெற்றி.



வாழ்க்கை போராட்டத்தில்
தன்னை இழந்தது
தாய்க்குருவி

ஆசிட்வீச்சு

பாட்டியாலாவில் மீண்டும் ஆசிட் வீச்சு ஒரு மாணவி மீது.குடும்பத்தகராறு என பெற்றோர் கூறியுள்ளனர்.அந்த மாணவி 80%பாதிப்பு.3 பேரை பிடித்துள்ளனராம்.குற்றம் செய்யாமல் அவள் இனி ஆயுள் முழுதும் உடலாலும் மனதாலும் சித்திரவதைப்படுவாள்.இதற்கு பதிலாக கொன்றிருக்கலாம் அந்த மனித மிருகங்கள்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு இதே போல் ஆசிட் ஊத்தினால் மட்டுமே ஒழியும்.பயம் வரும் .ஒழிக்க முன் வருவார்களா?
பெண்கள் நிலை .......

வாழ்க்கை போராட்டத்தில்



வாழ்க்கை  போராட்டத்தில்
----------------------------------------

வைகறையில்
 இனிமையாக
கூவி எனை எழுப்பும்
கருப்புக்குருவிகள்
வீட்டின் முன் அறையில்
வீரமாய் சன்னலில்
வீற்றிருக்கும் இடுப்பளவு
கருப்பு குதிரை பொம்மையில்
கலக்கமின்றி முட்டையிட்டு
இருமுறை குஞ்சு பொரித்து
இனிய சந்ததி வளர்த்து
மகிழ்வுடனே சென்றன.

வெறுமை தாக்க
காத்திருந்த என்னை நாடி
கூடமைத்து முட்டையிட்டு
காத்தன மூன்றாம் முறையாய்

எப்போது போவேனென
எதிர்பார்த்து வாசலில்
எட்டி எட்டி காத்திருக்கும்
வம்படியாய் அதை நோக்கி
வாயேன் உள்ளே
என்றாலும் போ போ
என்றே எதிர்நோக்கும்!

ஓர் அதிகாலையில்
முத்தாய் மூன்று குஞ்சுகள்
சுறுசுறுப்பாய் பறந்து பறந்து
இரை தேடி ஊட்டி
வளர்த்தன!

நேற்றிரவு வீடு திரும்பிய
நேரம் நிசப்தம் எனைத்தாக்க
புரியாமல் உள்ளே நுழைய..

கதறிய குருவிகளின் ஓலம்
கேட்டு மனம் கலங்கி
வெளியே வந்தால்
என்செய்வேன்! என்செய்வேன்!

பொல்லாத பூனை தன்
பசியாற்ற கண் திறவா குஞ்சுகளை
புசித்து விட்ட கொடுமைதனை...

பாதுகாப்பேனென எனை நம்பி
பார்ப்புகளை பொரித்து
பத்திரமாய் போய்வாவென
எனை வழியனுப்பிக்காத்திருக்கும்
குருவிகளுக்கு எப்படி ஆறுதல் கூற?

 பூனையின் பசியை நோக்கவோ..
கதறும் தாய்க்குருவியை காணவோ..
இயலாத
கையறு நிலையில் மனம்
கலங்கித் தவிக்கின்றேன்...

காப்பாற்றவில்லையே நீயென
கதறும் குரலைக்

கேட்க முடியாமல் என்
காலைப்பொழுதுகள்
விடிகின்றன
-------------------------
அய்ய்ய்
மீண்டும்
கருப்புகுதிரையில்
கருப்புக்குருவியின் கூடு

வெளியில் பசியோடு
சுற்றுகிறது பூனையும்

இந்த முறை சந்ததி வளருமா?
பூனை பசியாற்றுமா
இரண்டையும் காக்க
தவிப்புடன் நானும்

மகிழ்வும் கலக்கமுமாய்
நான் எழுதிய கவிதையை
நினைவுகூர்கிறேன்