World Tamil Blog Aggregator Thendral: July 2013

Sunday, 28 July 2013

வீழ்வேன் என்று நினைத்தாயோ!

 தேங்கிய குட்டையல்ல
துள்ளும் அருவி
பாய்ந்தோடும் ஆறு
அள்ளிச்செல்வேன் அனைத்தையும்...

சலசலக்கும் ஓடை
சலியாது வளம் நல்குவேன்
ஆழ்மனக்கடல் நான்

கவலைகளைத் தேக்கி
சுனாமியாய் துன்பங்களை சுருட்டி
சுகங்களையே தருகின்றேன்...

இதமான தென்றல்
இனியவளே  அனைவருக்கும்
சுழன்றடிக்கும் சூறாவளி
வீழ்த்த எண்ணும் பகைவர்க்கு!
மழைக்கால நெருப்பாய்
மனதிற்கு இதமானவள்
மறந்தும் அணைக்க நினைத்தால்
சுட்டெரிக்கும் சூரியன் நான்!

உயிருள்ளவைக்கு மட்டுமல்ல 
உயிரற்றவைக்கும் 
தோழமை நான்...!
புதைத்தாலும்
பூமியில் விதையாய்
அழித்தாலும் 
அனலில் தங்கமாய்
சிதைத்தாலும் சித்திரமாய்
மறைத்தாலும்
தமிழ் மறையாய்
வையத்துள் நிலைப்பெற்றிடும்
என்னை

வீழ்வேனென்று நினைத்தாயோ!