World Tamil Blog Aggregator Thendral: 2020

Monday 23 November 2020

உவமைக்கவிஞர் சுரதா

உவமை கவிஞர் சுரதா நூற்றாண்டுவிழா
தமிழ் வளர்ச்சித் துறை நாகப்பட்டினம்.

உயிரில் கலந்து உணர்வில் உறைந்த
உன்னதத் தமிழே தாயே!
மேதினி வியக்கும் உயர்ந்தோர் போற்றும்
மேன்மையானவளே!
வணங்குகின்றேன் உனையே!

நல் ஏரென்றே
சொல் ஏரெடுத்து
பல்லோர் போற்ற
பாரினில் சிறக்கும் தலைவா!
சின்னவள் நானும்-உனையே
சீரியத் தமிழால் வணங்குகின்றேன்.

கவிச்சரம் தொடுத்து
கனிவுடன் படைத்து
மணியென தந்திடும்
மக்காள்!
மலைவாழைத்தமிழை 
பாமாலையெனவே
மகிழ்ந்தே படைத்திடுவோம் வாரீர்!

கனித் தமிழைச் சுவைக்கவே
அணிஅணியாய் திரண்ட
சான்றோரே!
படைக்கின்றோம்
செவிமடுத்து கேளீரென வணங்குகின்றோம்.

உவமைக்கவிஞர் சுரதா
--+++++++++++++++++++++
சங்கம் போற்றியத் தமிழே!
அங்கம் மரபாயான தமிழே!
சங்கத் தமிழ் மலர்ச்சோலையில்
சிந்தும் தேனை எடுத்தே
சிதறாமல் தமிழைச் சுவைத்தீர்.
தங்கத் தமிழே!- எங்கும்
பொங்கி முழங்கிடும் சிங்கத் தமிழே!
மங்கா புகழுடைய வேந்தே
தங்கிடும் புவியில் நிலைத்தே
எங்கும் சிறந்திடும் உம்பாட்டே!

ஏற்றிடும் தமிழில், கற்றோர்
போற்றிடும் தேன்தமிழ் கவிதனை
சாற்றிடும் அமிழ்தென படைத்திட்டீர்.
நாற்றென செழித்து வளர்ந்திடவே
ஏற்றமிகு கவிதனைப் பதியமிட்டீர்.

ஊற்றென உவமைகள் உம்மில் முகிழ்த்திட
காற்றென கவிமழை பொழிந்தே
நூற்றாண்டு கடந்தும் வாழ்கின்றீர்!
நூறாயிரம் வாழும் தமிழெனவே!

பாட்டினில் கற்பனை எதற்கென்றே-தமிழ்
காட்டினில் இயல்பாய் உவமைகளை
ஏட்டினில் எழுதிட உரைத்திட்டீர்.
நாட்டினில் நிலவிடும் தீமையெல்லாம்
வாட்டிடும் துன்பத்தீயில் என்றே
தீட்டிய வரிகளில் சுடர்விட்டே
சாட்டியே நீரும் தமிழ்ச்சாட்டையை எடுத்தீர்.
கூட்டினில் பறவையென இருந்தமிழை
பாட்டினில் படைத்தே விண்புகச் செய்தீர்.

கற்றிடு மரபை ,கற்றிடு சங்கத்தமிழை
பெற்றிடு உயர்வை, ஏற்றிடு பெருமை என்றீர்.

உன்னதத் தமிழால் உலகு பாடியே
கன்னல் தமிழைக் களிப்புடன் தந்தீர்.
மலரினில் வழிந்திடும் மதுஉண்ட வண்டென
மயங்கியே உம்மால் கிடக்கின்றோம்.


என்றென்றும் தமிழாய் வாழ்ந்தீரே
நன்றே நன்றே உம்பாட்டு
சென்றே திக்கெட்டும் சிறத்திடுமென்றே
வாழ்த்தியே நானும் அமைகின்றேன்.

மு.கீதா
புதுக்கோட்டை
 





,

Wednesday 18 November 2020

சிறகுகள்

சிறகுகள் கண்டு வியக்கின்றாய்...
முளைத்த வலி கூறும்
 ஒவ்வொரு சிறகும்,
ஒவ்வொரு மரணத்தைக் தொட்டு உதித்ததென்பதை..
பறவைகளுக்கானதைப் போல இயல்பானதல்ல அவை.
அன்பில் முளைத்ததொன்று
ரௌத்திரத்தில் மற்றொன்று
பிடிவாதத்தில் பிறந்த சிறகு
பெற்ற வலியை அகங்காரம் என்பர்.
அவை பறக்கத் துடிக்கையில்
அன்பின் கத்தி கொண்டு
அறுத்து மகிழ்ந்தனர் .
திமிறி பறக்கத் தவிக்கையில்
திடீரென வெட்டிச் சிரித்தனர்.
பகடிகள்,ஏளனங்கள்,அலட்சியங்கள்
பரிகாசங்கள், அதிகாரங்கள்,அவமானங்களைக் உணவாக உண்டு முளைத்த சிறகுகளவை.
வெட்டவெட்டத் துளிர்ப்பது கண்டேனுக்கு
அச்சம்...
இது ஆதித்தாயின் மரபின் எச்சம்..
துளிர்க்கவே பிறந்த சிறகுகள்...

Thursday 12 November 2020

சூரரைப் போற்று

வாழ்த்துக்கள் சூர்யா மற்றும் சுதா கோங்கராவிற்கு
தனது அட்டகாசமான நடிப்பை காட்டியிருக்கும் சூர்யாவின் உழைப்பு அசாத்தியமானது.எளிய மக்கள் விமானத்தை வானில் பார்த்து அதிசயிப்பதை விட்டு அவர்களும் அந்த பயணத்தின் மகிழ்வை அடைய வைத்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு கண்முன் காட்சியாக அமைத்துள்ள சுதாவிற்கு வாழ்த்துக்கள்..
படத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்துள்ளனர்.
பணம் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற கார்ப்பரேட் எதேச்சாதிகார செயல்களுக்கு எதிரே போராடி வெற்றி பெறுகையில் கண்கள் கலங்குகின்றன.அது உண்மைக்கு கிடைத்த வெற்றி என்பதை எண்ணி.
பேக்கரி கடை வைப்பதை குறிக்கோளாகக் கொண்டு அதில் வெற்றி பெறும் அபர்ணாவை வழக்கமான சினிமா கதாநாயகிகளின் முன் உயர்ந்து நிற்க வைத்து சுதாவிற்கு பாராட்டு.
முதலாளித்துவத்திற்கும் ஏழைகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்றும் தொடர்கதை.
பெண் இயக்குநர்கள் எடுக்கும் படத்தில் பெண்களை எப்போதும் சுயமரியாதை உள்ளவர்களாக காட்டுவதை தொடர்ந்து பார்க்கிறோம்... ஆணாதிக்க ஆண் இயக்குநர்கள் இன்னும் கதாநாயகிகளை ஊறுகாயாக, போகப் பொருளாக காட்டுவதை நிறுத்த வேண்டும்...
இனியும் தொடர்ந்தால் பெண்இயக்கங்கள் நிச்சயமாக எதிர்த்து குரல் கொடுக்கும்..
பெண்களை மதிக்கும் பாத்திரத்தில் சூர்யா தொடர்ந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சி...
சூர்யாவை வெறும் நடிகராக பார்க்க முடியவில்லை.மாணவர்களின் கல்விக்காக குரல் கொடுப்பவராகவும் தெரிவதை தடுக்க முடியவில்லை.. எங்கள் பள்ளி மாணவிகள் அகரத்தால் தொடர்ந்து பயன்பெற்று வரும் மகிழ்வு சூர்யாவை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைக்கத் தோன்றுகிறது....
படத்தில் குறைகள் இருக்கலாம்... ஆனால் சமுதாய பிரச்சினையை எடுத்து அதை சிறப்பாக காட்சிப்படுத்திய சுதாவை பாராட்டாமல் இருக்க முடியாது...
வாழ்த்துக்கள் சூர்யா... நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல படம்... தந்தமைக்கு

Sunday 25 October 2020

வீதி கலை இலக்கியக் களம் 77

வீதி கூட்டத்திற்கு எழுத்தாளர் கி.ரா அவர்கள் வருகை

வீதி கலை இலக்கியக் களம் 77
இதுவரை நடந்த வீதி கூட்டங்களில் ஆகச் சிறந்த கூட்டமாக இன்றைய வீதி அமைந்தது.
மகிழ்வில் மனம் கூத்தாடுவதை உணர்கிறோம் ஏனெனில் எதிர்பாராத ஆச்சரியமாக எழுத்தாளர் கி.ரா அவர்கள் இன்று வீதி நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .மாபெரும் எழுத்தாளரை வீதி வணங்கி மகிழ்ந்தது.நம்ப முடியாத உண்மை.எத்தனை எளிமையாக நூற்றாண்டை நெருங்கும் அவரின் எளிமை உன்னதமானது.
கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.
எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கி.ராவின் கதைகள் குறித்தும்,அவருடனான நட்பு குறித்தும்,கரிசல் இலக்கிய வகைமையின் சிறப்பு குறித்தும் கை தேர்ந்த கதை சொல்லியாக கூட்டத்தை தன் வசப்படுத்தினார்.
வீதி உறுப்பினர்களான இரா.ஜெயா சுற்றுப்புற சூழல் கதையும்,மலையப்பன் கோபல்ல கிராமம் நாவலும், கிரேஸ் பிரதிபா அட்லாண்டா சொந்த சீப்பு கதையும், சுபஸ்ரீ முரளீதரன் சென்னை கதவு கதையும்,கமலம்எறும்பு கதையும், காரைக்குடி கிருஷ்ணாவேலைவேலையே வாழ்க்கை கதையும், சகோதரர் பாண்டியன்எழுத மறந்தகதையும்,கீதா பேதை கதையும், குறித்து மிகச் சிறப்பாக விமர்சனம் செய்தனர். சகோதரர் கஸ்தூரி ரங்கன் கூட்டத்திற்கு தலைமை பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்தி குருபூஜை கதையும் குறித்து மிகச் சிறந்த விமர்சனங்களைக் கூறிய விதம் அருமை.
கீதா வரவேற்புரை கூற,சோலச்சி நன்றியுரை கூற கூட்டம் நான்கு மணி நேரத்திற்கு மேல் வீதி நடைபெற்றது.
வீதி கூட்டத்திற்கு எழுத்தாளர் கி.ரா வை வரவழைத்த தோழர் நாறும்பூநாதன் அவர்களை வீதி வணங்கி மகிழ்கிறது.மிக்க நன்றி தோழர்.
இன்றைய பொழுது கி.ராவின் நினைவுகளோடு இனிமையாக கழிந்தது...
விரைவில் வீதி உறுப்பினர்கள் கி.ராவை சந்திக்க அனுமதி அளித்துள்ளார்.. மிக்க நன்றி அனைவருக்கும்.

Friday 23 October 2020

உலகப் பெண்கவிஞர் யார் ? எவர்? தொடர் 1

உலகப் பெண் கவிஞர் -யார் எவர் ?

கவிஞர் மாயா ஏஞ்சலோ.



அமெரிக்கப் பெண் எழுத்தாளர் .கவிஞர் ,சமூகச் செயற்பாட்டாளர் ,நடிகை,பாடகி,பத்திரிக்கையாளர்,திரைப்படைப்பாளர் என பன்முகமாய் இயங்கியவர்.கறுப்பெழுத்தின் முன்னோடிமார்ட்டின் லூதர் ,மால்கம் எக்ஸ் ஆகியோருடன் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர் .இனவெறிக்கு எதிராகப் போராடியவர் ஆறு மொழிகளுக்கு மேல் எழுதவும் பேசவும் தெரிந்தவர் .எகிப்து கானா நாட்டுப்பத்திரிக்கைகளின் ஆசிரியராகப் பணிபுரிந்த கவிஞர் மாயா ஏஞ்சலோ அவர்கள் ....

அவரது கவிதைகள் அறச் சீற்றம் நிறைந்த சொற்களால் நிறைந்தவை, அவரது வாழ்வின் துயரத்தை காட்டும் கண்ணாடி. தனது ஏழு வயதில் தாயின் நண்பரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானபோது குடும்பத்தின் அன்பின் வலியில் அழுகுரலோடு தன்னை புதைத்துக்கொண்டாள். தனது குரல் அந்த மனிதனை நான்கே நாட்களில் கொன்றுவிட்டது என்பதை ஏற்க முடியாது ஆறு ஆண்டுகள் மௌனச் சிறையில் மூழ்கினாள். ஆறு ஆண்டுகால வாசிப்பு அவருக்கு மனித குலத்தின் உயிர் நாடியை உணர்த்தியது. பதினான்கு வயதில் அநீதிக்கு எதிராக, சொற்களை கொண்டே போர் தொடுக்க முடியும் என்பதை புரியவைத்தது.

 "I know why the caged bird sing (1969)". என்ற சுயசரிதை நூலை அடுத்து ஒன்பது நூல்களில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார்.

·         Life doesn't frighten me (1993).

·         My Painted House, My friendly chicken and me (1994).

·         Kofi  and his magic (1996).

·         ஆகிய நூல்களை குழந்தைகளுக்காக எழுதியுள்ளார்.அவரது முதல் சுயசரிதை நூல் வன்கொடுமைக்கு ஆளான கறுப்பின பெண்ணின் வழியைக் கூறிய போது உலகே அவரைத் தாக்கியது .நான் வன்முறையையும் ,அடக்குமுறையையும் வன்கொடுமைகளையும் இலக்கியத்தால் எதிர்கொள்ளத்துணிந்தார் .

          அவரது குரல் ஒடுக்கப்படுபவர்களுக்கான குரல் ,குறுகிய கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டாலும் கீழ் வானத்தில் எனது சிறகுகள் மிதக்கப் போவதில்லை என்பதை அறிந்தாலும் ,நான் எனது அலகைத்திறந்து பாட முயற்சிக்கிறேன் .கூண்டுப் பறவைதான் என்றாலும் தான் பாட மறப்பதில்லை என்றவரின் கவிதை கடத்தும் சோகம் படிப்பவர்கள் மனதில் உறைந்து நிற்கும் .

                      இன்றைய நவீன உலகில் பெண் உடல் மாற்றப்பட்டுள்ளதை ,பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தனது சொற்களால் நெய்து ஆயுதமாக்கினார் .

       'உங்கள் கடுப்பான ,திரிக்கப்பட்ட பொய்களால்

        வரலாற்றில் என்னை வரைந்திருக்கலாம்,

        பாழ்கதியில் என்னை நீங்கள் மிதித்து

        துவைத்திருக்கலாம் ,அப்படி இருந்தாலும்

        தூசிப்புழுதியாக ,நான் உதித்தேழுவேன்'

என்று காலத்தால் அழியாத . விளங்குகின்றார் .

அவரது கவிதை வரிகள் ...

'கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்

சுதந்திரப்பறவை காற்று மீதேறித் தாவிப் பாயும்

விசை தீரும்வரை சமநிலை கொண்டு மிதக்கும்

ஆரஞ்சு வண்ண சூரியக் கதிர்களில்

தன் சிறகுகளை நனைக்கும் .

வானத்தை உரிமை கொள்ளும் தைரியம் பெறும்.

ஆனால் கூண்டுப்பறவை தன்

குறுகிய கூட்டுக்குள் அலைகிறது ......

என தொடரும் கவிதை அவரது வலியை காற்றில் எழுதி மனதில் உறைந்து நிற்கும் ..

அவரது நூல்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று ..

நன்றி .


உலகப் பெண் கவிஞர் யார் ? எவர்? தொடர் 2

உலகப் பெண் கவிஞர் யார்?எவர்?

கென்யா கவிஞர் வார்சன் ஷைர்.



அனைவருக்கும் வணக்கம் உலகில் புகழ் பெற்ற கவிஞர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த மாதம் மிக இளமையான பெண்கவிஞரான வார்சன் ஷைர்.சோமாலியப் பெற்றோருக்கு கென்யாவில் 1988 இல் பிறந்தவர்.பிறகு இங்கிலாந்திற்கு இடம் பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து பிரிட்டனைத் தாயகமாக கொண்டு வாழ்கிறார் ...ஏனோ பிரிட்டனை தனது சொந்த நாடாக எண்ணமுடியவில்லை. தாய் நாட்டிற்கு செல்லும் ஆசை கனவாகவே இருந்தாலும் அவர் தனது சோமாலிய ஆப்பிரிக்க மக்களின் வாழ்வியலை ,பண்பாட்டை ,அவர்களின் வலியை,அகதி வாழ்வின் துயரத்தை ,குறிப்பாக அகதிப்பெண்களின் தாங்கவியலா துன்பங்களைத் தந்து எழுத்தால் உலகெங்கும் உணரச் செய்தார் .

இளம் வயதினராக இருந்தாலும் அவரது எழுத்தின் வன்மை ஆப்பிரிக்க மக்களின் துயரத்தை ,வேதனையை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.தனது பூர்விக நாட்டு மக்களைப் பார்க்கும் பொழுது எல்லாம் தனது மக்களின் பழங்கதைகளை கேட்டு அறிந்து எழுத்தில் பதிவு செய்கிறார்.எல்லா அகதிகளின்  துயரங்களை தனது துயரங்களாக எண்ணி பதிவு செய்கிறார்

.”ஒன்று, நான் எந்த நபரைப் பற்றி எழுதுகிறேனோஅவரைப்பற்றி எனக்கு  தெரியும் அல்லது நான் எழுதும் ஒவ்வொரு நபரும் நான் தான் .அவர்களின் ஆழ் மன அமைப்பை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியும்என்கிறார் வார்சன் ஷைர்.

தனது கவிதைகளுக்காக இளம் வயதிலேயே பல பரிசுகளையும், அவருக்கான அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார்.2013 இல் ப்ரூனெல் பல்கலைக்கழகம் உருவாக்கிய ஆப்பிரிக்கக்கவிதைப் பரிசை அவருக்கு வழங்கியது.2014இல் லண்டனின் இளம் அரசவைக் கவிஞராக ஷைர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பிரபல பாப் பாடகி பியான்ஸே நோல்ஸ் 2019இல் வெளியிட்ட ’லெமனேடு’ஆல்பத்தில் வார்சன் ஷைரின் கவிதை வரிகள் இடம்பெற்றன.

எவ்வளவு புகழ் கிடைத்தாலும் அவரது எளிமையை உலகம் பாராட்டியது. .அகதிகளின் குரலாகவே அவரின் கவிதைகள் முழங்கின.

குறிப்பிடத்தக்க கவிதையாக

“வீடென்பது சுறாமீனின் வாயாக இருந்தாலொழிய

யாருமே தங்கள் வீட்டை விட்டு

வெளியேறுவதில்லை”

என்ற வரிகள் அகதி வாழ்வின் அடையாள வாசகங்களாக உள்ளன.

2011 இல் அவர் எழுதிய  நூலின் பெயரே அவரின் காட்சியாய்”குழந்தைப்பெற்றுக்கொள்ள என் தாய்க்கு கற்றுக்கொடுத்தல்”என்ற சிறிய தொகுப்பை வெளியிட்டுள்ளார்.அவரது கவிதைகள் அனைத்தும் கட்டப்படாத பூக்களென மணம் வீசி வலம் வருகின்றன.ஒரு தொகுப்பைக்கூட போடாத ஒரு கவிஞர் உலகப் புகழ் பெற்றுள்ளார் என்றால் அது வார்சன் ஷைர் மட்டுமே.ஏனெனில் அவரது கவிதைகள் நேர்மையைச் சுமந்து தவறு செய்தவர்களைச் சுட்டெரித்தது.உண்மையின் சுடரேந்தி துயரத்தின் வலியைக்காட்டியது..

தனிமைக்குறித்து”என் தனிமை மிகவும் நன்றாக இருக்கிறது. நீ என் தனிமையைவிட  நீ இனிமையாக இருந்தால் நான் உனக்கு மட்டுமே வேண்டும் .”என்றார்.

மிக நீண்ட கவிதைகளில் ஒன்றாக

அசிங்கம்

உன் மகள் அசிங்கம்

அவள் இழப்பை அணுக்கமாக அறிவாள்,

முழு நகரங்களை வயிற்றில் சுமக்கிறாள்.

குழந்தையில் உறவினர்கள் அவளைத் தூக்கமாட்டார்கள்

அவள் உடைந்த மரம்கடல் நீர்

அவள் போரை நினைவுபடுத்துவதாக அவர்கள்

சொன்னார்கள்.

அவளது பதினைந்தாவது பிறந்த நாளில் அவளுக்குச்

சொல்லிக்கொடுத்தாய்

அவள் முடியை எப்படி கயிறு போலக் கட்டிக்கொண்டு

சாம்பிராணி புகைக்காட்டி வாட்டுவதென.

அவளை பன்னீர் கொண்டு வாய்க்கொப்பளிக்க

வைத்தாய்

அவள் இருமியபோது சொன்னாய்

உன்னைப் போன்ற மகாந்தொ

தனிமையாகவோ வெறுமையாகவோ வாசம் வீசக்

கூடாது.

நீ அவள் தாய்

ஏன் அவளை எச்சரிக்கவில்லை

அரிக்கப்படும் படகென அவளை அணைத்தபடி

அவள் கண்டங்களால் போர்த்தப்பட்டிருந்தால்

அவளது பற்கள் சிறு காலனிகளென்றால்

அவள் வயிற் ஒரு தீவென்றால்

அவள் தொடைகள் எல்லைகளென்றால்

ஆண்கள் அவளை நேசிக்கப்பொவதில்லையெனச்

சொல்லவில்லை.

எந்த ஆணுக்கு

உலகம் எரிவதைப் பார்க்க வேண்டும்

தன் படுக்கையறையில் படுத்தபடி ?

உன் மகளின் முகம் ஒரு சிறிய கலகம்

அவள் கைகள் உள் நாட்டுப்போர்

ஒவ்வொரு காதுக்குப்பின்னும்

ஒரு அகதிமுகாம்

அசிங்கமான விசயங்கள் இறைந்து கிடக்கும் உடல்

ஆனாள் கடவுளே,

அவ்வளவு அழகாக அணிகிறாள் அல்லவா

இந்த உலகை?

கவிஞர் வார்சன் ஷைர்.மேலும் அவரைப்பற்றி அறிந்து போற்ற வேண்டுகிறேன்.

நன்றி

மு.கீதா

 

 

  


Thursday 1 October 2020

மனிதம்

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
தோழி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் பொறியியல் அறிஞர் சங்க இலக்கியம் பாடும் கவிஞர் இவர்... இவருக்கு உற்ற இணையராக சகோதரர் திருமிகு வினோத்.
கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாலும் இன்னும் இன்னும் என ஓடும் சமூகத்தில் இவர்கள் வித்தியாசமானவர்கள்..
தங்களின் ஊதியத்தில்‌ ஒரு பகுதியை எளிய மாணவர்களின் கல்விக்காக செலவிடும் நல்ல உள்ளங்கள்..
புதுக்கோட்டை மகளாய் எங்கள் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் தோழி இருப்பது வாழ்வின் வரம்.
கல்விக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து 5 கல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணத்தை தருவதாக பொறுப்பேற்று ரூ 50,000 அனுப்பி உள்ளார்.
திகைப்பில் மனம் நெகிழ்கிறது.இவரது மகன் படிக்கும் பள்ளியில் கல்வியில் ஒரு பகுதியாக சர்வீஸ் செய்து சான்று காட்ட வேண்டும் .
தங்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கி எப்படி சேவை செய்து பணம் திரட்டி இந்திய மாணவர்களின் கல்வி உதவுவது என்று திட்டமிட்டு உள்ளார்.எப்படி பணம் கிடைக்கும் என்று கேட்டேன்... அங்கு வீட்டு வேலைகளில் பிள்ளைகள் உதவி செய்தால் பணம் தர வேண்டுமாம்.இங்கு பணம் தரேன்னாலும் செய்ய மாட்டார்கள் தானே.மேலும் அருகில் உள்ள வீடுகளில் அவர்களுக்கு உதவிகள் செய்து பணம் திரட்டலாமாம் என்று கூறியதாக தோழி கூறிய போது கண்களில் நீர் நிறைந்தது.
எடுத்துக்காட்டாக வாழும் பெற்றோர்களின் பிள்ளைகள் வேறு எப்படி இருப்பார்கள்..
எங்கள் பள்ளியில் படித்து தற்போது கல்லூரியில் படிக்கும் இருமாணவிகளுக்கு தலா ரூ 5000 என ரூ 10000  நேற்று பள்ளி தலைமையாசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.. தலைமைஆசிரியர் உள்பட அனைவரும் மகிழ்ந்து பாராட்டிய போது நல்ல தோழமைகளை உறவாகப் பெற்ற நிறைவு.
ஆசிரியர் Antony Pudugai  அவர்கள் மூலமாக‌ வல்லத்திராக்கோட்டையில் படிக்கும் 4 மாணவர்களுக்கு ரூ40,000 கல்விக்கட்டணமாக தர உள்ளோம்.
பணம் எவ்வளவு வரலாம் ஆனால் மனம் ஒரு சிலருக்கே வாய்க்கும்‌...
இதற்கு முன்பும் நிறைய பள்ளிகளுக்கு நண்பர்களுடன் இணைந்து உதவிகள் செய்து உள்ளார்கள்.அவர்களுக்கு‌ நன்றி கூறப்போவதில்லை வாழ்வில் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.. அவர்கள் உயர்ந்தால் மேலும் பல மாணவர்கள் வாழ்வில் கல்வி ஒளியேற்றுவார்கள்.

Sunday 27 September 2020

தமிழன்பன் அவர்களின் பிறந்தநாள் விழா

ஈரோடு தமிழன்பன் வாசகர் வட்டம் அமெரிக்கா (FETRA),
அமெரிக்க தமிழ் வானொலி,
ஒரு துளிக்கவிதை புதுச்சேரி,
உலகப் பெண் கவிஞர் பேரவை மற்றும் வல்லினச் சிறகுகள் இணைந்து வழங்கிய விழா.

மகாகவி ஈரோடு தமிழன்பன் பிறந்தநாள் விழாவில் வாசித்த கவிதை.
------------------------------------
மந்திரச் சொற்களால்
எந்திர மனங்களை
தந்திரமாய் கட்டுவிக்கும்
தமிழின் அன்பன்
தரணி போற்றும் தமிழன்பன்.
மாயச் சொற்களால் மயக்கவெண்ணாது,
மனிதம் தழைக்க
கனித்தமிழால் போராடிய
மகாகவி.
அதிகார வர்க்கத்தின்
எதேச்சாதிகார கொள்கைகளை
எதிர்த்து முழங்கியவன்
என்றும் புகழுக்காக பாடாத
ஏற்றக்கவியவன்.
சிந்தையொன்று செயலொன்றென
மந்தையாய் வாழ்வோரின்
மனங்களைப் பதப்படுத்தும்
சொல்லேர் உழவனவன்!
சூரியக் கதிர்களாய்
சுட்டெரிக்கும் கவிதைகள்
தமிழனின் மானத்தை
தலைநிமிரச் செய்யும்.
தண்ணிலவின் ஒளியென
தகதகக்கும் கவிதைகளோ
செந்தமிழின் செழுமைக் காட்டி
எந்தமிழ் எந்தமிழ் என்றே
எக்காளமிட்டு பெருமிதம் 
கொள்ளச்செய்யும்.
சீர்மிகு தமிழால்
சீரற்ற எண்ணங்களை
சொல்லேரெடுத்து உழுது
ஏற்றம் கொள்ள வைக்கும்
தமிழ் உழவ..
உன்புகழ்பாட
தமிழ்த்தாய் ஆணையிட
பாடவந்தேன்.-உன்னைப்
பாடுவதும் தமிழைப் போற்றுவதும்
ஒன்றே !ஒன்றே!
தமிழாய்  வாழும் மகாகவியே
தலைவணங்கி போற்றுகின்றேன்
தயங்காது ஏற்றருள்வாய் நீயும்...
நன்றி.
மு.கீதா 
புதுக்கோட்டை

Monday 31 August 2020

பதில்கூறு

கணிகைநான்
குலமகள் ஆக விரும்பியே
உன்னில் கலந்தேன்...
வானம் வசமானது
 உனது அண்மையால்
உலகே கிடைத்ததாக
உயிர்ப்புடன் வாழ்ந்த என்
மனம் புரியாமல்...
என்ன வாழ்க்கை வாழ்ந்தாய் நீ?.
உன் பேர் சொல்லபிறந்த மகள்
உன்னாலே ஆணினம் வெறுத்து..
துறவறம் பூண்டாள்...
உதறித்தள்ளி மறந்தவனே 
நளன் வழிவந்தவன் தானே நீ.
அன்பின் மேன்மையை
அறியவேயில்லை
என்னிலும்
அவளிலும்.

சித்தார்த்தன்

சித்தார்த்தா
கட்டிய மனைவியை
கொட்டும் இரவில்
தட்டிய தூசென
விட்டுச் செல்ல 
மனம் வந்தது எப்படி..?.
நீ புத்தனாகலாம்
என்னைப்பொறுத்தவரை
பெற்ற மகவை கதறவைத்து
பற்றற்றேன் என்ற நீ
புனிதனல்ல..
நீ சென்றுவிட்டாய்
கேளாத சொற்களை
கேள்வியாய் எனைத்துளைத்தெடுத்த
வேள்வியை உணர்வாயா..
விட்டுச் செல்வது ஆணுக்கு
விந்தை கழித்து செல்வதாக...
எக்காலமும் குழந்தையை
எந்த பெண்ணும் விட்டுவிடாள்
குரங்கு சுமக்கும் குட்டியாக
கங்காருவின் குட்டியாக
நினைவிலும் தோளிலிலும்
சுமந்து திரிந்த என்வலி உணராய்...
சித்தாத்தா உலகம் உனைப் போற்றலாம்...
மனைவி மகவை விட்டு செல்ல
வழிகாட்டிய உன்னை தாயுலகு 
மன்னிக்காதென்றும்...
புனிதர் எல்லோருக்கும்
புனிதராக முடியாது....
சித்தார்த்தா...
மு.கீதா
புதுக்கோட்டை

Thursday 27 August 2020

வீதி

வியக்க வைக்கும் தமிழரின் மேன்மை...
ஒருவாரமாக மூன்றாம் முறையாக மீண்டும் வேள்பாரி நாவலுடன் பயணிக்கிறேன்.வீதி கூட்டத்திற்காக 'வேள்பாரியில் பெண்கள்' என்ற தலைப்பில் எனது உரைக்காக..
பொன்னியின் செல்வன் நாவல் அதிசயம் என்றாலும் என்னை அது வியக்க வைத்ததே தவிர புதைய வைக்கவில்லை... பெருமிதம் தோன்றவில்லை...
ஆனால் வேள்பாரி எனது முன்னோரின் கதை . அவர்கள் இயற்கையை உயிராக நேசித்து இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வரலாறு...
அவர்களின் இயற்கை அறிவு.மருத்துவ அறிவு...காணும் செடிகளை எல்லாம் தங்கள் பாதுகாப்பிற்கு,மருத்துவத்திற்கு .விளையாட்டிற்கு என பயன்படுத்திய பேரறிவு.முதுகிழவன் வேலை வாங்குகிறான் என்று அவனுக்கு கொடுக்கும் வெற்றிலையில் தும்மி இலை கொடுத்து தும்ம வைக்கும் இளைஞர்கள்... அவர்களுக்கு காமஞ்சுருக்கி இலை கொடுத்து ஆட முடியாமல் செய்வதுடன் பெண்களுக்கு காமமூட்டி சாறு கொடுத்து அவர்களைத் தூண்டி இளைஞர்களை நாணவைக்கும் குறும்பு..
குலநாகினிகளின் காட்டரணால் பாதுகாக்கப்படும் பறம்பு...என எத்தனை அதிசயங்கள்..
எழுத்து கற்றவன் என்ற பெருமிதம் கொண்ட கபிலரிடம எழுத்துன்னா என்ன எனக் கேட்டு அவருக்கு பறம்பு கற்றுக் கொடுக்கும் வாழ்க்கைப் பாடம்...
பேரரசுகளின் பேராசை புகழுக்காக எதையும் செய்யும் அகங்காரம் இன்றைய உலகமயமாக்கலால், கார்ப்பரேட் நிறுவனங்களால் அதன் வணிக தந்திரத்தால் மக்கள் அடையும் துயரம் என நிகழ்காலத்தோடு ஒப்பிட வைக்கும் மூவேந்தர்களின் சூழ்ச்சி...என விரிகிறது... 
இறுதியில் மூவேந்தர்கள் போரிட்டாலும் தனது தோழன் நீலனைக் காப்பாற்றும் முயற்சி மட்டுமே செய்யும் பாரியின் நீலனின் வீரம், வள்ளி,ஆதினியின் காதலும் அறிவும் ,காட்டின் அதிசயங்கள் என நம்மை முருகன் வள்ளியை ஈர்க்க ஏழிலைப்பாலை மரத்திற்கு அழைத்து சென்று கவர்வதைப்போல நம்மையும் நமது அறிவை, பண்பாட்டை ,வீரத்தை,காதலை,பெண்களை மதிக்கும் தன்மையைக் காட்டி கவர்ந்து மகிழவைத்து தமிழன்டா என பெருமிதம் கொள்ள வைக்கிறது..
கொரோனா விடுமுறையில் நமது குழந்தைகளுக்கு இந்நூலை அறிமுகப்படுத்தி நமது உண்மை  வரலாறை  அறிமுகம் செய்ய வேண்டும் ஒவ்வொருவரும்...
பாரி வேறு நாம் வேறல்ல ..ஆனால் எப்படி திரிந்து போனோம் யாரால் என்பதை நுட்பமாக உணரலாம்...
வாருங்கள் வீதி கலை இலக்கியக் களம்-75 பவளவிழா இணையவழி நிகழ்வில் கலந்து கொள்ள...

Wednesday 26 August 2020

வீதி கலை இலக்கியக் களம்-75

வீதி கலை இலக்கியக் களம்-75
பவளவிழா அழைப்பிதழ்.

நாள்:30.8.2020 ஞாயிறன்று
காலை:10.00-1.00 
இணையவழி நிகழ்வு
Zoom id: 507 503 9922
Password:veethi

அன்புடன் அழைக்கிறோம்...
வீதி நிறுவுநர் முனைவர் அருள் முருகன் அவர்கள் தலைமையில்...
வீதியின் முன்னோடி கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் அரசியலோடு தொகுப்புகளை வழங்க..
தமிழரின் வீரத்தை,இயற்கையோடு,விங்குகளோடு,பறவைகளோடு இணைந்த வாழ்வை, ஆகச் சிறந்த மருத்துவ அறிவை,வேள்பாரி நாவல் கற்பிக்கும் கல்வியை, பாத்திரப் படைப்புகளை, கதைகளும் திருப்புமுனைகளும் நிறைந்த சுவாரசியத்தை,தமிழரின் நம்பிக்கைகளை , பெண்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை,நட்பின் மேன்மையை குறித்து உரையாற்ற உள்ளனர்..
நமது முன்னோரின் மேன்மையை உணர அழைக்கிறோம்..இது வெறும் நாவலல்ல...நமது பண்பாட்டை உலகிற்கு அறிவிக்கும் கண்ணாடி..

Wednesday 12 August 2020

பன்னாட்டுக்கவியரங்கம்

உலகப் பெண் கவிஞர் பேரவை நடத்தும் பன்னாட்டுக் கவியரங்கம்.
நடத்தலாமா என்று  கவிஞர் அகன் அய்யா கேட்ட போது சாதாரணமாக த் துவங்கி தற்போது நாற்பது பெண் கவிஞர்கள் இணைந்து வருகிற.15.8.2020 அன்று இரு நிகழ்வுகளாக கவிதைகள் வாசிக்க உள்ளனர்...
பல நாடுகளில் இருந்து தங்கள் கவிதைகளை ஆர்வமுடன் கலந்து கொள்ளும் பெண்கள் பாரதி பாரதிதாசனின் கனவு பெண்கள்.
'அவன் நிற்கிறான்' என்ற தலைப்பில் கவிதை வாசிக்கும் நிகழ்விற்கு உங்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.
இந்நிகழ்வில் திருமிகு ஆறுமுகம்பேச்சிமுத்து அமெரிக்க தமிழ் ஊடகம்.அவர்கள்  வரவேற்புரை நல்க உள்ளார்.
உலகப் பெண் கவிஞர் பேரவை நிறுவனர் திருமிகு அகன் அவர்கள் முன்னுரை வழங்க உள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் மற்றும் பலருடன் இணைந்து பணிபுரியும் திருமிகு சிவா .அனந்த் அவர்கள் ஆகச் சிறந்த நிர்வாக இயக்குநர் , மெட்ராஸ்_டாக்கீஸ் திரைப்பட பாடலாசிரியர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
அமெரிக்கா,கனடா, சுவிட்சர்லாந்து, நியூஜெர்சி, லண்டன், ஜெர்மனி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 40 பெண் கவிஞர்கள் 15.8.2020 அன்று கவியரங்கில் கலந்து கொண்டு கவி பாட உள்ளனர்...
இந்நிகழ்வை மு.கீதா(devatha tamil) ஒருங்கிணைக்க உள்ளேன்..
எங்களை ஊக்கப்படுத்த நீங்கள் கலந்து கொள்ள உள்ளீர்கள்.. பிறகென்ன சந்திப்போம்.. கவியரங்க நிகழ்வில்

Sunday 9 August 2020

தேநீர்

அதிகாலைத் தேநீர் அமிர்தமாய் இருக்கிறதா?
அழிந்த உயிர்களின் அரிதான குருதிச்சுவையது.
உயர்ந்து நின்ற காடழித்து
உயிர்களை குடித்தமைத்த  
தேயிலை படுக்கை
வனச்சுடுகாடு.
நாம் பச்சை படுக்கை என
வியந்து அருகில் விதவிதமாக
விழிவிரிய எடுத்தபுகைப்படங்களின்
பின்னணியில் ஒரு இரத்த வரலாறு.
சேற்றில் புதைந்த உயிர்களின் ஓலம்..
தாயே தனது குழந்தைகளை விழுங்கிய சோகம்...
நீங்கள் குடியுங்கள் ரசித்து...
கீதா

Monday 3 August 2020

பன்னாட்டுக்கவியரங்கம்

பன்னாட்டு கவியரங்கம்

என் தலைப்பு'வயல்'

வயல் குறித்துக் கவிபாட
வரப்போரம் தேடினேன்.
பாலங்கள் விழுந்த ஒலி கேட்டதுண்டு
பாளம் பாளமாய் வெடித்த வயலின்
விம்மல் ஒலி கேட்டதுண்டா?
கேளுங்கள்.
வயலின் வலியிது.

ஏன் மறந்தாய் மனிதா?
எலும்பென வரப்பெடுத்து,
உதிரமாய் நீரெடுத்து,
என்மார்பு சுரந்து,கருப்பை பிளந்து
நிலையாய் ஓரிடத்தில் உன்னை
வசிக்க வைத்த
வயல் கேட்கின்றேன்.
பச்சை பட்டுடுத்தி
பசுங்கிளிகள் கவிபாட,
சேற்று நீரில் மீன் துள்ள,
ஒற்றைக்கால் குருகு பசியாற,
சற்றும் அயராது உழைத்த
உன் பாட்டனின்வியர்வையினை
தென்றலது துடைத்து விட.
அயர்வு கலைந்து ,அசதி கலைந்து
வருவோர் போவோர்க்கெல்லாம்
வரையாது பசிநீக்கி மகிழ்ந்தானே!
ஏன் மறந்தாய் மனிதா?

புரிகிறதா? புரிகிறதா?
வயல் அழித்து,
வரட்டு நாகரிகமென
நீ தேடி ஓடியதெல்லாம்,
இன்று உனக்கு எதிராக! எதிரியாக!

உணர்வழித்து,உணவிழந்து,
உறைகின்ற வீடாக்கி
மகிழும் மனிதா..
இனி எதை உண்ணப் போகின்றாய்?
கான்கிரீட் கற்களையா?

விவசாயப் புரட்சி என்றே
விளைநிலங்களை விடமாக்கினாய்.
தொழிற்புரட்சி என்றே
தொழிற்சாலை கழிவுகளை
என் கருப்பைக்குள் புகுத்தி
கருவறுத்தாய் .
ஏன் மனிதா?
அது மட்டுமா!அது மட்டுமா!
சுரங்கம் வெட்டி, சுரங்கம் வெட்டி
கனிமங்கள் அழித்தாய்-நான்
பாதுகாத்த புதையல்கள் அழிவதை
பார்த்தே நீயும் கடக்கின்றாய்.
சோழநாடு சோறுடைத்து.
சோறின்றி விவசாயி
எலிபிடித்து உண்டநிலை
ஏன் மறந்தாய்?
மீதமிருக்கும் மிச்ச நிலத்திலும்
மீத்தேன் எடுக்க அலையும்
கூட்டத்தோடு கூடியே களிப்பாயோ!?
வள்ளுவா
'சுழன்றும் ஏர் பின்னது உலகம்' என்றாய்.
பட்டறிவு, பகுத்தறிவு ஏதுமின்றி,
கெட்டநிலையறியாது
பறந்து பறந்து ஓடுகின்றான்.
ஒரு வீடு போதாது
இருவீடு,பலவீடென
ஊர்ஊராய்ச் சேர்க்கின்றான்.
ஒரு காரு போதாதென
கார்களாய் வாங்கிக் குவிக்கின்றான்.
வயலை விற்று கார் வாங்கி
கார்ப்பரேட் முதலாளிகளின்
கால்நக்கும் ஏவலாளியானான்.
உழவனோ கூலியாய்.

நீ தூங்கும் வீட்டினிலே,
நிச்சலமான நேரத்திலே,
விதை முட்டும் சத்தம் உணர்ந்தாயோ,
விதை முட்டி முட்டி
முளைக்க முடியாமல் மரித்தவற்றின்
ஓலங்கள் கேட்டாயோ!
உழவன் உயிர் துறந்தாலும்
உணவளிக்கும் வயல் மறவான்.
தொழுதென்னை
வணங்கியே பயிரிடுவான்.
தொண்டு காலமாய்
எனக்கும் அவனுக்குமென
அறுபடாத உறவை
அறுத்தாய் நீ!
காவிரித்தாய் கைவிரிக்க
கையேந்தி அலைகின்றான்.
கைகழுவினர்,
காலால் எட்டி உதைத்தனர்.
கோமனத்துடன் எனது மகன்
உருண்டு புரண்டு அழுதானே!
உணர்விருந்தால் அவனுக்கா
உயிர்க் குரல் கொடுத்திருப்பாய்.

உப்பிட்டுத்தான் உண்கிறாயா?
உணர்வின்றி அலைகிறாயா?
ஏன் மறந்தாய் மனிதா?

பசியென்று வந்தோரை வாழவைத்து
பாரெல்லாம் கொடை கொடுத்து
வாழ்ந்த மனிதா...
இன்று
பீட்ஸா ,பர்கர் உண்டு
பீஸ்பீஸாக அறுத்துக் கிடக்கின்றாய்
தடுக்கி விழும் இடத்திலெல்லாம்
முளைத்து விட்ட மருத்துவமனைதோறும்.
பாரம்பரிய உணவு மறந்தாய்.
பாரமானாய் உலகிற்கே!

தீநுண்மி உயிர் பறிக்க காத்திருக்க,
கூட்டுக்குள் புழுவென
வீட்டுக்குள் முடங்கினாய்.

அயல்நாட்டு விதை விதைத்து,
அன்னை வயலை மலடாக்கி,
அடுத்த வேளை உணவிற்கே
அந்நியரிடம் கையேந்தும்
நிலை தாழ்ந்தாய்.
தகுமா? இது தகுமா?
நன்றி.
மு.கீதா
புதுக்கோட்டை
தமிழ் நாடு
இந்தியா.




Wednesday 29 July 2020

பன்னாட்டு கவியரங்கம்

 வரவேற்கிறோம் பன்னாட்டு கவியரங்கம் காண..

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி,,அபெமா படிப்பு வட்டம் இணைந்து நடத்தும் பன்னாட்டு கவியரங்கம்.
12 நாடுகளில் இருந்து 16 கவிஞர்கள் கவிதை வாசிக்க உள்ளோம்..
தலைப்பு-நான் நடத்தும் பாடத்தை ஏன் மறந்தாய் மனிதா?
என் தலைப்பு'வயல்'
தோழமைகள் தேன்மதுரத்தமிழ் கிரேஸ் , பெண்ணியம் செல்வக்குமாரி ,மைதிலி இவர்களுடன் 13 கவிஞர்கள்...
 கவிஞர் நா முத்துநிலவன் அவர்களின் தலைமையில்......

நாள் :1.8.2020 சனிக்கிழமை
காலம் பிற்பகல்2.30 இந்திய நேரம்
Zoom meeting id -845 2498 5798
Password :tamil
முன் பதிவு அவசியம்
கட்டணம் இல்லை.

Tuesday 28 July 2020

Geetha's Tips Treat-you tube channel

உங்கள் ஆதரவுடன்....
அம்மாவின் நினைவாக
Geetha's Tips Treat- you tube channel
நாம் அனுபவித்தவற்றை மற்றவர்களுக்காக பதிவு செய்ய வேண்டும்...
என்னை செதுக்கிய என் மாணவர்கள்
பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறைமைகள்
புத்தகங்கள், தாவரங்கள் என என்னை மகிழ்வித்தவைகள் உங்களையும் மகிழவைக்க..
வாங்க பாருங்கள் மறக்காமல் லைக் பண்ணுங்க
 ,,சர்ப்ஸ்கிரைப் பண்ணுங்க..
தொடர்வோம்...
https://m.youtube.com/watch?feature=share&v=lQT95sVvmispmp

Monday 6 July 2020

கண்ணீர்

ஒரு நிமிட மகிழ்ச்சி
ஒரு உயிரின் வீழ்ச்சி...

பாலியல் வன்முறைக்கு பின்
பக்குவமாய்
கழுத்தை நெரித்து
முடிந்தால் அறுத்து
சாலையில் வீசி
தூக்கிட்டு
 மூச்சைடைக்க வைத்து
ஆசையிருந்தால் உடல் முழுதும்
கத்தியால் கோலமிட்டு
கதறுவதை ரசித்து
நெருப்பிலிட்டு எரித்து
ஒரு நிமிட மகிழ்வை 
மறந்து விடலாம்...
பள்ளி இருந்தால் 
எம் குழந்தைகளுக்கு
பாதுகாப்பு தான்.
கொரோனா தேவலாம்
கீழ்மையான ஆண்களுக்கு...
தினம் தினம் பலி
நேற்று அறந்தாங்கி
இன்று திருச்சி குழந்தை...

Saturday 27 June 2020

வீதி கலை இலக்கிய களம்-73 இணையத்தில்

அன்புடன்
ஒரு கோப்பை இலக்கியம் பருக அழைக்கிறோம்
வீதி தனது 73 ஆவது நிகழ்வை இணைய வழியில் நிகழ்த்த உள்ளது....
உலகமெங்கும் வீதியின் நண்பர்கள் தங்களின் வாழ்த்துகளை மட்டுமே கூற முடிந்த நிலையில் தற்போது உங்களுடன் இணைந்து பயணிக்க வீதி அன்புடன் காத்திருக்கிறது...
வீதியின் முன்னோடிகள் திருமிகு கும.திருப்பதி தலைமை ஏற்க, கவிஞர் நா.முத்துநிலவன்  ஊரடங்கு தந்த உணர்வு என்ற தலைப்பில் உரையாற்ற, திருமிகு விசி.வில்வம் ஊரடங்கில் உளவியல் என்ற தலைப்பில் கலந்துரையாட உள்ளனர் நாளை காலை உங்களோடு..
உங்களின் மதிப்புமிகு காலங்களை ஒதுக்கி எங்களோடு இணைய வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறோம்...பாடல்,
கவிதைகள், நூல் விமர்சனம் மற்றும் திரைவிமர்சனம் என பல்வகைச் சுவையுடன் பரிமாற காத்திருக்கிறது வீதி.
இணைவோம் இணையத்தில்..

Thursday 11 June 2020

வீட்டிற்கு வந்த உறவுகள்

இன்று வீட்டிற்கு வந்த உறவுகள்...

           வீடு விலைக்கு வாங்க பார்த்த போது ஒரே மாதிரி இரண்டு வீடுகள் இருந்தன.... சற்று உள்ளே இருந்த வீடு தான் வேண்டும் என்று வாங்கினோம்.
அதில் கொஞ்சம் தோட்டம் வைக்க இடமிருந்ததே காரணம்.சிறு வயதில் வாழ்ந்த அரியலூர் வீட்டில்....ரோஜா , கனகாம்பரம், டிசம்பர் பூ,மல்லிகை. என பூச்செடிகள் வளர்த்ததுண்டு.
ஆயிரக்கணக்கில் பூக்கும் டிசம்பர் பூக்களை எனது ஆத்தா (அப்பாவின் அம்மா) அருகில் உள்ள வீடுகளுக்கு கொடுப்பது வழக்கம்... என்னையும் தம்பியையும் பூக்கொய்து தர கேட்பார்கள்.100 பூ  கொய்தால் எங்களுக்கு 5பைசா.ஒப்பந்தப்படி காலை எழுந்தவுடன் பறித்து கொடுத்து கிளம்புவோம்.
தோட்டத்தில் நேர் எதிரே பெரிய மஞ்சள் கனகாம்பரம்... அதன் பக்கத்தில் விதை ஊன்றி டேலியா பூ வரும் என்று காத்திருந்தால் கடலைச் செடி தான் காய்ந்தது....
 வீட்டில் வளர்த்துவந்த  கிளிகள் தினமும் அந்த செடியில் உட்கார்ந்து காலையில் கீ கீ என்று கத்தத் துவங்கினால் மேலே பறக்கும் கிளிகளெல்லாம் சுற்றுச் சுவரில் வரிசையாக அமர்ந்து கத்தும் காட்சி இப்போதும் கண்முன்னே...
அரியலூருக்கு அருகே உள்ள கலியபெருமாள் கோவில் திருவிழாவிற்கு செலவழிக்க தந்த பணத்தில் இந்த கிளிகளை வாங்கினோம் அப்பா அம்மாவின் சம்மதத்துடன்...
ஒருநாள் மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்த போது கிளி இல்லை..எங்கேம்மா என்று கேட்ட போது அதுக்கு முடியல‌அப்பா டாக்டர் கிட்ட தூக்கிட்டு போயிருக்காங்க என்று அம்மா சொன்ன போது மனசே சரியில்லை.
கொஞ்ச நாட்களில் ஒரு கிளி இறந்து விட மற்றதை தூரத்தில் கொண்டு விட்டுவிட்டு வந்து விட்டாங்க...
அப்போது கிணற்றில் நீர் இறைத்து தான் செடிகளுக்கு ஊற்ற வேண்டும்... அதெல்லாம் சொர்க்கம் என்று அப்போது புரியவில்லை..
சமையலறைக்கு அடுத்து உள்ள மண்தரையில் ரோஜா செடி வாங்கி ஊன்றி வைத்த சில நாட்களில்.... பள்ளி சென்று வந்து பார்த்தால் செடிக்கு மேல் இரண்டு மாடுகள்.... எங்கள் பாலுமாமாவிற்கு மாடுகள் என்றால் அத்தனை ஆசை...அதை எங்கிருந்தோ வாங்கி ஓட்டி வந்து கட்டி போட்டு இருந்தார்கள்.காலையில் ஊருக்கு ஓட்டிபோவாங்கன்னு அம்மா சொன்ன போது... மாடுகளின் கால்களில் தலையாட்டி சிரித்த ரோஜா செடி பத்திரமாக இருக்க வேண்டுமே என்ற கவலையோடயே தூங்கி எழுந்தேன்...கொஞ்சமாக நசுக்கப்பட்டாலும் என்னை ஏமாற்றாமல் நன்கு வளர்ந்தது சன்னலின் ஊடே பூக்களை காட்டி சிரித்தது ....
சில நாட்கள் செடிகள் கூடவே பேசிக்கொண்டு இருப்பேன்... நான் பள்ளிக்கூடம் போயிட்டு வரேன் பத்திரமா இரு என்று டிசம்பர் செடியிடம் அடிக்கடி பேசுவதுண்டு .. அந்த இடத்தில் முருங்கைக் கன்று வைக்கணும்னு அம்மாவின் ஆசை...
ஒரு நாள் டிசம்பர் தனது வாழ்விடத்தை முருங்கைக்கொடுத்து மறைந்து போனபோது இரண்டு நாட்கள் பேசாமல் கவலையாக இருந்தேன்..அப்றமென்ன முருங்கையுடன் பேச்சு தான்....
சங்க காலத்தில் இருந்தே பெண்களின் பேச்சுத் துணைக்கு தாவரங்கள் தான் உதவியாக இருக்கின்றன...
அதற்கு பின் காலனி வீடுகளில் செடிகளுக்கு வாய்ப்பே இல்லை.
புதுக்கோட்டையில் வீடு வாங்கும் போது கொஞ்சம் மண்தரையாவது கட்டாயம் இருக்க வேண்டும் என்ற எண்ணப்படி வீடு அமைந்தது.
ஒரு பக்கத்தில் சிறிய இடம் தான் இருந்தது.அதில் சுவரை ஒட்டி வெல்வெட் ரெட்ரோஸ், குண்டு மல்லிகை, மருதாணி, பப்பாளி இருக்கும்...
அதற்கு எதிராக கற்பூரவள்ளிவாழைமரம்.. இரண்டு தென்னை மரங்கள் , மஞ்சள் பூச்செடி பட்டு போல் நிறைந்து காணப்படும்...பெட் போல குரோட்டன்ஸ் வரிசையாக நிற்கும்....
 எனக்கு சூரியகாந்தி பூ பிடிக்கும் அரியலூர் வீட்டில் இருந்தது...
பத்தாவது படிக்கும் போது சின்ன பூவை தலையில் வைத்து செல்வதும் அதை எங்கள் சோபியா டீச்சர் தொட்டு பார்த்து ஏய் உண்மையான பூவாடி என ஆச்சரியமாக கேட்டதும் மறக்க முடியாத நினைவுகள்.
இந்த வீட்டிலும் தட்டு தட்டாக சூரியகாந்தி பூத்து குலுங்கும்..
மல்லிகையின் மணம் சன்னலைத் திறந்தால் வீட்டிற்குள் நிறைந்து மகிழ வைக்கும்.
வீடு புதுமனை புகு விழாவில் புவனா அக்கா இரண்டு தேக்கு மர கன்றுகள் பரிசுகளுடன் கொடுத்தாங்க... அதில் ஒன்று மட்டும் பதிமூன்று வருடங்கள் மளமளவென்று வளர்ந்து நின்றது ..
ஒரு நாள் தண்ணீர் ஊற்றி அதை தடவி கொடுத்து நல்லா வளர்ந்துட்ட டா... நான் இருக்கும் வரை நீயும் இருக்கனும்னு சொல்லி ஊருக்கு சென்ற ஒரு வாரத்தில் கஜா புயலில் தேக்கு மரம் விழுந்து விட்டது என்று எதிர் வீட்டில் உள்ள அனிதா கூறிய போது மனம் அதிர்ச்சியில்.... வீட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் கேட்டில் தலை சாய்த்து விழுந்திருந்தான்....
இதோ இரண்டு வருடங்களுக்கு மேலாக நின்றவன் படுத்திருக்கும் காட்சி கஜாவை நினைவூட்டியபடி.
மாடிக்கு மேல் வளர்ந்து சிரித்த கிறிஸ்துமஸ் மரமும் கருகி போனது.
நல்லவேளை வீட்டின் முன் புறம் இருந்த புங்கை மரமும்,வேப்பமரமும் தப்பித்தன.
வாழை மரங்கள் இருந்த இடத்தில் சிறிய அறை கட்ட வேண்டி வந்தது.
தென்னைமர வேர்கள் வீட்டிற்குள்ளே...சுற்றுச்சுவரை பாதிக்கவும் அதுவும் இல்லை..
இதை அடுத்து தினமும் காலையில் தோட்டத்தில் வேலை பார்த்து தண்ணீர் ஊற்றி பிறகு தான் சமையலறை வரும் வழக்கம் மறைய.....எழுத்துப்பணி காரணமானது.. அதற்கு பிறகு மூலிகை செடிகள் சித்தரத்தை,ஆடுதொடா,நொச்சி,ஓமவல்லி,
துளசி,தூதூவளை, திருநீற்றுப்பச்சை, கருவேப்பிலை, மருதாணி இவையுடன் செம்பருத்தி இருந்தன...
 தண்ணீர் ஊற்றிய பிறகு திருநீற்றுப்பச்சை தனது மணத்தை பரிசாக பரப்பும் பாருங்கள்..சே.. என்ன மகிழ்ச்சி டா இது எனத் தோன்றும்.
வெண்பூச்சிகள் அவற்றை அவ்வப்போது அழித்து விடும்...
நீண்ட வருடங்களுக்கு பிறகு இன்று வீட்டில் மீண்டும் செடிகள் வைத்தேன்...
மறுபடியும் மூலிகை செடிகள் மணம் பரப்ப வந்துள்ளனர்.... புதிதாக மஞ்சள் பூ கொடியும், மஞ்சள் அரளியும், அடுக்கு நந்தியாவட்டை யும், சிறியாநங்கை (நிலவேம்பு),பெரியாநங்கையும், எலுமிச்சை யும், செம்பருத்தியும் வந்துருங்காங்க.
தங்கை ஜீவாவும்.. அவர்களின் மகன் தீனாவும் செடிநடும் மகிழ்வில் வீட்டிலிருந்து சில செடிகளை கொண்டுவந்து தந்து மகிழ்ந்தனர்...
இனி காலை நேரம் இவர்களுடன் கழியும்...

வீட்டில் பெய்யும் மழைநீர் முழுவதும் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் சென்று. விடும்...
மோட்டார் தண்ணீரில்PHஅளவு 4800 இருந்ததுமுன்பு இப்போது ph1200நம்பமுடியாத விஷயம்.. உப்புத்தன்மை குறைந்து வாயில் வைக்கும் அளவுக்கு வந்துவிட்டது.... இயற்கை எப்போதும் மகிழ்வையே தருகின்றது.. நாம் தான் சரியாக புரிந்து கொள்ள வில்லை.

Friday 5 June 2020

தேர்வு

முக கவசமிட்டு தேர்வு எழுது மகளே...

உயிருக்கு ஆபத்தான நிலை தான் ஆனாலும்
பதினைந்து ஆம் தேதி தேர்வு நிச்சயம்..

. ஆம் நீ தேர்வு எழுதவில்லை என்றால் இங்கு வாழத் தகுதியில்லை...
தேர்வு எழுத வந்தால் உயிருக்கு பாதுகாப்பு உண்டா அம்மா என்று கேட்காதேமா...
அது உன் பொறுப்பு என்று சொல்லி விட்டார்கள்....என்னை மீறி கொரோனா வராது என்று உறுதி அளிக்க முடியவில்லை மா.
தேர்வு எழுத நுழையும் முன் உனது உடல் வெப்பநிலை சரியா என்று சோதிப்போம் . பயந்து கேள்விக்கான விடைகளை மறந்து விடாதே... கைகளை நன்கு கழுவ மறந்து விடாதே.
நீ மனப்பாடம் செய்ததெல்லாம் மறந்து இருப்பாய் கொரோனா விடுமுறையில்... ஆனால்.... மதிப்பெண் நீ பெற வில்லை என்றால் தேர்ச்சி இல்லை என்று அமைதியாக அறிவிப்போம்.. அதற்கெல்லாம் நீ பயந்து தற்கொலை நாடிவிடாதே மகளே...
பயமின்றி எழுது தேர்வு எழுதும் மேசையை தொடாமல் எழுது.
அருகில் இருக்கும் தோழியை நீண்ட நாட்கள் கழித்து கண்ட மகிழ்ச்சியில் தொட்டு உரையாடி விடாதே...நீ மட்டும் அல்ல உனது அறையில் இருப்பவரெல்லாம் கைகளைக் கழுவி ,முகக் கவசம் அணிந்துள்ளனரா என்று எச்சரிக்கையாக எழுது.
தேர்வு முக்கியம்....உனது உயிரை விட....கொரோனா அதிகரிக்கத் தான் செய்யும்...அதோடு வாழப் பழகிக் கொள்ள சொன்னோமே....நீ அறியவில்லையா?
அவசரத்தில் பேரூந்தில் யாரையும்,தொடாமல்  வா...கொரோனா ஒளிந்து கொண்டு உன்னை தாக்க தயாராகவே காத்திருக்கிறது.
திரும்ப வீட்டுக்குச் சென்று கவனமாக இரும்மா.
கொரோனா அச்சத்தில் படிக்க மறந்து விடாதே....நீ மேல்நிலைப் படிக்க இத்தேர்வு முக்கியம் என்பதால் தான் உனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையிலும் தேர்வு எழுத சொல்கிறோம்..
எங்களையும் மீறி கொரோனா தாக்கினால் முதலில் எங்களை கொல்லட்டும் என்று கொரோனாவிடம் கெஞ்சுவதைத் தவிர வேறு வழியின்றி தவிக்கிறோம்.

பெண் குழந்தையை இரவில் தொலைத்துவிட்ட தாயின் தவிப்போடு.....பணி செய்ய காத்திருக்கிறோம்....

கீதா

Tuesday 2 June 2020

திரை விமர்சனம்

"பொன் மகள் வந்தாள்"-திரைப்பட விமர்சனம்.
சூர்யா& ஜோதிகாவின் தயாரிப்பில் வெளிவந்துள்ளது" பொன்மகள் வந்தாள் "திரைப்படம். 
ஜோதிகா மற்றும் ஜோதிகாவின் அப்பாவாக பாக்கியராஜ்,தனது மரியாதைக்காக எதையும் செய்ய துணியும் சமூக ஆர்வலராக தியாகராஜன், அவருக்கு வக்கீலாக பார்த்திபன்....... பாதிக்கப்படும் பெண் குழந்தைகளின் பிரதிநிதியாக ஜோதிகா வாழ்ந்திருக்கிறார்.
திரைப்படங்கள் எதை கருவாக கொள்ள வேண்டும்..சமூகத்திற்கு அவற்றின் பங்கு என்ன என்பதை இந்த படம் உணர்த்தியுள்ளது.
பெண்களை விரட்டி விரட்டி காதலிப்பது, அரைகுறை ஆடையில் ஆடவிடுவது ,அவர்களை சிந்திக்க தெரியாத பொம்மைகளாக காட்டுவது,பெண்களை கேலியும் கிண்டலும் செய்வது இயல்பான ஒன்றாக காட்டிய திரைப்படங்களும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
காலங்காலமாக பெண்கள் அனுபவிக்கும் இந்த வலிகளை உரக்க சொல்ல விடாமல் அழுத்தப்பட்டு இருந்தது தற்போது ஒலிக்கத்துவங்கி உள்ளது.உண்மையான சமூக அக்கறை உள்ளவர்களால் மட்டுமே காசுக்கு விலை போகாமல் சமூகச் சீர்கேடுகளை சாடி குரல் கொடுக்க முடியும் என்பதற்கு சூர்யா ஜோதிகா உதாரணமாக திகழ்கின்றனர்....
ஜோதிகா, மருத்துவமனையும் கோவிலாக கவனிக்கப்படவேண்டும் என்று கூறியதற்காக அவரின் மீது வீசப்பட்ட அவமானங்கள் சமூக அக்கறை உள்ளவர்கள் மீது எறியப்பட்ட கற்கள்.
சொந்த வீடே பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற போகும் கொடுமை வேறு எந்த உயிரினங்களுக்கும் இல்லை...
குட் டச்,பேட் டச் சொல்லிக் கொடுக்க வேண்டியது ஆண் குழந்தைகளுக்கு.
சொந்தங்கள் பிஞ்சு குழந்தைகளின் உடலை ஆசைக்கு பயன் படுத்தி கொள்ளும் போது அக்குழந்தைகளின் வலியை கேட்க நம்ப அவர்களின் பெற்றோர்களே தயாராக இல்லாத போது அக்குழந்தை படும் பாடு சொல்ல முடியாத கொடுமை.
சிறு குழந்தைகளுக்கு இப்படி எனில் டீன்ஏஜ் குழந்தைகளின் உணர்வுகளைத் தூண்டி பயன்படுத்திக் கொள்ளும் ஆணினம் அவர்களையே குற்றவாளிகளாக்கி மகிழ்கிறது.
குடும்பம் பெண்ணின் உணர்வுகளை சிதைத்து அதில் கட்டமைக்கப்பட்டு வாழ்கிறது.
பெண்களின் வன்முறைக்கு எதிராக எழும்பும் குரல்கள் அதிகமாகிக் கொண்டு இருந்தாலும் அறியாத சின்னஞ்சிறு பெண்குழந்தைகளை சிதைப்பதும் அதிகமாகிக் கொண்டு உள்ளது.
சாதாரணமாக கடந்து போகிறோம்.நம் வீட்டில் நடக்க வில்லை என்று நிம்மதியில்.
ஆனால் உங்கள் குழந்தைகள் தங்களின் வலிகளை சொல்ல முடியாமல் மனதிற்குள் மருகுகின்றனர்....எந்த குழந்தையும் இந்த கொடுமைகளுக்கு விதி விலக்கல்ல என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
சிதைக்கப்பட்ட பெண்குழந்தைகள் வாழ்நாள் தண்டனையாக உளவியல் நோயாளியாக தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு உள்ளனர்.குற்றவாளிகளோ எந்த வித சங்கடமுமின்றி ஆண்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற கர்வத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டவராக உணர்ந்தால் தான் அவர்களின் வலியை உணர முடியும்.
பெண்களை சக மனுஷியாக மதிக்கத் தெரியாத ஆண்கள் விலங்கினும் கீழானவர்கள் என்ற உணர்வை எப்போது கற்றுத்தர போகின்றோம்.
"பொன் மகள் வந்தாள்"கொரானா காலத்தில் பெண் குழந்தைகளுக்காக எழுப்பப்பட்ட குரல்....
அதில் நடித்த ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் நடித்து உள்ளனர்.இப்படிப்பட்ட படத்தை தயாரித்து வழங்கிய சூர்யா,ஜோதிகாவிற்கு மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்.

இதில் குறைகள் இருக்கலாம் ஆனால் தவிர்க்க முடியாத கரு ...

Wednesday 13 May 2020

தப்பட் திரைவிமர்சனம்

தப்பட்
ஒரு அறை....ஒரே ஒரு அறை....என்ன செய்யும்? கணவர் விக்ரம் (pavil gulati)மீது பேரன்பை செலுத்தும் மனைவியாக தனது மாமியாரைக் கண்ணும் கருத்துமாக காக்கும் மருமகளாக  டாப்ஸி நடித்துள்ள இந்தியில் வெளியாகியுள்ள படம் "தப்பட் "
இந்த மாதிரி படம் எடுக்க துணிந்த இயக்குநர் அனுபவ் சின்காவிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்....
தனது அலுவலகத்தில் இருந்துஇலண்டனுக்கு பணி நிமித்தம் மற்றும் பதவி உயர்வில்  செல்லும் வாய்ப்பு கிடைத்ததை கொண்டாடும் விருந்தில் ஓடி ஓடி அனைவரையும் கவனிக்கும் அமிர்தா(டாப்ஸி)
விருந்து நடக்கும் பொழுதே தனது வாய்ப்பு பறி போனதை அறிந்து கோபத்தில் சண்டையிட்டு அடிக்க போகும் கணவனை பிடித்து இழுக்கும் போது எதிரியின் மீதுள்ள அத்தனை  கோபத்தையும் மனைவியின் கன்னத்தில் ஒரே அறையாக.....
ஆணாதிக்க சமூகத்தில் இதென்ன ஒரு விசயமா....கணவன் மனைவிக்குள் வரும் சண்டை இயல்பு தானே என்று தோன்றினால் நீங்கள் இன்னும் வளரவில்லை என்று உணருங்கள்..
ஒரு அறைக்குள்ளேயே மனைவியை அடிப்பது சட்டப்படி குற்றம் என்பது இன்னும் காகிதத்தில் மட்டுமே உள்ளது..
அத்தனை பேர் மத்தியில் அமிர்தா இழந்தது சுயமரியாதையை மட்டுமல்ல..
தனது கணவனின் மீது தான் வைத்த  அன்பையும் தான்.. அதற்கு பிறகு அவளால் தூங்கவே முடியவில்லை...
அவளது அப்பா அவளுக்கு சப்போர்ட் பண்ணும் போது அவளது அம்மா தனது பாட்டு பாடும் திறமையை கணவருக்கு பிடிக்கவில்லை என்பதால் அழித்துக் கொண்டதை கூறி சமாதானம் செய்கிறாள்...
கணவனுடன் விருப்பமின்றி வாழ விரும்பாத அமிர்தா விவாகரத்திற்காக பெண் வக்கீலை நாடுகையில் பெண்ணியத்திற்காக குரல் கொடுக்கும் அந்த வக்கீலே கணவனின் வன்முறைகளைத் தாங்கி வாழ்வதால் இதற்கு ஏன் விவாகரத்து என்று வியக்கிறார்...
பிடிவாதமாக தனது சுயமரியாதையை விட்டு கொடுக்காத அமிர்தா தான் தாயாகப் போவது தெரிந்தும்....விவாகரத்து பெறுகிறாள்.தனது செயலுக்கு இறுதி வரை மன்னிப்பு கேட்காத கணவன் ஆணாதிக்க சமூகத்தின் சீரழிந்த பகுதி.
ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முடிந்தது என்பதன் அடிப்படை பெண்களுக்கு  சுயமரியாதை இல்லாத அப்படி ஒன்று அவர்களுக்குத் தேவையே இல்லை என்று கருதும் சமூகத்தின். ...பண்பாட்டுச் சிதைவு...
மேலோட்டமாக பார்த்தால் இது பெரிது அல்ல தான்....
அந்த இடத்தில் கணவன் மனைவியிடம் அறை வாங்கி இருந்தால் பொங்கி எழாதோ ஆண்குரல்கள்...
செயல் ஒன்று தான்... ஆளுக்கு தகுந்தாற்போல் தீர்ப்பு சரியல்ல என்பது மறுக்க முடியாத உண்மை.
தப்பட் துவக்கம் தான்....
தனது நடிப்பால் வாழ்ந்திருக்கிறார் டாப்ஸி வாழ்த்துக்கள்.
இந்த கருவை தேர்வு செய்த இயக்குநருக்கு மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்.

Thursday 2 April 2020

நூல் விமர்சனம்.-ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு

நூல் விமர்சனம்
#reading_marathan_2020_25
RM261
3/25

"ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு'
சராஜீவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை.
ஸ்லெட்டா ஃபிலிப்போவிக்.
தமிழில்
அனிதா பொன்னீலன்.
புலம் வெளியீடு
விலை ₹170
பக்கம் 208.
தனது முதல் மொழிபெயர்ப்பு நூலிலேயே பிரகாசமான எழுத்தாற்றலின் மூலம் இந்நாட்குறிப்பை நமக்கு மிக அருமையாக மொழி பெயர்த்து உள்ளார்.ஒரு குழந்தையின் மனநிலையில் இருந்தால் மட்டுமே இந்நூலின் உணர்வினை நாம் புரிந்து கொள்ள முடியும்.அந்த வகையில் ஸ்லெட்டாவின் நாட்குறிப்பை நாமும் உணரும் வகையில் சிறப்பாக மொழி பெயர்த்து உள்ளார் திருமிகு அனிதா பொன்னீலன்.
ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு,ஆனி ஃபிராங்க் நாட்குறிப்பு பற்றி கேள்வி பட்டு உள்ள நிலையில் சராஜீவோவின் ஆனி ஃபிராங்க் என்று அழைக்கப்படும்" "ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு" படிக்கும் வாய்ப்பு...ஊரடங்கு போது கிடைத்தது.
கொரோனா அச்சத்தில் ஊரடங்கின் நாட்களில் நான் இந்த நூலை வாசித்தது முழுமையாக பதுங்கு குழியில்.... மூன்று மாதங்களுக்கு மேலாக வீட்டை விட்டு நகராத ஸ்லெட்டாவின் மனதை நுண்மையாக  அறிந்து கொள்ள முடிகிறது.

யூகோஸ்லாவியா நாட்டிலிருந்து போஸ்னியாவும்,ஹெர்ஸகோவினாவும் விடுதலை அடைந்ததாக அறிவித்ததும், அங்கு வாழ்ந்து கொண்டிருந்த குரோஷியரும், இஸ்லாமியரும் விடுதலை பெற முயல ,அதை எதிர்த்து செர்பியர்கள் நடத்திய போரினை  ஸ்லெட்டா  தனது நாட்குறிப்பின் மூலம் நமக்கு காட்சிப்படுத்தி குழந்தையின் பார்வையில் போரின் தன்மையை உணர வைத்து மனதை அதிர வைக்கிறாள்.
வசதியான குடும்பத்தில் பிறந்து தந்தை வழக்கறிஞரான மாலிக், வேதியியல் வல்லுநரான அம்மா அலைகா இருவரின் ஒரே செல்ல மகளாக வசதியாக எந்த வித கவலையுமின்றி படிப்பு,இசை,பியானோ வாசித்தல், புத்தகம் வாசித்தல் ,வார இறுதியில்  தாத்தா பாட்டியின் கிராமத்திற்கு சென்று மகிழ்வாய் இயற்கையை நேசிப்பவளாக, மக்கள் மீது தீராத அன்பை பொழிபவளாக ,வானொலி கேட்பவளாக.... ஸ்லெட்டா.
போர் எதற்காக ஏன் என்று கேள்வி கேட்பவளாக பத்து வயது சிறுமியான ஸ்லெட்டா  நம்மை காலத்தின் பின்னே அழைத்து சென்று மனிதர்களின் கோர முகத்தைக் காட்டுகின்றாள்
ஆனி ஃபிராங்க் தனது நாட்குறிப்பிற்கு கிட்டி என பெயர் வைத்ததை அறிந்ததும் தனது நாட்குறிப்பிற்கு "மிம்மி" என பெயர் வைத்து தனது உணர்வுகளை எண்ணங்களை அதனிடம் பதிவு செய்கிறாள் ".மிம்மி" அவளுக்கு சிறந்த தோழியாக அமைதியாக அவளது சோக எண்ணங்களை  நிரப்பப்படுவதற்காக பொறுமையாக காத்திருக்கின்றது.
குழந்தைகள் உயிரற்றவைகளுக்கும் பெயர் வைத்து உயிர்ப்பிக்கும் வல்லமையுடையவர்கள்.

செப்டம்பர் 1991 முதல் அக்டோபர் 1993 வரை எழுதப்பட்ட நாட்குறிப்பு நமக்கு செரஜீவோவில் நடந்த போரின் நிலைமையை கூறி மக்கள் படும் துயரங்களை எடுத்து உரைக்கின்றது.
குழந்தைகளுக்கே உரிய தன்மையுடன் எதற்காக இந்த போர்.?.ஏன்? எப்போது முடியும்? என தனக்குள் கேள்வி கேட்கிறாள்.வீட்டின் அருகேயுள்ள குன்றிலிருந்து வீசப்படும் குண்டுகளுக்கு பயந்து வீட்டின் அடிப்பகுதியில் இருட்டாக இருக்கும் நிலவறையில் அடிக்கடி செல்ல
நேரிடும் போதெல்லாம் எப்போது இந்த போர் முடிந்து நண்பர்களுடன் விளையாட முடியும்.... தாத்தா பாட்டியின் கிராமத்திற்கு செல்ல முடியும் என்று ஏங்குகிறாள்.
"போர் எங்கள் படிப்பிற்கு இடையூறு செய்து,பள்ளிகளை மூட வைத்து, குழந்தைகளை வகுப்பறைகளுக்கு பதிலாக பதுங்கு குழிகளுக்கு அனுப்புகின்றது . போர் வெறியர்களுக்கு அன்பைப் பற்றியோ, எதையாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஆசையோ எதுவும் தெரியாது.எப்படி அழிப்பது, எரிப்பது, ஏதாவது பொருட்களை எடுத்து செல்வது என்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும்."என மிம்மியிடம் பதிவு செய்கிறாள்.
      போரின் விளைவாக படுகொலை, கொன்று குவிப்பு, பயங்கரம், இரத்தம், ஓலங்கள், கண்ணீர், பரிதவிப்பு....இவையே ஸ்லெட்டா அறிகிறாள்.ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் வளமான வாழ்க்கை அழிந்து மின்சாரமின்றி, தண்ணீரின்றி,எரிவாயு இன்றி,உணவின்றி ரொட்டிக்கு ஏங்கும் நிலை ஏற்க முடியாத வேதனையாக உள்ளது. அவளுக்கு பிடித்த பிஸாவிற்காக மூன்று மாதங்களாக குழந்தை ஏங்குவதை எப்படி தாங்கிக் கொள்வது.
மஞ்சள் பறவை சிக்கோவும் ,சிஸி பூனையும் அவளுக்கு ஆறுதலாக இருந்து.   இறந்து விடுகின்றன.
இந்த போர்  அவளிடமிருந்து வருடக்கணக்கான வாழ்க்கையையும்,குழந்தைமையையும்,
முதியவர்களின் அமைதியான முதுமைக் காலத்தையும் திருடிச் சென்றுவிட்டதாக கோபப்படுகிறாள்.
ஒன்றுமறியாத பதினோரு வயது சிறுமி தனது வாழ்வில் விருப்பமின்றி நுழையும் போரின் காரணமாக தான் நேசிக்கும் நாட்டை, உறவுகளை,நண்பர்களை இழந்து தனிமையில் வாடி , அவள் நேசிக்கும் அற்புதமான பிள்ளை பருவத்தை அருவருப்பான போர் கொண்டு செல்வதை எண்ணி கதறுகின்றாள்.
அவளுக்கு போர் வாழ்க்கை பழகிவிடுகிறது.
அவள் எழுதிய நாட்குறிப்பு 1993 ஜுலை 17  நூலாக வெளியிடப்பட்ட விழாவைப் பற்றி மிம்மியிடம்(அந்த நாட்குறிப்பு) கூறுவது சிறப்பு.
அவளது தோழி மஜாவின் முயற்சியில்
செராஜீவோவின் பாதிப்பு மிம்மியால் உலகமெங்கும் அறியவைக்கப்படுகிறது.
மிம்மியை உலகமே நேசிக்கத் துவங்குகிறது.
ஸ்பெயின், பிரான்ஸ்,யு.எஸ்.ஏ., இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து ஸ்லெட்டாவை பேட்டி எடுக்க வருகிறார்கள்.
உலக அளவில் அவளுக்கு பேனா நண்பர்கள் கிடைக்கின்றார்கள்.அவர்களின்  ஆறுதலான கடிதங்கள் போரின் நடுவே அவளுக்கு காலங்கழித்து கிடைத்தாலும் மகிழ்வைத் தருகின்றன.
நண்பர்களை இழந்து வாடும் அவளுக்கு அவர்கள் நல்ல நண்பர்கள் ஆகிறார்கள்.
இந்த அற்ப போர் விளையாட்டின் முடிவில் 15,000 பேர் பலி.அவர்களில் 3000 குழந்தைகள் என்பது ஏற்க முடியாத வன்முறை.50,000 பேர் நிரந்தரமாக வாழத் தகுதியற்றவர்களாகிறார்கள்.
இதற்கு நடுவே வருகின்ற பிறந்தநாள் விருந்துகள் மருந்தாக அமைகின்றன.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் ஆறுதலாக இருக்கின்றன.
குழந்தைகள் எப்போதும் போரை விரும்புவதில்லை.
ஸ்லெட்டாவை பேட்டி காணும் நிருபர் அவள் அருகே குண்டு விழுந்தாலும் கவலைப்படாமல் இயல்பாக இருக்கும் நிலை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
அவள் தன்னைத்தானே தேற்றி தன்னம்பிக்கையுடையவளாக இருக்கின்றாள்.
பெரியவர்களின் பேராசைக்கு குழந்தைகள் எல்லா நாடுகளிலும் பலியாகின்றனர்....
அவர்களுக்கான உலகத்தை எப்போது உருவாக்க போகின்றோம் என்ற எண்ணத்தை விதைக்கிறது மிம்மி.
மு.கீதா
புதுக்கோட்டை.