World Tamil Blog Aggregator Thendral

Monday 29 January 2024

தியாகிகள் தினம்

இன்று தியாகிகள் தினம்.

எங்கள் தாத்தா திருமிகு மாணிக்கம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தரப்பெருமாள் கோவிலில் தீவிர சுதந்திர போராட்ட வீரர்.
நான்  பார்க்கும் போது அவர் உடல்நலக்குறைவில் இருந்தார்.
பத்து வயதாகும் போது அவரின் மறைவு நினைவுகள் இப்போது இலேசாக நிழலாடுகிறது.

தாத்தாவைப் பற்றி ஆத்தாவிடம் அதிகம் பேசுவதுண்டு. வீட்டையும், மனைவியையும், குழந்தைகளையும் கவனிக்காமல் சுதந்திர போராட்டமே கதியென்று கிடந்துள்ளார்.

ஆத்தா தனது ஒன்பது குழந்தைகளில், உயிரோடு ஆறு குழந்தைகளையும் வளர்க்கப் பட்டச் சிரமங்கள் ,தாத்தா மீது கோபம் இருந்தாலும் அவரை எப்போதும் வெறுத்ததில்லை.

ஆத்தா சிறுகச் சிறுக சேமித்து வைக்கும் நகைகளை தாத்தா வீட்டுக்கு வரும் போது எல்லாம் அடுக்குப் பானைகளை அப்படியே  கவிழ்த்துப் போட்டு அதிலிருக்கும் நகைகளை எடுத்து, சுதந்திர போராட்டத்திற்கு தந்துவிடுவார் எனக் கூறி திட்டிக் கொண்டு இருப்பார்.

"அவர் தலையில் காங்கிரஸ் தொப்பியை மாட்டிக் கொண்டு சுதந்திர கொடியை சுமந்து கொண்டு வந்தேமாதரம் என்று முழங்க தெருவெங்கும் நடந்த காட்சியைக் கண்டு காங்கிரஸின் மூத்த தலைவர் மதிப்பிற்குரிய கருப்பையா மூப்பனார் அவர்கள் சிறு வயதில் பார்த்து, சுதந்திர போராட்டத்தின் மீது ஆவல் கொண்டு கலந்து கொண்டதாக "தினமணி பொன்விழா மலரில் ஒரு கட்டுரையில் எழுதி உள்ளார்.

தாத்தாவின் அப்பா
,வங்காரம் பேட்டை,கஞ்சமேடு, உள்ளிக்கடை ,கபிஸ்தலம் உள்ளிட்ட ஏழு கிராமத்திற்கு காரியகாரராக இருந்து பல  வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். தீராத வழக்குகளைத் தீர்த்து வைப்பாராம்.சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமது.

ஒரு வழக்கில் தீர்ப்பு சொல்ல மூன்று நாட்கள் தாமதமாக, மூன்று நாட்களும் வந்திருக்கும் அத்தனை பேருக்கும் தாத்தா வீட்டில் உணவளித்து தங்க இடமளித்து பிறகு தீர்ப்பு வழங்கி உள்ளார்..

ஒரு தீர்ப்பில் குற்றவாளி குற்றத்தை ஒத்துக்கொள்ள மறுக்க, அவர் வீட்டிற்கு அந்த ஊரில் நடக்கும் காளிக்கோவில் திருவிழாவின் போது காளியம்மன் அவர் வீட்டிற்கு வராது என்று கூறி உள்ளார்.குற்றவாளியோ காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.காவலர்கள் "காளியம்மன்" அவரது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.
திருவிழா நாளன்று "காளியம்மன் " அனைவரின் வீட்டிற்கும் சென்று ஆசிர்வாதம் வழங்குவது வழக்கம்.அதுபோல் அன்றும் ஒவ்வொரு வீடாகச் சென்று பின்னர் குற்றவாளியின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் காளியம்மனின் பின்புறம் வந்த தாத்தாவின் அப்பா காளியம்மனை அந்த வீட்டில் விட்டு விட்டு நடக்க, அவரோடு வந்த ஊரிலுள்ள அத்தனை பேரும் அவரைப் பின்பற்றி செல்வதைக் கண்ட காவலர்கள் உண்மையை உணர்ந்து கொண்டனராம்.

ஒரு வழக்கில் விறகை வெட்டி யாரோ எடுத்துச் சென்று விட்டனர் என புகார் வந்ததைக் கண்டு தாத்தாவின் அப்பா அவரிடம் பணி புரிபவரிடம் யார் வீட்டில் எல்லாம் புதிதாக விறகு கிடக்கிறது என்று பார்த்து வரக் கூறி உள்ளார்.அவரது வீட்டிலும் இருப்பதாகக் கேட்டு அதிர்ந்த தாத்தா,விறகை எடுத்து வந்த தனது மனைவியை வேப்பமரத்தில் கட்டி விளார் குச்சியால் எடுத்து சரமாரியாக அடிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார். 

நியாயம் என்று வந்தால் குடும்பமாவது மனைவியாவது என்று வாழ்ந்துள்ளார்.
ஊருக்காக வாழ்ந்தவரை யாரோ குறை கூற ,அதைக் கேட்ட எங்கள் தாத்தா இனி ஊர்ப்பணி எதுவும் பார்க்க கூடாது என சத்தியம் வாங்கி அவரைத் தடுத்துள்ளார்.மீறி அவர் ஊர்க்கணக்கை ஒரு நாள் பார்த்ததைக் கண்டு குறிப்பேடுகளைக் கோபத்தில் கிழித்து போட்டுள்ளார். 

அதனால் தான் அவரும் அந்த பதவிக்கும் செல்லவில்லை.

சுதந்திர போராட்டம் துவங்கி உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடக்கும் நிலையில் தாத்தா சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை மற்றவரிடம் கூறிக் கொண்டு இருந்ததைக் கேட்ட அவரின் அப்பா,"நீ சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்" என்று கூற, ஊரே திரண்டு வந்து தாத்தாவை திருவலஞ்சுழி வரை வந்து உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு வழி அனுப்பி வைத்துள்ளதைக் கேட்ட போது கண்ணீர் வந்தது.

அதனால் ஆங்கிலேய அரசு இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை அளித்தது .சிறையில் பல்வேறு சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்துள்ளார். 

சிறையில் வேதாரண்யம் வேத ரத்தினம் பிள்ளை பிள்ளை உள்ளிட்ட பல தலைவர்களுடன் இருந்த நட்பால், தான் வாழ்ந்த சுந்தரப் பெருமாள் கோவில் ஊரில் அரசு மருத்துவமனை வரக் காரணமாக இருந்துள்ளார்.அந்த மருத்துவமனை அமைக்க ரூ 16000 குறைந்த நிலையில்,அவர் சிறை சென்றதற்காக அரசு சன்மானமாக அளித்த 15 மா நிலத்தை விற்று அதிலிருந்து வந்த பணத்தைத் தந்துள்ளார். அக்காலத்தில் அந்தத் தொகை எவ்வளவு பெரியது?

ஊரிலுள்ள பெண்களுக்காக மாதர் சங்கம் அமைத்து தையற்பள்ளி,ராட்டை நூற்கும் பயிற்சி அளித்து அவர்கள் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக துணை செய்துள்ளார். நெசவாளர்களுக்காக சொசைட்டி,கூட்டுறவு பண்டகச் சாலை அமைத்துள்ளார்.

நிறைய விதவைப் பெண்களை ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து ஆசிரியராக உருவாகக் காரணமாக இருந்துள்ளார்.

அவரால் படித்த பெண் ஆசிரியர் ஒருவரின் குடும்பம் இன்று  தஞ்சை மாவட்டத்தில் மிகப் பெரிய செல்வந்தராகத் திகழ்வதைக் கண் முன் காண்கிறேன்.அவர்கள் அதையெல்லாம் மறந்துவிட்ட காலமிது.

அம்மாப்பேட்டையில் வாழ்ந்த போது 40 நெசவாளிகளுக்காக இலவச  வீட்டுமனைப் பட்டாக்களைப் போராடி பெற்றுத் தந்துள்ளார். அவருக்கு ஒரு இடமும் சிலையும் தருவதாக நெசவாளர்கள் கூறியதை மறுத்துவிட்டார்

தனது குழந்தைகளின் நலனுக்காக எதுவும் செய்யவே இல்லை, ஏன் அவர்கள் எந்த வகுப்பு படிக்கிறார்கள் என்பது கூட அவருக்கு தெரியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆத்தாவின் வேதனைக்கு காரணம் இதுவே.

தனது குடும்பத்தை மறந்து நாட்டுக்காக உழைத்த திருமிகு மாணிக்கம் எனது தாத்தா என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.தியாகிகள் நினைவு மண்டபத்தில் தாத்தாவின் போட்டோவைப் பார்த்து மனம் நெகிழ நின்றேன்.

இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பெற்ற சுதந்திரத்தைச் சீர்குலைக்கும் மனிதர்களைக் கண்டு வேதனை மிகுகின்றது.
அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் கூட இல்லை என்பது எத்தனை கொடுமை.

 மு.கீதா
புதுக்கோட்டை

Thursday 23 November 2023

அது

உயிரிழந்த உடலின் 
விரிந்த கால்களைக் கட்டுவது போல 
பாவாடை அணிந்து தூங்கும் போது
 கால்கள் விரியக்கூடாதென 
கட்டித் தூங்கிய பருவம்.
உதிரம் உதிரத்துவங்கிய நாளிலிருந்து
உலக்கை தாண்டக்கூடாதென
உதிரமும் நானும் உலக்கையின்
உலகில் வாழ்ந்த பருவம்.
புடவையை பாதியாய் கிழித்து
அணிந்த தாவணிக்கந்தையை மடித்து
கால்களின் நடுவே சுமந்து கடந்த பருவம்.
எட்டு முறை மடித்து வைத்த
துணிமூட்டையை நனைத்து பாவாடையில் பட்ட உதிரம் 
மறைக்கத் துடித்து வலியுடன் 
பள்ளியிலிருந்து வீட்டிற்கு 
தொடை உரசிய புண்களும்
எரிய எரிய வீடடைந்த பருவம்.
நல்ல நாளில் வரக்கூடாதென
அத்தனைக் கடவுளையும் கும்பிட்டழுதாலும் வந்து 
மூலையில் அமரவைத்து மூதேவி பட்டம்
வாங்கித்தந்த பருவம்.
தெருவெல்லாம் உறவுகள்
தலைநிமிராமல் தரைப்பார்த்தே 
நடந்த பருவம்.
அதிகாலைப்பனியில் ஆணெழும் முன்னே உறையவைக்கும் குளிரில் 
குளித்து விடியும்  பருவம்.
குளிருதும்மா,
அப்படி தான் குளிரும்
வெளியே சொல்லாதே
வயிறு பிழியும் வலிம்மா
அப்படி தான் வலிக்கும் தாங்கு.
பசி தாங்கு,
அவமானம் தாங்கு,
சுயமரியாதையின்றி வாழப்பழகு,
குரலெழுப்பாதே,
ஒங்கி சிரிக்காதே,
கடந்த காலம்
கடந்து போன காலம் மட்டுமல்ல.

மு.கீதா

Friday 30 June 2023

முப்பாலில் ஒன்று

முப்பாலில் ஒன்று..

பட்டும் படாமலும் தொட முயலும்
கரங்களுக்கு ஆயிரம் வோல்ட்
மின்சாரம் தந்தது யார்?

 கூந்தல் கலைத்து மகிழும் தென்றலுக்கோ,
 நுதலில் படிமமாகும்
முத்த அருவியின் வாஞ்சை.

கோடைக்காற்றின் உப்புசத்திற்கு
கலவி முடித்துதிர்த்த
வியர்வையின் வாசம்.

ஊடலுக்கு பின்னான நெருக்கத்திற்கே
காற்றைக்கூட விட மறுக்கும் வேகம் .
கண்மூடி களித்துப் பிறக்கும் தலைவியின் புன்னகை நாடுபவன்,
நீளும் உச்சத்தின் பெருவெளியில் 
மகிழ்ந்து கரைந்து மறைபவளைக் கண்டு 
தவிக்குமவன் உயிர்.

கார் காலம் வர 
கடிதுமுயங்கும் புலிகளைக் கண்டு
வேட்டையாட மறந்த,
 தலைவனது தேரிலிருந்து
விரைந்து ஒலிக்கும் மணிகளின்
ஓசையைக் கேட்டாயோ தோழி.
அதென் தலைவனின் பெருமூச்சென
என்னையடைந்து மலர்த்துகிறது.
.

Sunday 11 June 2023

விடியல்

திடீரென தொலைக்காட்சியில் விளம்பரங்களிலும் ஆண்களே எண்ணெய், நெய்,காப்பி விளம்பரத்திற்கு சமைத்து தருவதாக எடுக்கப்பட்டு அட்டகாசமாக இருந்தது.
ஒரு பெண் உலகின் நவீன காரை வேகமாக ஓட்டி வர, பின்னால் பைக்கில் ஓடி வரும் இளைஞர்கள்,.
அவள் உடனே ஒரு செண்டை எடுத்து ஆடையில் ஸ்பிரே செய்ய ஆதிவாசி ஆண்கள் முதல் விண்வெளிக்கு சென்று கொண்டிருக்கும் ஆண்கள் வரை பணியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு ஓடிவந்து அவளுக்காக ஜொல்லுவிட அவளோ அவர்களை அலட்சியமாகப் புறந்தள்ளி பறக்கிறாள்.
என்ன ஒரு கொடுமை திரும்பி நின்னு ஒரு பறக்கும் முத்தமாவது தந்து இருக்கலாம்.
அட அடுத்த விளம்பரத்தில் குழந்தைகளை அப்பாக்களே குளிப்பாட்டி ,உணவூட்டி பள்ளிக்கு அனுப்ப அம்மா வரும் வழியில் குழந்தையை பிக்கப் செய்து,கடைக்கு அழைத்துச் சென்று கேட்டதை வாங்கித் தந்து வீட்டுக்கு வந்தால் அப்பா சுடச்சுட பஜ்ஜியோடு மணக்க மணக்க வரவேற்கிறார்கள்..
என்ன ஒரு புடவை விளம்பரம், மேக்கப் விளம்பரம், நகை விளம்பரத்தைப் காணோமே என்று திகைக்க, அந்த நாட்டின் பெண் பிரதமரும், பெண் முதலமைச்சரும் இணைந்து இனி பெண்கள் மேக்கப் இன்றி நகையும் புடவையும் அணியாமல் கோட் போட்டு டை கட்டி தான் பணிக்கு வர வேண்டும் என்ற சட்டத்தை இயற்றி விட்டனராம்.
 என் கண்கள் நம்பாமல் வியப்பில் விரிந்தது.
போதாதென்று மண்டபங்களில் பதாகை ஆண்கள் வயதுக்கு வந்ததை கொண்டாடும் பூப்பு நன்னீராட்டு விழா.ஒரு தாத்தா எங்க காலத்துல இதெல்லாம் இல்லையேன்னு புலம்பிக் கொண்டிருக்க, பெண்கள் தாங்கள் வயதுக்கு வந்ததை பொருட்டாக எண்ணாமல் வேலைக்கு கிளம்பிக் கொண்டு இதெல்லாம் தேவையில்லாத செல்வுன்னு அலட்சியம் செய்தார்கள்.
பெரிய தொழிலதிபர்களாக, அரசியல்வாதிகளாக பெண்கள் எங்கும் திகழ,எங்கடா இந்த நடிகர்கள் பின்னாடி ஓடின இளைஞர்களைத் தேட ,அவர்களோ போதைக்கு அடிமையாகி வட நாட்டில்,அயல்நாட்டில் கூலிக்கு வேலை செய்து கொண்டு இருந்தனர்.
சாதி சாதின்னு அலைந்த கூட்டமோ பொத்திக்கொண்டு இருந்தது.
ஏன்னா எங்களுக்கில்லாத சாதி உங்களுக்கு மட்டும் எதுக்குன்னு நாட்டிலேயே சாதி இல்லயாம்.
ஆண்களை கிண்டல் செய்தாலோ,காதலிக்கவில்லையெனில் ஆசிட் ஊத்தினாலோ, பலவந்தப்படுத்திக் கொடுமை படுத்தினாலோ கடுமையான சட்டங்கள் பாய்ந்தன.
தெருக்களில் இரவில் நடக்க ஆண்கள் அஞ்சி 6 மணிக்கு மேல் வீட்டுக்குள் அடைந்தனர்.
அப்பா அம்மாவிடம் சொல்லாமல் எந்த ஆணும் அடி எடுத்து வைக்கக்கூடாது.
பெண்களால் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தை ஆண்களுக்கு திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் ஊட்டிக்கொண்டே இருந்தன.

தாத்தாக்களின் வலிமையான ஜீன்கள் அவர்களின் போதைப்பழக்கத்தால் அழிந்து பேரன்கள் நோயாளிகளாகப் பிறந்தனர்.

தெருக்களில்,டீக்கடைகளில் எங்கும் பெண்கள் அதிகாலையில் கிளம்பி அரசியல் பேச, அதிகாலையில் கோலமிட்டு ,சமைத்துக் கொண்டிருந்த அப்பாக்கள் புலம்பிக் கொண்டே குழந்தைகளைப் பள்ளிக்கு கிளப்ப, எந்த வித மன உளைச்சலுமின்றி பேப்பர் படித்துக் கொண்டிருந்த பெண்கள் குளித்து விட்டு வந்து சாப்பாட்டில் உப்பில்லை காரமில்லை என்று தட்டைத் தூக்கி எறிந்து விட்டு ஹோட்டலுக்குச் சென்றனர்.

இது எந்த நாடு என்ற குழப்பத்தில் எதுவும் புரியாமல் நான் திகைக்க, கனவைக் கலைத்து கதிரவன் வர, இன்னும் விடியவே இல்லை .
மு.கீதா
புதுக்கோட்டை

Saturday 3 June 2023

அந்தமான்

அந்தமான் பயணம் 26.5.23-30.5.23 வரை ஐந்து நாட்கள்.
தமிழ்நாட்டில் இருந்து வெளியே அதிகம் செல்லாத எனக்கு அந்தமான் பயணம் மிகவும் புதிய ஆர்வத்தை உண்டாக்கியது. முதலில் இனிய நந்தவனம் குழுவினர் செல்வதை அறிந்து செல்லலாம் என்று நினைத்தபோது முடியாத நிலையில். அதனால் ஆசிரியர் குழுவில் தோழி அல்லிராணி, அவர்கள் குழுவினர் 17 மே மாதம் அந்தமான் பயணம்செல்கின்றனர்,  விமானக்கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், அழைத்துச் செல்லும் பேரூந்து கட்டணம்,நுழைவுக்கட்டணங்கள்,5 நாட்கள் உணவு சேர்த்துரூ30,000, ,நாம் செல்வோமா என்று கேட்டபோது சரி என்றேன்.
இப்படியாக அந்தமான் பயணத்திற்கு நானும், கீதாஞ்சலியும் ஆயத்தமானோம். பத்தாம் தேதி வரை எதுவும் தகவல் இல்லாத நிலையில், என்னவென்று கேட்ட பொழுது பயணத்தில் சிறிது தடை, தள்ளிப் போகிறது என்றார்கள், பிறகு இறுதியாக 26 ஆம் தேதி பயணம் துவங்கும் என்றார்கள், பள்ளியின் சூழல் தடை தான் இருந்தாலும் பணம் கட்டிய நிலையில் வேறுவழியின்றி செல்லத் துவங்கினோம்.சில தலைமையாசிரியர்கள் வரவே இல்லை.அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் முனைவர் பெரியண்ணன் அவர்கள் குழுவுடன் இணைந்து சென்றோம்.கடலூர் கிளை நிர்வாகிகள் ஏழுமலை மற்றும் புதுச்சேரி கிளை நிர்வாகிகள் இச்சுற்றுலாவைக் கடலூர் இதயம் டிராவல்ஸ் நிறுவனர் பிரகாஷ் அவர்களுடன் இணைந்து நடத்தினர்.
 சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் 26 ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் கிளம்பினோம். விமானம் அந்தமானுக்கு 7 10 மணியளவில் சென்றது. அனைத்திந்திய எழுத்தாளர் சங்க உறுப்பினர் 54 பேர் ஆசிரியர் 16 பேர் என 70 பேர் கொண்ட குழு கிளம்பியது.
முதல் 16 பேர்  கொண்ட குழு காலை 9 மணி அளவில் அந்தமானை அடைந்து, அங்கு உள்ள இதயா என்ற விடுதியில் தங்கினோம். எதிரே கடல் தன் மெல்லிய அலைக் கரங்களால் வரவேற்றது. கடலை பார்த்த அறை வேண்டுமென்று கேட்டு அறைக்கு வந்தோம். சிறப்பான தங்கும் வசதி 50%நிறைவைத் தந்தது எனலாம்.உடைமைகளை வைத்துவிட்டு. சற்று ஓய்வு எடுத்து விட்டு இறங்கி, கடலை பார்க்கும் ஆவலில் நடந்தோம் .
எதிரே இருந்த கடையை ஒட்டி ஒரு சிறிய சந்துவழியில்  கடலுக்கு செல்லும் பாதை இருக்க, அதில் இறங்கி கடலை அடைந்தோம். அத்தனை தெளிவான நீரை ஹரித்துவரில்தான் நான் பார்த்திருக்கிறேன். கலர் கலரான கற்களை கடற்கரையில் தள்ளித் தள்ளி மகிழ்ந்து வரவேற்றது.
 தூய்மையான கடல் கண்கொள்ளாக் காட்சியாக, மனம் நிறைந்தது .
கீதாஞ்சலி ,சந்திரலேகா ,ஹேமாவதி ஆகிய மூன்று ஆங்கில ஆசிரியருடன் நானும் ஒரு மணி நேரம் அங்கு கழித்து, புகைப்படங்கள் எடுத்து, மீண்டும் அறைக்கு வந்தோம்.
 இரண்டாவது குழு வர தாமதமான நிலையில் , புகழ்பெற்ற செல்லுலார் சிறைச்சாலைக்குச் செல்ல முடிவெடுத்தோம்.குழுவை அந்தமானைச்சேர்ந்த  சகோதரர் ஆனந்த் வழிநடத்தினார். குளிர்சாதன வாகனத்தில் புகழ்பெற்ற காலாபாணித்துறை என்னும் செல்லுலார் சிறைச்சாலையின் வாயிலை அடைந்தோம்.உள்ளே நுழைய நுழைவுச்சீட்டு வாங்க வேண்டும். எங்கள் குழுவிற்கு விமானப்படையில் பணி செய்த அரிமா பத்மநாபன் அவர்கள் தலைமையேற்று அழைத்துச் சென்றார். பெரிய கோட்டை போன்ற வாயிலை அடைந்து, உள்நுழைந்து வலப்பக்கமும், இடப்பக்கமும் உள்ள புகைப்படங்களை பார்த்து , வரலாற்றில் நுழைந்தோம். அங்கே  அந்தமான் சிறையின் சிறிய மாடல் பார்த்தோம் .சைக்கிள் சக்கரத்தின் கம்பிகள் வடிவத்தில் சிறைச்சாலை அமைப்பு. நடுவே ஒரு வட்ட அறை மூன்றடுக்கு சிறைச்சாலையைக் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் காவலர்கள் இருந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்களாம். 3 அடுக்காக இருந்த அந்தச் சிறைச்சாலை எங்களை வரவேற்றது.
 அடுத்ததாக எங்களை வழிகாட்டி அழைத்துச் சென்ற இடம்தான் தூக்கு மேடை. ஒரே நேரத்தில் மூன்று பேரை தூக்கிலிடும் கயிறுகள் தொங்கிக் கொண்டிருந்தன.  அந்த கயிற்றின் நுனியில் ஒரு இரும்பு வளையம் இருந்தது. தூக்கிலிடும் போது சிலர் உயிர் விடாத நிலையில் ,அவர்களை மறுபடியும் தூக்கிலிட முடியாது என்பதற்காக அந்த இரும்பு கம்பி அவர்களின் குரல் நாணை, தொண்டையை அழுத்தி உயிரை எடுக்கும் என்று வழிகாட்டி கூறினார் ஒவ்வொரு கயிற்றுக்கு கீழும் வெண்ணிற வட்டங்கள் பலகையில் இருந்தன, கீழே 20 ஆடி ஆழத்தில் அவர்களை எடுக்கும் அறை உள்ளது. மனம் சொல்ல முடியாத உணர்வில் தள்ளாடியது. கண்கள் கலங்க அடுத்தது ஒரு நீண்ட ஓடுகள் வேய்ந்த ஒரு அறைக்குச் சென்றோம் அங்கு செக்கு ஒன்று இருந்தது .அது கைதிகள் இழுக்கும் செக்கு. அந்த செக்கை பார்த்து, மூன்று கைதிகளின் உருவ பொம்மைகள் அங்கு இருந்தன .அதில் ஒன்று கைதியின் இரு கைகளை கம்பியால் கட்டியிருந்தது. இன்னொன்று கைகளும் கால்களும் இணைத்து கட்டப்பட்டிருந்தது, அவர்கள் நேராக நடக்க முடியும் .மற்றொரு பொம்மையை உருவத்தில் கம்பிகள் கீழ கட்டப்பட்டிருந்தது அப்படி கட்டி இருக்கும் பொழுது அவர் நடப்பதே சிரமம். மேலும் கைதியை ஒரு பலகையில் சாய்வாக கட்டி இந்தியர் ஒருவர் சாட்டையால் அடிக்கும் பொம்மைகளும் இருந்தன. ஆங்கிலேயர் அடித்தால் அனைத்து இந்தியரும் உணர்வால் ஒன்று சேர்ந்து விடுவர் என்று இந்தியரை வைத்தே அடித்துள்ளனர். இது ஒரு உளவியல் தாக்கல் .இனி என்ன செய்வது என்ற மனநிலைக்கு கைதியை தள்ளும் சூழல். இப்படி அந்த பொம்மையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதத்தில் நம் குடும்பத்தில் ஒருவரை , தற்செயலாக அங்கு சந்தித்தால் எப்படி இருக்கும்! கடலில் மூழ்கியவனின் கரங்களைப் பிடித்து தூக்கி விடுவது போல, மன துயரச் சூழலில் இருந்த அந்த நிலையில், புதுக்கோட்டை சார்ந்த தமிழ் செம்மல் கவிஞர் தங்க மூர்த்தி அவர்களை அங்கு கண்டபோது மகிழ்விலும் வியப்பிலும் மூழ்கினோம். என்ன இங்க என்று கேட்டபடி அவர் வந்தார் .உங்களை இங்கு பார்ப்போம் என்று நினைக்கவில்லை சார் என்று அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம் .சற்று மனம் தைரியம் அடைந்தது என்று சொல்லலாம். நீங்கள் பாருங்கள் என்று அவர் செல்ல, நாங்கள் சிறைச்சாலையில் பக்கம் நகர்ந்தோம். மெதுவாக சிறைச்சாலையை அடைந்தபோது கதவுகள் எல்லாம் ஒரு அடியில் ஐந்து கம்பிகளை கொண்டு கனமான கதவால் மூடப்பட்டு இருந்தது. அதன் பூட்டு சுவரில் நுழைந்து வெளியே வந்த தாழ்ப்பாழில் பூட்டும்படியான அமைப்புடன் கதவுகள் திறந்து இருக்க, உள்ளே நுழைந்து அந்த அறையை சுற்றி பார்த்த பொழுது, எத்தனை ஆயிரக்கணக்கான இந்தியர்களை அந்த அறை சந்தித்திருக்கும், அவர்களது உணர்வுகளை, வருத்தங்களை வேதனைகளை அடைந்திருக்கும் என்று மனம் மீண்டும் வலியில் மூழ்கியது. அந்த அறை பேசிய சொற்கள், அந்த அறைக்குள் முழங்கிய முனகல்கள், இந்தியரின் உணர்வுகளை உணர முடிந்தது. கண்கள் கசிய மற்ற அறைகளையும் சுற்றி பார்த்து வந்தோம். வழிகாட்டி வீர் சாவர்க்கர் கைதியாக இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். இத்தனை கைதிகள் உயிரை விட்டிருக்க, ஆங்கிலேயரிடம் கடிதத்தில் மன்னிப்பு கேட்ட வீர் சாவர்க்காருக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் என்று கேட்டேன் பதில் மௌனம் தான். வீர் சாவர்க்கர் இருந்த அறைக்கு தனியாக ஒரு காவலர் ,உள்ளே அவரது புகைப்படம் என காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அந்தமான் விமான நிலையத்திலேயே வீர் சாவர்க்கர் விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. என்ன சொல்வது ஒரு வழியாக சிறைச்சாலையை சுற்றிப் பார்த்து வெளியே வந்து அருகில் இருந்த கடற்கரையை அடைந்தோம். இரண்டாவது குழுவினர் வந்துவிட்டதை அறிந்து மீண்டும் அங்கிருந்து செல்லுலார் சிறைச்சாலையின் ஒலிஒளிக் காட்சி நிகழ்வைக் கண்டோம்.இதற்கு தனியாக கட்டணம் கட்டி பார்க்க வேண்டும்.வீரச்சுதந்திரத்தின் குருதி நிறைந்த காட்சிகளைக் கண்ட போது மனம் கொதித்தது.அதிலும் வீர் சாவர்க்கருக்கே முக்கியத்துவம்.பிறகு மிகப்பெரிய தேசியக்கொடி இருந்த பூங்காவிற்கு சென்று மீண்டும் அறையை அடைந்தோம் அந்தமானின் முதல் நாள் நிறைவடைந்தது.

Wednesday 12 April 2023

திரைப்பட விமர்சனம்

'புர்ஃகா ' திரைப்பட விமர்சனம்.

இயக்குனர் சர்ஜூன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'புர்கா' திரைப்படம் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் இருவர் மட்டுமே நடித்துள்ளனர்.

திருமணமாகி ஏழு நாட்களில் கணவனின் ஸ்பரிசம் கூட படாத நிலையில் விபத்தில் அவனை இழந்து 'இக்தா' என்னும் காத்திருக்கும் காலத்தை  அனுபவிக்கும் பெண்ணாக 'நஜீமா'வாக மிர்னா வாழ்ந்துள்ளார்.அவரது கண்கள் பேசும் மொழி அற்புதம்.

கலவரத்தில் அடிபட்டு இவரது வீட்டில் அடைக்கலமாகும் 'சூர்யா'வாக கலையரசன்.மிக இயல்பாக நடித்துள்ளார்.பெண்களுக்கான குரலை அவர் எழுப்பும் விதம் சிறப்பு.

இருவரும் ஒரு நாள் முழுக்க தனியாக இருக்கும் சூழல்.
இருவருக்கும் நடக்கும் உரையாடல் மூலம் பெண், தனக்குள்ளேயே தன் நிலை குறித்தான கேள்வியைக் கேட்பதன் மூலம், இந்தச் சமூகத்தின் மீது எழுப்புகின்ற விமர்சனங்கள் அற்புதமான காட்சிகளாக எடுக்கப்பட்டுள்ளது.

மிர்னாவுடன் சூரியனின் ஒளிக்கதிரும் நடித்துள்ளது என்று கூறும் அளவிற்கு ஒளியின் இசைவு சிறப்பு.

பெண்ணின் வலியை,தன்மையைக் காட்சிகளால் உணர்த்தும் இயக்கம் ஆசம்.
.
தனது வாழ்வை அவளே கூறுவதாக துவங்கும் படம்,திருமணத்தின் போது நிறைய மனிதர்களைச்சந்தித்த மகிழ்ச்சி, தற்போது இந்தக் கொடுமையான காத்திருப்புக் காலத்தில் ஒரு 
மனிதரையாவது சந்திக்க மாட்டோமா என்ற தவிப்பு, மனித வலியின் தனிமை வேதனையின்  உச்சம்.
இவளை புரிந்து கொண்டு நடக்கும் கணவனை, நேசிக்கத் துவங்கும் காலத்தில் அவனை இழந்துவிட்ட கொடுமை.

தனிமையின் துயரில் சூர்யாவின் வரவு இதமான ஒன்றாக அதே நேரத்தில் தான் செய்வது சரி என்ற உறுதியோடு,அடிபட்ட மனிதனை காப்பாற்றுவது தனது கடமை என்ற அறம்.

தெரியாத ஆணை கூட எப்படி தங்க சொல்றீங்க என்ற கேள்விக்கு போட்ட தையலை பிரிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்ற தன்னம்பிக்கை .
இப்படம் எழுப்பும் கேள்விகள்
*ஏன் இக்காலத்தில் ஆண்களும் பார்க்கக்கூடாது.?. 
*இந்த உலகம் ஒரு பொண்ண கட்டாயமாக பூட்டி வச்சி அழகு பார்ப்பது சரியா?
*பெண்கள் உங்களுக்கு என்ன தேவைனு வெளில சொல்லமாட்டீங்களா?
* இந்த மதம் சாதி எல்லாம் ஏன் எல்லோரையும் கஷ்டப்படுத்தனும்?
என் அடக்குமுறைகளை எதிர்த்து கேள்விக்கணைகளைத் தொடுக்கிறது.
இருவருக்கும் இடையே மெல்ல அரும்பும் நேசம் நம்மணத்தில் நறுமணத்தை வீசி மயிலிறகால் தடவுகிறது.
இருவரை மட்டுமே வைத்து திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கிய இயக்குனருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இது போன்ற பல படங்கள் உருவாகி மனித வாழ்வியலை  அதன் சிக்கல்களை எடுத்துக்கூற துணிய வேண்டும்...

மு.கீதா 
புதுக்கோட்டை

Thursday 6 April 2023

ஆலாவுடன்

(5.4.23)
நானும் ஆலாவும் (கார்)

கோவையில் வசிக்கும் தோழியின் குடும்ப விழாவில் கலந்து கொண்டு திருச்சி வரை தொடர்வண்டிப்பயணத்தில் வந்தேன்.
முதல் நாள் மதியம் புதுகையில் இருந்து ஆலாவில் திருச்சிவரை சென்று,ஆலாவை  இரயில் நிலையத்தில் விட்டு விட்டு தொடர் வண்டியில் சென்ற போது சற்று கவலையாக இருந்தது.
ஆலா, சாலையில் நிறுத்திச் செல்கிறேன் கவனமாக இரு என அதனிடம் கூறிவிட்டு கிளம்பினேன். (கார்கிட்ட பேசினியான்னு கிண்டல் பண்ணக்கூடாது... ரஜினிக்கு லெக்ஷ்மி போல எனக்கு ஆலாவாக்கும்)

நாம் பாட்டுக்கு நிறுத்திட்டு வந்துவிட்டோமே, இருக்குமோ இருக்காதோன்னு ஒரு உதறல் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

நேற்று இரவு பத்து மணிக்கு திரும்பி ஆலாவைப் பார்த்தபின் தான் சற்று நிம்மதியானது.

இரவில் கார் பயணம் மிகவும் பிடித்த ஒன்று என்றாலும் முதன் முதலில் என்கையில் வயிற்றில் புளி கரைத்தது.
உனக்கு தேவையா என்று கேட்ட மனதை ச்சுசூ சும்மா இரு என்று அதட்டி விட்டு காரை எடுத்தேன்.

அவசரமாக போக வேண்டும் என்று இல்லை நிதானமாக உன்னால் ஓட்ட முடியும் என்று எனக்கு நானே கூறி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.
பைபாஸ் சாலையைக் தொடும் வரை சற்று அச்சமாக இருந்தது.

இளையராஜா துணையிருக்க கவலை ஏன், என்று மெதுவாக சென்ற ஒரு லாரியின் பின் நானும் மெதுமெதுவாக..

ஆலா விட்டா பறக்கிறேன் என்று துடிக்க..
டேய் நானே கவுண்டமணி வண்டி ஓட்டனமாதிரி ஓட்டுறேன் நீ வேற 40 ஐ தாண்டக்கூடாதென அதட்டினேன்.

லாரி திடீரென்று வேறு சாலையில் நுழைய...எதிரில் கருப்புக் கம்பளம் விரித்து நல்இரவு என்னை வரவேற்றது.

மின்மினிபூச்சிகள் போல வாகனங்கள் எதிரே வரிசைக் கட்டி வர...
ஆலா எதிரே வர்ற வாகனமெல்லாம் ஒன்றாக வருதா அல்லது ஒன்றன் பின் ஒன்றாக வருதான்னு பார்த்துப் பார்த்து வண்டி ஓட்டிய கீதாவை ரசித்தேன்.
அத்தனை வாகனங்களும் கண்சிமிட்டுவது போல் ஒளியின் வரிசையாகச் சென்றது இரவின் சிறப்பு.
இரவுப் பயணம் பிடிக்குமா? ஓட்டும் ஓட்டிப்பாரும் என்று கிண்டலடித்தாள் எனக்குள் ஒருத்தி.

நடுவில் தடுப்பு இருந்ததால் கைபிடித்து நடப்பது போல அதை ஒட்டியே வந்தேன்...
பின் வந்த வாகனங்களை போங்க போங்க என்று வழிவிட்டு, பொறுமையாக வந்ததை நினைத்தால் இப்போது சிரிப்பாக இருக்கிறது.ஆனால் நேற்று நீ பொறுமையாவே போ , குடி முழுகிடாதுன்னு அதட்டிக்கொண்டே ஓட்டினேன்.
அட கீரனூர் மேம்பாலம் கொஞ்ச தூரத்தில் நான்கு விளக்குகள் ஒரே வரிசையில்.
ஒரு பேரூந்து இன்னொரு பேருந்தை ஓவர்டேக் செய்து வர ஆலா கோழிக்குஞ்சு போல் இடது பக்கத்தில் பம்மியது.

நார்த்தாமலை வந்த பிறகு அப்பாடா புதுக்கோட்டை வரப்போகுதேன்னு நிம்மதியாக ஆலா பெருமூச்சு விட்டது.
அப்படி ஓட்டனுமான்னு கேட்கக் கூடாது.
இரவில் கார் ஓட்டிச் செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை... அதற்கான முன்முயற்சி தான் இது.

ஒரு வழியாக ஆலா வெற்றிகரமாக இரவுப் பயணத்தை முடித்து அச்சம் பாதி, மகிழ்ச்சி பாதி என புதுக்கோட்டைக்கு வந்துவிட்டது. இரவு எனை வாழ்த்தி வீட்டுக்குள் அனுப்பியது.
இதெல்லாம் ஒரு விஷயமான்னு சிலருக்கு இருக்கும்.ஆனால் எனது வயதையொத்த பெண்களுக்கு தான் தெரியும் இதன் அருமை.

வயதுக்கு வந்தபிறகு மிதிவண்டி தம்பிக்கு போய்விட்டது.பணிக்காக இருசக்கர வாகனம் துணைக்கு வந்தது.
கார் ஓட்ட முடியுமா என்று சந்தேகம் வந்த போது வேலுநாச்சியார் ஐம்பது வயதுக்கு மேல் தான் யானைமீதேறி போர் செய்து வெற்றி பெற்றார் என்ற வரலாறு என்னாலும் முடியும் என்ற தன்னம்பிக்கையைத் தந்தது.

இந்தப் பயணம் எனது வாழ்வில் மறக்க முடியாத பயணம்.

நன்றி ஆலா.