World Tamil Blog Aggregator Thendral: March 2014

Monday 31 March 2014

தெங்கின் கொடையாய்



சிதறிக்கிடக்கும் குரும்புகள்
தொப்பென்று விழும் நீர்க்குடுவை
சிறு பூச்சிகளின் உறைவிடம்
அணிலின் துள்ளோட்டம்
குருவிகளின் கீச்சொலிகள்
கூடுகளின் தளம்
கீற்றுகளில் ஒளிந்து விளையாடும்
கதிரவனும் நிலவும்
பாலையிலும் தண்மை
யாவும்

கலைந்து போன கனவுகளாயின

மதில் காக்க
தலையாலே தான் பருகிய
நீர் தந்த தெங்கு
தலைகொடுத்து நிற்கிறது
கண்களை குளமாக்கி.....!

Sunday 30 March 2014

தகனம்

வெட்டியாளின் வலியில்
மனம்
தகனமாய்ச் சருகுகள்

நட்பு

நல்ல நட்பில் மேலும் சில பூக்களென
..................................................................

 ஒரு பொன் மாலைப்பொழுதில் தஞ்சை புத்தகக்கண்காட்சியை காணும் வாய்ப்பு தற்செயலாக நேர்ந்தது.தஞ்சை சென்றால் கரந்தை ஜெயக்குமார் சகோதரரை பார்த்து வாங்கன்னு முத்து நிலவன் அய்யா கூறியிருந்தார்.நானும் ஜெயக்குமார் சகோதரரிடம் பேசிய பொழுது அவசியம் வருகின்றேன் என்றார்.

முதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்பட்ட கணினி பயிற்சியில் அவர் எங்களுக்கு வலைத்தளத்தில் என்ன எழுதுவது?என பயிற்சி அளித்தார்.ஆசிரியர் என்றாலே ஒரு மரியாதையும் அச்சமும் வருமல்லவா? அவரைப் பார்த்ததும் அப்படித்தான் தோன்றியது .மிக எளிமையாக என்னை காண அவரின் துணைவியாரையும் அழைத்து வந்தது மிகவும் மகிழ்வாய் உணர்ந்தேன்..

புன்னகை பூத்த முகத்துடன் தஞ்சை மண்ணுக்கே உரிய பாசத்துடன் அவரின் துணைவியாரைப் பார்த்ததும் வேற்று ஆளாகத்தோன்றவில்லை நீண்ட நாள் பழகிய உணர்வில் பழகினேன்.நல்ல உறவுகள் வாழ்வில் கிடைப்பது அரிது.வலைத்தளம் எனக்கு வழங்கிய கொடையில் இவர்களும் உறவுகளாக ....

   கீழே  அவரின் வலைத்தளத்தில் இருந்து ..
.நன்றி சகோதரருக்கும் ,தோழிக்கும்..

” நல்லாரைக் காண்பதுவும் நன்றே

------------------------------------------------------------
 நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நலம்மிக்க
நல்லார்சொல் கேட்பது வும்நன்றே – நல்லார்
 குணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு
 இணங்கி இருப்பதுவும் நன்று

      நண்பர்களே, ஔவையின் அமுத வரிகளில், எளிமையும், இனிமையும், பொருள் வளமையும் நிறைந்த, இப்பாடலைப் பலமுறைப் படித்துப் படித்து, நீங்கள் நிச்சயம் பரவசப்பட்டிருப்பீர்கள். இப்பாடலின் பொருளினை நேரிடையாய் உணர்ந்து, அனுபவிக்கும் ஓர் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
      கடந்த 14.2.14 முதல் 23.2.14 வரை பத்து நாட்கள், தஞ்சையில் ரோட்டரி புத்தகக் கண்காட்சி நடைபெற்றதைத் தாங்கள் நன்கறிவீர்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தமிழறிஞரின் சொற்பொழிவு இனிதாய் அரங்கேறியது.

 நண்பர்களே, புத்தகத் திருவிழாவின்
நிறைவு நாளான, 23.2.2014 ஞாயிற்றுக் கிழமை, காலை அலைபேசி அழைத்தது. மறு முனையில் தென்றல் தவழ்ந்து வந்தது.

 தேங்கிய குட்டையல்ல
துள்ளும் அருவி
பாய்ந்தோடும் ஆறு
அள்ளிச் செல்வேன் அனைத்தையும்....

 தென்றலாய் தொடங்கி, தேவைபெனில் பெரும் சுழற் காற்றாய் மையம் கொள்ளவும் தயார், என, இலக்கிய வானில், தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்தவரும், உயர் சிந்தனைகளும், சமூகக் கவலையும், துயரம் துடைக்கும் தன்னம்பிக்கையும் கொண்ட கவிஞர், வேலு நாச்சியாரின் விழுது,


கவிஞர் கீதா அவர்கள்
தென்றல்

http://velunatchiyar.blogspot.com/

பேசினார்



     நான் தஞ்சைக்கு வந்திருக்கிறேன். மதியம் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன். உங்களைச் சந்திக்க வேண்டுமே என்றார்.

இதைவிட வேறு என்ன வேலை. பிற்பகல் எனது மனைவியுடன் சென்று சந்தித்தேன். நான் பேசியது குறைவுதான். அவர்கள் இருவரும் நெடுநாள் பழகிய தோழிகள் போல் பேசி மகிழ்ந்தனர்.

சகோதரியார் கவிஞர் மு.கீதா அவர்கள்,

விழி தூவிய விதைகள்

என்னும், தனது கவிதை நூலினை வழங்கினார்.

 டீச்சர்
  எனக்குப் பிறந்த நாள் என
 மழலை கொடுத்த இனிப்பை
மாணவிகளுக்கு ஊட்ட
பிறந்தனர்  எனக்கு
நாற்பது குழந்தைகள்

----

”ஏன் படிக்கல?
கலங்கிய சிறுமியை
ஏன்டாம்மா? என்னாச்சு
சாப்டியா?
தலைவருடி இதமான வார்த்தைகளால்
பதமாய் மனம் வருட
விழி மேகம் மடை திறக்க
சாப்டல டீச்சர் .... பசிக்குது...”

   கவிஞராய் மட்டுமல்ல, நல்லாசிரியராய், மழலைகளின் உள்ளத்தில், விதைகளைத் தூவி, நல் விருட்சங்களாய் வார்த்தெடுக்கும், வளர்த்தெடுக்கும் கவிஞர் மு.கீதா அவர்களின

   கவிஞராய் மட்டுமல்ல, நல்லாசிரியராய், மழலைகளின் உள்ளத்தில், விதைகளைத் தூவி, நல் விருட்சங்களாய் வார்த்தெடுக்கும், வளர்த்தெடுக்கும் கவிஞர் மு.கீதா அவர்களின், எண்ணங்கள், பெண்ணியச் சிந்தனைகள் எல்லாம், எழுத்துக்கள்ய், வார்த்தைகளாய், வரிகளாய், கவிதை மொழிகளாய், பக்கத்துக்குப் பக்கம் ததும்பி வழிகின்றன.

   நண்பர்களே, நீங்களே கூறுங்களேன், வலையுலக உறவுகளை, நல்லாரைச் சந்தித்த இவ்வாரம், நட்பு வாரம்தானே.

ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை

இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே

                          - வெற்றி வேற்கை





30.03.2014 இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.தூப்புக்காரி எழுதிய மலர்வதியிடம் நட்பான நாள்.என் வாழ்வில் மேலும் ஒரு நட்பு சமூக அக்கறையே எங்களை இணைத்தது எனலாம்.
தூப்புக்காரி படித்தவுடனே மலர்வதியிடம் பேச வேண்டுமென்ற ஆவல் துளிர்விட்டது.அது இன்றே நிறைவேறியது.

”ஒருவரிடம் இரந்து அன்பை பெறுவது கேவலம் என்றும்,ஒரு பெண் எந்த அளவில் வலியில் சாகின்றாளோ அந்த அளவு விழித்தெழுவாள் ,பெண்களின் சமூகம் விழிப்புணர்வு பெறுவதே வாழ்வின் நோக்கமாக கூறுகின்றார் ”
மலர்வதி.
அவரின் முயற்சி வெற்றியடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

Saturday 29 March 2014

விண்மீன்

கங்குலில்
மொட்டை மாடியில்
மலரும் கனவுகளோடு
துயில் கொள்ளும் வேலையில்
கண்சிமிட்டி வம்பிழுத்தவர்களை
வலைவீசி பிடிக்க இயலாது
வாடிய என்னை

தேற்றும் விதமாய்
அத்துணை பேரையும்
புவியீர்ப்பு விசையென
கிளைதனில் ஈர்த்து
என் காலடியில்
காலையில் சமர்பித்தது
வேம்பு
பூக்களாய்...!

Friday 28 March 2014

தமிழரின் சிறப்புகள்

நிலம் பகுத்து
முதற்பொருளும்
கருப்பொருளும்
அமைத்து
நாகரீகம் கற்பித்தவன்
நற்றமிழன்....!


தமிழனின் மொழி...தமிழ்


பாடல்....தமிழ்த்தாய் வாழ்த்து



தமிழ்நாட்டுச்சின்னம்

 விலங்கு....வரையாடு

 பறவை.......................மரகதப்புறா
மரம்.....பனை













 கருவி.......பறை..            
நடனம்....பரதம்
                                            
மலர்...செங்காந்தள்
                                           
பயிர்.....நெல்
                                                 
காய்......கத்திரிக்காய்
                                                     




 கனி.....அத்திப்பழம்
                                               


விளையாட்டு.....கபடி


தமிழனுக்கென்று
தமிழ்நாட்டுக்கென்று
தனித்தன்மை உண்டென
அறியாது வாழ்கிறது
தமிழினம்......!.

Thursday 27 March 2014

புங்கைபூக்கள்

காலையில் 
வாசலில் பூப்படுக்கை
புங்கைமரத்தின் கைவண்ணமாய்..

அழகில் மயங்கி கூட்ட
தயங்கி அள்ளிக்கொட்டி
திரும்பும்முன்

அடுக்கிவைத்த பொருட்களை
கலைத்து சிரிக்கும் குழந்தையென
மீண்டும் பொரியரிசியாய்...

புங்கைப்பூக்கள்...

தேர்தல்
------------
நல்லவர்களை
தேர்.......

தீயவர்களை...
தல்..{ள்}..

Wednesday 26 March 2014

எது தேர்வு?

இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு
------------------------------------------------------------

தேர்வறை மாணவர்களின் எண்ணங்களை வெளிக்கொணரும் பரவசத்தில் இருந்தது.

முள்புதரில் வீழ்ந்த விதையொன்று முளைத்தெழுவதாய் வறுமையின்  பிடியில் சிக்கி,நாளை நகர்த்த பாடுபடும் ,குடும்பச் சிக்கல்களை கண்முன் கண்டு அதற்குள்ளே உழன்று வாழும் முதல்தலைமுறை கல்வி பயிலும் அழுக்கடைந்த உடையில் புரியாத உலகில் அடியெடுத்து வைக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் ஒருபுறமும்,

வளமான நிலத்தில் விதைக்கப்பட்ட விதை உலகு காணும் மகிழ்வில் முளைத்தெழுவது போன்று வசதியான ,வறுமையறியாத,கல்வி ஒன்றே நோக்கமாய் ,வாழ்வின் சிக்கல்களை அறியாத,தூய்மையின் முகங்களாய், இரண்டு அல்லது மூன்றாம் தலைமுறை கல்வி பயிலும் தனியார் பள்ளி மாணவர்கள் மறுபுறமும் அந்த அறையில் நிறைந்திருந்தனர்...தேர்வெழுத வேண்டி...!

அரசுப்பள்ளி மாணவர்களில்....
ஒரு மாணவன் விடைத்தாளை பெற்றதும் குனிந்த தலைநிமிராமல் எழுதிக்கொண்டிருக்க, மற்றொருவனோ திருவிழா கூட்டத்தில் தொலைந்தவனாய் திருதிருவென...கேள்வி மட்டுமே பார்த்து எழுத அத்தனை சிரமப்பட்டுக் கொண்டிருந்தான்.நண்பன் படத்தில் வருவது போல எழுத்துக்கள் அவனைப் படாத பாடு படுத்தியக் காட்சியை காணமுடியவில்லை.அவனை எழுத பயிற்றுவிக்க அந்த ஆசிரியர்களின் சிரமங்கள் கண்முன்னே விரிய,அதை விட அவனுக்கு பிடிக்காத கல்வியைப் பயில அவன் என்ன பாடுபட்டிருப்பான் என்ற நினைவுகளோடு நான்.....

தனியார் பள்ளி மாணவர்கள் மூளைக்குள் நிரப்பியதை அங்குமிங்கும் திரும்பாமல் கொட்டிக்கொண்டிருந்தனர் விடைத்தாளில்.

வர்க்க போராட்டத்தின் சாட்சியாய் தேர்வறை காட்சியளித்தது.

எனக்குப் புரியவில்லை எந்த அரசுப்பள்ளி மாணவர்களும் தோல்விக்காக மரணத்தை நாடியதில்லை .வாழ்க்கை அவர்களுக்கு தோல்வியை ஏற்க,போராட கற்று கொடுத்துள்ளது.அவர்கள் வாழ்வில் போராடும் துணிவைக் கற்றிருக்கின்றனர்.மேலும் பெற்றோர்களும் மதிப்பெண்களை விட குழந்தையைப் பெரிதாகவே மதிக்கின்றனர்.

கல்வியைத் தவிர வேறொன்றரியாத மாணவர்களே தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலையை நாடுகின்றனர்...

யார் மீது தவறு?

குடும்பம் வளமுடன் இருக்க இருவரும் சம்பாதிக்க ஓடி குழந்தைகள் நினைத்தை எல்லாம் வாங்கித்தந்து,தோல்வியைக் கற்றுத்தராத பெற்றோர்களா?

குழந்தமையை நினைத்துப்பாராத கல்விநிலையங்களா?
மதிப்பெண் நோக்கி ஓடும் சமூகமா?

Monday 24 March 2014

தூப்புக்காரி-மலர்வதி

2012-ஆம் ஆண்டு இளம் படைப்பாளருக்குரிய சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது பெற்ற நாவல்.


பூமி மடியைச் சுத்தப்படுத்தும் உயர்ந்த மனிதர்களுக்காக சமர்ப்பிக்க பட்டிருக்கும் நூல்.

       அறிந்த ஆனால் முழுமையாக அறியாத ஒரு சமூகம் படும் அவலத்தை அவர்களின் மொழி வாயிலாக அறியவைக்கும் நூலாக “தூப்புக்காரி

“அசுத்தப்படுத்துகிறவனுக்கு அழுக்கின் கொடூரம் தெரியாது.ஆனால் அதை அள்ளுகிறவனை மட்டும் சாதியில் குறைந்தவன் என தள்ளி வைக்க முடிகின்றது.ஈக்களிலும் ,புழுக்களிலும்,நாற்றத்திலும் உழைத்து வாழ்வு ஆதாரம் தேடுபவர்களுடன் ஒரு நிமிடமாவது சென்று அமரும் உயிர் நேய எண்ணம் பிறக்க வேண்டுமென்ற எண்ணத்தில் எழுதப்பட்ட நூல்”என ஆசிரியர் மலர்வதி கூறுகிறார்.

முற்றிலும் புதிய உலகை,சிறு வயதில் பார்த்து அருவருத்து ஒதுக்கப்பட்ட மனிதர்களின் வாழ்வியலை...காட்சிப்படுத்துகிறது..சாக்கடையில் வாழ்ந்தாலும் சந்தனமாய் மணக்கின்றது அவர்களிடையே மனித நேயம்.

ஜெயமோகனின்” ஏழாம் உலகை” தொடர்ந்து படிக்க இயலாமல் கண்ணீர் கண்களை மறைக்க அமர்ந்திருந்த நிலையை மீண்டும் இந்நாவல் தந்துள்ளது.

வேற்று கிரகத்தில் வாழ்வதற்கான வழி தேடும் உலகில், இப்படி ஒரு அவல வாழ்க்கை வாழும் மக்களை கண்டு கொள்ளாமல் வாழ எப்படி முடிகின்றது .

எளிய மக்களின் யதார்த்த வாழ்வை கனகம் ,பூவரசி, மாரி மூலமாகவும்,அவர்களை விட மேல் நிலையில் உள்ளவர்களின் சுயநலப்போக்கையும்,சாதீய வன்முறையையும் தூப்புக்காரி படம் பிடித்துக்காட்டுக்கின்றாள்.

உண்மை வாழ்வை படிக்க முடியாமல் சாப்பிட்டதெல்லாம் வாந்தியாய் வெளியே வரத்துடித்தது சில இடங்களில்.ஆனால் இதையே வாழ்வாகக் கொண்ட மக்களின் நிலையை உணர்கையில் மனம் வலிப்பதை தடுக்க முடியவில்லை.
மனித நேயம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய நூல் “தூப்புக்காரி”
முடிந்தால் முழுவதும் படியுங்கள்....




 

Sunday 23 March 2014

தேர்வறை

தேர்வறையின் இறுக்கம்
கலைத்து
பூக்கள் பூத்தன...
வண்ணத்துப்பூச்சியின் வரவு

Wednesday 19 March 2014

மனு

காலில் பிறந்தோன்
உந்தியில் உதித்தோனுக்கும்

உந்தியில் பிறந்தோன்
மார்பில் பிறந்தோனுக்கும்

தீட்டெனெ தீயிட்டுக் கொள்கிறார்கள்

மூடர்களே மூவருமே தீட்டு
நெற்றியில் பிறந்தோனுக்கு

இந்து தர்மத்தின்
உயிர்நாடி இதுவே.... ?!

சாதி வேரை
அடியோடு தகர்க்க
எரிக்கும் எரிமலையாய்
வெண் தாடி கிளம்ப
தணலின் வெப்பம்
தாக்காமலிருக்க

அவரை
கடவுளின் எதிரியாய்
சித்தரித்தே

குளிர்காயும் ஓரினம்
உண்மையறியா தமிழினம்....

Tuesday 18 March 2014

விண்

விண்தொடும்
விதையின் முயற்சிக்கு
கைகொடுக்கும்
விண்

சுட்டி காற்று...!

காற்று வேண்டி
சன்னல் திறக்க..

மோதும் காற்றோ
கதவைச் சாத்த..
 மூடி,திறந்த
விளையாட்டில் அழுத்தி திறந்து
வென்ற மகிழ்வில் நகர்ந்த
என்னை நகர விட்டு
விருட்டென சாத்தி
வெறுப்பேற்றியது....

சலிப்பாய் மவுனிக்க

ஒளிந்து தலை நீட்டும்
குழந்தையாய்
மெல்ல கதவு திறந்து
எட்டிப் பார்த்தது
சுட்டி காற்று...!

Monday 17 March 2014

Sunday 16 March 2014

Saturday 15 March 2014

Friday 14 March 2014

கரைவது

எறும்பென  ஊர
கரைவது
 மலை மட்டுமல்ல

வாசலிலே வந்துருக்கேன்
வாடியம்மா கஞ்சி ஊத்த

காலையில கறந்துட்ட
கதியத்த என் கன்னு
கத்துது பசியோட..

குருதியெல்லாம் பாலாக
ஊத்தம்மா கழுநீரு

குச்சியெடுத்து விரட்டுறியே
கறக்கும் போது
காலம் பார்த்த
கஞ்சி குடுக்க
பார்த்தா என்ன....?

நிரந்தரமல்ல

நிரந்தரமல்ல எதுவும்
புள்ளின் கூற்று
காலியான கூடு....

Tuesday 11 March 2014

எது கல்வி

அன்புள்ள அம்மா,
பிரியமான உன் அண்மையை
பிரியாது அப்பாவின் கரம் கோர்க்கும் ஆசையை
அண்ணனுடன் வம்பு செய்யும் மகிழ்வை
தாத்தாவின் பழம் பெருமைச் சொற்களை
பாட்டியின் மடி சுகத்தை
எனக்காக நீ செய்யும் பண்டங்களை
என் சிறுவயது விளையாட்டுக்களை
எப்போதும் இணைபிரியா நண்பனை
ஊரில் நடந்த விழாக்களை
எல்லாவற்றையும் இழந்தேன்மா
எதற்காக.....?

நீங்கள் விரும்பியதால்
நானும் ஆசைப்பட்ட படிப்பை
படிக்க முடியாதம்மா இனி
இயற்பியல் பாடத்தில்
இல்லைம்மா முழுமதிப்பெண்..

மாட்டுப்பண்ணையை விட கொடுமைம்மா
மாணவப்பண்ணை...
அசைபோட்டதெல்லாம் வீணானதை
தாங்க இயலாமல் போகின்றேன்மா..

எல்லா மாணவர்களின் துயரங்களின்
எல்லையாய் ..சாட்சியாய்...

தொண்டை சுருக்கு
குரல்வளையை இறுக்கும் போதும்...
என் கைகளும் கால்களும் துடிதுடித்து
வலியுடன் உயிர் பிரியும் போதும்
உன் நினைவோடே சாகின்றேன்மா...



நாமக்கல்லில் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டுச் சாவு

நாமக்கல்லிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவர் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
 நாமக்கல் மாவட்டம் , திருச்செங்கோடு வட்டம், எலச்சிப்பாளையம் அருகேயுள்ள கொசவம்பாளையத்தைச் சேர்ந்த அஞ்சல் ஊழியர் ராமமூர்த்தி. இவரது மனைவி ஜெயம்மாள். இவர் ராமாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியை.
 இவர்களது இரண்டாவது மகன் மயில்விழிச்செல்வன் (17). நாமக்கல் காவெட்டிப்பட்டியிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் பிளஸ் 2 கணிதப் பிரிவில் படித்து வந்தார். பள்ளிக்கு அருகே உள்ள வாடகை வீட்டில் மயில்விழிச்செல்வன் பெற்றோருடன் தங்கி இருந்தார். இந்த நிலையில், மயில்விழிச்செல்வன் திங்கள்கிழமை பிளஸ் 2 இயற்பியல் பொதுத் தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றார். அவரது பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டனர். தேர்வு முடிந்து பிற்பகல் 1.15 மணிக்கு வீட்டுக்கு வந்த மயில்விழிச்செல்வன், உள்புறமாக தாழிட்டுக் கொண்டு தனது தாயின் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் ஜன்னல் திறக்கப்பட்ட நிலையில் இருந்ததால், வெளியே சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி ஊழியர்கள், மாணவர் தூக்கிட்டதை அறிந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஆனால், அதற்குள் மயில்விழிச்செல்வனின் உயிர் பிரிந்துவிட்டது.
 தகவலறிந்த நாமக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஆய்வாளர்கள் பாஸ்கரன், முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, உடலைக் கைப்பற்றி வீட்டில் சோதனையிட்டனர். அப்போது மாணவர் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், நன்றாகப் படிக்க முடியாத காரணத்தால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு வேறு யாரும் காரணமில்லை என்றும் அதில் எழுதப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த ராமமூர்த்தி, ஜெயம்மாள் தம்பதியினர் மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
 பின்னர், உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 மூன்றாவது சம்பவம்
 நாமக்கல் காவெட்டிப்பட்டி தனியார் பள்ளி மாணவர்களைப் பொருத்தவரையில், மயில்விழிச்செல்வனின் தற்கொலை நிகழ் கல்வியாண்டில் நிகழ்ந்த மூன்றாவது சம்பவமாகும்.
 இதற்கு முன்பு சேலம் மகுடஞ்சாவடியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் மோகன்ராஜ், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி இரவு அந்தப் பள்ளி விடுதி அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதேபோல, மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் வெங்கடேசன், ஜனவரி 4ஆம் தேதி காலை பள்ளி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
 மாணவர் மோகன்ராஜ் இறந்த சம்பவத்தில் அந்தப் பள்ளித் தாளாளர், விடுதிக் காப்பாளர், சக மாணவர் ஒருவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திலும் பள்ளித் தாளாளர், விடுதிக் காப்பாளர், இரு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.









 












பொன்சாய்



பரந்த வெளி அறியாக்
 குழந்தை
பொன்சாய் மரம்...

Monday 10 March 2014

கங்குலில் வருவேனென்க




 



அந்தி வான் சிவக்க
அல்லில் விளக்கேற்றி
வெட்கத்தில்சிவந்தாள்
கதிரவக்கணவனுடன்
நிலவுத்தாய்...

பகல் முழுதும்
பணி முடித்த அசதியில்
பகலவன் ஓய்வெடுக்க
பறவைகள் கீதமிசைக்க
தென்றல் கவரி வீச
தகதகத்த மனைவியை
தாபத்துடன் தழுவி
கலந்தே மகிழ்ந்தான்...

பூமிக்குழந்தைகளின்
பூவிழி வருடி
தாலாட்டி துயில வைக்க
நிலவுத்தாய் விரைந்திட்டாள்...

கலவி ஆசை தீராத
மோகத்தில் கதிரவனோ
கங்குலில் வருவேனென்க....

குழந்தைகள் துயிலட்டும்
வைகறை  கலந்திடலாமென்றே
பாவையவள் பார்வையால்
கெஞ்சிட...

எப்போதும் குழந்தைகள் தானா?
எனை எண்ணி பார்ப்பதெப்போ?
என்றே அடம் பிடிக்க....

கங்குலோ கதிரவனை
தடை செய்ய..

வைகறையும் விரைந்துவர
கொண்டவன் மகிழவே
கோதையவள் தவித்திட்டாள்....

தமிழ் நாட்டு பெண்போல
நிலவுத்தாய் படும் பாடு
அப்பப்பா....









Sunday 9 March 2014

முதுமை

அடிக்கடி கை தடவுகிறது
மகனை வருடுவதாய்
 சுமந்த வயிற்றை...
முதியோர் இல்ல
மூதாட்டி...

Saturday 8 March 2014

கால்

நிசப்தத்தின் நித்திரையழித்தது
கானில் கால்
மூங்கிலின் இசையென

பார்க்க முடிகின்றதா உங்களால்...?

பார்க்க முடிகின்றதா உங்களால்...?
-------------------------------------------
இன்னும் வன்புணர்
இப்போது தான் உரைக்கிறது
ஆசிட் ஊத்து
ஆலைக்கரும்பாய் சக்கையாக்கு
வெறியாட்டம் ஆடு...

ஒன்று சேர
வெற்றி கொள்ள
படியென ஏற்கிறோம்
இரு மாத குழந்தை முதல்
தொண்ணூறு வயது பாட்டி வரை
உன் இச்சையின் பலியாய்..

மானம் போகுமென்று
மறைத்த காலம்
மலையேறிப் போச்சு....

நியாயம் கேட்க
நீதி கேட்க
குரல் ஓங்கியாச்சு...

மது,மாதின்
போதையில் நீ.....

ஆண் இனத்தின் அவமானச்
சின்னங்களை ....
நிலம் பிளப்பது போல்
நீர் விழுங்குவது போல்
தீ உண்ணுவது போல்
எழும்பும் பெண்ணினம்...

Friday 7 March 2014

மகளிர் தினம்


 

இன்றைய  8.3.14 தினகரன் செய்தித்தாளில்......பெண்ணிய வரலாறாய்....

1789ம் ஆண்டு பிரஞ்ச் புரட்சி நடந்தபோது பெண்களும் போராட்ட களத்தில் இறங்கினர். சமத்துவ உரிமைகள் வேண்டும் என்றும் எட்டு மணி நேர  வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம், பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தக் கூடாது என்றெல்லாம் கோரிக்கைகளை முன்வைத்து  போராடினர். அதை நசுக்க நினைத்த மன்னர் லூயிஸ் பிலீப், போராட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போராட்ட காரர்களை சமாதான  படுத்திப் பார்த்தான். ஆனால் முடியவில்லை. இதனால் தன் மன்னர் பதவியை துறந்தான்.

அதன் வெற்றி ஐரோப்பா முழுக்க பெண்கள் போராட்டம் நடத்த உத்வேகம் ஊட்டியது. ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த  பெண்களின் தொடர் போராட்டங்களைக் கண்டு அரசு ஆடிப்போனது. இத்தாலிய பெண்கள், வாக்குரிமை கேட்டு போராடினர். பிரான்ஸில் பிரஷ்யனில்  இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் சேர்க்கவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும்  ஒப்புக்கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8. அந்தநாளைத்தான் உலகம் முழுக்க பெண்கள் உரிமை தினமாக கொண்டாடுகின்றனர்.  

பெண்களின் போராட்டம் அமெரிக்காவிலும் நடைபெற்றது. 1908ம் ஆண்டு வாக்குரிமை கேட்டு பெண்கள் நடத்திய போராட்டத்தை கண்டு அமெரிக்க  ஜனாதிபதி பியோடர் ரூஸ்ரெல்ட்டே அஞ்சினார். 1910ம், ஆண்டு  ஓப்பன் ஹேகனில் கிளாரா ஜெட்கின் தலைமையில் அனைத்துலக பெண்கள்  மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் சர்வதேச மாதர் அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் சார்பாக 1911ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி  டென்மார்க் ஆஸ்திரியா ஜெர்மனி இன்னும் சில ஐரோப்பிய நாடுகளின் பெண் பிரதிநிதிகள் முதலாவது சர்வதேச மாதர் தினத்தைக் கொண்டாடினர்.
 இந்த கொண்டாட்டத்தின் போதுதான் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மாதர் தினமாக கொண்டாட வேண்டுமென்பது முடிவு செய்யப்பட்டது. சமீபகாலமாக  ஐ.நா.சபையின் பெண்கள் அமைப்பு சார்பில், மார்ச் 8ம் தேதியை சர்வதேச மாதர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கின்றனர். சுமார் 226  ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் போராடிப்போராடி தங்கள் உரிமைகளை பெற்றுவருகின்றனர்”. நன்றி தினகரன் செய்தித்தாள்


இன்று மகளிர் தினம் ஒரு பக்கம் முன்னேற்றமடைந்த பெண்களின் கொண்டாட்டம்.
 ஒரு பக்கம் பெண்களின் இன்றைய உண்மையான நிலை என்ன ?என்ற ஆய்வாகவும் செய்தித்தாள்களில் காண்கிறோம்.
மகளிர் தினம் என்பது இருநூறு ஆண்டு கால போராட்டத்தின் வெற்றி.அரசியலை உருவாக்குவதில் எங்களுக்கு பங்கு வேண்டும் என போராடி ஆண்கள் வேறு வழியின்றி ஓட்டுரிமை தந்த நாள் இன்று.

இருநூறு வருடங்கள் கழிந்த பின்னும் வாழ்வதற்கான போராட்டமாகவே பெண்களின் நிலை இன்றும் உள்ளதை இன்றைய ”தினமணி” செய்தித்தாளில் தோழி இன்சுவை அவர்களின் கட்டுரை சுட்டுகிறது.
”தி இந்து” செய்திதாளில் அடித்தட்டு பெண் தொழிலாளர்களின் வாழ்வு நிலையில் மாற்றம் ஏற்படுவது எப்போது என்ற கேள்வி சமூகத்தை நோக்கிய வினாவாகத் தொடுக்கப் பட்டுள்ளது.

” ஒரு பெண்ணால் எப்போது அச்சமின்றி உலகில் வாழ முடியுமோ அப்போது தான் பெண்களுக்கு சமத்துவமும் சுதந்திரமும் கிடைத்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும் என்பதே உண்மை”.

பெண்கள் வாழ்வதற்கே போராட வேண்டிய நிலையில் இன்று எத்தனை உயிர்களை இழந்திருக்கின்றோம்.உடல் சார்ந்த போராட்டத்தில் கண்ணுக்குத் தெரிந்த நிர்பயா,அமுதா,என்ற தொடரில் இன்று உமாமகேஸ்வரி என தொடரும் நிலைக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்க போகின்றோம்.

இனியாவது ஆண் ,பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வார்ப்பை மாற்றி இருவரும் சமமான மனிதர்கள் என்ற கருத்தை குழந்தைகளிடம் வேரூன்றச் செய்வோம்.

ஊடகங்களும் பெண்களை அழகிற்கான பொருளாய்க் காட்டாமல், அறிவை நோக்கி அவள் பாதை அமைப்பவளாக காட்ட முயற்சிக்கட்டும்.















Thursday 6 March 2014

தேர்தல் வேண்டுதலாய்


உள்நாட்டு வணிகர்களின்
உலையிலடித்து
பன்னாட்டு வணிகம்
பல்நோக்கில் வளர்ந்திட
நாற்பது மட்டுமல்ல
நாடே கிடைத்திட...

தமிழ் நாட்டில்தேர்வு வேண்டுதலாய்


இங்கிலீசு பாடம்
இல்லாமல் போகட்டும்
கிராமத்து குழந்தை...


தமிழே தகராறு
வேண்டவே வேண்டாம்
நகரத்து குழந்தை...

குளம்

குருவி குடிக்க நீரில்லா
குளம்
மழைக்கும் ஈரமில்லை
மனிதனுக்கு ஈக....

Tuesday 4 March 2014

கருக்கு

                                  ” சாதிகள் இல்லையடி பாப்பா
                                   குலத்தாழ்ச்சி உயர்ச்சி
                                    சொல்லல் பாவம்”
 என்று பாரதி பாடி,பெரியார் போராடி நூறாண்டுகள் கடந்துவிட்டன.செவ்வாய் கிரகத்திற்கு போனாலும் சாதியையும் சேர்த்தே கொண்டு போவோம் போல....மனிதர்களை ஒன்று சேர்க்காத கல்வி எதற்கு என்றே தோன்றுகிறது
                                         ”கருக்கு”ஆசிரியர் பாமா.
                 சிறகொடிக்கப் பட்ட பறவையின் வலியில் எழுந்த நாவல் இன்று அவரை உச்சி வானில் உலாவரும் இராஜாளியாக உணர வைத்துள்ளது.
 கடுமையான விமர்சனங்களுக்கிடையே இந்நாவல் உதயமாகி உள்ளது.இதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் இந்நாவலாசிரியரின் சாதனைகளுக்கு படிக்கற்களாக மாறியுள்ளன விளிம்பு நிலை மக்களின் வாழ்வை கண்முன் கொணரும் கலைக்களஞ்சியமாய்த் திகழ்கிறது” கருக்கு”


Monday 3 March 2014

தனல்விழி


உடைந்த நுரைக்குமிழியாய்
குழவியின் குதூகலம்
தனல் விழி...!?