World Tamil Blog Aggregator Thendral

Monday, 31 August 2020

சித்தார்த்தன்

சித்தார்த்தா
கட்டிய மனைவியை
கொட்டும் இரவில்
தட்டிய தூசென
விட்டுச் செல்ல 
மனம் வந்தது எப்படி..?.
நீ புத்தனாகலாம்
என்னைப்பொறுத்தவரை
பெற்ற மகவை கதறவைத்து
பற்றற்றேன் என்ற நீ
புனிதனல்ல..
நீ சென்றுவிட்டாய்
கேளாத சொற்களை
கேள்வியாய் எனைத்துளைத்தெடுத்த
வேள்வியை உணர்வாயா..
விட்டுச் செல்வது ஆணுக்கு
விந்தை கழித்து செல்வதாக...
எக்காலமும் குழந்தையை
எந்த பெண்ணும் விட்டுவிடாள்
குரங்கு சுமக்கும் குட்டியாக
கங்காருவின் குட்டியாக
நினைவிலும் தோளிலிலும்
சுமந்து திரிந்த என்வலி உணராய்...
சித்தாத்தா உலகம் உனைப் போற்றலாம்...
மனைவி மகவை விட்டு செல்ல
வழிகாட்டிய உன்னை தாயுலகு 
மன்னிக்காதென்றும்...
புனிதர் எல்லோருக்கும்
புனிதராக முடியாது....
சித்தார்த்தா...
மு.கீதா
புதுக்கோட்டை

Thursday, 27 August 2020

வீதி

வியக்க வைக்கும் தமிழரின் மேன்மை...
ஒருவாரமாக மூன்றாம் முறையாக மீண்டும் வேள்பாரி நாவலுடன் பயணிக்கிறேன்.வீதி கூட்டத்திற்காக 'வேள்பாரியில் பெண்கள்' என்ற தலைப்பில் எனது உரைக்காக..
பொன்னியின் செல்வன் நாவல் அதிசயம் என்றாலும் என்னை அது வியக்க வைத்ததே தவிர புதைய வைக்கவில்லை... பெருமிதம் தோன்றவில்லை...
ஆனால் வேள்பாரி எனது முன்னோரின் கதை . அவர்கள் இயற்கையை உயிராக நேசித்து இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வரலாறு...
அவர்களின் இயற்கை அறிவு.மருத்துவ அறிவு...காணும் செடிகளை எல்லாம் தங்கள் பாதுகாப்பிற்கு,மருத்துவத்திற்கு .விளையாட்டிற்கு என பயன்படுத்திய பேரறிவு.முதுகிழவன் வேலை வாங்குகிறான் என்று அவனுக்கு கொடுக்கும் வெற்றிலையில் தும்மி இலை கொடுத்து தும்ம வைக்கும் இளைஞர்கள்... அவர்களுக்கு காமஞ்சுருக்கி இலை கொடுத்து ஆட முடியாமல் செய்வதுடன் பெண்களுக்கு காமமூட்டி சாறு கொடுத்து அவர்களைத் தூண்டி இளைஞர்களை நாணவைக்கும் குறும்பு..
குலநாகினிகளின் காட்டரணால் பாதுகாக்கப்படும் பறம்பு...என எத்தனை அதிசயங்கள்..
எழுத்து கற்றவன் என்ற பெருமிதம் கொண்ட கபிலரிடம எழுத்துன்னா என்ன எனக் கேட்டு அவருக்கு பறம்பு கற்றுக் கொடுக்கும் வாழ்க்கைப் பாடம்...
பேரரசுகளின் பேராசை புகழுக்காக எதையும் செய்யும் அகங்காரம் இன்றைய உலகமயமாக்கலால், கார்ப்பரேட் நிறுவனங்களால் அதன் வணிக தந்திரத்தால் மக்கள் அடையும் துயரம் என நிகழ்காலத்தோடு ஒப்பிட வைக்கும் மூவேந்தர்களின் சூழ்ச்சி...என விரிகிறது... 
இறுதியில் மூவேந்தர்கள் போரிட்டாலும் தனது தோழன் நீலனைக் காப்பாற்றும் முயற்சி மட்டுமே செய்யும் பாரியின் நீலனின் வீரம், வள்ளி,ஆதினியின் காதலும் அறிவும் ,காட்டின் அதிசயங்கள் என நம்மை முருகன் வள்ளியை ஈர்க்க ஏழிலைப்பாலை மரத்திற்கு அழைத்து சென்று கவர்வதைப்போல நம்மையும் நமது அறிவை, பண்பாட்டை ,வீரத்தை,காதலை,பெண்களை மதிக்கும் தன்மையைக் காட்டி கவர்ந்து மகிழவைத்து தமிழன்டா என பெருமிதம் கொள்ள வைக்கிறது..
கொரோனா விடுமுறையில் நமது குழந்தைகளுக்கு இந்நூலை அறிமுகப்படுத்தி நமது உண்மை  வரலாறை  அறிமுகம் செய்ய வேண்டும் ஒவ்வொருவரும்...
பாரி வேறு நாம் வேறல்ல ..ஆனால் எப்படி திரிந்து போனோம் யாரால் என்பதை நுட்பமாக உணரலாம்...
வாருங்கள் வீதி கலை இலக்கியக் களம்-75 பவளவிழா இணையவழி நிகழ்வில் கலந்து கொள்ள...

Wednesday, 26 August 2020

வீதி கலை இலக்கியக் களம்-75

வீதி கலை இலக்கியக் களம்-75
பவளவிழா அழைப்பிதழ்.

நாள்:30.8.2020 ஞாயிறன்று
காலை:10.00-1.00 
இணையவழி நிகழ்வு
Zoom id: 507 503 9922
Password:veethi

அன்புடன் அழைக்கிறோம்...
வீதி நிறுவுநர் முனைவர் அருள் முருகன் அவர்கள் தலைமையில்...
வீதியின் முன்னோடி கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் அரசியலோடு தொகுப்புகளை வழங்க..
தமிழரின் வீரத்தை,இயற்கையோடு,விங்குகளோடு,பறவைகளோடு இணைந்த வாழ்வை, ஆகச் சிறந்த மருத்துவ அறிவை,வேள்பாரி நாவல் கற்பிக்கும் கல்வியை, பாத்திரப் படைப்புகளை, கதைகளும் திருப்புமுனைகளும் நிறைந்த சுவாரசியத்தை,தமிழரின் நம்பிக்கைகளை , பெண்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை,நட்பின் மேன்மையை குறித்து உரையாற்ற உள்ளனர்..
நமது முன்னோரின் மேன்மையை உணர அழைக்கிறோம்..இது வெறும் நாவலல்ல...நமது பண்பாட்டை உலகிற்கு அறிவிக்கும் கண்ணாடி..

Wednesday, 12 August 2020

பன்னாட்டுக்கவியரங்கம்

உலகப் பெண் கவிஞர் பேரவை நடத்தும் பன்னாட்டுக் கவியரங்கம்.
நடத்தலாமா என்று  கவிஞர் அகன் அய்யா கேட்ட போது சாதாரணமாக த் துவங்கி தற்போது நாற்பது பெண் கவிஞர்கள் இணைந்து வருகிற.15.8.2020 அன்று இரு நிகழ்வுகளாக கவிதைகள் வாசிக்க உள்ளனர்...
பல நாடுகளில் இருந்து தங்கள் கவிதைகளை ஆர்வமுடன் கலந்து கொள்ளும் பெண்கள் பாரதி பாரதிதாசனின் கனவு பெண்கள்.
'அவன் நிற்கிறான்' என்ற தலைப்பில் கவிதை வாசிக்கும் நிகழ்விற்கு உங்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.
இந்நிகழ்வில் திருமிகு ஆறுமுகம்பேச்சிமுத்து அமெரிக்க தமிழ் ஊடகம்.அவர்கள்  வரவேற்புரை நல்க உள்ளார்.
உலகப் பெண் கவிஞர் பேரவை நிறுவனர் திருமிகு அகன் அவர்கள் முன்னுரை வழங்க உள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் மற்றும் பலருடன் இணைந்து பணிபுரியும் திருமிகு சிவா .அனந்த் அவர்கள் ஆகச் சிறந்த நிர்வாக இயக்குநர் , மெட்ராஸ்_டாக்கீஸ் திரைப்பட பாடலாசிரியர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
அமெரிக்கா,கனடா, சுவிட்சர்லாந்து, நியூஜெர்சி, லண்டன், ஜெர்மனி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 40 பெண் கவிஞர்கள் 15.8.2020 அன்று கவியரங்கில் கலந்து கொண்டு கவி பாட உள்ளனர்...
இந்நிகழ்வை மு.கீதா(devatha tamil) ஒருங்கிணைக்க உள்ளேன்..
எங்களை ஊக்கப்படுத்த நீங்கள் கலந்து கொள்ள உள்ளீர்கள்.. பிறகென்ன சந்திப்போம்.. கவியரங்க நிகழ்வில்

Sunday, 9 August 2020

தேநீர்

அதிகாலைத் தேநீர் அமிர்தமாய் இருக்கிறதா?
அழிந்த உயிர்களின் அரிதான குருதிச்சுவையது.
உயர்ந்து நின்ற காடழித்து
உயிர்களை குடித்தமைத்த  
தேயிலை படுக்கை
வனச்சுடுகாடு.
நாம் பச்சை படுக்கை என
வியந்து அருகில் விதவிதமாக
விழிவிரிய எடுத்தபுகைப்படங்களின்
பின்னணியில் ஒரு இரத்த வரலாறு.
சேற்றில் புதைந்த உயிர்களின் ஓலம்..
தாயே தனது குழந்தைகளை விழுங்கிய சோகம்...
நீங்கள் குடியுங்கள் ரசித்து...
கீதா

Monday, 3 August 2020

பன்னாட்டுக்கவியரங்கம்

பன்னாட்டு கவியரங்கம்

என் தலைப்பு'வயல்'

வயல் குறித்துக் கவிபாட
வரப்போரம் தேடினேன்.
பாலங்கள் விழுந்த ஒலி கேட்டதுண்டு
பாளம் பாளமாய் வெடித்த வயலின்
விம்மல் ஒலி கேட்டதுண்டா?
கேளுங்கள்.
வயலின் வலியிது.

ஏன் மறந்தாய் மனிதா?
எலும்பென வரப்பெடுத்து,
உதிரமாய் நீரெடுத்து,
என்மார்பு சுரந்து,கருப்பை பிளந்து
நிலையாய் ஓரிடத்தில் உன்னை
வசிக்க வைத்த
வயல் கேட்கின்றேன்.
பச்சை பட்டுடுத்தி
பசுங்கிளிகள் கவிபாட,
சேற்று நீரில் மீன் துள்ள,
ஒற்றைக்கால் குருகு பசியாற,
சற்றும் அயராது உழைத்த
உன் பாட்டனின்வியர்வையினை
தென்றலது துடைத்து விட.
அயர்வு கலைந்து ,அசதி கலைந்து
வருவோர் போவோர்க்கெல்லாம்
வரையாது பசிநீக்கி மகிழ்ந்தானே!
ஏன் மறந்தாய் மனிதா?

புரிகிறதா? புரிகிறதா?
வயல் அழித்து,
வரட்டு நாகரிகமென
நீ தேடி ஓடியதெல்லாம்,
இன்று உனக்கு எதிராக! எதிரியாக!

உணர்வழித்து,உணவிழந்து,
உறைகின்ற வீடாக்கி
மகிழும் மனிதா..
இனி எதை உண்ணப் போகின்றாய்?
கான்கிரீட் கற்களையா?

விவசாயப் புரட்சி என்றே
விளைநிலங்களை விடமாக்கினாய்.
தொழிற்புரட்சி என்றே
தொழிற்சாலை கழிவுகளை
என் கருப்பைக்குள் புகுத்தி
கருவறுத்தாய் .
ஏன் மனிதா?
அது மட்டுமா!அது மட்டுமா!
சுரங்கம் வெட்டி, சுரங்கம் வெட்டி
கனிமங்கள் அழித்தாய்-நான்
பாதுகாத்த புதையல்கள் அழிவதை
பார்த்தே நீயும் கடக்கின்றாய்.
சோழநாடு சோறுடைத்து.
சோறின்றி விவசாயி
எலிபிடித்து உண்டநிலை
ஏன் மறந்தாய்?
மீதமிருக்கும் மிச்ச நிலத்திலும்
மீத்தேன் எடுக்க அலையும்
கூட்டத்தோடு கூடியே களிப்பாயோ!?
வள்ளுவா
'சுழன்றும் ஏர் பின்னது உலகம்' என்றாய்.
பட்டறிவு, பகுத்தறிவு ஏதுமின்றி,
கெட்டநிலையறியாது
பறந்து பறந்து ஓடுகின்றான்.
ஒரு வீடு போதாது
இருவீடு,பலவீடென
ஊர்ஊராய்ச் சேர்க்கின்றான்.
ஒரு காரு போதாதென
கார்களாய் வாங்கிக் குவிக்கின்றான்.
வயலை விற்று கார் வாங்கி
கார்ப்பரேட் முதலாளிகளின்
கால்நக்கும் ஏவலாளியானான்.
உழவனோ கூலியாய்.

நீ தூங்கும் வீட்டினிலே,
நிச்சலமான நேரத்திலே,
விதை முட்டும் சத்தம் உணர்ந்தாயோ,
விதை முட்டி முட்டி
முளைக்க முடியாமல் மரித்தவற்றின்
ஓலங்கள் கேட்டாயோ!
உழவன் உயிர் துறந்தாலும்
உணவளிக்கும் வயல் மறவான்.
தொழுதென்னை
வணங்கியே பயிரிடுவான்.
தொண்டு காலமாய்
எனக்கும் அவனுக்குமென
அறுபடாத உறவை
அறுத்தாய் நீ!
காவிரித்தாய் கைவிரிக்க
கையேந்தி அலைகின்றான்.
கைகழுவினர்,
காலால் எட்டி உதைத்தனர்.
கோமனத்துடன் எனது மகன்
உருண்டு புரண்டு அழுதானே!
உணர்விருந்தால் அவனுக்கா
உயிர்க் குரல் கொடுத்திருப்பாய்.

உப்பிட்டுத்தான் உண்கிறாயா?
உணர்வின்றி அலைகிறாயா?
ஏன் மறந்தாய் மனிதா?

பசியென்று வந்தோரை வாழவைத்து
பாரெல்லாம் கொடை கொடுத்து
வாழ்ந்த மனிதா...
இன்று
பீட்ஸா ,பர்கர் உண்டு
பீஸ்பீஸாக அறுத்துக் கிடக்கின்றாய்
தடுக்கி விழும் இடத்திலெல்லாம்
முளைத்து விட்ட மருத்துவமனைதோறும்.
பாரம்பரிய உணவு மறந்தாய்.
பாரமானாய் உலகிற்கே!

தீநுண்மி உயிர் பறிக்க காத்திருக்க,
கூட்டுக்குள் புழுவென
வீட்டுக்குள் முடங்கினாய்.

அயல்நாட்டு விதை விதைத்து,
அன்னை வயலை மலடாக்கி,
அடுத்த வேளை உணவிற்கே
அந்நியரிடம் கையேந்தும்
நிலை தாழ்ந்தாய்.
தகுமா? இது தகுமா?
நன்றி.
மு.கீதா
புதுக்கோட்டை
தமிழ் நாடு
இந்தியா.




Wednesday, 29 July 2020

பன்னாட்டு கவியரங்கம்

 வரவேற்கிறோம் பன்னாட்டு கவியரங்கம் காண..

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி,,அபெமா படிப்பு வட்டம் இணைந்து நடத்தும் பன்னாட்டு கவியரங்கம்.
12 நாடுகளில் இருந்து 16 கவிஞர்கள் கவிதை வாசிக்க உள்ளோம்..
தலைப்பு-நான் நடத்தும் பாடத்தை ஏன் மறந்தாய் மனிதா?
என் தலைப்பு'வயல்'
தோழமைகள் தேன்மதுரத்தமிழ் கிரேஸ் , பெண்ணியம் செல்வக்குமாரி ,மைதிலி இவர்களுடன் 13 கவிஞர்கள்...
 கவிஞர் நா முத்துநிலவன் அவர்களின் தலைமையில்......

நாள் :1.8.2020 சனிக்கிழமை
காலம் பிற்பகல்2.30 இந்திய நேரம்
Zoom meeting id -845 2498 5798
Password :tamil
முன் பதிவு அவசியம்
கட்டணம் இல்லை.

Tuesday, 28 July 2020

Geetha's Tips Treat-you tube channel

உங்கள் ஆதரவுடன்....
அம்மாவின் நினைவாக
Geetha's Tips Treat- you tube channel
நாம் அனுபவித்தவற்றை மற்றவர்களுக்காக பதிவு செய்ய வேண்டும்...
என்னை செதுக்கிய என் மாணவர்கள்
பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறைமைகள்
புத்தகங்கள், தாவரங்கள் என என்னை மகிழ்வித்தவைகள் உங்களையும் மகிழவைக்க..
வாங்க பாருங்கள் மறக்காமல் லைக் பண்ணுங்க
 ,,சர்ப்ஸ்கிரைப் பண்ணுங்க..
தொடர்வோம்...
https://m.youtube.com/watch?feature=share&v=lQT95sVvmispmp

Monday, 6 July 2020

கண்ணீர்

ஒரு நிமிட மகிழ்ச்சி
ஒரு உயிரின் வீழ்ச்சி...

பாலியல் வன்முறைக்கு பின்
பக்குவமாய்
கழுத்தை நெரித்து
முடிந்தால் அறுத்து
சாலையில் வீசி
தூக்கிட்டு
 மூச்சைடைக்க வைத்து
ஆசையிருந்தால் உடல் முழுதும்
கத்தியால் கோலமிட்டு
கதறுவதை ரசித்து
நெருப்பிலிட்டு எரித்து
ஒரு நிமிட மகிழ்வை 
மறந்து விடலாம்...
பள்ளி இருந்தால் 
எம் குழந்தைகளுக்கு
பாதுகாப்பு தான்.
கொரோனா தேவலாம்
கீழ்மையான ஆண்களுக்கு...
தினம் தினம் பலி
நேற்று அறந்தாங்கி
இன்று திருச்சி குழந்தை...

Saturday, 27 June 2020

வீதி கலை இலக்கிய களம்-73 இணையத்தில்

அன்புடன்
ஒரு கோப்பை இலக்கியம் பருக அழைக்கிறோம்
வீதி தனது 73 ஆவது நிகழ்வை இணைய வழியில் நிகழ்த்த உள்ளது....
உலகமெங்கும் வீதியின் நண்பர்கள் தங்களின் வாழ்த்துகளை மட்டுமே கூற முடிந்த நிலையில் தற்போது உங்களுடன் இணைந்து பயணிக்க வீதி அன்புடன் காத்திருக்கிறது...
வீதியின் முன்னோடிகள் திருமிகு கும.திருப்பதி தலைமை ஏற்க, கவிஞர் நா.முத்துநிலவன்  ஊரடங்கு தந்த உணர்வு என்ற தலைப்பில் உரையாற்ற, திருமிகு விசி.வில்வம் ஊரடங்கில் உளவியல் என்ற தலைப்பில் கலந்துரையாட உள்ளனர் நாளை காலை உங்களோடு..
உங்களின் மதிப்புமிகு காலங்களை ஒதுக்கி எங்களோடு இணைய வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறோம்...பாடல்,
கவிதைகள், நூல் விமர்சனம் மற்றும் திரைவிமர்சனம் என பல்வகைச் சுவையுடன் பரிமாற காத்திருக்கிறது வீதி.
இணைவோம் இணையத்தில்..

Thursday, 11 June 2020

வீட்டிற்கு வந்த உறவுகள்

இன்று வீட்டிற்கு வந்த உறவுகள்...

           வீடு விலைக்கு வாங்க பார்த்த போது ஒரே மாதிரி இரண்டு வீடுகள் இருந்தன.... சற்று உள்ளே இருந்த வீடு தான் வேண்டும் என்று வாங்கினோம்.
அதில் கொஞ்சம் தோட்டம் வைக்க இடமிருந்ததே காரணம்.சிறு வயதில் வாழ்ந்த அரியலூர் வீட்டில்....ரோஜா , கனகாம்பரம், டிசம்பர் பூ,மல்லிகை. என பூச்செடிகள் வளர்த்ததுண்டு.
ஆயிரக்கணக்கில் பூக்கும் டிசம்பர் பூக்களை எனது ஆத்தா (அப்பாவின் அம்மா) அருகில் உள்ள வீடுகளுக்கு கொடுப்பது வழக்கம்... என்னையும் தம்பியையும் பூக்கொய்து தர கேட்பார்கள்.100 பூ  கொய்தால் எங்களுக்கு 5பைசா.ஒப்பந்தப்படி காலை எழுந்தவுடன் பறித்து கொடுத்து கிளம்புவோம்.
தோட்டத்தில் நேர் எதிரே பெரிய மஞ்சள் கனகாம்பரம்... அதன் பக்கத்தில் விதை ஊன்றி டேலியா பூ வரும் என்று காத்திருந்தால் கடலைச் செடி தான் காய்ந்தது....
 வீட்டில் வளர்த்துவந்த  கிளிகள் தினமும் அந்த செடியில் உட்கார்ந்து காலையில் கீ கீ என்று கத்தத் துவங்கினால் மேலே பறக்கும் கிளிகளெல்லாம் சுற்றுச் சுவரில் வரிசையாக அமர்ந்து கத்தும் காட்சி இப்போதும் கண்முன்னே...
அரியலூருக்கு அருகே உள்ள கலியபெருமாள் கோவில் திருவிழாவிற்கு செலவழிக்க தந்த பணத்தில் இந்த கிளிகளை வாங்கினோம் அப்பா அம்மாவின் சம்மதத்துடன்...
ஒருநாள் மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்த போது கிளி இல்லை..எங்கேம்மா என்று கேட்ட போது அதுக்கு முடியல‌அப்பா டாக்டர் கிட்ட தூக்கிட்டு போயிருக்காங்க என்று அம்மா சொன்ன போது மனசே சரியில்லை.
கொஞ்ச நாட்களில் ஒரு கிளி இறந்து விட மற்றதை தூரத்தில் கொண்டு விட்டுவிட்டு வந்து விட்டாங்க...
அப்போது கிணற்றில் நீர் இறைத்து தான் செடிகளுக்கு ஊற்ற வேண்டும்... அதெல்லாம் சொர்க்கம் என்று அப்போது புரியவில்லை..
சமையலறைக்கு அடுத்து உள்ள மண்தரையில் ரோஜா செடி வாங்கி ஊன்றி வைத்த சில நாட்களில்.... பள்ளி சென்று வந்து பார்த்தால் செடிக்கு மேல் இரண்டு மாடுகள்.... எங்கள் பாலுமாமாவிற்கு மாடுகள் என்றால் அத்தனை ஆசை...அதை எங்கிருந்தோ வாங்கி ஓட்டி வந்து கட்டி போட்டு இருந்தார்கள்.காலையில் ஊருக்கு ஓட்டிபோவாங்கன்னு அம்மா சொன்ன போது... மாடுகளின் கால்களில் தலையாட்டி சிரித்த ரோஜா செடி பத்திரமாக இருக்க வேண்டுமே என்ற கவலையோடயே தூங்கி எழுந்தேன்...கொஞ்சமாக நசுக்கப்பட்டாலும் என்னை ஏமாற்றாமல் நன்கு வளர்ந்தது சன்னலின் ஊடே பூக்களை காட்டி சிரித்தது ....
சில நாட்கள் செடிகள் கூடவே பேசிக்கொண்டு இருப்பேன்... நான் பள்ளிக்கூடம் போயிட்டு வரேன் பத்திரமா இரு என்று டிசம்பர் செடியிடம் அடிக்கடி பேசுவதுண்டு .. அந்த இடத்தில் முருங்கைக் கன்று வைக்கணும்னு அம்மாவின் ஆசை...
ஒரு நாள் டிசம்பர் தனது வாழ்விடத்தை முருங்கைக்கொடுத்து மறைந்து போனபோது இரண்டு நாட்கள் பேசாமல் கவலையாக இருந்தேன்..அப்றமென்ன முருங்கையுடன் பேச்சு தான்....
சங்க காலத்தில் இருந்தே பெண்களின் பேச்சுத் துணைக்கு தாவரங்கள் தான் உதவியாக இருக்கின்றன...
அதற்கு பின் காலனி வீடுகளில் செடிகளுக்கு வாய்ப்பே இல்லை.
புதுக்கோட்டையில் வீடு வாங்கும் போது கொஞ்சம் மண்தரையாவது கட்டாயம் இருக்க வேண்டும் என்ற எண்ணப்படி வீடு அமைந்தது.
ஒரு பக்கத்தில் சிறிய இடம் தான் இருந்தது.அதில் சுவரை ஒட்டி வெல்வெட் ரெட்ரோஸ், குண்டு மல்லிகை, மருதாணி, பப்பாளி இருக்கும்...
அதற்கு எதிராக கற்பூரவள்ளிவாழைமரம்.. இரண்டு தென்னை மரங்கள் , மஞ்சள் பூச்செடி பட்டு போல் நிறைந்து காணப்படும்...பெட் போல குரோட்டன்ஸ் வரிசையாக நிற்கும்....
 எனக்கு சூரியகாந்தி பூ பிடிக்கும் அரியலூர் வீட்டில் இருந்தது...
பத்தாவது படிக்கும் போது சின்ன பூவை தலையில் வைத்து செல்வதும் அதை எங்கள் சோபியா டீச்சர் தொட்டு பார்த்து ஏய் உண்மையான பூவாடி என ஆச்சரியமாக கேட்டதும் மறக்க முடியாத நினைவுகள்.
இந்த வீட்டிலும் தட்டு தட்டாக சூரியகாந்தி பூத்து குலுங்கும்..
மல்லிகையின் மணம் சன்னலைத் திறந்தால் வீட்டிற்குள் நிறைந்து மகிழ வைக்கும்.
வீடு புதுமனை புகு விழாவில் புவனா அக்கா இரண்டு தேக்கு மர கன்றுகள் பரிசுகளுடன் கொடுத்தாங்க... அதில் ஒன்று மட்டும் பதிமூன்று வருடங்கள் மளமளவென்று வளர்ந்து நின்றது ..
ஒரு நாள் தண்ணீர் ஊற்றி அதை தடவி கொடுத்து நல்லா வளர்ந்துட்ட டா... நான் இருக்கும் வரை நீயும் இருக்கனும்னு சொல்லி ஊருக்கு சென்ற ஒரு வாரத்தில் கஜா புயலில் தேக்கு மரம் விழுந்து விட்டது என்று எதிர் வீட்டில் உள்ள அனிதா கூறிய போது மனம் அதிர்ச்சியில்.... வீட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் கேட்டில் தலை சாய்த்து விழுந்திருந்தான்....
இதோ இரண்டு வருடங்களுக்கு மேலாக நின்றவன் படுத்திருக்கும் காட்சி கஜாவை நினைவூட்டியபடி.
மாடிக்கு மேல் வளர்ந்து சிரித்த கிறிஸ்துமஸ் மரமும் கருகி போனது.
நல்லவேளை வீட்டின் முன் புறம் இருந்த புங்கை மரமும்,வேப்பமரமும் தப்பித்தன.
வாழை மரங்கள் இருந்த இடத்தில் சிறிய அறை கட்ட வேண்டி வந்தது.
தென்னைமர வேர்கள் வீட்டிற்குள்ளே...சுற்றுச்சுவரை பாதிக்கவும் அதுவும் இல்லை..
இதை அடுத்து தினமும் காலையில் தோட்டத்தில் வேலை பார்த்து தண்ணீர் ஊற்றி பிறகு தான் சமையலறை வரும் வழக்கம் மறைய.....எழுத்துப்பணி காரணமானது.. அதற்கு பிறகு மூலிகை செடிகள் சித்தரத்தை,ஆடுதொடா,நொச்சி,ஓமவல்லி,
துளசி,தூதூவளை, திருநீற்றுப்பச்சை, கருவேப்பிலை, மருதாணி இவையுடன் செம்பருத்தி இருந்தன...
 தண்ணீர் ஊற்றிய பிறகு திருநீற்றுப்பச்சை தனது மணத்தை பரிசாக பரப்பும் பாருங்கள்..சே.. என்ன மகிழ்ச்சி டா இது எனத் தோன்றும்.
வெண்பூச்சிகள் அவற்றை அவ்வப்போது அழித்து விடும்...
நீண்ட வருடங்களுக்கு பிறகு இன்று வீட்டில் மீண்டும் செடிகள் வைத்தேன்...
மறுபடியும் மூலிகை செடிகள் மணம் பரப்ப வந்துள்ளனர்.... புதிதாக மஞ்சள் பூ கொடியும், மஞ்சள் அரளியும், அடுக்கு நந்தியாவட்டை யும், சிறியாநங்கை (நிலவேம்பு),பெரியாநங்கையும், எலுமிச்சை யும், செம்பருத்தியும் வந்துருங்காங்க.
தங்கை ஜீவாவும்.. அவர்களின் மகன் தீனாவும் செடிநடும் மகிழ்வில் வீட்டிலிருந்து சில செடிகளை கொண்டுவந்து தந்து மகிழ்ந்தனர்...
இனி காலை நேரம் இவர்களுடன் கழியும்...

வீட்டில் பெய்யும் மழைநீர் முழுவதும் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் சென்று. விடும்...
மோட்டார் தண்ணீரில்PHஅளவு 4800 இருந்ததுமுன்பு இப்போது ph1200நம்பமுடியாத விஷயம்.. உப்புத்தன்மை குறைந்து வாயில் வைக்கும் அளவுக்கு வந்துவிட்டது.... இயற்கை எப்போதும் மகிழ்வையே தருகின்றது.. நாம் தான் சரியாக புரிந்து கொள்ள வில்லை.

Friday, 5 June 2020

தேர்வு

முக கவசமிட்டு தேர்வு எழுது மகளே...

உயிருக்கு ஆபத்தான நிலை தான் ஆனாலும்
பதினைந்து ஆம் தேதி தேர்வு நிச்சயம்..

. ஆம் நீ தேர்வு எழுதவில்லை என்றால் இங்கு வாழத் தகுதியில்லை...
தேர்வு எழுத வந்தால் உயிருக்கு பாதுகாப்பு உண்டா அம்மா என்று கேட்காதேமா...
அது உன் பொறுப்பு என்று சொல்லி விட்டார்கள்....என்னை மீறி கொரோனா வராது என்று உறுதி அளிக்க முடியவில்லை மா.
தேர்வு எழுத நுழையும் முன் உனது உடல் வெப்பநிலை சரியா என்று சோதிப்போம் . பயந்து கேள்விக்கான விடைகளை மறந்து விடாதே... கைகளை நன்கு கழுவ மறந்து விடாதே.
நீ மனப்பாடம் செய்ததெல்லாம் மறந்து இருப்பாய் கொரோனா விடுமுறையில்... ஆனால்.... மதிப்பெண் நீ பெற வில்லை என்றால் தேர்ச்சி இல்லை என்று அமைதியாக அறிவிப்போம்.. அதற்கெல்லாம் நீ பயந்து தற்கொலை நாடிவிடாதே மகளே...
பயமின்றி எழுது தேர்வு எழுதும் மேசையை தொடாமல் எழுது.
அருகில் இருக்கும் தோழியை நீண்ட நாட்கள் கழித்து கண்ட மகிழ்ச்சியில் தொட்டு உரையாடி விடாதே...நீ மட்டும் அல்ல உனது அறையில் இருப்பவரெல்லாம் கைகளைக் கழுவி ,முகக் கவசம் அணிந்துள்ளனரா என்று எச்சரிக்கையாக எழுது.
தேர்வு முக்கியம்....உனது உயிரை விட....கொரோனா அதிகரிக்கத் தான் செய்யும்...அதோடு வாழப் பழகிக் கொள்ள சொன்னோமே....நீ அறியவில்லையா?
அவசரத்தில் பேரூந்தில் யாரையும்,தொடாமல்  வா...கொரோனா ஒளிந்து கொண்டு உன்னை தாக்க தயாராகவே காத்திருக்கிறது.
திரும்ப வீட்டுக்குச் சென்று கவனமாக இரும்மா.
கொரோனா அச்சத்தில் படிக்க மறந்து விடாதே....நீ மேல்நிலைப் படிக்க இத்தேர்வு முக்கியம் என்பதால் தான் உனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையிலும் தேர்வு எழுத சொல்கிறோம்..
எங்களையும் மீறி கொரோனா தாக்கினால் முதலில் எங்களை கொல்லட்டும் என்று கொரோனாவிடம் கெஞ்சுவதைத் தவிர வேறு வழியின்றி தவிக்கிறோம்.

பெண் குழந்தையை இரவில் தொலைத்துவிட்ட தாயின் தவிப்போடு.....பணி செய்ய காத்திருக்கிறோம்....

கீதா

Tuesday, 2 June 2020

திரை விமர்சனம்

"பொன் மகள் வந்தாள்"-திரைப்பட விமர்சனம்.
சூர்யா& ஜோதிகாவின் தயாரிப்பில் வெளிவந்துள்ளது" பொன்மகள் வந்தாள் "திரைப்படம். 
ஜோதிகா மற்றும் ஜோதிகாவின் அப்பாவாக பாக்கியராஜ்,தனது மரியாதைக்காக எதையும் செய்ய துணியும் சமூக ஆர்வலராக தியாகராஜன், அவருக்கு வக்கீலாக பார்த்திபன்....... பாதிக்கப்படும் பெண் குழந்தைகளின் பிரதிநிதியாக ஜோதிகா வாழ்ந்திருக்கிறார்.
திரைப்படங்கள் எதை கருவாக கொள்ள வேண்டும்..சமூகத்திற்கு அவற்றின் பங்கு என்ன என்பதை இந்த படம் உணர்த்தியுள்ளது.
பெண்களை விரட்டி விரட்டி காதலிப்பது, அரைகுறை ஆடையில் ஆடவிடுவது ,அவர்களை சிந்திக்க தெரியாத பொம்மைகளாக காட்டுவது,பெண்களை கேலியும் கிண்டலும் செய்வது இயல்பான ஒன்றாக காட்டிய திரைப்படங்களும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
காலங்காலமாக பெண்கள் அனுபவிக்கும் இந்த வலிகளை உரக்க சொல்ல விடாமல் அழுத்தப்பட்டு இருந்தது தற்போது ஒலிக்கத்துவங்கி உள்ளது.உண்மையான சமூக அக்கறை உள்ளவர்களால் மட்டுமே காசுக்கு விலை போகாமல் சமூகச் சீர்கேடுகளை சாடி குரல் கொடுக்க முடியும் என்பதற்கு சூர்யா ஜோதிகா உதாரணமாக திகழ்கின்றனர்....
ஜோதிகா, மருத்துவமனையும் கோவிலாக கவனிக்கப்படவேண்டும் என்று கூறியதற்காக அவரின் மீது வீசப்பட்ட அவமானங்கள் சமூக அக்கறை உள்ளவர்கள் மீது எறியப்பட்ட கற்கள்.
சொந்த வீடே பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற போகும் கொடுமை வேறு எந்த உயிரினங்களுக்கும் இல்லை...
குட் டச்,பேட் டச் சொல்லிக் கொடுக்க வேண்டியது ஆண் குழந்தைகளுக்கு.
சொந்தங்கள் பிஞ்சு குழந்தைகளின் உடலை ஆசைக்கு பயன் படுத்தி கொள்ளும் போது அக்குழந்தைகளின் வலியை கேட்க நம்ப அவர்களின் பெற்றோர்களே தயாராக இல்லாத போது அக்குழந்தை படும் பாடு சொல்ல முடியாத கொடுமை.
சிறு குழந்தைகளுக்கு இப்படி எனில் டீன்ஏஜ் குழந்தைகளின் உணர்வுகளைத் தூண்டி பயன்படுத்திக் கொள்ளும் ஆணினம் அவர்களையே குற்றவாளிகளாக்கி மகிழ்கிறது.
குடும்பம் பெண்ணின் உணர்வுகளை சிதைத்து அதில் கட்டமைக்கப்பட்டு வாழ்கிறது.
பெண்களின் வன்முறைக்கு எதிராக எழும்பும் குரல்கள் அதிகமாகிக் கொண்டு இருந்தாலும் அறியாத சின்னஞ்சிறு பெண்குழந்தைகளை சிதைப்பதும் அதிகமாகிக் கொண்டு உள்ளது.
சாதாரணமாக கடந்து போகிறோம்.நம் வீட்டில் நடக்க வில்லை என்று நிம்மதியில்.
ஆனால் உங்கள் குழந்தைகள் தங்களின் வலிகளை சொல்ல முடியாமல் மனதிற்குள் மருகுகின்றனர்....எந்த குழந்தையும் இந்த கொடுமைகளுக்கு விதி விலக்கல்ல என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
சிதைக்கப்பட்ட பெண்குழந்தைகள் வாழ்நாள் தண்டனையாக உளவியல் நோயாளியாக தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு உள்ளனர்.குற்றவாளிகளோ எந்த வித சங்கடமுமின்றி ஆண்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற கர்வத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டவராக உணர்ந்தால் தான் அவர்களின் வலியை உணர முடியும்.
பெண்களை சக மனுஷியாக மதிக்கத் தெரியாத ஆண்கள் விலங்கினும் கீழானவர்கள் என்ற உணர்வை எப்போது கற்றுத்தர போகின்றோம்.
"பொன் மகள் வந்தாள்"கொரானா காலத்தில் பெண் குழந்தைகளுக்காக எழுப்பப்பட்ட குரல்....
அதில் நடித்த ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் நடித்து உள்ளனர்.இப்படிப்பட்ட படத்தை தயாரித்து வழங்கிய சூர்யா,ஜோதிகாவிற்கு மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்.

இதில் குறைகள் இருக்கலாம் ஆனால் தவிர்க்க முடியாத கரு ...

Wednesday, 13 May 2020

தப்பட் திரைவிமர்சனம்

தப்பட்
ஒரு அறை....ஒரே ஒரு அறை....என்ன செய்யும்? கணவர் விக்ரம் (pavil gulati)மீது பேரன்பை செலுத்தும் மனைவியாக தனது மாமியாரைக் கண்ணும் கருத்துமாக காக்கும் மருமகளாக  டாப்ஸி நடித்துள்ள இந்தியில் வெளியாகியுள்ள படம் "தப்பட் "
இந்த மாதிரி படம் எடுக்க துணிந்த இயக்குநர் அனுபவ் சின்காவிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்....
தனது அலுவலகத்தில் இருந்துஇலண்டனுக்கு பணி நிமித்தம் மற்றும் பதவி உயர்வில்  செல்லும் வாய்ப்பு கிடைத்ததை கொண்டாடும் விருந்தில் ஓடி ஓடி அனைவரையும் கவனிக்கும் அமிர்தா(டாப்ஸி)
விருந்து நடக்கும் பொழுதே தனது வாய்ப்பு பறி போனதை அறிந்து கோபத்தில் சண்டையிட்டு அடிக்க போகும் கணவனை பிடித்து இழுக்கும் போது எதிரியின் மீதுள்ள அத்தனை  கோபத்தையும் மனைவியின் கன்னத்தில் ஒரே அறையாக.....
ஆணாதிக்க சமூகத்தில் இதென்ன ஒரு விசயமா....கணவன் மனைவிக்குள் வரும் சண்டை இயல்பு தானே என்று தோன்றினால் நீங்கள் இன்னும் வளரவில்லை என்று உணருங்கள்..
ஒரு அறைக்குள்ளேயே மனைவியை அடிப்பது சட்டப்படி குற்றம் என்பது இன்னும் காகிதத்தில் மட்டுமே உள்ளது..
அத்தனை பேர் மத்தியில் அமிர்தா இழந்தது சுயமரியாதையை மட்டுமல்ல..
தனது கணவனின் மீது தான் வைத்த  அன்பையும் தான்.. அதற்கு பிறகு அவளால் தூங்கவே முடியவில்லை...
அவளது அப்பா அவளுக்கு சப்போர்ட் பண்ணும் போது அவளது அம்மா தனது பாட்டு பாடும் திறமையை கணவருக்கு பிடிக்கவில்லை என்பதால் அழித்துக் கொண்டதை கூறி சமாதானம் செய்கிறாள்...
கணவனுடன் விருப்பமின்றி வாழ விரும்பாத அமிர்தா விவாகரத்திற்காக பெண் வக்கீலை நாடுகையில் பெண்ணியத்திற்காக குரல் கொடுக்கும் அந்த வக்கீலே கணவனின் வன்முறைகளைத் தாங்கி வாழ்வதால் இதற்கு ஏன் விவாகரத்து என்று வியக்கிறார்...
பிடிவாதமாக தனது சுயமரியாதையை விட்டு கொடுக்காத அமிர்தா தான் தாயாகப் போவது தெரிந்தும்....விவாகரத்து பெறுகிறாள்.தனது செயலுக்கு இறுதி வரை மன்னிப்பு கேட்காத கணவன் ஆணாதிக்க சமூகத்தின் சீரழிந்த பகுதி.
ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முடிந்தது என்பதன் அடிப்படை பெண்களுக்கு  சுயமரியாதை இல்லாத அப்படி ஒன்று அவர்களுக்குத் தேவையே இல்லை என்று கருதும் சமூகத்தின். ...பண்பாட்டுச் சிதைவு...
மேலோட்டமாக பார்த்தால் இது பெரிது அல்ல தான்....
அந்த இடத்தில் கணவன் மனைவியிடம் அறை வாங்கி இருந்தால் பொங்கி எழாதோ ஆண்குரல்கள்...
செயல் ஒன்று தான்... ஆளுக்கு தகுந்தாற்போல் தீர்ப்பு சரியல்ல என்பது மறுக்க முடியாத உண்மை.
தப்பட் துவக்கம் தான்....
தனது நடிப்பால் வாழ்ந்திருக்கிறார் டாப்ஸி வாழ்த்துக்கள்.
இந்த கருவை தேர்வு செய்த இயக்குநருக்கு மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்.

Thursday, 2 April 2020

நூல் விமர்சனம்.-ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு

நூல் விமர்சனம்
#reading_marathan_2020_25
RM261
3/25

"ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு'
சராஜீவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை.
ஸ்லெட்டா ஃபிலிப்போவிக்.
தமிழில்
அனிதா பொன்னீலன்.
புலம் வெளியீடு
விலை ₹170
பக்கம் 208.
தனது முதல் மொழிபெயர்ப்பு நூலிலேயே பிரகாசமான எழுத்தாற்றலின் மூலம் இந்நாட்குறிப்பை நமக்கு மிக அருமையாக மொழி பெயர்த்து உள்ளார்.ஒரு குழந்தையின் மனநிலையில் இருந்தால் மட்டுமே இந்நூலின் உணர்வினை நாம் புரிந்து கொள்ள முடியும்.அந்த வகையில் ஸ்லெட்டாவின் நாட்குறிப்பை நாமும் உணரும் வகையில் சிறப்பாக மொழி பெயர்த்து உள்ளார் திருமிகு அனிதா பொன்னீலன்.
ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு,ஆனி ஃபிராங்க் நாட்குறிப்பு பற்றி கேள்வி பட்டு உள்ள நிலையில் சராஜீவோவின் ஆனி ஃபிராங்க் என்று அழைக்கப்படும்" "ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு" படிக்கும் வாய்ப்பு...ஊரடங்கு போது கிடைத்தது.
கொரோனா அச்சத்தில் ஊரடங்கின் நாட்களில் நான் இந்த நூலை வாசித்தது முழுமையாக பதுங்கு குழியில்.... மூன்று மாதங்களுக்கு மேலாக வீட்டை விட்டு நகராத ஸ்லெட்டாவின் மனதை நுண்மையாக  அறிந்து கொள்ள முடிகிறது.

யூகோஸ்லாவியா நாட்டிலிருந்து போஸ்னியாவும்,ஹெர்ஸகோவினாவும் விடுதலை அடைந்ததாக அறிவித்ததும், அங்கு வாழ்ந்து கொண்டிருந்த குரோஷியரும், இஸ்லாமியரும் விடுதலை பெற முயல ,அதை எதிர்த்து செர்பியர்கள் நடத்திய போரினை  ஸ்லெட்டா  தனது நாட்குறிப்பின் மூலம் நமக்கு காட்சிப்படுத்தி குழந்தையின் பார்வையில் போரின் தன்மையை உணர வைத்து மனதை அதிர வைக்கிறாள்.
வசதியான குடும்பத்தில் பிறந்து தந்தை வழக்கறிஞரான மாலிக், வேதியியல் வல்லுநரான அம்மா அலைகா இருவரின் ஒரே செல்ல மகளாக வசதியாக எந்த வித கவலையுமின்றி படிப்பு,இசை,பியானோ வாசித்தல், புத்தகம் வாசித்தல் ,வார இறுதியில்  தாத்தா பாட்டியின் கிராமத்திற்கு சென்று மகிழ்வாய் இயற்கையை நேசிப்பவளாக, மக்கள் மீது தீராத அன்பை பொழிபவளாக ,வானொலி கேட்பவளாக.... ஸ்லெட்டா.
போர் எதற்காக ஏன் என்று கேள்வி கேட்பவளாக பத்து வயது சிறுமியான ஸ்லெட்டா  நம்மை காலத்தின் பின்னே அழைத்து சென்று மனிதர்களின் கோர முகத்தைக் காட்டுகின்றாள்
ஆனி ஃபிராங்க் தனது நாட்குறிப்பிற்கு கிட்டி என பெயர் வைத்ததை அறிந்ததும் தனது நாட்குறிப்பிற்கு "மிம்மி" என பெயர் வைத்து தனது உணர்வுகளை எண்ணங்களை அதனிடம் பதிவு செய்கிறாள் ".மிம்மி" அவளுக்கு சிறந்த தோழியாக அமைதியாக அவளது சோக எண்ணங்களை  நிரப்பப்படுவதற்காக பொறுமையாக காத்திருக்கின்றது.
குழந்தைகள் உயிரற்றவைகளுக்கும் பெயர் வைத்து உயிர்ப்பிக்கும் வல்லமையுடையவர்கள்.

செப்டம்பர் 1991 முதல் அக்டோபர் 1993 வரை எழுதப்பட்ட நாட்குறிப்பு நமக்கு செரஜீவோவில் நடந்த போரின் நிலைமையை கூறி மக்கள் படும் துயரங்களை எடுத்து உரைக்கின்றது.
குழந்தைகளுக்கே உரிய தன்மையுடன் எதற்காக இந்த போர்.?.ஏன்? எப்போது முடியும்? என தனக்குள் கேள்வி கேட்கிறாள்.வீட்டின் அருகேயுள்ள குன்றிலிருந்து வீசப்படும் குண்டுகளுக்கு பயந்து வீட்டின் அடிப்பகுதியில் இருட்டாக இருக்கும் நிலவறையில் அடிக்கடி செல்ல
நேரிடும் போதெல்லாம் எப்போது இந்த போர் முடிந்து நண்பர்களுடன் விளையாட முடியும்.... தாத்தா பாட்டியின் கிராமத்திற்கு செல்ல முடியும் என்று ஏங்குகிறாள்.
"போர் எங்கள் படிப்பிற்கு இடையூறு செய்து,பள்ளிகளை மூட வைத்து, குழந்தைகளை வகுப்பறைகளுக்கு பதிலாக பதுங்கு குழிகளுக்கு அனுப்புகின்றது . போர் வெறியர்களுக்கு அன்பைப் பற்றியோ, எதையாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஆசையோ எதுவும் தெரியாது.எப்படி அழிப்பது, எரிப்பது, ஏதாவது பொருட்களை எடுத்து செல்வது என்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும்."என மிம்மியிடம் பதிவு செய்கிறாள்.
      போரின் விளைவாக படுகொலை, கொன்று குவிப்பு, பயங்கரம், இரத்தம், ஓலங்கள், கண்ணீர், பரிதவிப்பு....இவையே ஸ்லெட்டா அறிகிறாள்.ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் வளமான வாழ்க்கை அழிந்து மின்சாரமின்றி, தண்ணீரின்றி,எரிவாயு இன்றி,உணவின்றி ரொட்டிக்கு ஏங்கும் நிலை ஏற்க முடியாத வேதனையாக உள்ளது. அவளுக்கு பிடித்த பிஸாவிற்காக மூன்று மாதங்களாக குழந்தை ஏங்குவதை எப்படி தாங்கிக் கொள்வது.
மஞ்சள் பறவை சிக்கோவும் ,சிஸி பூனையும் அவளுக்கு ஆறுதலாக இருந்து.   இறந்து விடுகின்றன.
இந்த போர்  அவளிடமிருந்து வருடக்கணக்கான வாழ்க்கையையும்,குழந்தைமையையும்,
முதியவர்களின் அமைதியான முதுமைக் காலத்தையும் திருடிச் சென்றுவிட்டதாக கோபப்படுகிறாள்.
ஒன்றுமறியாத பதினோரு வயது சிறுமி தனது வாழ்வில் விருப்பமின்றி நுழையும் போரின் காரணமாக தான் நேசிக்கும் நாட்டை, உறவுகளை,நண்பர்களை இழந்து தனிமையில் வாடி , அவள் நேசிக்கும் அற்புதமான பிள்ளை பருவத்தை அருவருப்பான போர் கொண்டு செல்வதை எண்ணி கதறுகின்றாள்.
அவளுக்கு போர் வாழ்க்கை பழகிவிடுகிறது.
அவள் எழுதிய நாட்குறிப்பு 1993 ஜுலை 17  நூலாக வெளியிடப்பட்ட விழாவைப் பற்றி மிம்மியிடம்(அந்த நாட்குறிப்பு) கூறுவது சிறப்பு.
அவளது தோழி மஜாவின் முயற்சியில்
செராஜீவோவின் பாதிப்பு மிம்மியால் உலகமெங்கும் அறியவைக்கப்படுகிறது.
மிம்மியை உலகமே நேசிக்கத் துவங்குகிறது.
ஸ்பெயின், பிரான்ஸ்,யு.எஸ்.ஏ., இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து ஸ்லெட்டாவை பேட்டி எடுக்க வருகிறார்கள்.
உலக அளவில் அவளுக்கு பேனா நண்பர்கள் கிடைக்கின்றார்கள்.அவர்களின்  ஆறுதலான கடிதங்கள் போரின் நடுவே அவளுக்கு காலங்கழித்து கிடைத்தாலும் மகிழ்வைத் தருகின்றன.
நண்பர்களை இழந்து வாடும் அவளுக்கு அவர்கள் நல்ல நண்பர்கள் ஆகிறார்கள்.
இந்த அற்ப போர் விளையாட்டின் முடிவில் 15,000 பேர் பலி.அவர்களில் 3000 குழந்தைகள் என்பது ஏற்க முடியாத வன்முறை.50,000 பேர் நிரந்தரமாக வாழத் தகுதியற்றவர்களாகிறார்கள்.
இதற்கு நடுவே வருகின்ற பிறந்தநாள் விருந்துகள் மருந்தாக அமைகின்றன.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் ஆறுதலாக இருக்கின்றன.
குழந்தைகள் எப்போதும் போரை விரும்புவதில்லை.
ஸ்லெட்டாவை பேட்டி காணும் நிருபர் அவள் அருகே குண்டு விழுந்தாலும் கவலைப்படாமல் இயல்பாக இருக்கும் நிலை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
அவள் தன்னைத்தானே தேற்றி தன்னம்பிக்கையுடையவளாக இருக்கின்றாள்.
பெரியவர்களின் பேராசைக்கு குழந்தைகள் எல்லா நாடுகளிலும் பலியாகின்றனர்....
அவர்களுக்கான உலகத்தை எப்போது உருவாக்க போகின்றோம் என்ற எண்ணத்தை விதைக்கிறது மிம்மி.
மு.கீதா
புதுக்கோட்டை.


Thursday, 26 March 2020

தலைமுறைகள் நாவல் விமர்சனம்

தலைமுறைகள்-நீல.பத்மநாபன்
காலச்சுவடு வெளியீடு
விலை-395
ஒரு நவீன இதிகாசமென வண்ணநிலவன் கூறும் தமிழின் ஆகச் சிறந்த நாவல் "தலைமுறைகள்".
1966இல் எழுதப்பட்டகுமரி மாவட்ட இரணியல் செட்டியார் சமூகத்தின் பண்பாடுகளை,பழக்க வழக்கங்களை, சடங்கு, சம்பிரதாயங்களை அவர்களின் வட்டார வழக்கிலேயே அறிமுகப் படுத்தும் வரலாற்று ஆவணம்.
திரவியம் என்ற பாத்திரத்தின் பதினைந்து வயது முதல் இருபத்தைந்து வயது வரை நடக்கும் வாழ்வியலை , அவர்களின் சடங்கு சம்பிரதாயங்களை ,அவற்றால் திரவியத்தின் தந்தை
நாகருபிள்ளை படும் பாட்டை திரவியத்தின் பார்வையில் உரைக்கிறது.
சிங்கவினாயக தேவஸ்தானத்து பிள்ளையார் கோயில் நிர்மால்ய பூஜையின் தீபாராதனை மணியோசை சிதறல்களில் துவங்கி அதே மணியோசை சிதறல்களில் முடிவடையும் நாவல் முடிவை நம் கைகளில் தந்து  நகர்கிறது.
பாரம்பரியத்தின் வேராக வாழும் உண்ணாமலை ஆச்சியே சடங்கு சம்பிரதாயங்களைக் காப்பாற்றி  வருகிறாள். அவளின் உறுதியை தனது முற்போக்கான செயலால் அசைத்து பார்க்கும் ஆச்சியின் அருமை பேரன் திரவியம்....
முரடனாக இருந்தாலும் திரவியத்தின் அக்கா நாகுவிற்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்து அவளை மறுமணம் செய்ய விரும்பும் குற்றாலம் எழுத்தாளரின் முற்போக்கு சிந்தனைக்கு படிமமாகிறான்.
தனது குறை வெளியே தெரியாமல் இருக்க   தனது ஆணாதிக்க சிந்தனையால் குற்றாலத்தை கொலை செய்யும் நாகுவின் கணவன் பழமைவாதிகளின் முழு வடிவம்.
தெங்கு பார்த்து கண் விழிக்கும் ஆச்சியின் விழித்தலில் நாவல் நடைபோடத் துவங்குகிறது.
வாதப்பனி என்னும் யானைக்கால் நோயுடன் குடும்பத்தின் ஆணி வேராக நின்று திரவியத்திற்கு அவனது சந்தேகங்களை விளக்கி, வாழ்வின் சடங்கு சம்பிரதாயங்களை கூறி,உறவுகளை பற்றியும் அவர்களது வாழ்க்கையையும் புரிய வைக்கும் ஆச்சி போல  ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப வரலாற்றை சந்ததிகளுக்கு கடத்துபவளாக ஆச்சிகள் வாழ்வதை  உணரலாம்.
சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அச்சப்படும் நாகருபிள்ளை குடும்பம் திராவிடத்தின்

விடா முயற்சியால் கட்டுபாடுகளைத் தகர்த்து நாகுவிற்கு மறுமணம் செய்ய சம்மதிக்கிறது.இதற்காக திரவியத்தின் மெனக்கெடல் நம்மை வியக்க வைக்கிறது.இறுதியில் மீறமுடியாத உண்ணாமலைஆச்சி கவலையிலும் வாதப்பனியின் வேதனையிலும் மறையும் போது அழுத்தப்பட்ட சமூக சம்பிரதாயங்கள் வெற்றி பெறுகிறது.பெண்களின் வேதனையை கொடுமைகளை திரவியம் மற்றும்குற்றாலம் மூலம் மாற்ற எண்ணும் ஆசிரியரின் நோக்கம் நிறைவேறாமல் போவது காலத்தின் துயரம்.
பிறப்பு முதல் றப்பு வரை இரணியல் செட்டியாரின் சடங்குகள், சம்பிரதாயங்கள்,அக்கால விளையாட்டுகள்,மனிதர்களின் வாழ்வியலை , பெண்களுக்கு இழைக்கப்படும்  கொடுமைகளைகண் முன் நிறுத்தும் "தலைமுறைகள் "நவீன இதிகாசமென அழைக்கப்படுவதில் தவறேதும் இல்லை.
மு.கீதா

Wednesday, 25 March 2020

அப்பத்தாவின் கருக்கருவா-விமர்சனம்

அப்பத்தாவின் கருக்கருவா-
கவிதை நூல்-ஆலங்குடி வெள்ளைச்சாமி.
அனிச்சம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


        தொப்புள் கொடியின் பிசிறுகளோடு கதைக்கும் கருக்கருவா விளைவாய் மனதின் அன்பை அறுத்து கொண்டு அப்பத்தாவின் கம்பீரத்தை நம்மிடம் கதைக்கிறது.மரத்தை அண்ணனாக நினைக்கும் மாரியப்பக்கிழவன் சங்க இலக்கியத்தலைவி புன்னை மரத்தை சகோதரியாக எண்ணும் வரலாற்றின் எச்சம்.கலொடிந்த காகமும் கிழவனும் கொண்ட அன்பு மனிதத்தின் உச்சம்.
வீதியில் தொலைந்தவர்களை தேடி அலையும் கவிதையோடு நாமும்  ஒற்றை கால் காகத்தை தேடி அலைகின்றோம்.பூனைக்குட்டியும் நாயும், பேரன்பின் மிகுதியில் கதை கூறும் குழந்தை என மனிதம் ததும்பி வழியும் அமுதசுரபி.
"குடிசையிலிருந்து
விளிம்பில் தொங்குகிறது
உலகத்தின்
கடைசி மழைத்துளி"
இந்தக் கவிதை குருவியை மட்டுமல்ல நமது மனதிலும் தாகத்தை தணித்து நம்பிக்கை விதைக்கும் கவிதை.
மாடுகள் நடத்தும் மாநாடு கவிதை கிராமத்தின் மண்வாசம் நகரத்தின் கானல் வாழ்வைக்காட்டும் படிமம்.அநியாயத்திற்கு எதிராக ஒலிக்கும் குரலற்றவர்களின் குரலாக கவிதைகள் வாழ்கின்றன. காதலில் ஊஞ்சாலாடும் கவிதைகள் இளமையின் வசந்தத்தை வருடி நம்மை சுவாசிக்க வைக்கின்றன.சமூக அக்கறையும், காதலும் கலந்து சமைத்திருக்கும் கவிதைகள் பழக்கூட்டென இனிமை தரும்.என்பது உறுதி.வாழ்த்துகள் கவிஞர், பாடகர் , பட்டிமன்ற பேச்சாளராகத் திகழும் தோழர் வெள்ளைச்சாமி அவர்களுக்கு...படித்து பாருங்கள் மண்வாசம் தகிக்கும்...

Thursday, 12 March 2020

பெண் வரலாறு

வரலாற்றில் பெண் கொடுமைகள்
புலவர் கோ .இமயவரம்பன்.
சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் தலைப்பில் ஐந்து கட்டுரைகளும்.
, குழந்தை திருமணம் தொடர்பாக நான்கு கட்டுரைகள் கொண்ட சிறிய நூல்.
கேள்விப்பட்ட கொடுமைகள் தான் என்றாலும் புள்ளிவிவரங்களுடன் படிக்கையில் மனம் கனத்த நிலை.
ஆங்கிலேயர்கள் வந்தது நமக்கு நன்மையோ என்று எண்ண வைக்கும் நிதர்சனம்.
மனிதன் இறந்த பிறகு மறுஉலகிலும் ஏவல் செய்ய பணியாட்கள், வாழ்க்கை நடத்த மனைவிகள், மந்திரிகள் அவனோடு பயன் படுத்திய குதிரைகள் அனைத்தும் எரித்தோ அல்லது புதைத்தோ....
சிறு வயதில் பார்த்த படம் ஒன்று நிழலாடியது 
பிரமிட்டின் உள்ளே இறந்த கணவனுடன் மனைவி அமர்ந்திருந்த காட்சியை ஏற்க முடியாது இன்றும் மனம் பதைக்கின்றது.
150 வருடங்களுக்கு முன் வரை ஏன் 80 களில் சதி கொலை செய்யப்பட்ட ரூப்கன்வரை மறக்க முடியுமா?
தர்ம சாஸ்திரங்கள், ரிக் வேதத்தில் , கருடபுராணத்தில், விஷ்ணு புராணம்,விஷ்னுஸ்மிருதி,காதிக்காண்டம் என அனைத்தும் சதியை போற்றி புகழ்கின்றன.
மணிமேகலை கூறும் கணவன் இறந்த உடன் உயிரை விடும் தலையாய கற்பு,தீப்பாய்ந்து இறக்கும் இடையாய கற்பு,கைம்மை நோன்பு நோற்கும் கடையாய கற்பு வரிகள்.... என்ன சொல்வது.
உடன்கட்டை ஏறும் பெண்ணின் கணவன் குடும்பத்து தந்தை வழியிலும்,தனது தாய் வழியிலும் மூன்று தலைமுறைகளில் அவர்கள் செய்த பாவங்களை எல்லாம் உடன் கட்டை ஏறுதல் மூலம் போக்கி விடலாம் என்று உருவாக்கப்பட்ட நம்பிக்கையை,அப்படியின்றி விதவைகள் உயிரோடு இருந்தால் பழியும் 
பாவமும்சாபக்கேடும் வரும் என்ற நம்பிக்கையை விதைத்தவர்கள் யார்?
உடன்கட்டை ஏற மறுக்கும் பெண்களின் உணர்வுகளை அழிக்க அபின் போன்ற போதைப்பொருட்களைத் தந்து மயக்கத்தில் தள்ளாடும் பெண்ணை சிதையில் கணவனுடன் கட்டிவைத்து எரியும் போது எழுந்து ஓடாமல் தடுக்க இருவர் கட்டையை வைத்து அடித்து அவளது அலறல் கேட்காமல் இருக்க கொட்டு மேளம் அடித்து சதியை நிறைவேற்றும் காட்சியை எழுத கைகள் நடுங்குகின்றன.
புராண இலக்கியங்களில் உடன்கட்டை ஏறும் காட்சிகள் இரண்டாம் கட்டுரை.
மகாபாரத பாண்டு மன்னன் மனைவி மாத்திரி ,பூதப்பாண்டியன் மனைவி கோப்பெரும் பெண்டு,சுந்தரச்சோழனின் மனைவி வானவன் மாதேவி உடன்கட்டை ஏறியதைக் கூறும் திருக்கோயிலூர் கல்வெட்டு.
மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜி கி.பி 1680 இல் இறக்கும் போது இட்ட ஆணையில் பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டேஇறக்க வேண்டும்.தம்முடன் தமது மனைவியர்கள் உடன்கட்டை ஏறுவதை யாரும் தடுக்க கூடாது என்று கூறியதாக குவார்தா என்பவனின் கூற்று.
இப்படி தொடரும் கொடுமைகள்...கி.பி மதுரையை ஆண்ட நாயக்க மன்னன் இறந்த போது 700 மனைவிகள்,திருமலை நாயக்கன் கி.பி 1659 இல் இறந்த போது 200 மனைவிமார்கள் உடன்கட்டை ஏறியதாக பிரோயின்ஸா என்னும் பாதிரியார் கூற்று.
இராமநாத புர மன்னன் கிழவன் சேதுபதி இறந்த போது 47 மனைவிமார்கள், புதுக்கோட்டை அரசி ஆயி அம்மாய் ஆயி தனது கணவர் இராஜ விஜயரெகுநாத  தொண்டைமான் என்னும் மன்னர் இறந்த போது தனது குழந்தைகளை ஆங்கிலேய அதிகாரி கேப்டன் பிளாக் பர்ன்  பொறுப்பில் விடச்சொல்லி உடன்கட்டை ஏறியது,மன்னர்குடும்பம் மட்டுமின்றி புதுக்கோட்டை வைணவ கோமுட்டி பெண்ணுக்கு தான் அபின் கொடுத்து அவள் கணவனை மூன்று சுற்று சுற்றி வருகையில் மயங்கி விழு சிதையில் இழுத்து தள்ளிக் கொன்ற உண்மை எப்படி முடிந்தது.உயிருடன் எரியும் பெண்ணின் கோரக்குரலைக் கேட்க...
சதியை எதிர்த்த இராஜாராம் மோகன் ராயின் அண்ணன் மனைவியை உடன்கட்டை ஏற்றிய கொடுமையே அவரை எதிர்ப்பாளராக்கியது
மராட்டிய பார்ப்பன பெண் கோகிலாவை உடன்கட்டை ஏற அழைத்து செல்லும் போது ஆங்கிலேய இராணுவத்தினர் காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் ஏற்க மறுத்ததால் திருநெல்வேலி ஸ்வாட்ஸ் பாதிரியாரால் ஞானஸ்நானம் 1778 இல் அளிக்கப்பட்டு இராயல் குளோரிந்தாள் என்ற பெயரில் சுவிசேஷ ஊழியம் செய்த யதார்த்தம்.
சதி பற்றிய வெளிநாட்டார் குறிப்புகள், முஸ்லீம் மன்னர்களின் முயற்சி, ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் பாதிரியார்களின் முயற்சியும் வெற்றியும் என்ற தலைப்பில் இரத்த சகதியை நம்மீது தெளித்து சிதறும் இந்தியப் பெண்களின் வரலாறு...
இறுதியில் லார்ட் வில்லியம் பெண்டிங் தனது உறுதியான உத்தரவால் சதி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது.
இதை எதிர்த்து பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகள் என உண்மையை ஆதாரத்துடன் வெளிச்சமிட்டு காட்டுகிறது.

குழந்தை மணம் கொடுமைகள்

"8 வயது பெண்ணை மணம் செய்து கொடுப்பவன் சுவர்க்கலோகத்தையும்,9 வயது பெண்ணை  விவாகம் செய்து கொடுப்பவன் வைகுண்டத்தையும்,10 வயது பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் பிரமலோகத்தையும், அடைகிறான்.அதற்கு மேற்பட்டு விவாகம் செய்து கொடுப்பவன் ரௌரவாதி நரகத்தை அடைகிறான்"
           - பராசுரர்
மனு, மனு ஸ்மிருதி,தேவதா,பிரகஸ்பதி,ஆஸ்வலாயனர்,தர்ம சாஸ்திரம், களவியல் உரையாசிரியர் கூறுகின்றனர்.பார்ப்பன சமூகத்தில் இருந்த இந்த பழக்கம் நாளடைவில் உயர் சாதியினர் பின்பற்ற செய்தனர்.
மகாராஷ்டிரா நானா பர்னவிஸ் 60 வயதுக்கு மேல் இறக்கும் போது அவனது இருமனைவிகள் வயது 14வயது ,9வயது.
இராமகிருஷ்ணர் பரமஹம்சர் மனைவிக்கு திருமணமாகும் போது வயது 5 .
காந்தி-கஸ்தூரி பா வயது 7 ஆக இருக்கும் போது நிச்சயதார்த்தம் 13 வயதில் திருமணம்.
1921 கணக்கெடுப்பின்படி
இந்திய உபகண்டத்தில் நான்கு கோடி பால்ய விதவைகள்.
1 வயதுக்கும் கீழ்-612
1 முதல் 2 வயதுக்குள்-498
4முதல் 5 வயதுக்குள்-6,858
5முதல் 10 வயதில்-85,580
10முதல் 15 வயதில் -2,33,533 விதவைகள்.
குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி புணர்ந்ததால் இறந்த குழந்தைகள் ஏராளம்.
திருவல்லிக்கேணியில் சம்மதிக்காத குழந்தையை தீயிலிட்டு பொசுக்கிய  கொடுமை நடந்துள்ளது.இதை எதிர்த்து 12 வயது தான் பெண்ணின் சம்மத வயது என்ற சட்டமியற்றிய ஆங்கிலேயர்கள் மீது கிறித்தவ மதத்தைத் திணிக்க பார்க்கின்றனர் என்று புரளியை கிளப்பினர்.இந்தியாவெங்கும் வைதீகர்களின் கிளர்ச்சி.அதில் பூனாவில் நடந்த கிளர்ச்சிக்கு தலைமை வகித்தவர் பெரிய தேசியத் தலைவர் என்று புகழப்படும் லோகமான்ய பாலகங்காதர திலக்.
34 ஆண்டுகளுக்கு பின்னர் 13 வயது பெண்ணின் சம்மத வயது.என்று 1925 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது.
மேலை நாட்டு மருத்துவர்கள் குழந்தை தாய்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்த கொடுமைக் கண்டு வருந்தினர்.குழந்தை மணத்தை எதிர்த்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர்.
சங்கராச்சாரியார் 12 வயதுக்கு பிறகு பெண்களுக்கு திருமணம் செய்தால் மதமே கெட்டுப்போகும் என்று வைசிராய்க்கு தந்தி கொடுக்க வைத்துள்ளார்.
பண்டித மாளவியா,கேல்கார் டாக்டர் மூஞ்சே, மோதிலால் நேரு,எம்.கே . ஆச்சாரியார்,கே.வி ரெங்கசாமி அய்யங்கார்,எஸ் . சத்தியமூர்த்தி போன்றவர்கள் குழந்தை மணத்தடைச்சட்டம் வராமல் தடுக்க பல முயற்சிகளை செய்துள்ளனர்.
சம்மத வயது கமிட்டியின் முன் பெண்களுக்கு 10,12 வயதுக்கு முன்பே திருமணம் செய்து விட வேண்டும் இல்லையெனில் பாவம் வந்து சூழும் என்று பராசரர் எழுதி இருக்கிறார்.நாங்கள் பாவத்திற்கு கட்டுப்படுவோமா? உங்கள் சட்டத்திற்கு பயபபடுவோமா? என்று வாதிட்டுள்ளார்.குழந்தை மணத்தடை மசோதாவுக்கு எதிராக சுதேச மித்திரன் மற்றும் இந்து பத்திரிக்கைகள் பாடுபட்டுள்ளன.
இப்படிப்பட்ட நிலையில் இந்து பத்திரிக்கை 10 வயது பெண்ணோ அல்லது 12 வயது பெண்ணோ ஒருவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று விளம்பரம் செய்தது.
சுயமரியாதைக்காரர் ஒருவர் இப்படி செய்யலாமா என்று கேட்டதற்கு"10 அல்லது 12 வயது பெண்ணை இப்போது விவாகம் செய்வதாகக் காணப்படுவது விவாகச் சடங்கல்ல.அது ஒரு நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது.பெண்ணையும் மாப்பிள்ளையையும் கூடச் செய்யும் முதலிரவு தான் விவாகம் என்று எழுதியுள்ளது.
வெறும் நிச்சயமாக இருப்பின் கணவன் இறந்தால் தாலியறுத்து மொட்டை அடித்து மூலையில் உட்கார வைப்பது ஏன் என்ற கேள்விக்கு இந்து பத்திரிக்கை பதில் தரவில்லை.1930 இல் சாரதா சட்டம் நிறைவேற்றப்பட்டது 14 வயது பெண்ணுக்கும் 18 வயது ஆணுக்கும் திருமண வயது ஆக அறிவித்தது.
சட்டம் வரப்போகிறது என்று தெரிந்த பிறகும் நடந்த திருமணங்கள் ஏராளம்.
1921 ஆம் ஆண்டு விதவைகள் எண்ணிக்கையை விட 1931 ஆம் ஆண்டு விதவைகள் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகம்.
இன்றும் குழந்தை திருமணங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்தில் இன்றும் குழந்தை திருமணங்கள் நடப்பதை கண்கூடாக காணலாம்.
இந்திய நாட்டில் தான் ஆறுகளுக்கு, நிலத்திற்கு என எல்லாவற்றிற்கும் பெண் பெயரை வைத்து கொண்டாடி வருகிறோம் என்று பேச்சாளர்கள் பேசும்போது.....
வரலாற்றில் பெண் பட்ட பாடுகள் சொல்லில் அடங்காத உண்மைகள் .
இன்றும் பதினைந்து வயது குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை கையறு நிலையில் கடக்கிறோம் .....
பெரியாரின் பாதையில் மணியம்மையாருக்கு அடுத்த நிலையில் இருந்து தொண்டறம் செய்தவரின் ஆய்வு நூல்.
புத்தகம் "வரலாற்றில் பெண் கொடுமைகள்"
எழுதியவர் : புலவர் கோ.இமயவரம்பன்
பதிப்பு: பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு.
நன்கொடை:₹25






Tuesday, 22 October 2019

அசுரன்-1

அசுரன்-1

இளங்காலைப் பயணக்
காற்றில் கரைந்திடும்மனம்
கடிதம் எழுதேன்.
என்ன கடிதம்?
எழுத்துகள் தேடினேன்..
கவிதை எழுது வருகிறேன் என்றது.
என்ன கவிதை எழுத?
காதல்...?
கிழிச்ச...
இயற்கை?
அது அழிவின் விளிம்பில்.
தாலாட்டு?
தூங்கும் குழந்தையை எழுப்பவா?
போ...என முகம் திருப்ப சட்டென்று
மேகங்கள் உரசியதோ?
ஆயிரம் பூக்கள் நொடியில் மலர்ந்ததோ?
தேனருவி தழுவிச் செல்கிறதோ?
கொஞ்சும் நாதம் செவியில் உறைந்ததோ?
வென்பனி உருகி ஒடியதோ?
தலைசாய்த்து சிரித்த சிரிப்பில்
கலைந்து கரைந்து
குதித்தாடிய கவிதையை
என்னவென்று சொல்ல!?

Saturday, 12 October 2019