World Tamil Blog Aggregator Thendral: இன்று காலை தற்செயலாக சன் டி .வி சூரிய வணக்கம் பார்க்கநேர்ந்தது .

Tuesday, 21 January 2014

இன்று காலை தற்செயலாக சன் டி .வி சூரிய வணக்கம் பார்க்கநேர்ந்தது .சீனாவைச் சேர்ந்த பெண்ணுடன் நேர்காணல் அவர் பேசிய தமிழ் மழலையின் குரலாய் .....தமிழ் எத்தனை இனிமையானது  என்பதை  பிற நாட்டினர் பேசுகையில் தான் உணர முடியும் .பிறமொழி கலப்பின்றி தூய தமிழில் ...பேசினார் .

அவரிடம் தமிழில் எத்தனை எழுத்துக்கள் என கேள்வி கேட்கப் பட்டது .இரு நூற்று நாற்பத்தேழு என அழகாக யோசித்துக் கூறினார் .இதிலென்ன பிரச்சனை என கேட்கின்றீர்களா , பேட்டி எடுத்த பெண் சரியா சொல்லிட்டீங்களே! என அவரை பெருமை படுத்துவது போல் எனக்கு கூட தெரியாது எனகூறியதுதான் கொடுமை .
 தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழ் மொழியை உலகமெங்கும் பரப்புவதாக கூறும் தொலைக்காட்சியில் பணி புரியும் பெண் இப்படி கூறலாமா ?தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை கூட தெரியாமல் தமிழ் நிகழ்ச்சி நடத்தும் கொடுமை .....தலையெழுத்து.உலக நாடுகள் அனைத்தும் பார்த்து சிரிக்காதா ?சொல்லிட்டு சிரிப்பு வேற ...
அவர் சீன வானொலியில் பணியாற்றுபவர் போல ,அவர்கள் ஒலி பரப்பும் தமிழ் ஒளிபரப்பில் பிறமொழிச்சொற்கள் கலந்திருக்குமா?என்ற கேள்விக்கு உறுதியாக இல்லை என்று கூறுகையில் மகிழ்வாக இருந்தது .எங்களால முடியாதுப்பான்னு இவர்கள் சிரித்துக் கொண்டே ...தலையில் அடித்துக் கொண்டேன் ...
 .ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் இப்படித்தான் தன் தாய் மொழி பற்றிய அறிவின்றி தமிழ் நாட்டு சந்ததிகள் இருப்பார்கள் போலன்னு தாய்  மொழியை உயிராய் என்னும் உலக  மக்கள் நினைக்க தோன்றும் படியா பேசுவது ...?

அடுத்து முக்கிய கேள்வி இங்குள்ள ஆண்கள் அழகாக இருக்காங்களா ?அந்தப் பெண் கேள்வி புரியாமல் வேற ஏதோ சொல்ல மீண்டும் இதே கேள்வி கேட்க உங்க மனதிருப்திக்காக நீங்க அழகாக இருக்கீங்கன்னு கூறினார் .

ஏன்டா இதை பார்க்க நேர்ந்தது என வருத்தப் படுவதைத்  தவிர வேற என்ன செய்வது ...?

15 comments :

 1. உங்கள் வேதனை புரிகிறது கீதா. நானும் இதை உணர்ந்திருக்கிறேன் எங்கள் பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு ஒரு முறை கூறினார் அவரது நண்பர் வீட்டில் சாப்பிட நேர்ந்தபோது, “ சோறு போதும்” என்று இவர் சொன்னதைக் கேட்ட அவர் துணைவி, “இவர் என்ன தாழத்தப்படடவரா?” என்று கேட்டாராம்! சாதம் என்று சொன்னால் உயர்சாதி, சோறு என்று நல்ல தமிழில் சொன்னால் கீழ்ச்சாதி என்று நினைக்கும் தமிழர்கள். இதே போல என்வீட்டுக்கு சான்றொப்பம் பெற வந்த என் மாணவரின் தந்தை, என் வீட்டில் கடந்தநாள் காமராசர் விழா ஒன்றில் தந்த காமராசர் படத்தை வைத்திருந்ததைப் பார்த்துவிட்டு “நீங்க நாடாரா?” என்று கேட்டதை என்னால் மறக்க முடியவே இல்லை! காமராசர், அம்பேத்கர், பாரதி போன்றோரை நாம் நம் தலைவர்கள் என்று நினைததிருக்க எல்லாரையும் சாதி ரீதியாகவே பார்க்கும் தமிழர் உருப்படுவது என்றைக்கு? நல்ல பகிர்வு? தமிழரின் இந்த “அடிமைமோகம்” மாற உழைப்போம்.

  ReplyDelete
  Replies
  1. முயற்சிப்போம் தோழர் .நன்றி

   Delete
 2. உள்ளூர்க் கொடுமை..நாமே தவறு செய்வது...நாமே நம் மானத்தை வாங்கிக் கொள்வது!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி .நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி .நன்றிம்மா

   Delete
 3. இன்று தமிழர்கள் பலரும் தனக்கு தமிழ் தெரியாது என்று சொல்வதை ஏதோ தங்களைத் தாங்களே பெருமைப் படுத்திக் கொள்வதாய் எண்ணிக் கொள்கிறார்கள். என்ன செய்வது ?

  ReplyDelete
  Replies
  1. தமிழ் உணர்வை வளர்க்கவில்லை நாம் என்பதே உண்மை .நன்றி தோழர்

   Delete
 4. தமிழின் பெருமையை உணர்ந்தவர் அவர்.
  நமக்குத்தான் தமிழ் என்பது வியாபாரப் பொருளாகிவிட்டதே.

  ReplyDelete
  Replies
  1. உண்மை சார் .நன்றி

   Delete
 5. வணக்கம்

  இப்படிச் சென்றால் தமிழ் மொழியின் வளர்ச்சி 100% அடையும் போல தெரியுது...
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. களைகளை களைய முயற்சிப்போம் சார் .நன்றி

   Delete
 6. சிறு வயதிலிருந்தே தமிழின் அருமை பெருமைகளை சொல்லித் தர வேண்டுமே பெற்றோர்கள்...!

  ம்...

  ReplyDelete
  Replies
  1. பெற்றோர்கள் ஆங்கிலத்தில் பேசினால் தான் சிறப்பு என நினைப்பது தான் கொடுமை .நன்றி சார்

   Delete
 7. களைகளை களைய முயற்சி செய்வோம். இது நன்றாகத்தான் இருக்கிறது தோழி.
  நன்றி வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
 8. இந்த நிகழ்ச்சி பற்றி யாரோ முகநூலில் குறிப்பிட்டிருந்தார்கள். நானும் சிறிதுநேரம் பார்த்தேன். நேர்காணலை நடத்துபவர்களின் கேள்விகளையும் தமிழையும் தாங்கமுடியாமல் நிறுத்திவிட்டேன். சீனப்பெண்மணியை நேர்காண வேறு நல்ல திறமையாளர்களே இல்லாமல் போய்விட்டார்களே.. தமிழ்நாட்டுக்கும் தமிழர்களாகிய நமக்கும்தான் அவமானம். சிந்திக்கவைக்கும் பகிர்வுக்கு நன்றி கீதா.

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...