World Tamil Blog Aggregator Thendral: மனம் சுடும் தோட்டாக்கள் -கவிதை நூல் விமர்சனம்

Sunday 24 September 2017

மனம் சுடும் தோட்டாக்கள் -கவிதை நூல் விமர்சனம்

எனது நான்காவது நூலான மனம் சுடும் தோட்டாக்கள்.... கவிதை நூல் விமர்சனம்..
 கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களின் கவிதை நடையில்.. 
"வேலைக்குப்போகும்
ஒரு சராசரிப் பெண்ணால் என்னவெல்லாம்
 செய்திடமுடியும்..
 புதுப்புது சேலைகள்..
புருவம் சிரைத்தல்
 புரணிகள் பேசுதல். தொலைகாட்சித்தொடர்
செய்யும் லீலைகளுக்காய்
கண்ணீர் சிந்துதல்?
 ஒ
ஒருவேளை
நீங்கள்
 கொஞ்சம்
முற்போக்கானவரெனில்..
புத்தகங்கள் வாசிக்கலாம்..
அறிவார்ந்த
 விமர்சனங்கள்
செய்யலாம்.
ஆடைகளில்
கொஞ்சம்
ஆணுக்கான
சாயல் கொள்ளலாம்..
அரசியல் சார்ந்த
பிண்ணனி எனில் சமூகப்பொறுப்புகளை
சுமக்கலாம்..
இவற்றில்
எந்த சம்பந்தமும்
 இல்லாத
ஒரு அரசுப்பள்ளியின்
 ஆசிரியை
எத்தனை
கோணங்களில்
விஸ்வரூபமெடுத்து
 நிற்கிறார்..
நகரின்
புதிய கடையொன்றில்
 வாங்கியிருக்கும்
ஆடையோ
அணிமணியோ
காட்டுவதற்கென்றே
கூடும்
ஆசிரிய அலுவல்
 கூட்டங்களில்
 சம்பந்தமில்லாத
 புத்தகங்களை
இவர்
ஏன் புரட்டிக் கொண்டிருக்கிறார்... மொக்கை
நகைச்சுவைகளுக்கு
கைதட்டி ஆர்ப்பரிக்கும்
ஒரு கூட்டத்தில்
அமர்ந்திருக்கும்
விரல்விட்டு
எண்ணிவிடக்கூடிய
மகளிர் இடையில்
 இவர் என்ன
குறிப்பெடுப்பார்?
 ஜல்லிக்கட்டு
 போராட்டங்களின்
 ஒவ்வொரு
மாலையிலும்
 இவர் முழங்கிக்
கொண்டிருக்கிறார்..
சக தோழர்களின்
போராட்டங்களில்
 தன் சங்கத்தை மீறி
கைதாகிறார்..
மொட்டை
வெயிலடிக்கும்
 மைதானத்தில்
 ஏதோ எழுதிக்
 கொண்டிருக்கிறார்..
அது சூரியனைச்
 சுட்டெரிக்கும் கோஷங்களாக குரலுயர்த்துகிறது..
சக மனிதன்
 ஒருவன்
மரித்துப்போனதற்கு
மண்டியிட்டு
 ஏன் அழவேண்டும்..
இறந்தவன்
மறந்தவனான பின்னும்
அவன்
குடும்பத்திற்கு
தாயாய்
ஏன் இருக்கிறார்?
மாணவிகளின்
 புத்தகங்களை சரிபார்க்கும்
சக மனுஷிகளிடை
இவர்
 ஏன்
அவளின்
சாப்பாட்டுபெட்டியின்
 எடைகுறைவை
ஆராய்கிறார்.?
 இலக்கியக் கூட்டங்களா? ஆலோசனைக் கூட்டங்களா? இவருக்கான
இருக்கை
இருகை
 நீட்டி
எப்போதும் கிடக்கிறது..
யார் இவர்..
இவருக்கும்
இந்த இடங்களுக்கும்
என்ன தொடர்பு...
புத்தனைப்போல்
போதிமரம்
தேடியெல்லாம்
 போக வேண்டியதில்லை...
அவன்
சொன்னதைப்போல
இவர்
ஆசைப்படவும் இல்லை... பேராசைப்படும்
ஒரு..
மனிதம்
நேசிக்கும் மனுஷி..
அவ்வளவே..
புதுகையின்
 இன்னொரு
அடையாளமாகவே
மாறிவிட்டிருக்கும்
 ஒரு பெண் படைப்பாளர்..
போராளி..
சமூக செயற்பாட்டாளர்.
 இன்னும்
 இன்னுமாய்
 பன்முகம் காட்டும்
தேவதா தமிழ்...
பல பாத்திரங்களை
சுமந்தாலும்
கவிஞர் என்னும்
கனமான
வேலையை
மிக அழகாய்ச்
செய்வதில்
எப்போதும்
வென்றுவிடுகிறார்...
 முகநூல்
 பக்கங்களில்
 பதிவதை
 விருப்பக்குறி
இடுவதும்
 பகிர்வதும்
 எப்பவும்
 உள்ளதுதான்..
எனினும்
 இவர் பதிவுகள்
படைத்தவர்
 பெயரை மட்டும்
மாற்றிக்கொண்டு
 உலவுவதில்
உலக சாதனை
 செய்திருக்கிறது...
 வேலுநாச்சியை
வெறிகொண்டு
எழுதிய விரல்கள்
இவருக்கு
உரித்தானது..
தவிப்புகளை
 பதியும்
இவரின்
நூல்களுக்கு
தலைப்புகளும்
 கூடவே
 தவமிருப்பதாய்
 தெரிகிறது...
 ஒரு கோப்பை
 முழுக்க
என்ன வேண்டும்
 உங்களுக்கு..
 உங்கள்
 ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு
 ஆசைகள் இருக்கலாம்...
எனக்கு
 நல்ல காப்பி
என்பேன்...
ஆயின்
இவர்
 "ஒரு கோப்பை மனிதம்"
தந்திருக்கிறார். "
விழி தூவிய விதைகள்"
 இன்னொரு தலைப்பு...
மீண்டுமொரு
 கவிதை
 ஆயுதத்தை
தூக்கிவந்திருக்கும்
 தேவதா தமிழ்
 இந்தமுறை
மனங்களை சுட
தோட்டாக்கள்
தொடுத்திருக்கிறார்...
"மனம் சுடும் தோட்டாக்களை"
நாம்
புன்னகையுடனே
வாழ்த்தி
 அனுமதிக்கலாம்...
அழகிய வடிவமைப்பு..
நெய்வேலியின்
 காகிதம் பதிப்பகம்
 நிறைவாய்
செய்திருக்கிறது
 அச்சிடலை..
நூலின்
வரவேற்பறையாய்
அயலகச் சகோதரி
கிரேஸ் பிரதிபா
 அணிந்துரை
அழகூட்டி இருக்கிறார்...
 74 பக்கங்களில்
73 தலைப்புகளில்
கவிதைகள்
. நூலுக்கென
இல்லாமல்
 மனசைப் பிசையும்
 சம்பவங்களுக்கு
 வரிகளால்
அழுத
நாட்குறிப்புகளாய்
 கொட்டிக்கிடக்கிறது
 தோட்டாக் கவிதைகள்..
ஷர்மிளா,
 ஸ்வாதி
 அருணிமா
 என
அலங்கோலப்பட்ட
 பெயர்களை
 தலைப்பாக்கி
தவிப்புகள்
சொல்லும் போது
அழும்
இவரது கவிதைகள்...
குட்டிம்மா
சின்ன கண்ணம்மா
என
சிற்றாடை கட்டி
 ஊஞ்சலாடுகிறது...
மாரியம்மாவும்
 இவர்
கவிதைக்கன்னியில் மின்னியிருக்கிறாள்.. ஞானக்கூத்தனுக்கும்
 கலாமுக்குமென
 விரிகிறது
கவிதைகள்...
இப்போதைய
பெரும்பாலான
கவிஞர்களைப்
போலவே
புதிய
வார்த்தைகளுக்கான
 மெனக்கெடல்
அதிகம்
தென்படாவிட்டாலும்
வசப்பட்ட
வார்த்தைகளை
வாசப்படுத்தியிருக்கும்
 லாவகம்
 பாராட்டுக்குரியது..
 உலகில்
இனி
காகிதங்களுக்கு
 ஏதேனும்
 தட்டுப்பாடு
 வந்து விடுமோ
 என்ற
தீர்க்க தரிசனத்தில்
 அட்டைகளை
தவிர்த்து
 அடைத்து வைத்திருக்கும்
கவிதைகள்
அவதிப்படுவது புரிகிறது..
இப்படியும் சொல்லலாம்...
கவிதைகளின்
அடர்த்தி போலவே
 அவை
அமர்ந்திருக்கும்
இடமும்
அடர்த்தியாய்
இருக்கிறது.
. வீதியில்
 ஊரில்
 மாவட்டத்தில்
 மாநிலத்தில்
தேசத்தில்
 உலகில்
எங்கெல்லாம்
பெண்
 பேசு பொருளாகும்
அவலங்கள் நிகழ்கிறதோ அப்போதெல்லாம்
நெஞ்சை நிமிர்த்தி
இவர் பேனா
தலைகுனிந்து
விடுகிறது..
புயலாய்ச்
 சீறும் கவிதைகள்
அதிகமிருக்கும்
 பாலைவனச்சூட்டில்
சோலையென
 தலைகாட்டி
 விடுகிறாள்
 சின்னக்கண்ணம்மா..
கவிஞர்
நல்ல தாயை தாண்டி
 பாட்டியான
 பரிணாம வளர்ச்சியில்
தெரியும் மகிழ்ச்சி..
 நமக்கும்...
 மேம்போக்காகவே
நகரும்
அறிமுகத்தை
கொஞ்சம்
கவிதைகளின்
பக்கமும் நாம்
 திருப்பலாம்..
 ஒரு படைப்பாளிக்கும்
 படிப்பவனுக்கும்
பெரிய வித்தியாசம்
இல்லைதான்...
படிப்பவன்
அநேகமாச்
சொல்வது
 இதுவாய்த்தான்
 இருந்திருக்கும்
நான் நினைச்சேன்
 இவர்
சொல்லிவிட்டார்...
இந்தக் கவிதையும்
 அப்படித்தான்...
 "பார்க்காமலே
பேசாமலே
பழகாமலே
பிரியாமலே
வருந்தாமலே
வாழாமலே
சிறகென
மிதந்திருக்கலாம்"
இப்படி ஒரு வரிகளை
 நீங்கள்
நினைத்துக் கொண்டே
இருங்கள்..
இவர் எழுதிவிட்டார்...
தொகுப்பு முழுவதும்
வாசிக்கையில்
ஒட்டிக்கொள்ளும்
கவிதைகளை
 தட்டிவிட முடியாதது
விந்தைதான்..
கவிதைகளை
கவிஞனின்
இதயத்தோடு
 வாசிப்பீர்கள்
எனில்
நாமும் பறக்கலாம்..
 புதுவையில் புதுமுகமும்
புதுகையில் அறிமுகமும்
 கண்ட
 "மனம் சுடும் தோட்டாக்கள்"
என்னும்
 இந்நூலை
வாசிப்புக்கென
 எடுத்து
சிறுக
என் புரிதலை
 பகிர்ந்திருக்கின்றேன்..
இந்தப்பெண்
போற்றுதலுக்கு
உரியவர்...
உணவிடும்
பெண்ணினினும்
உணர்வூட்டும் தாய்மை
 பாராட்டவும்
சீராட்டவும்
 படவேண்டியது...
மீண்டும் மீண்டும்
 புத்தகத்தின்
 பக்கங்களில்
மூழ்கும்போது
 புதுப்புது அர்த்தங்கள்.
காலமும்
வாய்ப்பும்
கைகூடுமெனில்
பின்னொரு நாளில்
இந்த நூலை
 நானே
புதிய கோணத்தில்
பார்த்ததை
 சொல்லலாம்...
இப்போது
 இவரின்
ஒற்றைக் கவிதையோடு
அறிமுகம் முடிக்கலாம்...
 "நிலம் பார்க்க நடந்தவளே..
 விண்ணில் நடை பயின்றாள்..
இமையம் தன் காலடியிலென அறைகூவினாள்.
காலெனப் பறக்கின்றாள்
காமுகர்களின் மத்தியில்..
கட்டிவைத்த மடமைகளை
காட்டுத்தீயாய் கருகிடச் செய்தாள்.. எதையும் துணிவாய் முடிக்கின்றாள் எள்ளியவர்களின் வாயடைத்து..
சந்ததி வளர்த்திடும் சக்தியானவள். சரித்திரம் படைக்கவே புறப்பட்டாள்.. சாத்திர சகதியை துடைக்கவே
சங்கென முழங்கி உயர்ந்திட்டாள்.. இனியவள் பாதை தெளிவாக
இனிதே புன்னகை புரிந்திட்டாள்.. தன்னோடு
தம்மின் குடும்பத்தையும்
தரணியே
புகழச் செய்திட்டாள்""
தலைப்பு
இக்கவிதைக்கு
பாரதி கண்ட
புதுமைப்பெண்...
 நன்றி வணக்கம்.. " ‌.

1 comment :

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...