World Tamil Blog Aggregator Thendral: மாதவம் செய்தவர்கள்

Tuesday, 20 September 2016

மாதவம் செய்தவர்கள்

படிக்கும் பருவத்தில் பள்ளியில்
பதற்றமாய் இருக்கும்
வழியின்றி அருவருப்பின் உச்சத்தில்
சென்று மீள்வோம்..

பணியிடத்தில் அதற்கென்று இடமே
பார்த்திராத பொழுது மறைவிடங்கள்
நாடுவோம்..

பயணத்தில் படக்கென்று இறங்கி போகமுடியாது
பரிதவித்து அடக்கியிருப்போம்...
அதற்காக உள்ளே எதுவும் இறக்காது
ஆற்றுப்படுத்துவோம்...வயிறை...

நகரங்கள் கிராமங்கள்
எல்லாமே மாறுதலின்றி
ஒரே நிலைதான்....என்ன

கிராமங்கள் மறைவிடம்
கொடுக்கும்...

காலங்கள் மாறவில்லை
முப்பது வருடங்களாகியும்
என் சந்ததியும் அலைகின்றனர்..
எப்போதும் வீட்டுக்குள் அவசரமாய்த்தான்
நுழைவோம்...

இப்போதும் கூட்டங்களுக்குச் செல்லுகையில்
இருக்குமாவென சந்தேகத்தோடு சென்று
இல்லாது அலைவோம்...

மாதவம் செய்து பிறந்த பெண்கள்
நாங்கள்...


12 comments :

  1. த.ம.-1 வேறென்ன சொல்ல? அ.வெண்ணிலா கவிதையும், இது தொடர்பாக அவர் எழுதிய கதையொன்றும் நினைவில் வருகிறது. அம்பையின் “அம்மா ஒரு கொலை செய்தாள்” நினைவிலிருக்கிறதா? மறக்க முடியாத அந்தக் கேள்வி -“உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்? இதுவேற இனிமே ஒரு பாரம்” சுளீரென்ற
    கேள்வி. இதுபோலும் கதை, உங்களுடையதைப் போலும் கவிதைகளையெல்லாம் நம் பிள்ளைகளை, குறிப்பாக இளம்பருவத்து ஆண்பிள்ளைகளைப் படிக்கச் சொல்ல வேண்டும். உங்கள் கோணத்திலிருந்து மாற்றி, பொதுப்படையாக்கி இருந்தால் இன்னும் சொற்களில் கூர்மை கூடியிருக்குமென்று தோன்றுகிறதும்மா.

    ReplyDelete
  2. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் இதுபோன்ற அவஸ்தைகளைக் கேட்கவே மிகவும் சங்கடமாகத்தான் உள்ளது. காலம் மாறத்தான் வேண்டும். கவலைகள் தீரத்தான் வேண்டும்.

    அரசாங்கம் மட்டுமல்லாமல், கோடிக்கணக்காக இலாபம் ஈட்டும் சில மிகப்பெரிய நிறுவனங்களும், வங்கிகளும் சேர்ந்து சமூக சேவையாக நினைத்து மனது வைத்தால், ஓர் விளம்பரமாகவே இதனை ஆங்காங்கே எடுத்துச் செய்தால், இந்தப்பிரச்சனைக்கு ஓரளவுக்கு தீர்வு காண முடியும்.

    ’மாதவம் செய்தவர்கள்’ என்ற கிண்டலான தலைப்புக்கும், அவசர ஆத்திரத்தைப் பற்றி எழுதியுள்ள சமூக அக்கறைகொண்ட கவிதைக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  3. வீட்டுக்கு வீடு இலவசம் கொடுத்து வரும் அரசாங்கம் அதை நிறுத்திவிட்டு தெருவிற்கு தெரு அல்லது குறிப்பிட்ட பரப்பளவில் அல்லது மக்கள் கூடும் இடங்களில் சுத்தமான பொது கழிப்பறைகளை கட்டிக் கொடுக்க வேண்டும். கண்டிப்பாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கண்டிப்பாக சுத்தமான பொது கழிப்பறைகள் இருக்க வசதிகள் செய்து தர வேண்டும் தமிழகத்தை ஒரு பெண் முதல்வர் ஆண்டுக் கொண்டிருந்த போதிலும் பெண்களின் இந்த் கஷ்டங்களை உணராமல் இருக்க்கும் இந்த முதல்வரின் மீது இந்த விஷயத்தில் எனக்கு மிக அதிக கோபமே

    ReplyDelete
  4. சொல்ல வந்த விஷயத்தை மிக அழகாக சொல்லியவிதத்திற்காக உங்களுக்கு எனது பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. படிக்க தவறவிடக் கூடாத இணையப்பதிவுகள் http://avargal-unmaigal.blogspot.com/2016/09/good-thoughts.html

    ReplyDelete
  6. இந்த கொடுமை இன்னும் தொடர்வது சோகம்! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வேதனைதான். எப்போது இதற்கு முடிவு வருமோ?

    ReplyDelete
  8. வேதனை. சமீபத்துத் தமிழகப் பயணத்தில் சென்னை விமான நிலையத்தில் கூட இப்படி அவதிப்பட்ட சம்பவம் நடந்தது. அரசுக்கு இந்த விஷயங்களில் அக்கறை இல்லை - சம்பாதிக்க வழிகள் தேடுபவர்கள் - என்னத்த சொல்ல....

    ReplyDelete
  9. மிக மிக அருமையான கவிதை அதுவும் பெண்களின் துயரத்தைச் சொல்லும் கவிதை அருமை அருமை...வேதனை மிக்க வரிகள். பல இடங்களில் பெண்கள் அவதிப்படுவதைக் காண நேரிடுகிறது. குறிப்பாகப் பயணம் செய்யும் நேரங்களில்...சொல்ல முடியாத வேதனைகள்..என்ன சொல்ல என்று தெரியாத அளவிற்கு வேதனை

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...