World Tamil Blog Aggregator Thendral: அக்னிக்குஞ்சை வகுப்பில் விட்டுவந்துள்ளேன்.

Friday, 2 September 2016

அக்னிக்குஞ்சை வகுப்பில் விட்டுவந்துள்ளேன்.

அக்னிக்குஞ்சை வகுப்பில் விட்டுவந்துள்ளேன்.
-----------------------------------------------------------------------------

                               இன்று எம்பள்ளி பதினொன்றாம் வகுப்பு மாணவிகளுக்கு கவுன்சிலிங் தர எண்ணி கூறிய போது கணித ஆசிரியர் தனது இரண்டு பிரிவேளையைத் தருகிறேன் நீங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள் என்று தந்தார்.

 மாலை இடைவேளை முடிந்ததும் மாணவிகளைப்பார்த்த போது அத்தனை உற்சாகத்துடன் வரவேற்றனர்...

சிறு குழந்தைகளாய் ஆறாம் வகுப்பில் என்னிடம் படித்த குழந்தைகளின் வளர்ச்சியை கண்முன் பார்க்கிறேன்.

 ஏன் நான் உங்களிடம் பேச விரும்புகிறேன் தெரியுமா என்ற போது ஆர்வமாய் என்னை பார்த்தனர்.

 ஏன்னா நாங்க உங்களுக்கு இந்த சமுதாயத்தில் எப்படி வாழ்வதுன்னு சொல்லித்தராத பாடங்களைத்தான் இத்தனை வருடங்களாக நடத்தியுள்ளோம். அதனால் தான் இன்று உன்முன் நான் வந்து நிற்கிறேன்..இன்று நான் உன்னுடைய சக மனுஷியாய் வந்துள்ளேன்...என்றேன்.

 சக மனிதர்களை நாம் எப்படி நடத்துகின்றோம்? ஏன் வீட்டில் அம்மாவையே நாம் சக மனுஷியாய் பார்க்கிறோமா எனக்கேட்டு..அவர் செய்யும் வேலைகளைப்பட்டியலிடுங்கள் என்றேன்...வரிசையாய் சொன்னார்கள்..

இவ்ளோ வேலைகளை தன்குடும்பத்திற்காக செய்யும் அவளை நாம் எப்படி மதிக்கின்றோம் என்றேன் குற்ற உணர்வோடு...அதெல்லாம் அவங்க வேலைதானேம்மா என்றனர்..

 நாளை நீயும் ஒரு அம்மாவாகப்போகின்றாயே அப்போதும் இப்படி சொல்வியான்னு கேட்டப்ப...ஆத்தாடி இவ்ளோ வேலை செய்யனும்மான்னு கேட்டார்கள்.

 ஒரு அம்மாவாய் நாங்க தவறு செய்கின்றோம்மா..ஆண் பிள்ளை பணி, பெண் பிள்ளை பணி என்று பிரிக்கும் போதே இருவரும் ஒருவருக்கொருவர் மதிக்காத தன்மையை உருவாக்கி விடுகின்றோம். 

வேலைகளைப்பாகுபாடின்றி இருவருக்கும் கொடுத்திருக்க வேண்டும்மா..இன்று அக்கா செய்யும் வேலையை மறுநாள் தம்பி செய்ய வேண்டும் என்றும் ,இன்று தம்பி செய்யும் வேலையை மறுநாள் அக்கா செய்ய வேண்டும் என்றும் வளர்த்திருந்தால் ஒருவரின் பணிச்சுமை மற்றவருக்கு தெரிந்திருக்கும்...

அதன் விளைவாக ஒருவரையொருவர் மதித்திருக்கவும் கூடும் ஆனால் வீட்டிலேயே துவங்குவதன் விளைவு இன்று பெண்ணின் நிலை தனக்கென ஒரு சுயக்கருத்து கூட இல்லாமல் வளர்கின்ற நிலை.

 சமூகமும் திரைப்படங்களும் ,தகவல் தொடர்பு சாதனங்களும் ஆண்குழந்தைகளைப்படிக்காமல் பெண்கள் பின்னால் சுற்றுவதையே முக்கியமாக சொல்லிக்கொடுப்பது மட்டுமின்றி எல்லாவித தீய செயல்களுக்கும் அடிகோல்கின்றது.விளைவு படிக்கிறதை விட்டுவிட்டு மூலைக்கு மூலை பெண்ணைத்தேடி அலைகின்றான்.

 தனக்கு கிடைக்காத எதுவும் மற்றவருக்கு கிடைக்கக்கூடாதென்ற ஆணாதிக்கச்சிந்தனையின் விளைவு இன்று பெண்கள் தவறு செய்யாத சூழ்நிலையிலும் தங்களின் உயிரை இழக்கின்றனர்.

 பெண்களையோ அவளுக்கும் சமூகத்திற்கும் தொடர்பற்றவளாகவே காட்டி ...அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க கற்றுத்தருகின்றது...

 நம்மை எப்படி மற்றவர்கள் மதிக்க வேண்டும்.அழகு காரணம் காட்டியோ ,ஆடை காரணமாகவோ அல்லம்மா.

நம் பொதுஅறிவைப்பார்த்து வியந்து, நமது சமூக பங்களிப்புகளை பார்த்து நம்மை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். 

பெண்களுக்குத்தேவையான சட்டங்களை இயற்ற பெண்கள் அதிக அளவில்...அரசியலில் ஈடுபட வேண்டும்..சமூகம் சார்ந்த செயல்களில் பெண்கள் ஈடுபடுவது நமது கடமை..என்றேன் .

விழிகள் விரிய உணர்வுகளின் கொந்தளிப்பில் மாணவிகளின் முகம் அடிக்கடி மாறியது,...தங்களின் தவறுகளை உணர்ந்த நிலையையும் கண்டேன்.

 நம்மை நாம் தான் செதுக்க வேண்டும் ..அம்மா,அப்பா,ஆசிரியர் ஆகியோரை விட உனக்கு நீயே கட்டுப்பாடுகளை விதி...உன் வளர்ச்சி நோக்கியே உன் பாதை செல்லட்டும்...எப்போதும் நேர்மறைச்சிந்தனைகளோடே இரு... பெண்களை நாமே தூற்றக்கூடாது, அவர்கள் தவறு செய்தால் வழிநடத்தும் பொறுப்பு உனக்கு உண்டு... என்று உணர்த்தினேன்.

 அக்னிக்குஞ்சை வகுப்பில் விட்டு வந்துள்ளேன்...நிச்சயம் சில மாணவிகளாவது சமூக அக்கறையோடு நடப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

11 comments :

  1. மிகவும் அருமையான கவுன்சிலிங் கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அக்னி குஞ்சை வகுப்பில் விட்டு வந்திருக்கிறீர்கள்...
    கண்டிப்பாக மாணவிகள் சமூக அக்கறையோடு நடப்பார்கள்... நடக்க முயற்சிப்பார்கள் அக்கா...

    ReplyDelete
  3. "பெண்களுக்குத்தேவையான சட்டங்களை இயற்ற பெண்கள் அதிக அளவில்...அரசியலில் ஈடுபட வேண்டும்..சமூகம் சார்ந்த செயல்களில் பெண்கள் ஈடுபடுவது நமது கடமை" - அப்படிப் போடு! இது அல்லவா சரியான சமூகப்பாடம்! சரியான இடத்தில்தான் விதைத்திருக்கிறீர்கள்!

    ReplyDelete
  4. அருமையான கருத்தூட்டம் அளவாகத்தான் தந்திருக்கிறீர்கள். இன்னும் பாலின சமத்துவம் மறந்து ,மகளிரை வெறும் விளம்பரப் பொருளாகவும், கவர்ச்சிக்காகவும், ஆண்களின் போகப்பொருளாகவும் சித்தரிக்கும் வெள்ளித்திரை, சின்னத்திரை, இணையதள சமூக வலைத்தளங்களின் அன்முறைக் காட்சிகளையும், பாலுணர்வைத் தூண்டும் பாடல்களையும் புறக்கணிக்க இந்த பதின்ம வயது பெண்களுக்கு உணர்த்த வேண்டிய கடமையும் நமக்குள்ளதம்மா. அடுத்தடுத்த வாய்ப்புகளில் அவர்களோடு பேசும்போது அவற்றையும் வலியுறுத்துவீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  5. அருமையான பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  6. அருமையான விஷயம். அவ்வப்போது இந்த மாதிரி பேசுங்கள். நல்லதொரு தொடக்கமாக இருக்கட்டும்.

    ReplyDelete
  7. நல்லதொரு முயற்சி. கவுன்சிலிங் இருபாலருக்கும் கொடுக்கப் படவேண்டும் என்பது என் எண்ணம். முக்கியமாக ஆண்பிள்ளைகளுக்கு. ஒரு நல்ல சமூகம் வீட்டினில் ஆரம்பிக்கிறது.
    விஜயன்

    ReplyDelete
  8. நல்லதொரு கவுன்சிலிங்! தொடர்க!

    ReplyDelete
  9. விஜய் சேதுபதி நடித்து இருந்தால் ரஜினி நடித்த கபாலி படம் மாதிரி குப்பை படம் ஆகமால்,தர்மதுரை மாதிரி நல்ல படம்மாக இருந்திருக்கும்!

    விஜய சேதுபேதி ரஜினியை விட நூறு மடங்கு இயல்பு தமிழில் (அட! தூய தமிழில்!) நடித்த நடிக்கும் நல்ல நடிகர்!

    ReplyDelete
  10. அக்கினிக் குஞ்சையல்ல ,
    ஆழமாய் விதைத்துவிட்டு வந்திருக்கிறீர்கள் .
    வெந்து தணிய வேண்டாம்.
    விளைந்து தழைக்கட்டும் .

    வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...