World Tamil Blog Aggregator Thendral: யானை டாக்டர்

Saturday 30 November 2013

யானை டாக்டர்

அறம் தொடர்ச்சியாக--யானை டாக்டர்..

யானை டாக்டரை சொல்லாமல் விட்டது,ஏதோ குறையான உணர்வு எழுதத்தூண்டியது என்னை.என்னை பாதித்த யானை டாக்டரை பதிவு செய்ய எண்ணி  தொடர்கிறேன்.


ஆண்டுக்கு ஒருமுறை யானைகளை முதுமலைக்கு புத்துணர்ச்சிக்காக முகாமிற்கு அழைத்து வருவார்கள்.அரசின் இந்த திட்டத்திற்கு பலரும் பல கருத்துக்களைக் கூறுவதை கேட்டிருக்கிறேன் .ஆனால் இக்கதையை படித்த உடன் உளவியல் நோக்கில் அந்த முகாம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்கிறேன்.

யானை டாக்டரை அறிமுகப்படுத்தும் போது அவர் யானைக்கு பிரேதப் பரிசோதனையில் இருக்கின்றார்.சேறுகுழி போல் புழுக்கள் நெளியும் யானையை சோதனை செய்தபடி, அவர் மேல் ஊரும் புழுக்களைச் தட்டி உதிர்த்தபடி இதை பார்த்த இக்கதையை கூறும் “நான்” (ஜெயமோகன்
என  நினைக்கின்றேன்) என்ற பாத்திரம் இந்நிகழ்வைக்காணமுடியாமல் ,துர்நாற்றத்தை சகிக்க முடியாமல் புறப்பட்ட இடத்திற்கே வந்து விடுகின்றார்.இவர் வனத்துறை அதிகாரி.
அதே நினைவில்  பார்க்கும் இடமெல்லாம் புழுக்களாய்          தெரிகின்றது,காப்பி,சிகரெட் கூட புழுக்களாய்.. அருவருப்பின் எல்லையில் இவர்.புழுக்கள் நிறைந்த உலகமாகி இவரை சாவின் உச்சியை தொட வைக்கிறது.
இவரே யானை டாக்டரால் பிறகு புழுக்களை ஒரு தவழ்ந்து செல்லும் கைக்குழந்தையாகக் கண்டு மகிழும் மன நிலையை அடைகின்றார்.

யானை டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி வனத்துறையின் மிருகடாக்டராக 30 வருடங்களுக்கு முன்னால் வந்தவர்.பின் யானைகளுக்குரிய சிறப்பு டாக்டராக மாறிஉள்ளார் .உலகத்தின் பல நாடுகளில் உள்ள யானைகளுக்கு மருத்துவ ஆலோசகர் இவரே.
யானைகள் குறித்து இவர் எழுதியுள்ள நூலே கையேடாக இன்று பயன்பாட்டில் உள்ளது.1000 யானைகளுக்கு மேல் அறுவை சிகிச்சை,300 யானைகளுக்கு மேல் பிரசவம்,நூற்றுக்கணக்கில் யானை சடலங்களுக்கு சவப்பரிசோதனை, யானையின் உடலுக்குள் உலோக எலும்புகளைப் பொருத்துவது என யானையோடு யானையாய் வாழ்கின்றார். யானைக்கே மருந்து கொடுக்கும் அவரிடம் மிக மரியாதையுடனும் பாசத்துடனும் அப்பகுதி மக்கள் நடக்கின்றனர்.மக்களுக்கும் அவரே மருத்துவமும் பார்க்கின்றார்.
வனத்துறை அதிகாரியும் மருத்துவம் வேண்டியே அவரிடம் பின் ஒருநாள் செல்கின்றார்.

.யானைகள் இவரிடம் அளவற்ற பாசத்துடனும் நம்பிக்கையுடனும் பழகுகின்றன.

“உயிர் போற வலி இருந்தாலும் யானை அலறாது.துடிக்காது.கண் மட்டும் நல்லா சுருங்கி இருக்கும்.யானை சம்மதிச்சா அதுக்கு மயக்க மருந்தே குடுக்காம சர்ஜரி பண்ணலாம்.அந்த அளவு பொறுமையா ஒத்துக்கிட்டு நிற்கும்”என்றடாக்டரின் கருத்து யானை மேல் மிகப் பெரிய வியப்பைத் தருகிறது.புழுவைப் பார்த்து இவர் அருவருத்தற்கு,
 டாக்டர் ”வண்டு பாக்குறீங்கள்ல அந்த வண்டு பெரிய ஆள். புழு கைக்குழந்தை .கைக்குழந்தை மேல் என்ன அருவருப்பு”  எனக் கூறும் போது நானும் புழுவை இப்போது ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.

யானை மட்டுமல்ல காட்டில் உள்ள அனைத்து விலங்குகளும் இவரைப் புரிந்து கொள்கின்றன.

காட்டிற்கு செல்லும் மனிதர்கள் குடித்து விட்டு தூக்கி எறியும் மது பாட்டிலே யானைக்கு மிகப் பெரிய ஆபத்தாகின்றது.மகத்தான எடையுள்ள அதன் கால்களில் குத்துகின்ற பாட்டிலே யானையின் கால்களை சிதைத்து சீழ் வடிய வைத்து எமனாகின்றது.யானையின் சாவைப் பற்றி படிக்கும் பொது மனிதனின் செயல்களில் வெறுப்பு படிவதைத் தடுக்க முடியவில்லை.

முதுமலையில் ஒரு யானைக்கு கால்வீங்கியதைக் குணப்படுத்த செல்வதை படிக்கும் போது அக்காட்சி கண்முன் நிழலாடுகின்றது.யானைக் கூட்டம் முதலில் டாக்டரை ஏற்றுக் கொள்வது நம்மையே ஏற்றுக்கொள்வதுபோல் ஒரு மகிழ்வு மனதில் தோன்றுகிறது.

டாக்டருக்கு பத்மஸ்ரீ விருது வாங்கி கொடுக்க முயற்சிக்க அவரோ அதை அலட்சியப் படுத்தி மறுக்கின்றார் . வியக்காமல் இருக்க முடியவில்லை .இப்படியும் ஒரு மனிதரா என்று?
மனிதர் வாழ்க்கைக்கும் காட்டில் மிருகங்களின் இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கூறும் போது..சே என்ன வாழ்க்கை நம்முடையது என்ற எண்ணம் இயல்பாய் எழுகின்றது.
”யானை காட்டின் அரசன் ,அவனை போர்ட்டராவும் .பிச்சைக்காரனாவும் வச்சுருக்கிறது மனித குலத்திற்கே அவமானமென்கிறார்”கோயில் யானைகள் பற்றி அவர் கூறும் கருத்து மறுக்க முடியாத ஒன்றாக உள்ளது .
டாப்சிலிப்பில் வாழும் அவரிடம் தன் காலில் பீர்புட்டியால் ஏற்பட்ட காயத்தைக் காட்ட முதுமலையில் இருந்து ஏறத்தாழ முந்நூறு கிலோமீட்டர் தூரம் கடந்து யானைக்குட்டி  தேடிவருவது நம்ப இயலாத உண்மை.

மொத்தத்தில் யானை மீது தனிப்பட்ட பாசத்தையும் ,யானைடாக்டர் மீது அளப்பரிய மதிப்பையும் இந்த யானைடாக்டர் கதை உருவாக்குவதை யாராலும் தடுக்க முடியாது .


15 comments :

  1. மனிதாபிமானம், பாசம், உண்மையான சேவை எல்லாம் இங்கு புலப்படுகிறது. மனித வாழ்வில் காண்பது மிகவும் அரிது சுய நலம் தான் மிகுந்து தெரிகிறது. பகிர்வுக்கு நன்றி ....! தொடரட்டும் ....! வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  2. இப்படியும் ஒரு மனிதரா...?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் யானைக்காகவே தன்னை அர்ப்பணித்த மாமனிதர்.

      Delete
  3. மிகவும் சிறப்பான விளக்கங்கள் + பகிர்வு... & தகவல்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. சகோதரிக்கு வணக்கம்
    அருமையான ஒரு புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி. ஒரு நூலை உள்வாங்கி படித்ததன் விளைவாக வந்த பகிர்வுகள் அற்புதம். நாம் வாசிக்கும் பல புத்தகங்களில் சில நம்முள் சுவாசமாய் உள்ளே சென்று வாசமாய் பிரசவிக்கச் செய்வதில் அறமும் ஒன்று என்று தோணுகிறது எனக்கு. பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை சகோ .அதைப்படிக்கும் போது நான் இந்த உலகில் இல்லை என்பது உண்மை.நன்றி

      Delete
  5. படிக்க வேண்டுமென்ற ஆவலை அதிகரிக்கின்றது உங்கள் விமர்சனம்.

    மனிதாபிமானம் என்பது எல்லா ஜீவராசிகளிடமும் இருப்பது அவசியம். மிக மிக அருமை!

    பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் தோழி!

    ReplyDelete
  6. இப்படியும் ஒரு மனிதரா, வியந்து போனேன்.
    வாழ்த்துக்கள்.
    நூல் எந்த பதிப்பகத்தார் வெளியீடு என்று தெரிவிப்பீர்களேயானால் வாங்கிப் படிக்க உதவியாக இருக்கும்

    ReplyDelete
  7. இப்படியும் ஒரு மனிதரா. வியப்பாக இருக்கின்றது.
    அவருக்கு வாழ்த்துக்கள்.
    நூல் எந்த பதிப்பக வெளியீடு என்று தெரிவிப்பீர்களேயானால்
    வாங்கிப் படிக்க உதவியாகஇருக்கும்

    ReplyDelete
    Replies
    1. நன்றிசார்.வம்சி பதிப்பகம்,19,டி.எம்,சாரோன்.திருவண்ணாமலை,செல்,9444867023,041750-251468

      Delete
  8. நெகிழவைக்கிற மனிதர் பற்றி நெகிழவைக்கும் எழுத்து. புழுக்கள் என்றாலே அருவறுப்புடன் ஒதுங்கும் எனக்கு இப்புத்தகத்தை வாசிக்கும் மனோதிடம் விரைவில் வரவேண்டும். நன்றி கீதா.

    ReplyDelete
  9. அவசியம் படியுங்கள் .நல்ல நூல் நம் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் நூல்.புழுக்களை கைக்குழந்தையாக நினைக்க ஆரம்பித்து விட்டால்,எல்லா உயிர்களையும் நேசிக்க ஆரம்பித்து விடுவோம்.நன்றி தோழி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...