World Tamil Blog Aggregator Thendral: வீதி கலை இலக்கியக்களம்-37

Tuesday, 28 March 2017

வீதி கலை இலக்கியக்களம்-37

                            வீதி கலை இலக்கியக்களம்
                                கூட்டம்-37

இன்று புதுகை ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரியில் வீதி கலை இலக்கியக்களத்தின் 37 ஆவது கூட்டம் மிகச்சிறப்பாக நடந்தது.

நிகழ்விற்கு முன்னதாக கவிஞர் அன்னக்கொடி அவர்கள் வீதியைப்பற்றி எழுதிய கடிதத்தினை கவிஞர் சோலச்சி வாசித்து காட்டினார்.


கவிஞர் கீதா அண்மையில் வாசித்த “நிழலற்ற பெருவெளி” என்ற எழுத்தாளர் அர்ஷியாவின் மொழிபெயர்ப்பு நூல் குறித்தும்,”நிசப்தம்” திரைப்படம் குறித்தும் அறிமுகம் செய்தார்.

வரவேற்புரை:கவிஞர் நீலா..

ஒவ்வொருவரையும் அவர் அறிந்த விதத்தினைக்கூறி  வரவேற்ற விதம் அருமை.அஞ்சலி:மறைந்த முது பெரும் எழுத்தாளர் அசோகமித்ரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தலைமை :திருமிகு .ஜெயா
                 உதவி தொடக்கக்கல்வி அலுவலர் .திருச்சி

மிக அழகாக முதன்முதலில் சிகரம் தொட்ட பெண்ணின் உணர்வுகளை காட்சிப்படுத்தினார்.”பேசாத நாட்கள் வாழாத நாட்கள்” ,சிறந்த பேச்சாளர் என்பவர்...கவனமாக கேட்பவராக இருப்பார்” என்று கூறி அனைவரது கவனத்தை தனக்கே உரிய கவித்துவமான நடையில் பேசி கவர்ந்தார்.

மாணவி உரை :


மாவட்ட அளவில் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு  முதல் பரிசு பெற்ற கவிஞர் மாலதியின் சமத்துவபுரம் ஊ.ஒ.து.பள்ளியைச்சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி செல்வி சுபஸ்ரீ பெண்களின் நிலை,அவர்களின் அறியாமை,வறுமை குறித்து மிகச்சிறப்பாக பேசி அசத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

நூல் விமர்சனம்:கவிஞர் ராசி .பன்னீர்செல்வம்

                                       கவிஞர் மீரா.செல்வகுமாரின் முதல் கவிதை நூலான”சின்னவள்” என்ற கவிதை நூலை மிக அருமையாக விமர்சனம் செய்தார்.வாசகன் மனதில் அமர்ந்து கொள்ளும் கவிதையே வெற்றி பெறும்.

             ஸ்பீல்பெர்க்கின் கதையில், கதையைக்கூறும் பாத்திரம் கதையின் நடுவே காணப்படுவது போல சின்னவள் நம் தோள் மீது அமர்ந்து கொள்கின்றாள்.நம்முடன் சண்டையிட்டு கோபித்துக்கொள்கின்றாள்.கண்முன் விளையாட்டுக்காட்டி மகிழ்விக்கின்றாள்.

கவிதையின் வெளிப்பாட்டுத்தன்மையை இருவகையாகக்கொள்ளலாம்...எலிமெண்ட்ரி என்பது எளிமையின் துவக்கமாகவும்,சிம்ப்ளிசிட்டி என்பது எளிமையின் உச்சமாகவும் கொள்ளலாம்...

மொழியின் இலக்கியக்கூறுகள் கொண்ட கவிதைகள் இருக்க,மொழியைக்கடத்த முடியாத போது மட்டும் இலக்கியக்கூறுகளை பயன்படுத்தி எளிமையின் உச்சத்தை தொடுவது தான் எழுத்தின் ஆகச்சிறந்த நிலையாகும்.

கவிஞர் ,தந்தையின் நிலையில் இருந்து படைப்பாளியாகப்பரிணமிப்பதால்...”சின்னவள்”எளிமையின் உச்சத்தை தொட்டு  பிரமாண்டமாகின்றாள்.

                                சின்னவள் சுற்றுலா சென்றிருந்த காலத்தில் வீட்டின் தூய்மை ...அவளது இல்லாமை துன்பத்தை அதிகரிக்க
                 
                   ”கத்தி தீர்த்து விட்டு/கலைத்து போட்டேன்”

என்ற சொல்லாடல் சிறப்பு.நம்மை சமுதாயத்திற்காக உருவாக்குபவர்கள் நமது குழந்தைகள் தான்.இவரது கவிதைகளிலிருந்து எந்த வார்த்தைகளையும் தனித்து பிரித்து எடுத்து கூறிட முடியாத அளவு முழுமைத்தன்மை உடையதாக விளங்குவது மிகச்சிறப்பு.

தாமஸ் கார்வர் தனது கவிதையில் தந்தைக்கும் மகளுக்கும் இடையே மூன்று நிலைகளில் உரையாடல் நிகழ்த்துவதாக அமையும் அது போன்று ”சின்னவள்” கவிதையும் தந்தை மகளுக்கிடையேயான நுண்மையான பாச உணர்வை நமக்கும் கடத்துகின்றாள்.

தனது முதல் நூலிலேயே மிகச்சிறப்பான எழுத்தாற்றலால் உயர்ந்து நிற்கும் கவிஞருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் என்று விமர்சனம் செய்தார்.

ஏற்புரை:

கவிஞர் மீரா செல்வகுமார் தனக்கே உரிய கவிதை நடையில் அழகானதொரு ஏற்புரையை வாசித்தார்.

மகளிர் தின உரை:கவிஞர் ரேவதி

மகளிர் தின வரலாறை விரிவாக ,தற்காலப் பெண்களின் நிலை குறித்து அருமையாக உணர்வுடன்பேசியது சிறப்பு.

சிறப்புரை : இயற்கை உழவர் வே .காமராசு அவர்கள்
நெடுவாசல் போராட்டக்குழு உறுப்பினர் .


தன்னை ஒரு மிளகு விவசாயி என்று கூ றும் பொழுது மிளகு எப்படி இங்கு? என்ற வினா எழுந்தது .ஆம் மூன்று தலைமுறையாக கிணறு வெட்டியே வாழ்க்கையில் போராடிய விவசாயிகளின் உழைப்பாலும் தியாகத்தாலும் இன்று நெடுவாசல் சுற்றியுள்ள பகுதிகள் பசுஞ்சோலையாக விளங்குகின்றது ..

கிணறு வெட்டுவதற்காக உயிரிழந்த விவசாயிகள் எண்ணற்றோர் .

                                   நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு அங்குள்ள பசுமையான மரங்களே ...சாட்சி ..செம்மரம் வளரும் பகுதி ..ஆயிரக்கணக்கான மூலிகைகள் உள்ள பகுதி...சிறு விலங்குகள் ,சின்னஞ்சிறு பறவைகள்,தாவரங்கள் அதிகமுள்ள பகுதி..மலைப்பகுதியின் குளுமையை எங்கள் பகுதியில் உணரலாம் ...அறிய மரங்களும் ...சங்க இலக்கியத்தில் கூறப்படும் பாலை மரம் எனது வயலில் உள்ளது.விளையாத பயிர்களே அங்கு இல்லை .முக்கனிகளும் செழித்து வளரும் பகுதி,கீரமங்கலம் பூச்சந்தை  மிகவும்  புகழ்பெற்றது .இப்படிப்பட்ட பகுதியை சிதைக்கத்தான் அரசு முடிவெடுத்துள்ளது .

              திடீரென துவங்கியப்போராட்டம்...ஆனால் அதன்பின் மக்கள் அளித்த ஆதரவு அளவிடமுடியாதது .ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினர் இணைந்து கொண்டனர் .ஆங்காங்கே போராட்டங்கள் துவங்கின..ஒருங்கிணைப்பது என்பது சிரமமான ஒன்றானது...போராட்டத்தின் முடிவு துவங்கிய நோக்கத்தை சிதைக்காமல் இருப்பது முக்கியமானது.ஜல்லிக்கட்டு போல முடிவு வந்துவிடக் கூடாதென கவலைப்பட்டோம் ...போராட்டம் மட்டும் முக்கியமல்ல ..போராட்டத்தின் நியாயத்தை உலக மக்களுக்கு சென்று சேர்ப்பது மிக அவசியம் ...

எல்லாப் பொருள்களிலும் கலப்படம் வந்து விட்டது .நிறமும் மனமும் நீக்கப்பட்டபாமாயில் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.அதற்குமட்டும் அரசு வரிவிதிப்பதில்லை அதுஏன்?ஏனெனில் நாம் பயன்படுத்தும் எல்லா எண்ணெய்களிலும் இந்த பாமாயில் கலக்கப்படுகின்றது..அது தான் அத்துணை நோய்களுக்கும் காரணமாகின்றது ...

90% சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெயை மக்கள் பயன்படுத்துகின்றனர் ..ஆனால் 25% அளவு தான் சூரியகாந்தி விளைச்சல் உள்ள நிலையில் தேவையை எப்படி நிறைவு செய்கின்றனர்...பாமாயிலும் ,குரூடாயிலும் தான் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது ...

சமுக அக்கறை இருந்தால் மட்டுமே அவன் மனிதன் ....இயற்கையை சுத்தமாக அக்கரை இன்றி தொலைத்து விட்டோம் ...

வயலை நாடிய மனிதன் இப்போது கடையை நாடி தான் வாழ்கின்றான் ...

என கருத்துகளின் களஞ்சியமாக இயற்கை உழவர் காமராசுவின் பேச்சு ஒரு இயற்கையை காதலிக்கும் விவசாயின் உயிராக இருந்ததை மறுக்க முடியாது ..


வீதியின் பொறுப்பாளரான கவிஞர் முத்துநிலவன்   அவர்கள்  சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் ...

தலைமை உரையாற்றிய திருமிகு ஜெயா அவர்களுக்கு அரசு அலுவலர் சங்கத்தின் ஒன்றியத்தலைவர் அணிவித்து கௌரவித்தார் .

நூல் விமர்சனம் செய்த கவிஞர்  ராசி.பன்னீர் செல்வம் அவர்களுக்கு,பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் ..

சிற்றிதழ் அறிமுகம்

வீதியில் கவிநயா என்ற சிற்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டது ..

நன்றியுரை

நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து அனைவருக்கும் நன்றி கூறி மகிழ்ந்தார் ...திருமிகு கு.ம.திருப்பதி அவர்கள் .

இம்மாத அமைப்பாளர்களான ,வீதியை வடிவமைத்தவரும் தனது அதிகப்பணிச்சுமைகளுக்கிடையேயும் திறம்பட வீதியை நடத்திய புதுக்கோட்டை மாவட்ட தமிழாசிரியர் கழகத்தலைவர் திருமிகு கு .ம.திருப்பதி மற்றும் கவிஞர்  நீலா அவர்களையும் வீதி மனம் நிறைய பாராட்டி மகிழ்கின்றது ...

2 comments :

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...