World Tamil Blog Aggregator Thendral: முன் மாதிரிப்பள்ளி-செவ்வாய்ப்பட்டி ஊ.ஒ.ந.நி.பள்ளி கரம்பக்குடி ஒன்றியம்.புதுக்கோட்டை

Wednesday, 16 November 2016

முன் மாதிரிப்பள்ளி-செவ்வாய்ப்பட்டி ஊ.ஒ.ந.நி.பள்ளி கரம்பக்குடி ஒன்றியம்.புதுக்கோட்டை

ஒன்பது மஞ்ச வேன் வந்த ஊர்ல இப்ப ஒண்ணு தான் வருது அதையும் வராம பண்ணிடுவோம்..

தன்னம்பிக்கையோடு கரம்பக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு சந்திரா அவர்கள் சொன்ன போது நம்பவே முடியவில்லை தான்..ஆனால்...

27.10. 16 இன்று கரம்பக்குடியில் உள்ள செவ்வாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளிக்கு பள்ளிப்பரிமாற்றத்திட்டத்தின் படி காலை 8.00 மணிக்கு கிளம்பி  குழந்தைகளின் நடனங்களால் வாகனம் அதிர அதிர 9.00 மணிக்கு இருபது மாணவிகளுடன் ,எங்கள் பள்ளித்தலைமையாசிரியர் ,பொறுப்பாசிரியர்கள் கிருஷ்ணவேணி மற்றும் கீதா[நான்] ஆகியோர் சென்றோம்..

பள்ளியின் நுழைவாயிலில் மாணவர்களும் பள்ளித்தலைமையாசிரியருடன் அனைத்து ஆசிரியர்களும் வந்து வரவேற்றனர்..

சாரண ,சாரணீய மாணவர்களின் சீருடை அணிவகுப்பு மரியாதை மிக நேர்த்தியாக ,சிறந்த காவலர்கள் அணிவகுப்பிற்கு இணையாக மாணவர்கள் அணிவகுத்து சென்ற விதம் மிக அருமை...

கொடியேற்ற நிகழ்விற்கு பின் , அனைவருக்கும் மாணவர்களே தயாரித்த பூங்கொத்து கொடுத்து, வரவேற்று, இறைவணக்கக் கூட்டம் நடந்தது.
சந்தைப்பேட்டைபள்ளியின்  தலைமையாசிரியர் திருமிகு அமுதா அவர்கள் வாழ்த்துரை வழங்க,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளோடு அன்றைய நாள் துவங்கியது..மாணவிகளின் கைகளில் நூல் கண்டைக் கொடுத்து நட்சத்திரமாக வடிவமைத்து பின் அழகாகப்பிரித்து அவர்களின் நட்பை வலுப்படுத்திய விதம் அருமை.

வகுப்பறையா அல்லது விண்வெளியா என மலைத்து நின்றோம். அறியலின் முன்னேற்றங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி உலகத்தை மாணவர்களுக்கு காட்டி வருகின்றது.

தலைமையாசிரியர் திருமிகு சந்திரா அவர்கள் எட்டாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தை மிக அருமையாக ஸ்மார்ட் கிளாஸாக எடுத்தார்..பாட அறிமுகம் செய்ய திருமிகு அழகேஸ்வரி ஆசிரியரின் சைகை மொழி நடிப்பு மிகவும் பாராட்டுதற்குரியது..
வீர சிவாஜியின் வசனத்தை மாணவர்கள் நடித்து காட்டி வகுப்பிற்கு மெருகூட்டினர். 
உணவுத்திருவிழா கண்காட்சியை உயர்திரு உதவிக்கல்வி அலுவலர் கரம்பக்குடி அவர்கள் திறந்து வைத்தார்கள்....கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களும் ,வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டு கண்காட்சியைச்சிறப்பித்தனர்.

மாணவர்கள் காய்கறிகளை பல உருவங்களாகச்செதுக்கி அதன் பயன்களை ஆங்கிலத்திலும் ,தமிழிலும் எடுத்துரைத்த விதம் மிகச்சிறப்பு...ஆங்கில எழுத்துகள் ஏ முதல் இசட் வரை உள்ள பெயர்களைக்கொண்ட காய்கள் மற்றும் பழங்களைத் தேடித்தேடி அதை கண்காட்சியில் வைத்து அதன் சிறப்புகளை மாணவர்களைக் கூற வைத்த தலைமையாசிரியரையும்,உடன் ஒத்துழைத்த ஆசிரியர்களையும் மனம் நிறைந்து பாராட்டலாம்.

வகுப்பறைச்சுவர்கள் கண்கவரும் ஓவியங்களோடு கருத்தையும் கவர்ந்தன.
பள்ளிக்கு முன் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் அமைந்து தூய்மையான காற்றையும் ,பள்ளிக்கு ஒரு பிரமாண்டத்தையும் தந்து கொண்டுள்ளது.

கழிப்பறைகள் மிகத்தூய்மையாக இருந்ததைக்கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.   

மாணவர்கள் சுற்றுப்புறச்சூழலை மிகத்தூய்மையாக வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து செயல்படுகின்றனர்...அவர்களே இந்நாட்டின் விதைகள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும்,தங்கள் பள்ளிக்காக ஆசிரியர்கள் அனைவரும் மாதம் ரூபாய் 500 பங்களித்து பள்ளிக்குத்தேவையான வசதிகளைச்செய்வது அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.
தனியார் மூலம் தொடுதிரை கணினி வகுப்பு அமைத்துள்ளது தலைமையாசிரியரின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த பரிசு எனலாம்.

தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது கொடுத்து தலைமையாசிரியர் திருமிகு சந்திரா அவர்களை கௌரவித்துள்ளது.தனக்கான அரசு அளித்த பரிசுத்தொகையினையும் அப்பள்ளிக்கே தந்து மகிழ்ந்த அவரை என்ன சொல்லி பாராட்டுவது எனத்தெரியாமல் திகைக்கின்றேன்.

இத்தனைக்கும் காரணம் தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியர்களே என எளிமையாகக்கூறி ,அவர்களை பொறுப்பு மிக்க ஆசிரியர்களாக உருவாக்கியுள்ளார்.அத்தனை ஆசிரியர்களும் மாணவர்களும் கொண்டாடும் அப்பள்ளியின் தலைமையாசிரியர் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓர் மிகச்சிறந்த உதாரணம்.

செவ்வாய்ப்பட்டிக்குள் வந்த ஒன்பது மஞ்சள் வாகனங்களை அழித்து அவ்வூருக்கு திறமையான குழந்தைகளை உருவாக்கி தந்து வருகின்றார்.
படிப்பிலும் ,ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கும் மாணவர்களை உருவாக்கி வரும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும்
மனம் நிறைந்த வாழ்த்துகள்.  1 comment :

  1. மனம் நிறைந்த வாழ்த்துகள்! வாழ்த்துகள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget