World Tamil Blog Aggregator Thendral: இட ஒதுக்கீடு சலுகையா?உரிமையா?

Wednesday, 27 January 2016

இட ஒதுக்கீடு சலுகையா?உரிமையா?

இட ஒதுக்கீடு சலுகையல்ல உரிமையே.

இடஒதுக்கீடு தேவையா?எனில் ஏன் தேவை?

மதிப்பிற்குரிய சுப.வீ.அய்யாவின் காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் இன்று 27.01.16 நிகழ்ந்த கூடுகையில், நிலவன் அண்ணாவுடன் கலந்து கொண்டோம்.முன்பு புதுகைக்கு ஒரு கூட்டத்திற்காக வந்த போது நிலவன் அண்ணா ..அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்த போது...அவருடன் தான் பேசினோமா என்ற ஆச்சர்யத்தில் எனது நூலைக்கொடுத்து விட்டு வந்தேன்..அதை அவர் நினைவு வைத்திருந்து கூறிய போது அவரின் நினைவாற்றலை எண்ணி வியந்தேன்..

இன்று இரண்டாவது முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது..இட ஒதுக்கீடு குறித்த வரலாறை, தேதி முதற்கொண்டு நினைவில் வைத்து பேசிய போது அனைவரும் மலைத்து நின்றோம்.

இடஒதுக்கீடு குறித்த அய்யாவின் உரை

...

இடஒதுக்கீடு என்பது முழுமையாக சமத்துவத்தை எட்டுவதற்கான இடைக்கால ஏற்பாடு...
தமிழ்நாட்டில் சமூக நீதியை அடையும் வழியில் ஒன்று...
சமமற்றவர்களுடனான சமத்துவம் என்பது ..முயல் ஆமைக்கான போட்டியையே காட்டும் ...முயலுக்கும் முயலுக்கும் போட்டி நடப்பதே உண்மையான சமத்துவம் ...சமமற்றவர்களை சமமாக நடத்துவது என்பது சமூகஅநீதி...சமநிலையில் உள்ளவர்களை சமமாக நடத்துவதே நீதி என்று கூறிய போது உண்மைதானே என்ற எண்ணம் வந்தது...
மூன்று நிலைகளில் சமத்துவம் மிக முக்கியமாக தேவை
1.கல்வி
2.வேலைவாய்ப்பு
3.அரசியல்இந்தியாவில்1902 இல் முதன்முதலாக இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தவர் மராட்டிய மாநிலத்தில் சிறிய சமஸ்தானத்தைச்சேர்ந்த சாகுமகராஜா...அவரது சமையலறையில் தாழ்த்தப்பட்டவர்கள் சமைப்பார்கள்...என்றாராம்...

1929 இல் பெரியார்  மாநாட்டில் நாடார்கள் சமைப்பார்கள் என்று கூறியது மட்டுமின்றி இம்மாநாட்டில் பெண்கள்,கணவனை இழந்தவர்கள்,விபச்சாரி என்று மற்றவர்களால் அழைக்கப்படுபவர்கள்...அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று கூறியதாக சுப.வீ அய்யா கூறிய போது...பெரியாரின் மேல் கூடுதலான அன்பு வந்தது மறுக்க இயலாது.

1919 இல் மும்பையில் சத்திய சோதனை மண்டல் என்ற சீர்திருத்த இயக்கத்தை தோற்றுவித்தவர்கள்...ஜோதிராம் பூலே மற்றும் அவரது மனைவி சாவித்திரி பூலே .அவரது  இடத்தில் கணவனை இழந்த,திருமணம் ஆகாத நிலையில் உள்ள பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்,கல்வி கற்கலாம் என்று அறிவித்ததால் அக்கட்டிடத்தையே இடித்து நொறுக்கிவிட்டு இனி என்ன செய்வீர்கள் என்று கேட்ட பொழுது மீண்டும் கட்டிடம் கட்டி பெண்களை வாழவைப்பேன் என்று கூறிய மனத்திண்மையை என்னவென்று சொல்வது.

அரசியலில் இட ஒதுக்கீடு
1909 அக்டோபர் -1 ஆம் நாள் இந்தியாவில் முதன்முதலில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது மிண்டோமார்லி சீர்திருத்தம்..

வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு

1919 இல் கர்நாடகா இடஒதுக்கீடு தந்தது..

தமிழ்நாட்டில்  நீதிக்கட்சி ஆட்சி செய்தபோது 1921 இல் இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டு 1927 ஆம் ஆண்டில் அப்போதைய அமைச்சராக இருந்த முத்தையா முதலியாரால் நிறைவேற்றப்பட்டது...
16% பார்ப்பனர்களுக்கு
44% பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினருக்கு
16%பார்ப்பனர் அல்லாத தாழ்த்தப்பட்டவர்களுக்கு
8%இஸ்லாமியர்களுக்கு
8%கிறித்தவர்களுக்கு
8%ஆங்கிலேயர்களுக்கு என இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது .

1943 ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று அண்ணல் அம்பேட்கரால் எஸ்/எஸ்டி பிரிவினர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
அப்போது வேறுயாருக்கும் இடஒதுக்கீடு என்பது இல்லை...தமிழ்நாட்டில் தான் அனைவருக்குமான இடஒதுக்கீடு முதன்முதலில் கொண்டுவரப்பட்டது...

அயல்நாட்டில் இடஒதுக்கீடு

அந்நிய நாடுகளில் இடஒதுக்கீடு என்பது இன அடிப்படையில் நடைமுறையில் உள்ளது..இந்தியாவிலும் ,,பாகிஸ்தான்,நேபாளம்,ஜப்பான்,இலங்கை,சிக்கிம்,பூடான் ஆகிய நாடுகளில் மட்டுமே சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு உள்ளது..மனுசன மனுசன் தொடக்கூடாதென்ற நிலை இந்தியாவில் மட்டுமே உள்ளது..

சைனாவில் பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது...அந்நாட்டு பெண்கள் அனைத்து துறையிலும் முன்னேறிய நிலையில் உள்ளனர்.
1951 இல் இந்தியாவில்  இவ்விட ஒதுக்கீட்டிற்கும் தடை வந்தது...தமிழ்நாட்டில் நடந்த போராட்டமே மீண்டும் இடஒதுக்கீடு கிடைக்க காரணமானது.

சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினம் அறிவிக்கும் வரை இருந்த சட்டம், 1932 இல் இருந்த சட்டமே.1951 க்கு பின் இடஒதுக்கீடு 50%க்கு மேல் தரக்கூடாதென்றே இருந்தது..

கர்நாடகாவில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை தேவராஜா கொண்டுவந்தார்.
சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகள் சாதியின் பெயராலேயே வழங்கப்படுவதே நீதி.

இரு சொற்கள் ஒழிக்கப்பட வேண்டும்.அவை தீட்டு ,புனிதம்.

தீட்டு என்ற வார்த்தை சாதியைக்காரணம் காட்டி ஆண்களையும்,பெண்களின் இயற்கை நிலையைக்காட்டி பெண்களையும் ஒதுக்கி வைத்துள்ளனர்.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதை நேருவால் குழு துவங்கப்பட்டு வி.பி.சிங் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.1980 இல் அதிமுக முதல்வர் மாண்புமிகு  என் .ஜி.இராமச்சந்திரன் அவர்கள் தோல்வி அடைய அவரால் கொண்டுவரப்பட்ட இம்முறையே காரணமாக அமைந்தது.

1992 இல் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கிரிமிலேயர் முறை நடைமுறைக்கு வந்தது.முதலில் வருமான வரம்பு ஒரு இலட்சம் என்பது தற்போது 6 இலட்சத்திற்கு அதிகமான வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாதென்பதே கிரிமிலேயர் ஆகும்...இப்பிரிவில் மருத்தவர்,வக்கீல்,ஆசிரியர்,இஞ்சினியர்,சினிமாநடிகைகள் ஆகியோரின் குழந்தைகட்கு  கல்லூரியில் இடஒதுக்கீடு இல்லை .

இந்தியாவில் 87.4% தனியாரும்12.6% மட்டுமே அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் உள்ளது.நாம் இடஒதுக்கீடு கேட்டு போராடுவது இந்த 12.6%க்கு மட்டுமே...

அனைத்தும் தனியார் மயமாகி விட்டால் இடஒதுக்கீடு என்பது...இல்லாத நிலை வந்துவிடும்..

உலகமயம்,தனியார்மயம் ,தாராளமயம் என்ற நிலைப்பாட்டில் முதலீடு மட்டுமே உலகமயமாகின்றது...உழைப்பு அல்ல...

என அய்யா சுப.வீ அவர்கள் கூறிய போது இடஒதுக்கீட்டின் முழுதேவையை உணர முடிந்தது...மேலும் 92%,96% மதிப்பெண்கள் பெற்ற திறமையுள்ள மாணவர்களே இடஒதுக்கீட்டில் வருகிறார்கள்..திரைப்படத்தில் பாடுவது போல் கோட்டாவில் வந்தவரெல்லாம் முட்டாள்கள் அல்ல.என்றார்..
கடகடவென அருவியாக கொட்டிய சிந்தனைத்துளிகள் நம்மை யோசிக்கவைத்தன.உணர்வு பூர்வமான,சமூக அக்கறையுள்ள அவரது பேச்சு இடஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்தியது. அக்கறையற்ற அரசியல் வாதிகளால் நாடு மீண்டும் அடிமைநிலைக்கு செல்வதை உணரமுடிந்தது...

6 மணிக்கு துவங்கி அறிமுகம் முடிந்தபின் அய்யாவின் பேச்சு முடிந்து  கேள்வி நேரம் வந்தது...
கவிஞர் முத்துநிலவன்
*இந்துத்வா தனியாரை ஆதரிப்பது இடஒதுக்கீட்டை அழிப்பதற்கே..
*தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் ,பொதுத்துறையின் பாதுகாப்பிற்கும் வழிசெய்ய வேண்டும் .
*இடஒதுக்கீட்டைப்பற்றிய ஒரு நூல் எழுதப்படவேண்டும் என்றார்.

தோழர் சண்முகநாதன்
*உயர்நீதிமன்றத்திலும்,உச்சநீதி மன்றத்திலும் இடஒதுக்கீடு என்பதே கிடையாதென்றார்.
*பாராளுமன்றத்தின் அனுமதி இன்றி தன்னிச்சையாக உச்சநீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்டதே ”கிரிமிலேயர்” என்றார்.
*தனியாரிலும் இடஒதுக்கீடு தேவை என வலியுறுத்த வேண்டும் என்றார்.

முனைவர் கண்மணி

மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை எளிமையாக புரிய வைப்பது பற்றி கூறுங்கள் என்றார்.

அவருக்கு பதிலுரைக்கையில் நிச்சயம் கடினமான ஒன்று ..இன்று இளைஞர்கள் நம்மிடம் இல்லை...

4M ன் அடிப்படையில் சமூகம் உள்ளது.
1M-MEN POWER

2M-MIND POWER

3M-MONEY POWER

4M-MEDIA POWER

இன்று இளைஞர் சமூகம் ஊடகங்களிலும்,இணையத்தளங்களிலும் சிக்குண்டு கிடக்கின்றது..நாட்டின் உண்மை நிலை உணரும் நிலையில் பெரும்பாலான இளைஞர்கள் இல்லை..மிகவும் கடினமான பாதையில் செல்ல வேண்டிய நிலை...

இடஒதுக்கீடு குறித்த கருத்துகளை பல் வேறுவகைகளில் உணரவைக்க வேண்டும்...என்றார்..

சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பேச்சாக அய்யா சுப.வீர பாண்டியன் அவர்களின் பேச்சு இருந்தது....

பயனுள்ள நாளாக இன்று கழிந்தது.நன்றி நிலவன் அண்ணாவிற்கு.

அய்யாவுடன் நானும் தங்கை கண்மணியும்.7 comments :

 1. எத்தனை தகவல்கள்.....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 2. மிகவும் கடினமான பாதை தான் என்பதில் சந்தேகமே இல்லை...

  ReplyDelete
 3. நிறைய தகவல்கள்! அறியக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 4. நிறைய தகவல்கள் மா , நன்றி,,

  ReplyDelete
 5. Equality is never possible. Reservation is system failure. In the last 60 years have you brought equality? In 70's education was sold to vattams, kuttams etc. Even in college education recommendations and money power played a key role. DMK rowdies were controlling the govt seats in medical,dental, engineering etc etc with money. Merit has gone back seat and finally gone to foreign shores. Language failure in TN, Hindi gone, English gone and now Tamil also gone?? Poor standards in education in all Govt schools. This is the achievement finally. Meritorious people left TN and moved on to central stage.

  ReplyDelete
 6. //இந்தியாவிலும், பாகிஸ்தான்,நேபாளம்,ஜப்பான்,இலங்கை,சிக்கிம்,பூடான் ஆகிய நாடுகளில் மட்டுமே சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு உள்ளது.. //
  ஜாப்பானில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது. இலங்கை பற்றி எனக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் இலங்கை நண்பர் மூலம் இப்போ உறுதிபடுத்தினேன். இலங்கையில் உள்ளது, இலங்கைதமிழர், சிங்களவர், இந்திய தமிழர் என்ற இன அடிப்படையிலான ஒதுக்கீடே தவிர ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு இல்லை.
  இடஒதுக்கீடு பெற்று கொள்வதிற்காகவே இந்தியாவில் மனிதர்களிடையே உள்ள ஏற்ற தாழ்வு ஜாதி அமைப்பு முறையை தொடர்ந்தும் கட்டி காப்பாற்றி வருவார்கள்.

  ReplyDelete
 7. தகவல்கள் நன்று பகிர்வுக்கு மிக்க நன்றி..

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...