World Tamil Blog Aggregator Thendral: உலக சினிமா-Earth&Ashes

Monday, 4 January 2016

உலக சினிமா-Earth&Ashes

உலக சினிமா-Earth&Ashes

புதுகையில் பிலிம் சொசைட்டி என்ற அமைப்பின் தலைவர் திரு.இளங்கோ அவர்கள் உலக அளவிலான திரைப்படங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து மாதம் ஒரு ஞாயிற்று கிழமை அன்று மாலை திரையிட்டு வருகின்றார்,

அப்படி ஒரு ஞாயிற்று கிழமையன்று ஒரு ஈரானியத்திரைப்படம் பார்த்தேன்...இன்னும் அதன் ஒவ்வொரு காட்சிகளும் மனதில் இன்றும் ஓடிக்கொண்டுள்ளன..

3.1.16 நேற்று மாலை கந்தர்வன் நூலகத்தில் 6 மணியளவில்
” எர்த் அண்ட் ஆஷஸ் ”என்ற ஆப்கன் திரைப்படத்தைக் காண்பித்தார்,...

போருக்கு பின்னான கிராமத்தின் நிலையை,மக்களின் வேதனையை வித்தியாசமான கவித்துவமாக அப்படம் அமைந்து மனதில் இனம் புரியாத சுமையை உண்டாக்கி விட்டது..

புழுதி நிறைந்த பாலைவன நிலத்தின் வெயிலையும்,புழுதியையும் உணரமுடிந்தது...
வெடிகுண்டு தாக்குதலால் மனைவியையும்,மருமகளையும் இழந்து,ஒரே பேரனும் கேட்கும் சக்தியை இழக்க...மனம் நிறைந்த சுமையுடனும் ,வேதனையுடனும் தாத்தாவும் பேரனும் , மைன்ஸில் வேலைபார்க்கும் தன் மகனைக்காண. பேரூந்து வசதியற்ற அப்பாலை நிலத்தில் நடந்தே செல்வதும் ,புழுதி நிறைந்த முகத்துடன் அவர்கள் ட்ரக்கிற்காக காத்திருப்பதுமாக உள்ள காட்சிகளே படமாக..

சிதிலமான பாலத்தின் ஓரம் காத்திருக்கும் போது அங்கு உடைந்து கிடக்கும் பீரங்கியின் உள்ளே தான் இழந்த சப்தங்களை அந்த பீரங்கி விழுங்கி விட்டதெனக்கூறி அந்தக்குழந்தைத்தேடும் போது மனம் சுக்கு நூறாகிவிடுகிறது...

தன் நண்பரை வழியில் பார்க்கும் போது, அவர் ஒரு கல்லறையில் ஏதும் பேச இயலாமல் அமர்ந்து கொண்டு தான் இவ்வாறு அழிந்து போனதை,திருமணமாகி இவரின் ஊரில் வசிக்கும் தனது மகளிடம் கூறாதே என்கையில் ,தாத்தாவின் நினைவலைகளில் போரில் வீடு தீக்கிரையாக உடுத்த துணியின்றி நிர்வாணமாக எரியும் வீட்டுக்குள் ஒளிந்திருக்கும் நண்பரின் மகள் நினைவிலாடுகின்றாள்..

முடிவாக தன் மகனை பாடுபட்டு பார்க்கச்சென்றும் பார்க்க முடியாமல் திரும்பும் அவரின் சோகம் நம்மையும் தனக்குள் இழுத்து புதைத்து விடுகின்றது.

கண்ணை மூடினால் போரின் தாக்கம் இவரைத்துரத்த, தூங்காது தவிக்கும் தாத்தாவின் முகம் மனதில் ஆழப்பதிந்து விட்டது.
தான் கேட்கும் திறனை இழந்து விட்டோம் என்பதை அறியாத அக்குழந்தை தனது தாத்தா,பாட்டி,அம்மா அனைவரும் பேசுவதே இல்லை எனக்கூறி சப்தங்களைத்தேடி ..அலையும் காட்சி....போரின் மிச்சமாய்,...

இப்படத்தைக்காண்கையில் இன்னும் ஆட்டமும் ,காதலும்,வன்முறையும் மட்டுமே கொண்ட போலியான தமிழ் திரையுலகு எப்போது உலகத்தரத்திற்கு இணையாக,யதார்த்தத்தை எப்போது மக்களுக்கு அறிமுகப்படுத்தும் என்ற ஏக்கம் மனதில் எழுவதைத்தவிர்க்க முடியவில்லை..
இளங்கோ சாருக்கு மிக்க நன்றியை கூறிக்கொள்கின்றேன்..

1 comment :

  1. அருமையான விமர்சனம். இப்படத்தைப் பற்றிக் கேட்டதுண்டு...பார்த்துவிடுகின்றோம்..மிக்க நன்றி பகிர்வுக்கு..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...