நின்று
கழிக்கும் வெய்யில் – கவிஞர் ரேவதி ராமின் நூல் விமர்சனம்.
வேரல் பதிப்பகம்
கவிதைப்போட்டிக்கு தேர்வான நூல்
விலை ரூ 140
சிறந்த அட்டைப்படமும்
வடிவமைப்பும் மனதைக் கவர்வதாக அமைந்துள்ளன வேரல் பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்.
மழை எல்லோருக்கும்
பிடிக்கும் என்றாலும் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாகப் பெய்தால் போதும் என்றே தோன்றும்,
எப்படா வெய்யில் வருமென தான் கூறுவோம். வெய்யில் எல்லோரும் விரும்புவது .
சிறு வயதில் கோடை
விடுமுறைகளில் ஆண் பெண் வித்தியாசமின்றி அனைத்து விளையாட்டுகளையும் விளையாடுவதுண்டு.
நல்ல கோடைமாதமொன்றில் தான் வாடகை மிதிவண்டிக்காக
காத்திருந்து கற்றுக்கொண்டதையும், ஸ்கூட்டர் கற்றுக் கொண்டதையும் இந்த நூல் நினைவூட்டுகிறது.
மே மாத விடுமுறை
எனக்கு மிகவும் பிடித்தமானது. ஒன்று பள்ளிக்குச் செல்ல வேண்டியக் கட்டாயமில்லை. இரண்டாவதாக
மாமா வீடு ,அத்தை வீடு, பாட்டி வீடு , பெரியம்மாவீடு,சித்தி வீடு என நாட்களை எண்ணி வைத்துக்கொண்டு ஊர் ஊராக நானும் தம்பியும்
கிளம்பி விடுவோம் …
பால்யவயதின் மகிழ்வை,ஏக்கங்களை
அப்படியே கவிதைகளாக வடித்து வெய்யிலில் சுட்டு நமக்கு மீண்டும் பரிமாறியிருக்கிறார்
கவிஞர்.
வெய்யிலொன்றே மையமாகக்
கொண்டு தமிழுலகில் எழுதப்பட்ட முதல் நூலாக கவிஞர்களால் போற்றப்படும் நூலிது.
சூரியன்,வெக்கை,கள்ளிச்செடி,வெய்யில்,பாலை,கொற்றவை,பிள்ளையின்
வயிற்றுப்பசி,வியர்வை,உஷ்ணம்,புழுக்கம்,வெப்பக்காற்று,வற்றல்,
வடகம்,கோடை,வேப்பம்பூ,
நுங்கு,திருவிழா,கானல் நீர்,செம்பந்து,தாகம், என வெய்யிலின் பிரதிகளால் கவிதைகளை பாலை
நிலமென நூலில் காய வைக்கிறார். ஒவ்வொன்றும் மனதில் குடியேறி நம்மை வெய்யிலின் மீது
காதல் கொள்ள வைக்கின்றன.
அன்பு ,காதல் , நெருக்கம்,
கோபம்,வலி என உணர்வுகளைக் கலந்து எடுத்து அறுசுவை விருந்தெனப் பரிமாறியுள்ளார்.
தன்னைச் சமைத்த கவிஞரை
வாழ்த்த சூரியன் பக்கத்தில் வந்து சிறு பிள்ளையென மகிழ்ந்து கொஞ்சி மகிழ்கிறது.
சூரியனை அறைந்திடும்
செங்கல் சூளை பெண், சூரியனை இட்டிலியாகச் சுடும் பெண், மகன் தரும் வெய்யிலை கவிதைக்குள்
பத்திரப்படுத்தும் அம்மா, தலை சிலுப்பும் பிடாரி , கொற்றவை என பல கவிதைகள் பெண்ணாக
,சுடராக, வெக்கையாக வியர்வையாக உருக்கொள்வது கற்பனையின் உச்சம்.
‘ எதுவாக வேண்டுமானாலும்
இருக்கட்டும்
கொளுத்தும் பாலையில்
வெய்யில் காய
கொற்றவையால் மட்டுமே முடியும்
ஏனெனில்
அவள்
பெண்’
இக்கவிதையில் வரும்
’ஏனெனில்’ பெண்ணின் வலிமையை தன்னம்பிக்கையைக் காட்டுவதாக இருக்கையில்,
’ஏனெனில் ‘ என்ற கவிதையில் இருக்கின்ற வசவுச்சொற்களெல்லாம் பெண்ணைக்குறித்தே
சாடுகையில் வனையப்போகும் ஆணெனும் பாத்திரத்தை எந்தப் பழிவாங்கலும் இல்லாமல் அமைதியாக
இருந்தன எல்லாம் என பெண்ணின் தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
பல கவிதைகள் நம்மை
பனங் குருத்தை வைத்து வண்டி ஓட்ட வைக்கின்றன, சக்கரத்தின் மிதிபடும் வெய்யில் நம் மனதையும்
அள்ளிக்கொள்கின்றது
வெக்கையில் மலர்ந்திடும்
நேசமும் காதலும் பாலை நிலத்தின் ஈர மனதைக் காட்டுகின்றன.
பல கவிதைகளில் கவிஞரின்
தன்னம்பிக்கை, கோபம், காதல் , நேசத்தை உணர்த்துகின்றன. அப்பாவைக் காப்பாற்றத்தவிக்கும்
மகளாய நம்மையும் தவிக்க வைக்கும் கவிதை மனதை விட்டு நீங்காமல் உறைந்து விட்டது.
சங்க இலக்கிய பாடல்களின்
சாயல் பல கவிதைகளில் காண முடிகின்றது.
நோ நெஞ்சே என்ற கவிதையில்
’கொஞ்சிப் பேசிக்
கரை கடந்தவனின்
நினைவுகளில்
கள்ளிச்செடியைக்
கூர்முள்ளால் கீறுகிறாள்
சங்கக் காதலி
கள்ளிப்பாலின் வாடையில்
மிதந்து கொண்டிருக்கிறது
ஆண்டாண்டு காலக்
காதல்’
பிரிவின் துயரம் மேலிடுவதை உணர முடிகின்றது.
பல விருதுகளைப் பெற்றுள்ள
கவிஞருக்கு மென்மேலும் விருதுகள் கிடைக்க, குருவி குடிக்க நீரற்ற குளத்தின் தாகத்தோடு
மனம் நிறைந்த வாழ்த்துகளை வேப்பம்பூவின் வாசனையுடன் தூவுகின்றேன்.
அவசியம் அனைவரும்
வாசிக்க வேண்டிய நூல்களில் இது முக்கியமான நூலாகும்.
மு.கீதா புதுக்கோட்டை
No comments :
Post a Comment
தங்களின் இனிய வருகைக்கு நன்றி...