World Tamil Blog Aggregator Thendral: செத்து போ பாப்பா

Thursday, 20 October 2016

செத்து போ பாப்பா

அம்மா அம்மா
என்னடா வேணும் ?
ஏன் தொல்லை பண்ற..

மனம் ஒடிய
சுவரோரம் ஒடுங்கினேன்..

எனக்கு எல்லாம் அம்மாதான்
எட்டு வருடங்களுக்கு பின்
எட்டாக்கனியாகப் பிறந்தவனென
கொஞ்சிமகிழ்பவள் தான் இன்று
கொல்லாதே தள்ளிப்போ என்கிறாள்.

எப்பவும் என்புராணம் பாடியே
எனை இடுப்பில் தூக்கிக்கொண்டே
அலைவாள்...

குலம் தழைக்க வந்த ராசா
மலடி பட்டம் போக்க வந்த துரை
கொண்டாடி மகிழ்ந்தாள்

கை நீட்டியதற்காகவே காட்டிய பொருளை
எல்லாம் வாங்கித்தந்து குதூகலித்தாள்

வீட்டில் நான் வைத்தது தான் சட்டமென்றாள்
எது வாங்கினாலும் எனக்கே தந்தாள்.

வீடு மட்டுமல்ல தெருவே
கொண்டாடியது என்னை.

சொந்தங்கள் அனைத்தும்
தூக்கி கொஞ்சி மகிழ்ந்தது.

அம்மா ஏன்மா வயிறு பெருசாருக்கு
நிறைய சாப்பிட்டியான்னு
என் கேள்விக்கு பதிலாய் 
ஒருகுட்டி பாப்பா இருக்கான்னா...

 அம்மாவின் முட்டிய வயிற்றிலிருந்து
அழுதுகொண்டே பிறந்தாள்
.
 சின்ன சின்ன கைகளுடன்
சின்னூண்டு வாயுடன்
கண்விழிக்க முடியாது விழித்தவளை
கொட்ட கொட்ட பார்த்தபோது
அவள் என் அம்மா பக்கத்தில்

அடம் பிடித்தேன் அருகில் படுக்க..
 அப்பா எனை தூக்க
 அம்மா எனக்கு எட்டாக்கனியானாள் ..
விழுந்து கால் உதறி அழுதேன்



அம்மா வீட்டுக்கு வந்தவுடன்
வேகமாய் அவள் மடியில்
பொத்தென்று விழுந்தேன்.
சொத்தென்று முதுகில் அறைந்தாள்
மூன்று வயதில் முதல் அடி வாங்கினேன்

அம்மாவா அடித்தது நம்ப முடியாது
அம்மா என்றழுதேன்

சனியனே வயிற்றில் விழுறியே
போ தூர என்ற போது
அவள் என் அம்மா இல்லைனு தோணுச்சு

இரவிலாவது அம்மா பக்கத்துல படுக்க
காத்திருந்தேன்...
 அம்மாகிட்ட குட்டிபாப்பாவை
போட்டுவிட்டு ஆச்சிக்கு அருகில்
எனை படுக்க வைக்க ....
தூங்காது இரவு முழுதும் அழுதேன்.

என் அம்மா எனக்கில்லையா..
பாராட்டு எல்லாம் திட்டாக மாறின
அம்மா எப்பவாவது எனைக்கொஞ்சும் பொழுது
அம்மா மடிமீது விழுந்து புரளுவேன்.

 பாப்பா அழுதால் எனை
உதறி அவளைகொஞ்சுவாள்.

என்னை யாருக்கும் பிடிக்கல
பாப்பா வந்ததுல இருந்து ...

எனக்கு பாப்பா வேண்டாம்
செத்து போ பாப்பா.



8 comments :

  1. அறியா மழலையின் நினைவோட்டங்கள் இப்படித்தான்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ...உணர்ந்த அனுபவம்,...மிக்க நன்றி.

      Delete
  2. பாவம் .... சவலைக் குழந்தைகளின் ஏக்கமும், மனநிலையும் இதுபோலவேதான் எங்கும் உள்ளன. அதை அழகாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்...மிக்கநன்றி..

      Delete
  3. இந்த பிரச்சனையை தவிர்க்கவே இங்கு அடுத்த குழந்தைக்கு காத்திருக்கும் காலங்களில் வரப் போகும் குழந்தையை பற்றி முதல் குழந்தையிடம் எடுத்து சொல்லி அதனை கவனித்து பார்ப்பது உன் பொறுப்புதான் என்று சொல்லி வளர்ப்பதால் இங்கு இந்த மாதிரி பிரச்சனைகள் குழந்தைகள் மனதில் எழுவதில்லை இந்த பொறுப்புணர்ந்த முதல் குழந்தை தம்பி பாப்பாவை கவனிப்பதில் முழு கவனம் செலுக்கிறார்கள் அதனால் இருவருக்குள்ளும் அன்பு பெருகிறது

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நல்ல அணுகுமுறை...இங்க மாற வேண்டும் நிறைய சார்....

      Delete
  4. this is called SIBLING JEALOUSY
    parents should be careful not to ignore the first born...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார்..நன்றி.

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...