World Tamil Blog Aggregator Thendral: நான் சாவறதுக்கு முன்னே என் குழந்தைக செத்துடனும்ங்க

Monday, 28 March 2016

நான் சாவறதுக்கு முன்னே என் குழந்தைக செத்துடனும்ங்க

நான் சாவறதுக்கு முன்னே என் குழந்தைக செத்துடனும்ங்க
---------------------------------------------------------------------


”என் பேரு ஜான்ஸிராணிங்க.எனக்கு 13 வயசுல கல்யாணம் ஆச்சுங்க...நான் எங்க பாட்டி வீட்டுக்குதானே போறோம்னு ஜாலியா விளையாடிக்கிட்டு இருப்பேங்க.

15 வயசுல எனக்கு ஒருபெண் குழந்தை பொறந்துச்சுங்க....எனக்கு ஒண்ணும் தெரியாம நானும் அது கூட விளையாடிக்கிட்டே இருப்பேங்க...

கொஞ்சநாள் கழிச்சு தான் அந்த குழந்தைக்கு ஏதோ பிரச்சனைன்னு தெரிஞ்சுதுங்க...டாக்டருகிட்ட எல்லாம் கூட்டி போனேன்ங்க..கடைசில குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லன்னு சொல்லிட்டாங்க..

சின்ன வயசுல அந்த குழந்தைய பாத்துக்குற குழந்தையா நானும் வளர்ந்தேங்க...குழந்தன்னாவே பயம் வந்துடுங்க.
8 வருசங் கழிச்சு எனக்கு 2 ஆவதா ஒருஆண் குழந்த பொறந்துச்சுங்க...நல்லவேளையா அதுக்கு ஒரு குறையும் இல்லாம நல்லா வளர்ந்தான்ங்க்.

மூணாவதா ஒரு ஆண் குழந்த பொறந்துச்சுங்க.என் வேதனைய அதிகரிக்கிற மாதிரி அதுக்கும் மூள வளர்ச்சி இல்லன்னு சொல்லிட்டாங்க...இரண்டு குழந்தைகளையும் நான் தாங்க பாத்துக்கணும்...என் ஊட்டுக்காரரு இதுங்களுக்காக வெளியூர்ல போய் வேலை பாத்தாருங்க...அவருக்கு மஞ்சக்காமாலை வந்து இறந்து போய்ட்டாருங்க...

எங்க அம்மா அப்பாவ நம்பி நான் அவங்க கூட இருந்தப்ப அம்மா திடீர்னு பக்க வாதம் வந்து படுத்துட்டாங்க...மாசக்கணக்குல நான் தான் அவங்கள பாத்து இப்ப குணமாயிட்டாங்க...இரண்டு குழந்தைகள விட்டுட்டு நான் வேலைக்கும் போவ முடியலங்க..

வயசான அம்மா அப்பாவையும் நான் தாங்க பாத்துக்கிட்டு ,இந்த ரெண்டு குழந்தைகளையும் பாத்துக்க நான் படாத பாடு படுறேங்க.

எனக்கு ஒரே ஒரு ஆசைதான்க...நான் சாவறதுக்கு ஒருநாள் முந்தி இந்த புள்ளைங்க செத்து போயிடனும்க.ஏன்னா எனக்கு அப்றம் இதுகள பாத்துக்க ஆளே இல்லீங்கன்னு”

அந்த தாய் கதறிய போது வேந்தர் டிவி யின் இது உங்கமேடை பேச்சரங்கத்திற்காக வந்திருந்த திரைப்பட இயக்குனரும் நடிகருமான திருமிகு பாக்கியராஜ் கண்கள் கலங்க....என்னம்மா செண்டிமென்டிற்காக நாங்க கற்பனையா காட்சிய சேர்ப்போம். உங்க வாழ்க்கை இத்தை வலி மிகுந்ததா இருக்கேன்னு பதறினார்..
அதுவரை கலகலன்னு இருந்த அரங்கு கனத்த மௌனத்தில் சிறிது நேரம் உறைந்திருந்தது..

அந்த குடும்பத்திற்கு புதுகை கல்வி நிறுவனர்கள் ஒன்றிணைந்து ஒரு இலட்ச ரூபாய் தொகையும்,குடும்பத்திற்கு வேண்டியவற்றை செய்து தருகின்றோம் என்ற உறுதி மொழியும் தந்தனர்.
கவிஞர் தங்கம்மூர்த்தி &அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி அவர்கள் ரூ 10,000 கொடுத்து உதவினர்..மேலும் சிலரும் அவர்களால் முடிந்த தொகை கொடுத்த போது, என்னால் முடிந்த தொகை கொடுத்து, என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

இரண்டாவது மகன் கல்லூரியில் படிக்கின்றான்.
மற்ற இரு குழந்தைகளின் நிலையைக்காண சகிக்கவே முடியவில்லை.
என்னசொல்வதுன்னே தெரியல....
கண்கலங்கிய குழந்தையின் பாட்டியிடம் அழாதீர்கள்....என்று மட்டுமே என்னால் கூற முடிந்தது.


6 comments :

 1. நெக்குருக வைக்கிற விஷயம்/

  ReplyDelete
 2. ஒருசிலரின் வாழ்க்கையில் இதுபோன்ற தாங்கமுடியாத வலிகள் ஏற்படத்தான் செய்கின்றன. விட்டு விலகவும் முடியாமல், விலக்கவும் முடியாமல், பாசம் + மனிதநேயம் என்று பலவித விலங்குகள் அவர்களுக்கு மட்டும் இடப்படுகின்றன.

  படிக்கும் போதே நம் மனம் பதறத்தான் செய்கிறது. அந்த அம்மா காலத்திற்குள் அந்த மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளின் காலம் முடிய வேண்டும் என்ற அவர்களின் பிரார்த்தனை மிகவும் இயல்பானது + நியாயமானது மட்டுமே.

  இதுபோன்று துயர்படும் + துயர்பட்ட ஒருசிலரை நானும் என் வாழ்க்கையில் நேரில் சந்தித்துள்ளேன். :(

  ReplyDelete
 3. நவீன தொழினுட்ப வளர்ச்சியில் புதுப் பொலிவுடன் மீண்டும் இணையத்தை கலக்க வருகிறது ​தமிழ்BM இணையம். உலக இணையதளப் பெருக்கத்தில் உங்கள் இணையதளங்களை விரைவில் வாசகர்கர் வசப்படுத்த எம்மால் முடியும்.
  ஒருமுறை எமது இணையத்துடன் இணைந்தால் உங்கள் இணையப்பக்கங்களை நூற்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் பார்வையிடச் செய்ய நாம் தயார்.
  பதிவுகளுக்கு முந்துங்கள்
  எமது இணையம் தொடர்பான பழுதுகள், முறைப்பாடுகளை உடனடியாக பதிவு செய்யுங்கள். 24 மணி நேரத்துக்குள் எங்கள் தொழினுட்ப அலுவலர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு உதவுவார்கள்..
  நன்றி
  தமிழ்BM
  www.tamilbm.com

  ReplyDelete
 4. மனித நேயமும், பாசமும் கண்கலங்க வைக்கின்றன

  ReplyDelete
 5. கண்கள் கலங்குதே சகோ

  ReplyDelete
 6. மனதைக் கலங்கடிக்கிறது கீதா...ஆனால் இது போன்று இன்னும் எத்தனை பேர் உள்ளனரோ...வேதனை..எனக்கு நேரடி அனுபவமும் உண்டு கீதா..

  கீதா

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget