World Tamil Blog Aggregator Thendral: சங்க இலக்கியம்-புதுக்கவிதையாய்

Wednesday, 18 November 2015

சங்க இலக்கியம்-புதுக்கவிதையாய்

சங்க இலக்கியம் எட்டுத்தொகை,பத்துப்பாட்டு என பதினெட்டு நூல்கள் அடங்கிய பதினெண்மேற்கணக்கு நூல் என அழைக்கப்படுகின்றது..இப்பாடல் 

எட்டுத்தொகை நூலாகிய


நற்றிணையில் இடம் பெற்றுள்ள பாடல்.நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை. தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவான். நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாகும்.நன்றி விக்கிபீடியா



1- குறிஞ்சி-கபிலர்
               
தலைவிக்கூற்று

[தலைவனின் பிரிவைத் தோழி தலைவிக்கு உணர்த்திய போது தலைவி சொல்லியது]

பாடல்

நின்ற சொல்லர்;நீடுதோறு இனியர்;
என்றும் என் தோள்பிரிபு அறியலரே;
தாமரைத் தண் தாது ஊதி,மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம்தேன் போல,
புரைய மன்ற,புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ?செய்பு அறியலரே




            கவிதை


நிலையான சொல்லோன்
 இனிமைக்கே உரியவனென்
தோள்பிரியான்

தாமரையின் மகரந்தமுகர்ந்து
மலைச்சந்தன மரத்தில்
வண்டு ஒளித்திடும் தேனென
உயர்ந்தோர் நட்பு உயர்வுடையதாய்

நீரின்றி வாழா உலகமாய்
அவனின்றி வாழ்வோமோ நாம்
பிரிவின் வேதனை மாய்க்குமோவென
செய்வதறியா தவிக்குமவர்
பிரிந்தே சிறுமையடையாரே.

பொருள்-

என்றும் மாறாத சொல்லுடையத்தலைவன்,இனிமையானவன்,என் தோளைப்பிரிவதை விரும்பாதவன்.
தாமரைமலரின் மகரந்தத்தை வண்டானது உறிஞ்சி மலைப்பகுதியில் இருக்கும் சந்தன மரத்தில் சேர்க்கும் தேனைப்போன்ற உறுதியானது உயர்ந்தோரின் நட்பு.
நீரின்றி உலகம் இயங்காததைப்போல நாமும் தலைவனின்றி வாழ மாட்டோம்,
பிரிவின் வேதனையைத்தாங்கமாட்டோம் என்பதால் தலைவன்  நம்மை விட்டுச்செல்ல மாட்டார்..நம்முடனே இருப்பார் என்று  ,தலைவனின் பிரிவைக்கூறிய தோழிக்கு ,தலைவி கூறியது.


இது என் சிறு முயற்சி...தொடர்வோம்..குறையிருப்பின் திருத்திக்கொள்ளும் காத்திருத்தலுடன்..

35 comments :

  1. முதல் முயற்சிக்கு வாழ்த்துகள் மா. கொஞ்சம் கூடுதல் உழைப்பைக் கோரும் பகுதியிது. அடிக்குறிப்போடு, திணை துறைப்பிரிவுகளோடு, அதற்குள் கிடக்கும் தொனி, இறைச்சிப் பொருளும் இன்னும் பல நயங்களைக் காண உதவும். தொடர்க (நம் தங்கை கிரேசின் பாதிப்பா..? எவ்வளவுதான் சொ(தி)ன்னாலும் இன்னும் மிச்சமிருக்கும் இனிப்பல்லவா நம் பழந்தமிழ் இலக்கியங்கள்.. பகுதி பிரித்துச் செய்யத் திட்டமிடுங்கள். தொடரட்டும் தொடரட்டும். வாழ்த்துகள் மா.

    ReplyDelete
    Replies
    1. என்னால் முடிந்த அளவு செய்ய முயற்சிக்கின்றேன் அண்ணா..கிரேஸ் மாதிரி மரபில் எழுத என்னால் முடியுமா என்பது சந்தேகமே...நீண்ட நாள் கனவு அண்ணா...வாழ்நாளில் அனைத்து பாடல்களையும் எழுதிட காலம் தான் துணை செய்ய வேண்டும் அன்ணா..

      Delete
    2. ஆஹா! கீதா!! :) என்னைவிட அருமையாய் எழுத முடியும் உங்களால். பதினெட்டு நூல்களையும் எழுதிட என் இனிய அன்பு வாழ்த்துகள்! கண்டிப்பாய்ச் செய்வீர்கள். :)

      அண்ணா, இப்படி மற்றவரைப் பாதித்தால் நல்லது தானே? :)) தமிழ் இனி பரவும்! தமிழ் இனி ஓங்கும்!

      Delete
    3. உங்கள் வழி தானேம்மா....நீங்க ,கீதமஞ்சரி.இன்னும் சிலர் தந்த நம்பிக்கை என்னை எழுத வைத்துவிட்டது..

      Delete
    4. போட்டின்னா இப்படி இருக்கணும். பொறாமை இல்லாத, ஒருவருக்கொருவர் “தன்னை விஞ்சிவிட்டதாகப் பாராட்டிக்கொண்டு” படைப்புகளைத் தொடர்வது.. உண்மையிலேயே மகிழ்ச்சியா இருக்கும்மா.. இவ்வகைப் போட்டிகளால் வளர்வது நம் அன்னைத்தமிழ் என்பதில் எல்லாருக்கும் மகிழ்ச்சியும் பெருமையும். இந்தப் உங்களின் சகோதர அன்போடு வளர்ந்து, வாழ்க!

      Delete
  2. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம 1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா..

      Delete
  3. சங்க இலக்கிய நுழைவிற்கு வாழ்த்துக்கள். உங்களைப் போன்றோர் மூலமாக இவற்றைத் தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு. தற்போது தேவாரம் (ஆறாம் திருமுறை அண்மையில் நிறைவு), திவ்யப்பிரபந்தம் படித்து வருகிறேன். தொடர்ந்து சங்க இலக்கியம் படிக்க எண்ணியுள்ளேன். நம் பண்பாட்டைப் பேசும், பேணும் சங்க இலக்கியங்களைப் படிக்கவேண்டியது இன்றியமையாததாகும். தங்களைப் போன்றோரின் பதிவுகள் என்ஆர்வத்தைத் தூண்டுகின்றன. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி அய்யா...சங்க இலக்கியத்தை புதுக்கவிதையாய்...எழுதும் ஆசை நீண்ட நாள் கனவு...முயற்சிக்கின்றேன் முடிந்தவரை...நன்றி..

      Delete
  4. அருமை...

    400 தானே...? உங்களால் முடியும்...

    ReplyDelete
    Replies
    1. முடிக்க முயற்சிக்கின்றேன் சார்..நன்றி.

      Delete
  5. எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது கீதா :))))))))))))

    ReplyDelete
    Replies
    1. உங்களைப்போல் மரபில் எழுத என்னால் எழுத முடியுமா என்பது சந்தேகம் தான்மா...இது நீண்ட நாள் ஆசை 20 வருடங்களுக்கு முன் நூல்களை வாங்கிவிட்டேன் ...இப்போதுதான் காலம் அனுமதித்துள்ளது..

      Delete
    2. சங்க இலக்கியத்தை மரபில் எழுத வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் கீதா. மரபில் எழுதினால் அனைவருக்கும் புரிந்து கொள்ள எளிதாக இல்லை. ..
      உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும்! துவங்கிவிட்டதே :)

      Delete
  6. அருமையான முயற்சி சகோ! நீங்கள் முயன்றால் இன்னும் மெருகேற்றிப் படைக்கலாம் சுவையான இலக்கிய விருந்து!

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி...முயற்சிக்கின்றேன் சகோ..

      Delete
  7. நான் தங்களை ஆங்கில ஆசிரியை என்றே நினைத்திருந்தேன். இந்தப் பதிவுக்குப்பின் தமிழ் ஆசிரியை என்ற முடிவுக்கு வந்தேன். தாங்கள் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்!
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. அம்மாவின் தமிழாசிரியர் பற்றி கேள்விப்பட்ட பெருமையால் தமிழின் மீது மாறாப்பற்று வந்தது...சார்.

      Delete
  8. சங்கத்தமிழ் சொல்ல வந்த தேவதா தமிழ்....அமிழ்தாய் இருக்கிறது ஆழ்ந்து முத்தெடுத்து அணிசெய்யுங்கள்..
    வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா மிக்க நன்றி...

      Delete
  9. ஆஹா அசத்துங்க அசத்துங்க
    அருமைமா,
    வாழ்த்துக்கள்,,, தொடருங்கள், நன்றி...

    ReplyDelete
  10. இனிப்பை எந்த வடிவில் தந்தாலும் சுவை மாறாது அல்லவா? ஆனால் இங்கே பதமாய் எடுத்து வாயில் ஊட்டிவிடும் வண்ணம் எளிமையாய் புதுக்கவிதையாய் இலக்கியம் பகிரப்படும்போது சுவைக்கு சொல்லவா வேண்டும்? முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் கீதா.. பாமரரும் இலக்கியம் நுகர்ந்து இன்புற நம்மால் இயன்றதைச் செய்வோம்.. நானும் சிறு தூண்டுகோலாய் இருந்திருக்கிறேன் என்பதறிய மகிழ்ச்சி தோழி.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் தமிழுக்கு நம்மால் முடிந்ததைச்செய்வோம்மா..

      Delete
  11. அருமையான முயற்சி! சகோதரி கிரேஸ்தான் முதலில் நினைவுக்கு வந்தார்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சகோ..

      Delete
  12. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சகோ...

      Delete
  13. வாழ்த்துகள் அம்மா.!
    இன்னும் எளிமையாகவும்,அதே சமயம் அடர்த்தியாகவும் எழுதுங்கள்..!
    உங்களால் முடியும்.!

    ReplyDelete
  14. வாழ்த்துகள் தோழி,அசத்துங்கள்.

    ReplyDelete
  15. வணக்கம்

    பாடலும் விளக்கமும் நன்று இன்னும் சிறப்பாக எழுத முடியும் எழுதுங்கள்....த.ம 5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்.

    இனி சங்க பாடல் பிரியர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் நீங்களும் நம்ம பேராசியை மகேஸ்வரி பாலச்சந்திரனும் போட்டிபோட்டுக்கொண்டு விருந்து படைப்பீர்கள் என நம்புகிறேன்.
    "பதினென் கீழ்கணக்கு" என்று பாடம் புகட்டபட்டதாக நினைவு.(மேல்கணக்கு என்பது வேற?)

    முயற்சி திருவினையாக்கும், உங்களுக்கு தெரியாததல்ல.

    கோ

    ReplyDelete
  17. அருமையான முயற்சி அக்கா...
    தொடருங்கள்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. சங்க இலக்கியம் புதுக்கவிதையாகப் பரிணாமம் கொள்கிறது உங்களது கைவண்ணத்தில். நன் முயற்சி.

    ReplyDelete
  19. நல்ல முயற்சி. புதுக்கவிதையாக அனைத்து சங்கப் பாடல்களையும் படிக்கும் ஆவலுடன் நானும்.....

    வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...