World Tamil Blog Aggregator Thendral: என்ன செய்து காப்பாற்ற என் பிறந்த ஊரை...

Wednesday, 6 May 2015

என்ன செய்து காப்பாற்ற என் பிறந்த ஊரை...

என்ன செய்து காப்பாற்ற எனது பிறந்த மண்ணை...?

காலையில் முருகன் கோவில் மணி ஓசையும் பஜனை மடத்தின் பாடலும் எழும்பி அனைவரையும் விழிக்க  வைக்க வைக்கும் சிறிய நகரம் அது.

நதி தனது பாதையை அந்த சிறிய ஊரில் தடம் பதிக்காத காரணத்தால் தானியப்பயிர்கள் மட்டுமே விளையும் பகுதி அது....
செக்கச்சிவந்த மிளகாய் குவியலில் ஏலம் நடக்கும் எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் [அதுவும் எங்க வீடுதான்]குடியிருந்த கமிஷன் மண்டியில் .தோட்டத்தில் 10 அடிக்கு மேல் இருந்த சுற்றுச்சுவரை தாண்டி நிறைந்து வழியும் மிளகாய்களைப்பொறுக்கி எனது ஆத்தா அவர்களிடமே கொடுக்கச்சொல்வார்கள்....அங்கிருந்த கிணற்றை பலகையால் மூடி அதன் மேலும் நிறைந்திருக்கும் மிளகாய்கள் ...
கொத்தமல்லி ,கம்பு கேழ்வரகு ,சோளம் என சிறுதானியங்கள் நிறைந்த உரக்கடையும் அப்பா நடத்தினார்.அமைதியான சிற்றூர்.

மூன்று திரையரங்குகள் மக்களின் பொழுது போக்கு சாதனமாய் இருந்தன.
எங்கள் வீட்டு கிணற்றில் நீர், கோடையிலும் இருக்கும் காணும் தொலைவில்.
குறிப்பிட்ட வீடுகளே பெரிய வீடுகளாக இருந்தன.மருத்துவமனைகள்  மிகவும் குறைவு.குடும்ப மருத்துவர்கள் தான் இருந்தனர்.வீடுகளிலேயே பிரசவங்கள் நடக்கும் .எங்கள் தலைமுறை வரை வீட்டில் தான் பிறந்திருக்கின்றோம்.ஆபரேசன் பண்ணும் வசதி தேவைப்படாத ஊராக...

ஆதி காலத்தில் கடலாக இருந்த ஊரென தொல்லியலாளர்களால் கூறப்படும் பகுதி .ஆதாரமாக பெருமாள் கோவில் அருகே ஒரு வீட்டில் பெரிய ஆமை ஓடு இருந்ததை சிறு வயதில்பார்த்திருக்கின்றேன்.உயிரினங்களின் படிமங்களை என் தோழியின் அப்பா காண்பிக்கும் போது ஆச்சரியமாக இருக்கும்.மைன்ஸ்ல வேலை என்பாள் தோழி.
மிகப்பெரிய இயந்திரங்களைக்கொண்ட அரசு சிமெண்ட் தொழிற்சாலை கலிய பெருமாள் கோவிலுக்கு போகும் வழியில் ஆரம்பிக்கப்பட்டது.பள்ளியில் இருந்து அழைத்துச்சென்று காண்பித்தார்கள்.அதற்கான மைன்ஸ்ல தான் பணி என்றாள் என் தோழி.
தூய்மையான காற்றில் இலேசாக ஏதோ கலந்த போது கூட எதுவும் தெரியவில்லை.ஊரிலுள்ள குழந்தைகட்கெல்லாம் சளியும் தும்மலும் அதிகமாகப்பிடிக்கத் தொடங்கியது.ஒருநாள் சிறுசிறு கட்டிகளாக காற்றில் கலந்த கழிவுகள் விழத்தொடங்கிய போது தொழிற்சாலையில் கழிவை வடிகட்டாமல் விடுகின்றார்கள்..எனக்கூறி மறந்தார்கள்.கிராமத்தில் சொந்த நிலத்தில் முதலாளியாக வேலைபார்த்த மக்கள்.பேண்டு சட்டை போட்டு தூக்கு சட்டி தூக்கும் கூலித்தொழிலாளியாக சந்தோஷமாக மாறினார்கள் தனது நிலத்தை தாரை வார்த்து.

ஏறக்குறைய 20 வருடங்களில் அந்த ஊர் பதிமூன்றுக்கும் அதிகமான சிமெண்ட் தொழிற்சாலைகள்   நிறைந்த தொழில் நகரமாக மாறிவிட்டது.உள்ளூரில் ஆள் கிடைக்காமல் வெளி மாநிலங்களிலிருந்தும் ஆள்  வந்து பணி புரிகின்றார்கள்.ஊரைச்சுற்றிலும் ஜிப்சம் மண்ணை தோண்டி எடுக்கும் சுரங்கங்கள் தோண்டி படுபாதாளப்பள்ளத்தாக்கை உருவாக்கியுள்ளனர்.

மண்ணை ஏற்றி விரைந்துசெல்லும் டிப்பர் லாரிகளால் நடக்கும் விபத்துகளில் அப்பகுதி மக்கள் தங்கள் உயிர்களை அடிக்கடி இழந்துகொண்டுள்ளனர்.

காற்றில் கலந்த மாசுக்களால்....ஊரிலெங்கும் மருத்துவமனைகள் மிகப்பெரிய அளவில் ...எப்போதும் நிறைந்து வழியும் மக்களுடன் காணப்படுகின்றன.எல்லா வீடுகளிலும் நுரையீரல் பாதிக்கப்பட்ட,மக்கள்...

கிணறுகளில் கண்ட நீர் இன்று படுபாதாளத்தில் .....ஆழ்துளைக்கிணறுகளால்...இல்லாமல் போய்விட்டது..

தன் அடையாளத்தை இழந்து,அமைதியான வாழ்க்கையை இழந்து,சுவாசிக்க காற்றையும் இழந்தது.இழந்ததை உணர்ந்தும் உணராமலும் என் பிறந்த ஊர் மக்களைப்பார்க்கும் பொழுது....கண்களில் குருதி வடிகின்றது.இன்னும் சிந்நாட்களில் சுற்றியுள்ள சுரங்களால் என் ஊர் தரை மட்டமாக போய்விடுமோ என்ற கவலை அரிக்கின்றது...

இரவில் ஒளிரும் விளக்குகளால் நிமிர்ந்து நிற்கும் தொழிற்சாலைகள் என் ஊரையும், ஊர் மக்களையும் உறிஞ்சி செழிக்கின்றன.

என்ன செய்து காப்பாற்ற.....என் அரியலூரை?

என் ஊரின் வளமே அதற்கு எமனானது...

6 comments :

 1. சோகம்தான் சகோதரியாரே
  வளர்ச்சியின் பின்னால் இருக்கும் ஆபத்துகள் அதிகம்
  தம 1

  ReplyDelete
 2. // என் ஊரின் வளமே அதற்கு எமனானது...//

  உங்கள் பதிவில் நீங்கள் சொல்லிய உருக்கம் என்னை நெகிழச் செய்து விட்டது. நான் எனது சிறுவயதினில் பார்த்த அந்த பசுமையான அரியலூர் இப்போது இல்லை.

  ReplyDelete
 3. எந்த ஒரு வளர்ச்சிக்குப் பின்னாலும் இவ்வாறான பின் விளைவுகள் உண்டு.

  ReplyDelete
 4. வணக்கம்

  எல்லாம் வியாபாரம்....த.ம3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. சிரமம் தான்...

  பல ஊர்களும் இதே நிலைமை தான்...

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget