World Tamil Blog Aggregator Thendral: நிலவு தேயும் நேரம்

Sunday, 21 September 2014

நிலவு தேயும் நேரம்


                         

                     வீடே பரபரன்னு இருக்கின்றது….வினயாவின் வரவிற்காக…அந்த வீட்டின் செல்ல மகள் அவள்..வினயாவின் பாட்டி லெச்சுமி, இட்லிக்கடை வியாபாரத்துடன்  பேத்திக்கு பிடிக்கும்னு பணியாரமும், பலகாரங்களும்  சுட்டுக்கொண்டிருந்தாள்…அம்மா பவானியோ மகளுக்காக அறையை சுத்தம் பண்ணிக்கொண்டிருந்தாள்…பின்னே…எவ்ளோ பெரிய படிப்பு ….குடும்பக் கஷ்டத்த நினச்சு புள்ள இராப்பகலா கண்ணுமுழிச்சுல படிச்சா. டாக்டரருக்கு தான்  படிப்பேன்னு நல்ல மார்க்கு வாங்கி,இப்ப டாக்டராவும் ஆயிடுச்சுல்ல…அவள் மட்டுமல்ல வினயா ஆசையா வளர்த்த செடிகளும் அவளுக்காய் காத்திருந்தன...வினயா வர்றான்னு சொன்னதும் இந்த டாமி  கூட வால ஆட்டிக்கிட்டு வாசலயே பாக்குது....
சங்கர் தலகால் புரியாம ஓடிஓடி வேல பார்த்தான் .லெட்சுமி தன் மகன ஆச்சரியமா பார்த்தா…நம்ம புள்ளயா இவன்..ஊர்ல ரௌடின்னு பேரு வாங்கி யாருக்கும் அடங்காம திரிஞ்சவன்.அத  நினச்சு கவலப்பட்டவள பாத்து ஒரு கால்கட்ட போட்டுட்டா சரியாபோகுமுன்னு எல்லோரும் சொன்னாகன்னு நம்பி தேடித்தேடி பவானிய அவனுக்கு கட்டிவச்சா.பிறகும் அவன் திருந்தல…நித்தம் போராட்டம் தான்..

                           ஆனா  தேவதை போல அவனுக்கு பிறந்த குழந்தைய பாத்ததும் என்ன ஆச்சுன்னு தெரியல .மந்திரம் போட்ட மாதிரில்ல மாறிட்டான்.கடைக்கு சாப்பிட வர்றவங்க கூட ஆச்சரியமா கேட்டாங்க..நம்ம சங்கரா இதுன்னு. பொம்பள புள்ள பிறந்திருக்கே, இவன நம்ப முடியாது, நாம தான் அதுக்கும் பொறுப்புன்னு உடம்புக்கு முடியாத நிலையிலும் கடைய நடத்தி வந்தாள்…அன்பு பகட்டை வீழ்த்தும் என்பது போல வழக்கமா வரும் வாடிக்கையாளர்கள் பெரிய ஓட்டல் பக்கத்துல இருந்தாலும் அங்கே போகாமல், இவளின் அன்பிற்காகவும்,பஞ்சு போன்ற இட்லிக்காகவும் இவள் கடைக்கே வந்ததால் ஓரளவு சமாளிக்க முடிந்தது…மகனும், மருமவளும் ஒத்தாசை செய்ததில் அவளுக்கு மனக்கவலையும் குறைந்தது.
                             பொறுப்பில்லாம திரிஞ்சவன வினயாக்குட்டி பொக்கை வாய்ச் சிரிப்பால் கொஞ்சம்கொஞ்சமா மாற்றி குடும்பத்துடன் இணைத்து விட்டாள்..அவளுக்குப்பின் வேறு குழந்தையும் பிறக்காததால் குடும்பமே அவளைக்கொண்டாடியது.குணத்தில் தன் அம்மாவை போல அவளும் தங்கம்…அவ பேசின மொத வார்த்தையே” ”ப்பா”தான்…அத கேட்டு அவன் குதிச்ச குதி தாங்க முடியாம கிண்டல் செய்தார்கள் .கீழயே குழந்தைய விடாம தூக்கிக் கொண்டே அலைவான் .சட்டையைப்போல வினயா அவன் மேல் எப்போதும் அட்டையாய் ஒட்டிக்கொண்டு இருப்பாள்....

         …ஒருமுறை குழந்தை கையில அடிபட்டுடுச்சுன்னு வீட்டையே இரண்டாக்கினான்… சின்ன காயத்துக்கா இம்புட்டு ஆர்பாட்டம்னு மாமியாரும் மருமகளும் சேர்ந்துக்கிட்டு அவன வம்பு செய்தார்கள்..மகள் மேல் அவன் உயிரையே வச்சுருந்தான்..எவ்ளோ கஷ்டப்பட்டாலும் அவ கேட்டதெல்லாம் வாங்கித் தருவான்.அவளால் வீட்டிற்கு செடிகள் வந்தன.தெருவில் கண்கூடத் திறக்காமல் கிடந்த நாய்க்குட்டிய தூக்கிட்டு வந்தா..அவ இருக்குற இடமே அன்பால நனையும்.திருச்சில அவ படிச்ச பள்ளிக்கூடத்துலயும்  அவ செல்லம் தான் எல்லா டீச்சருக்கும்.உண்மையில வினயா வரம் தான் இந்த வீட்டிற்கு .அவ சென்னையில தான் படிக்கப்போறேன்னு பிடிவாதமா இருந்தப்ப மனசில்லாமத்தான் சம்மதிச்சான்.கண்ணுக்குள் பாதுகாத்து வளர்த்த செல்லம்ல. அவள விட்டுட்டு இருக்க முடியாதேன்னு தவிச்சான்.ஆனா அவ அப்பா மனசக் கரைச்சு சம்மதம் வாங்குனப்ப பவானியே ஆச்சரியப்பட்டா..பட்டாம்பூச்சியென வீட்டில் பறப்பாள் வினயா.. 

            அவ அழகுன்னு  முகம் வருடி மகிழும் போதெல்லாம் சங்கரின் மனதில் எட்டிப்பார்க்கும் ஆற்றமுடியாத ரணமொன்று எழும்..அத பாக்க விரும்பாதவன் போல தலய வேகமா ஆட்டி கவனத்த மாத்திக்குவான்.
            ஆச்சு, வினயாவும் வளர்ந்து இப்ப எல்லோரும் பாராட்டும் படி படித்து டாக்டராயிட்டா…இனிமே குடும்பத்துல கவலையே இல்ல..ன்னு நிம்மதி பெருமூச்சு விட்டா லெச்சுமி…
               சென்னையிலிருந்து திருச்சி செல்லும் அரசுப் பேரூந்தில் வினயா தன் பெட்டி படுக்கைகளுடன் ஏறி அமர்ந்தாள்..கூடவே பெரம்பலூர் வரை தோழி வாணி வருவதால் அப்பாவ கூப்பிட வரவேண்டான்னு சொல்லிட்டா…இருவரும் ஏறி அமர்ந்தனர் .. தோழிகளை விட்டுப்பிரியும் வேதனையுடன் கிளம்பினர் வினயாவும் ,வாணியும்.வழக்கமா எட்டு மணிக்கு புறப்படும் பேரூந்து அன்று பத்துமணிக்குதான் கிளம்பியது..சங்கர் அதற்குள் நாலு தடவ போன் பண்ணிட்டான்…கவலப்பட வேண்டாம்பான்னு சொல்லி தேத்துறதுக்குள்ள அப்பாடான்னு ஆச்சு…ஒருபக்கம் பெருமையாவுமிருந்துச்சு அப்பாவின் அன்பை எண்ணி....
                  சன்னல் வழியே நிலவு பின் தொடர்வதை ரசித்தவளின் எண்ணங்களும் அலையென எழுந்தன.  வருடங்கள் ஓடியதே தெரியவில்லை…அதிக மதிப்பெண்கள் வாங்கியதால சென்னைல அரசு கோட்டாவுல ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியிலேயே இடமும் கிடச்சுது, கடைக்கு சாப்ட வர்ற வாடிக்கையாளர் பணம்  கொடுத்து உதவ, ஆசபட்ட படி  டாக்டரும் ஆயாச்சு..இனி ஹவுஸ்சர்ஜன் ஒரு வருடம், அப்றம் மேல படிக்கனும்னு எண்ணங்கள் அலைபாய்ந்தன..கிராமத்து மக்களுக்கு சேவை புரியனும் என்பதே அவளின் இலட்சியமாய் இருந்தது.
                       இனி குடும்பத்த நல்லா பாத்துக்கனும்.பாட்டிகிட்ட  இனியும் அடுப்புல வேகவேண்டாம்னு கண்டிச்சு சொல்லிடனும் ...இட்லி கூட சில நிமிடங்களில் வெந்துடும் .ஆனா பாட்டி இந்த குடும்பத்துக்காக இன்னும் வெந்து கொண்டிருப்பது அவளுக்கு கண்ணீரை வரவழைத்தது நினைக்கும் போதெல்லாம்.
                       திருச்சி பள்ளியில் படித்த தோழிகளை எல்லாம் பாக்கனும் தோணும்போதே திடீரென்று பன்னிரண்டாம் வகுப்பில் ஒண்ணா படிச்ச சிவாவின் நினைவு நெருஞ்சி முள்ளாய்…வந்தது..ஒருதலைக்காதலால் இவளைப்பாடாய் படுத்தியவன்.இவள் அன்பா ,கோபமா..தன் டாக்டர் இலட்சியத்தை எவ்ளோ சொல்லியும் கேட்காமல் டார்ச்சர் கொடுத்தான்..அப்பாகிட்ட சொன்னா பிரச்ன பெரிசாயிடுமேன்னு சொல்லாம மறைத்துவிட்டாள்.அப்பாவின் பழைய வாழ்க்கையும் அவன் கோபத்தையும் தெரிந்ததால் சொல்ல பயந்தாள்.அம்மாகிட்ட சொன்னா  பயப்பட்டு படிப்ப நிறுத்திடுவாளோன்னு மனசுக்குள்ளயே வச்சுகிட்டா…சிவா கொஞ்சம் பெரிய இடத்து பையன்.  பள்ளியில அவனுக்கு நல்ல பேர் இல்ல..பணம் அதிகம் இருந்ததால் அவன சுத்தி ஒரு ஜால்ரா கூட்டமே இருக்கும்.எந்த குறிக்கோளும் இல்லாம பொழுதுபோக்கவே பள்ளிக்கு வந்தான்.. நினச்சத சாதிக்கனும்னு பிடிவாத குணமுள்ளவன் .அவன் தொல்லை  தொண்டைல சிக்கிய மீன் முள்ளாய் உறுத்தியது.அவனுக்காகவே..சென்னையில தான் படிப்பேன்னு அடம்புடிச்சு சேர்ந்தா.அடிக்கடி அவன் இவள பத்தி விசாரிக்கிறதா பள்ளித் தோழிகள் கூறும்போதெல்லாம் எரிச்சலாருக்கும்.
               …பெரம்பலூர்ல வாணியும் இறங்க, மீண்டும்  ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழும்போது திருச்சி பேரூந்து நிலையத்தை வண்டி இரண்டு மணிநேரம் தாமதமாய் அடைந்தது.பெட்டியெல்லாம் எடுத்துக்கொண்டு இறங்க தயாரானாள்.ஆட்டோ பிடிச்சு போயிடலாமான்ற சிந்தனையிலேயே இறங்கியவள் ,இவளை நோக்கி வேகமா வந்த சிவாவைப்பார்த்து விட்டாள் இவன் எங்கே இங்கன்னு எரிச்சல் எழுந்தது மனதில்.வீட்டுக்கு சீக்கிரமா போய் அப்பா,அம்மா,பாட்டி,டாமி எல்லோரையும் பாக்கனும்னு மனசு துடித்தது.
வினயா,வினயான்னு அழைத்துக்கொண்டே சிவா அருகில் வந்தான் .கண்டுக்காதவள் போல ஆட்டோவைத்தேடினாள்.மீண்டும் அழைக்க ,வேறுவழியின்றி என்ன என்றாள்..கொஞ்சம் பேசனும் நில்லு என்றான்,நான் வீட்டுக்கு பொகனும் உனக்கு வேற வேல இருந்தா பாரு.என்றாள்.இப்பவாவது நீ மனசு மாறிட்டியா வினயா என்றான்..நான் தான் உன்கிட்ட சொன்னேன்ல…நான் பெரிய டாக்டராகனும்,அது தான் என் லட்சியம்னு .நீ இன்னும் மாறவே இல்லயான்னு கோபமா பேசி கிளம்பினா .. வினயா போகாத நில்லு.எத்தன வருசமா உன் பின்னாலயே சுத்துறேன் .என்னடி நினச்சிட்டு இருக்குற உன் மனசில.பெரிய அழகின்னு நினப்போ.கஞ்சிக்கு வழியில்லனாலும் இந்த வீராப்புக்கொண்ணும் குறைச்சலில்ல.இன்னைக்கு ஒரு முடிவோடதான் வந்துருக்கேன்…என் காதல ஏத்துக்குவியா மாட்டியான்னு மிரட்ட ஆரம்பித்தாை.அடிவயிற்றில் ஏனோ சில்லுன்னு ஒரு அச்ச உணர்வு கிளம்பியது ,வினயாவிற்கு …மாட்டேன்னு  கிளம்பியவ கைய பிடிச்சு சிவா கோபமா இழுக்கவும்..
                      மகள் வர நேரம் ஆனதால் பொறுமையிழந்து சங்கர் மகளக்கூப்பிட பேரூந்து நிலையத்தில் நுழைந்து வினயாவைப் பார்க்கவும் சரியாயிருந்தது.யாரோ ஒருவன் வினயா கையை பிடிச்சு இழுப்பதைப் பார்த்து திடுக்கிட்டான். வினயாவும் அப்பாவைப் பார்த்ததும் மனசில தெம்பு வந்தவளாய், அப்பான்னு சத்தம் போடவும் கையை விட்ட சிவா ஏதோ ஒன்றை தூக்கி எறிந்து விட்டு  ஓடினான்.
                       கண் மூடித்திறக்கும் நேரத்தில் தன் மேல் ஏதோ பட்டது போல் உணர்ந்து வினயா முகத்தை மூடி அய்யோன்னு துடித்து கீழே விழுந்து புரண்டாள்.ஒடிந்த கொடியென.சிவா வேகமாக ஓடியதை பார்த்துக்கொண்டே என்னம்மா ஆச்சுன்னு சங்கர்  பதறி அவளை நோக்கிப்பாய்ந்தான்.  …தேவதையென சீராட்டிய மகள்  அமிலத்தில் குளித்து வெந்து துடி துடித்தாள் .உடல் முழுதும் அமிலத்தின் எரிச்சல் தாங்காது,சிவந்த தோல் வெந்து கருக ஆரம்பித்தது…எரிச்சல் தாளாமல்  அம்மாமா... எரியுதேன்னு கதறினாள்....சின்ன காயத்திற்கே துடித்தவன் பெற்ற மகளின் கோலம் கண்டு  என் செல்லத்த பாழாக்கிட்டானேன்னு.அலறினான் . .அவனின் கதறல் விண்ணை முட்டுவது போல் பேரூந்து நிலையமே அதிர்ச்சியில் உறைந்தது …மக்கள் அனைவரும் நடந்ததை உணர சில நொடிகள் ஆயின. செய்வதறியாது நின்றது.மரண வேதனையில் துடித்தவளை ஆட்டோவில் அள்ளிப்போட்டுக்கொண்டு அரசு ஆஸ்பத்திரி நோக்கி பறந்தான்

                                 சங்கரின் மனதில் ஆழத்திலிருந்து மேலெழுந்த ரணத்தில் பாதிவெந்து போன ஒருமுகம் ஆங்காரமாய்ச் சிரித்தது.

5 comments :

  1. பாதி வெந்துபோன ஒரு முகத்தை எழுத்து நன்றாக உணர்த்தியது. நன்றி.

    ReplyDelete
  2. மனம் கனக்கிறது சகோதரியாரே

    ReplyDelete
  3. மனம் கனக்கச் செய்யும் பகிர்வு...
    கதை நன்று..

    ReplyDelete
  4. நேர்த்தியான கதை

    ReplyDelete
  5. இப்படித்தான் இருக்கும் என மனம் முடிவு செய்திருந்தாலும் வலிக்கத்தான் செய்தது...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...