World Tamil Blog Aggregator Thendral: பளிங்காநத்தம்...பள்ளியும் மேலப்பழூர் பள்ளியும்....

Wednesday, 3 September 2014

பளிங்காநத்தம்...பள்ளியும் மேலப்பழூர் பள்ளியும்....

சிறுவளூரைத் தொடர்ந்து....

1990முதல்1993 வரை எனது ஆசிரியப்பணி பளிங்காநத்தம் என்ற ஊரில் தொடர்ந்தது..அங்கு இருந்த சில வருடங்கள்...
 வாழ்வில்மறக்க முடியாதவை..
படத்தில் என்னுடன் பணிபுரிந்த பிரேமா,பாஸ்கா,அமலி,குணசீலி,ஆகியோருடன்

அந்த ஊருக்கு பேரூந்து எப்பவாவது வரும் காலையில் ஒருமுறை மாலையில் ஒருமுறை..மட்டும்...கல்லக்குடியில் இறங்கி 3 கிமீ நடந்தே செல்ல வேண்டும் .மாதமொருமுறை நடக்கும் கூட்டத்திற்கு 7 கிமீ செல்ல வேண்டும் ..பெரும்பாலும் நடைதான்...இப்போ பேரூந்து வசதி உள்ளது...
அங்கு மாணவர்கள் பெரும்பாலோர் சல்லிக்கட்டு செல்வார்கள்...

ஒருமுறை 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடிதம் எழுதும் பயிற்சி...40மாணவர்களுக்கும் அஞ்சலட்டை வாங்கிக் கொடுத்து என் தோழிக்கு மடல் எழுத வைத்தேன்...தபால்காரர் ஏன்மா என்ன வேல வாங்கனும்னு முடிவு பண்ணிட்டியான்னு சிரித்துக்கொண்டே...முத்திரை குத்தினார்...அதில் என்ன சிறப்பெனில் அத்தனைக் குழந்தைகட்கும் அவள் பதில் எழுதி அனுப்பியது தான்...பாவம்...கை ஒடிந்தது என்றாள் சிரித்துக் கொண்டே...

அடுத்ததாக

என் வாழ்வின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்த பள்ளி திருமானூர் ஒன்றியத்தைச் சார்ந்த மேலப்பழூர் ....ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி....
பள்ளிக்குள் நுழைந்து விட்டால் போதும் அத்தனை கவலைகளும் பறந்து விடும்....அன்பான மாணவர்கள்...பிரியமான ஆசிரியர்கள்...வரும் வழியெல்லாம் நலம் விசாரிக்கும் கிராம மக்கள்...
திருமானூர் ஒன்றியத்தில் அது தான் பெரிய பள்ளி..

வருடம் தவறாமல் மாணவர்களுடன் சுற்றுலா....

சிவராஜ் தலைமையாசிரியருடன்
 பள்ளி ஆசிரியர்களுடன்
 பள்ளிக்கண்காட்சியில்
 பள்ளி ஆண்டுவிழாவில்...பொம்மலாட்டம் ...


ஒரே குடும்பம் போல் அத்தனை ஆசிரியர்களும் ஒற்றுமையுடன்...எப்போதும் இனி கிடைக்காது அந்த காலம் போல் என ஒவ்வொருவரும் கூறும் படி...
அங்கு படித்த மாணவன் ராமகிருஷ்ணன் இப்போது என் முகநூல் நண்பனாக....அயல்நாட்டுப்பணியில்....! பெருமையுடன் பேசுவேன் அவனுடன் வேறென்ன வேண்டும் ஒரு ஆசிரியருக்கு..

கீதா என்ற மாணவி அறிவியலில் அத்துபடி எந்த வார்த்தை எந்த பக்கத்தில் உள்ளதென கூறிவிடுவாள் ..அவள் இப்போது கணிதப்பட்டதாரி ஆசிரியர்...எப்போதும் அன்பாக பேசும் குழந்தைகள்..என்.வாழ்வின் சொத்து

கோபிநாத் என்ற மாணவனுக்கும் படிப்புக்கும் ஏக தூரம்   படிக்க பிடிக்காமல் சென்னைக்கு ஓடியே போய் விட்டான்..ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்த அவனிடம் என்னடா பண்ண எனக் கேட்ட போது ஒரு மளிகைக் கடையில் பொட்டலம் போட்டேன் டீச்சர் அப்றம் ஓட்டலில் மேசைத் துடைத்தேன்னான்...மடிப்புக் கலையாமல் சட்டை அணியும் பழக்கம் உள்ளவன்...மனதிற்கு வருத்தமாய் இருந்தது ..இப்போது மளிகைக்கடை வைத்துள்ளான் என கேள்விப்பட்டேன்...அவன் எனக்கு எழுதிய கடிதம் இப்போதும் பொக்கிஷமாய் என்னிடத்தில் ...நீங்க சொன்னதெல்லாம் இப்ப நினச்சு பார்க்கிறேன் என்பான் ...

சென்னையில் பொறியியலாராய் வேலைப்பார்க்கும் சிலம்பரசன்,ராணுவத்தில் பணி புரியும் சரவணன்,என்னை தெய்வமாகவே எண்ணி அன்பைப்பொழியும்...செல்வகுமார்..என..என் பிள்ளைகள் என்னுடனே...இருக்கின்றனர் ....

கொடைக்கானலில்...
 ஆழியாரில்.....
 பவானிசாகர் அணைக்கட்டில்...
 ஊட்டியில்....
 கன்னியாக்குமரியில்...


ஒருநாள் தஞ்சை வரும் பேரூந்தில் ஒரு பையன் எனக்கு அடையாளம் தெரியவில்லை ஆனால் டீச்சர் நல்லாருக்கீங்களா என்றான்...எப்படிப்பா மறக்காம இருக்க என்றேன்...ஒருமுறை சுற்றுலா செல்லும் போது பஸ்ஸில இடம் கிடைக்காம நின்னுகிட்டு இருந்தேன் நீங்க உங்க பக்கத்துல கூப்பிட்டு உக்கார வச்சீங்களே டீச்சர் உங்கள எப்படி மறக்கமுடியுமென்றான்....சின்ன செயல் அவன் மனதில் நான் நிரந்தரமாய்..இடம் பிடிக்கக் காரணமாய்....
என்ன செய்றப்பா என்றேன்...ராணுவத்துல இருக்கேன் என்றான்...மகிழ்வாய் உணர்ந்தேன்...!

 ஒரு முறை நண்பகல் நேரம் பள்ளிக்கு பள்ளிக்கல்வி இயக்குநராக இருந்த திரு .விஜயக்குமார்.அவர்கள் வந்திருந்தார்கள்...நான்   4ஆம் வகுப்பில் பதட்டத்துடன் ...உள்ளே நுழைந்ததும்... மாணவன் சங்கிலிமுருகன் என்பவனிடம் அவன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தில் மணி என்ன எனக்கேட்க அவன் கூலாக 1மணி என்றான்....இல்லையே என்க..என் கடிகாரத்துல இதான் சார் டைம் என்றான்..நானோ எதிர்த்து பேசுறானே எனத்தவிக்க, அங்கு இருந்த யானை முகமூடி ஒன்றை மாட்டிக்கொண்டு ஒரு மாணவி நடித்தாள்...சரியா பேசாம சிரித்துக்கொண்டே இருக்கான்னு நான் சிரிக்காம சரியா சொல்லென அதட்டினேன்...அவரோ....சிரிக்கத்தானேம்மா பள்ளி என்றார்...அவரை விடாமல் மாணவர்கள் ...பேசியதைப்பார்த்து...பசியக்கூட மறந்துட்டாங்களேன்னு வியப்படைந்து சென்றது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.....

ஆசிரியர்களும் மாணவர்களாய் வாழ்ந்த பொற்காலங்கள் அவை.....என் வாழ்வில் பிரியாத மக்களுடன்....இன்றும்...
                                                                                                                      
                                                                                                                                  தொடரும்

2 comments :

  1. ஆசிரியர் தின வாழ்த்துகள். திருமதி Geetha M - ஆசிரியை அவர்களின் அற்புதமான பதிவு. அவர்களது அனுபவம் மிக மிக அருமை. மிகவும் மகிழ்கிறேன். எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் திருமதி Geetha M. நன்றியுடன் எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

    ReplyDelete
  2. நம் நாடுகளில்தான் உடனுக்குடன் கைதட்டுவார்கள். மேலை நாடுகளில் முழுநிகழ்ச்சியும் முடிந்தவுடன் எழுந்துநின்று வெகுநேரம் கைதட்டுவார்களாம்... அதுபோலத்தான் நல்ல பதிவுகளின் தொடர் முடியட்டும் என்று காத்திருப்பது வழக்கம். மிக அருமையான தொடர் அனுபவத் தொகுப்பு. “ஒரு நல்லாசிரியரின் நல்ல வரலாறு“ தொடரட்டும் என்று காத்திருக்கிறோம்.. தொடருங்கள்.. சிறுநூலாக வரும் அளவிற்கு அடர்த்தியான அனுபவங்கள்.. வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...