World Tamil Blog Aggregator Thendral

Sunday, 6 July 2014

மரத்தின் குரலாய்

எனக்கும் மண்ணுக்குமான
 உறவை மனிதன்
தீர்மானிக்கத் துவங்கிய
கணத்தில்..........
 பிறந்ததே
பாலை

கானல் நீர்

கானல் நீரணைய
வாழ்வில்
ஈரமின்றியே உலர்தலாய்.
பெண்ணின் மனவெழுச்சிகள்

Friday, 4 July 2014

மலிவுவாக்கம்-சென்னை

இளகா மனதால்
இளகிய கட்டிடம்
சீட்டுக்கட்டாய் சரிய
பந்தயப் பொருளாய்
மனித உயிர்கள்.......!

Thursday, 3 July 2014

மனம்


அநியாயங்கள்
தலைவிரித்தாடுகையில்
தட்டிக்கேட்கவியலா
இயலாமையில்
கொதித்தடங்கும் பாலாய்
மனம்...!

Wednesday, 2 July 2014

விடியல்

இயற்கையின்
தியானம் முடிந்ததோ..!

சூழல்

இலவசங்கள் அள்ளிக்கொடுத்தும்
இல்லை விருப்பம் சேர
நாற்றமெடுக்கும் சூழலால்!

வயிற்றில் செப்டிக் டேங்கைக்
கட்டிக்கொண்டே வாழ நேரிடுகின்றது
புற வாழ்வில்......!

பள்ளி மாணவர்களும்
பயணிக்கும் பெண்களும்...!

வீதி கலை இலக்கியக் களம்


வீதி கலை இலக்கியக் களம்-சூன் மாதக் கூட்டம்
-----------------------------------------------
29.06.14 அன்று வழக்கம் போல் ஆக்ஸ்போர்ட் உணவகக்கலைக் கல்லூரியில் மிகச் சிறப்புடன் நடந்தது.
இம்மாத கூட்ட அமைப்பாளர்கள் என் தோழியும் உதவிக்கல்வி அலுவலருமான திருமிகு.ஜெயலெக்‌ஷ்மியும்,திருமிகு.வீ.கே.கஸ்தூரிநாதன் அவர்களும் .
மிக பரபரப்பாக கூட்டத்தை மிகச் சிறப்பாய் நடத்த வேண்டுமென திட்டமிட்டு நினைத்தபடியே மிகமிகச் சிறப்பாய் முடித்தார்கள் .
நுழையும் முன்னே நெல்லிக்கனி தந்து அதியமானாய் ஆகி,அழகாக வரவேற்றார் ஜெயலெக்‌ஷ்மி ,தலைமையாக முன்னாள் பேராசிரியர் துரைபாண்டியன் அவர்கள் .தமிழ் அருவியாய் கொட்டியது அவரிடமிருந்து.அவர் மகளிடம் உங்க அப்பாகிட்ட பாடம் படிக்கலயேன்னு கவலை வருதுன்னேன்.

முந்தையக் கூட்ட அறிக்கையை வள்ளிக்கண்ணு அவர்கள் வாசித்தார்.
கவிதைகளால் கலக்கினர் தமிழ்ச்செல்வன்,செல்லத்துரை,ரேவதி மூவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல்
தமிழ்ச்செல்வனின் வரிகளாய்..
       ” எந்திரம் உலவும் பூமி
         இதயமும் இல்லை சாமி
          ......பந்தமோ சிறிதும் இல்லை
                பசித்தவர் இரும்பை உண்பார்...”
என தொலைந்து போன மனித நேயத்தைச் சாட
அடுத்துவந்த செல்லத்துரையோ
              ஜென் துறவி,இரவைத்தேடி,நிலவைப் பின் தொடர்பவன்,வந்தது யார் என கவிச்சரம் தொடுத்தார்...
                 ” ஒளிரும் சூரியன் கூட
                   தோற்றே போகிறது
                     இரவிடம்...”
என்றவரைத் தொடர்ந்து வந்த ரேவதியோ

தலைவிதி,காதலிக்க ஒருவன் என முழங்கினார்
   ” உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்
    காதல்வரின் கவலைகள் மெய்விட்டோடுமா?”
என்பதுடன் கல் உடைக்கும் சிறுமியின் என்ணங்களை வார்த்தை சரமெடுத்துச் சாடுகிறார்.......

நூல் அறிமுகமும்,விமர்சனமுமாய்...புத்தகப்பிரியை ராகசூர்யா முகிலின் நாவலை கொஞ்சும் மழலைத் தமிழில் அழகாக அறிமுகம் செய்தார்.விரிந்த அவரது பார்வையில் நூலின் சிறப்புகள் அனைத்தும் அருமையாக விளக்கினார்.

சுரேஷ்மான்யாவின் சிறுகதை-தாமரை
வாசித்த நிமிடங்களில் எங்களை கதைக்குள் கொண்டு செல்லும் திறனுடன்....உவமையாக தாமரை என்ற பெண்ணை வர்ணிக்கையில்

“என்ன ஒரு பனைமர அழகு,நெடுநெடுவென வானம் தொடுறாப்புல.குச்சியில கொடிசுத்தி பூ பூக்குறாப்புல என்ன அழகா வர்றா!அழகு மீனாட்சியே நேர்ல வர்றாப்புல ...”

தெய்வீக அழகை அவர் அந்த பெண்ணின் அழகை வர்ணிப்பதை

கவிஞர் ராசிபன்னீர்செல்வம் அவர்கள் பிரம்ம பிரேமம் என்ற வார்த்தையினால் விமர்சித்து,அழகிய நனவோடை உத்தியைக் கையாண்டு லா.ச.ரா.வின் அபிதாவின் நாவலுக்கிணையான நாவலைப்படைத்துள்ளதாகக் கூறினார்.

கவிஞர் சுவாதியால் அறிமுகம் செய்யப்பட்ட பஷீர் அலி அவர்கள் பழங்கால நாணயங்களைப்பற்றி அறியச் செய்திகளைக்கூறி வியப்பில் ஆழ்த்தினார்.

தேர்ந்தெடுத்த உலகசினிமாக்களை புதுகைக்கு அறிமுகம் செய்யக்கூடிய இளங்கோ அவர்கள்.
பிரேசில் நாட்டுப்படம் பற்றிய அருமையாகக் கூறிய விதம், திரைப்படத்தை நேரில் காணும் ஆவலைத்தூண்டியது.

கோதுமைப்பால் சுடச்சுட தந்து ,இனிப்பு காரம் பிஸ்கட் நிறைந்த பையில் இறையன்புவின் சிற்பங்களைச் சிதைக்கலாமா?புத்தகத்தையும் அளித்து அன்பால் திக்குமுக்காட வைத்துவிட்டார் என் தோழி .......மகிழ்வுடன் எல்லோருக்கும் தரணும் என்ற மனநிறைவோடும் அவர் அமைத்த இம்மாதக்கூட்டம்,கஸ்தூரிநாதன் அவர்கள் நன்றிகூற இனிதாய் முடிந்தது







Tuesday, 1 July 2014

வீரமங்கை வேலுநாச்சியார்

வீரமங்கை வேலுநாச்சியார்
தமிழகம் மறந்த வீரப்பெண்மணி.நினைத்து போற்ற வேண்டிய பெண்மணி.

தற்செயலாக என் சகோதரி புவனாவேலு நாச்சியார்நாவலைத் தந்து இந்நாவலைப்படித்து பார் என்றார்கள்.படித்து கொண்டிருக்கும் போதே என்னுள் உறைந்து என்னை சீர்படுத்திய தாயவள்.

கி.பி 1730ல் பிறந்து ,கி.பி1796வரை வாழ்ந்து மறைந்த மாணிக்கம்.

எனது இளமுனைவர் ஆய்விற்காக ஜீவபாரதி எழுதிய வேலுநாச்சியார் நாவலையே ஆய்வு செய்தேன்.அவள் கால் பட்ட இடங்களில் ,வாழ்ந்த இடங்களில் நான் நின்றபொழுது காற்றாய் அவள் நிறைந்திருப்பதை உணர முடிந்தது.அவளை உங்களுக்கு அறிமுகம் செய்வதை எண்ணி பெருமைப்படுகின்றேன்.



Monday, 30 June 2014

28.06.14 சென்னையில் கட்டிடம் சரிவு

பள்ளிக்கூடம் போகல
பாடங்களும் படிக்கல
கட்டி வைத்த கட்டிடமோ
காலம்காலமாய் அசையாமல்
மலை போல நிக்குது...

கஷ்டப்பட்டு காசுகட்டி
பட்டம் வாங்கி
படிச்சவுக கட்டுமுன்னே
சிதையுது என்ன கல்வியோ?
என்ன நேர்மையோ தெரியல!

Saturday, 28 June 2014

புரட்சித் தென்றலாக மாற அழைக்கும் விருது

தென்றல் சமூக அறக்கட்டளை
முப்பெரும் விழா
நாள்:27.06.14
இடம்:ஓட்டல் பாம்குரோவ் -சென்னை
காலம் ;மாலை 4 மணி

இனியதான மாலைப்பொழுதில் நீதியரசர் எஸ்.ஜெகதீசன் அவர்களின் பொற்கரத்தால் எனக்கு” புரட்சித் தென்றல்” விருது பெற்றது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும்.மனம் நெகிழ்ந்துள்ளேன்.பரிசு வாங்கியதால் அல்ல நான் பெற்ற விருதை தானே பெற்றது போல் மகிழ்ந்து பாராட்டிய உள்ளங்களை எண்ணி....

என் கவிதைகளுக்கான ஓர் அங்கீகாரமாகவே இவ்விருதைக் கருதுகின்றேன் . நான் புரட்சியாய் செய்ய வேண்டுமென அளிக்கப்பட்டுள்ள பாராட்டாக ஏற்கின்றேன்.இவ்விருதிற்கு தகுதியானவளாக என்னை இனி மாற்றி கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நான்.

இவ்விருதை என் பெற்றோர்களுக்கும் ,என் நலம் விரும்பும் தோழமைகளுக்கும் சமர்ப்பிக்கின்றேன்.
நன்றி


Wednesday, 25 June 2014

என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக 27.06.14





வாழ்வில் சந்தித்த வேதனைகளைப் படிகல்லாக மாற்றி உள்ளேன் என்பதனை உணர்கின்றேன்.இதற்காக பல நல்ல உள்ளங்கள் என்னைக் கீழே விழுந்து விடாத படி எழ வைத்துள்ளன.இதற்கு நான் தகுதியானவளாக இனிதான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்கின்றேன்.

கவிஞர் பொன்னையா அவர்கள் கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த போது மிகவும் தயங்கினேன்.உங்களால் முடியும் என்றே என்னை ஊக்கப்படுத்தினார்.நிகழ்வில் கலந்து கொண்ட போது அனைவரும் மிகவும் நன்றாக வாசித்தீர்கள்மா என பாராட்டிய போது கூட என்னை ஊக்குவிக்கும் சொல் மலர்கள் என்றே எண்ணினேன்.

தென்றல் சமூக அறக்கட்டளை சார்பில் விழா எடுக்கிறார்கள் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்ற போதும் அழைப்பதால் போகலாம் என்று நினைத்தேன் ஆனால் நேற்று வந்த அழைப்பிதழை
நம்ப முடியாமல் இன்னும் பார்த்துக் கொண்டுள்ளேன்.
நான் வளர என்னை ஊக்கப்படுத்தும் நிகழ்வாகவே நாளை விழாவை என்ணுகின்றேன்..

குழவி2

ஒருமுடி இழுப்பட்டாலே
ஓவென அலறும் மனம்

இரு கையால்
கொத்தோடு பிடித்து
 மிதிமிதியென மிதித்து
புத்தாடையை நனைத்து
 முகத்தில் உமிழ்ந்து
உண்ணும் உணவை எத்தி
அழவும் கூடாதென
ஆட்டிப்படைக்கிறது
பொக்கைவாய்ப்பூ மலர.
மனதைத் திருடியபடி.....

குழவி

தளர் நடை
தடுமாறியதால்
பிறைச்சிரிப்பு
பிளவுண்டதோ..!

Tuesday, 24 June 2014

தமிழ்



தமிழ்
------------

அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாகின்றது.கவலைப்படுவதா?மகிழ்வதா?தமிழும் முழுதாய் அறியாமல்,ஆங்கிலமும் முழுதாய் அறிய முடியாமல்..கற்கும் எதிர்கால சந்ததியின் நிலை.....?!

நடந்த பொதுத்தேர்வில் தமிழில்தான் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவு. காரணம் அறிய ஆய்வு நடத்தப்படுகிறதாம்...!

பள்ளிகளில் தமிழின் மதிப்பை நாமே குறைத்துவிட்டோம்.கட் ஆஃப் மதிப்பெண்ணில் தமிழையும் சேர்த்தால் மட்டுமே கொஞ்சமாவது மதிப்பு கிடைக்கும் போல.இல்லையெனில் தேர்விற்கு முதல் நாள் கடமைக்கு படித்து ஒதுக்குகின்ற நிலை தான் மேலும் நீடிக்கும்..
கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

இன்னும் சில வருடங்களில் தமிழ் படிக்கும் மாணவர்களே இல்லாத நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தமிழாசிரியர்கள் இதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்...
தமிழின் சிறப்பை உணர்ந்து உணர்வோடு கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அரிதாகிக் கொண்டு வருகின்றது என்பது மறுக்கவியலா ஒன்று...!

தமிழ் தானே இல்லை தமிழ் தான் தாய்மொழி என்ற உணர்வை எப்போது ஊட்டப் போகின்றோம்...?

திணை மயக்கம்

திணை மயக்கம்
---------------------------
நெல்லை ஜெயந்தா அவர்களின் நூல் திணை மயக்கம்...
ஓவ்வொன்றும் மயக்கவே செய்கின்றது.
அறிமுகமே அருமையாய்

“கரும்பலகைகள்
எழுத்தை
எனக்கு
அறிமுகப்படுத்தின!
இந்த
வெண்பலகைகள்
எழுத்தால்
என்னையே
அறிமுகப்படுத்தின”

எனத் துவங்கி

”புதைத்தது
ரோஜா
முளைத்தது
மல்லிகை”

என மென்மையாகவும் சமூக அக்கறையுடனும் சிறந்த ஓர் கவிதை நூலைப்படித்த நிறைவு.கவிதைய படிச்சா  தூங்க விடாம நம்மைச் சுண்டி இழுக்க வேண்டுமென்பார் தோழர் எட்வின் .
சுனாமியாய் சுருட்டிக்கொள்ளும் கவிதைகளும் உண்டென்பதை நெல்லை ஜெயந்தா அவர்களின் கவிதைகளைப்படித்ததும் உணர்ந்தேன் .நல்ல நூலைப் படித்த உணர்வுடன் மகிழ்வாய் அவருக்கு என் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.முடிந்தால் படியுங்கள்..

Saturday, 21 June 2014

இப்படி கேள்வி கேட்டால்?

1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?


வேண்டாம்மா போதும்னு தோணுது இப்பவே பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏதும் செய்து அவர்கள் என்னை நினைத்தால் போதும் அந்நாளில்...

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

கற்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு தெரியாதவற்றையெல்லாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் .செருப்பு தைக்கும் தொழிலாளியின் லாவகத்தை ரசிப்பேன்.தற்போதைய ஆசையாய் பறை அடிக்க,கீ போர்டு வாசிக்க பயில வேண்டும்.15 பேர் இருந்தால் பறை கற்று தர ஆள் ரெடி...

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

எதிர் வீட்டு 8 மாதக் குழந்தையின் சேட்டையைக் கண்டு காலையில்...

4. 24மணி  நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

பகல் என்றால் புத்தகத்துடன் தோட்டத்தில், இரவெனில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அல்லது மொட்டைமாடியில் நினைவுகளின் துணையுடன் பால்யங்களை அசைபோட்டுக்கொண்டு .

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

என் வாழ்வில் நிகழ்ந்த தவறுகள் அவர்கள் வாழ்வில் நிகழாமல் நடக்க வேண்டுமென..

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

மனிதநேயமற்று நடக்கும் செயல்களை....

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

.என் நெருங்கிய நண்பர்களிடம்

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

அந்த அளவு என் வளர்ச்சி உள்ளதென எண்ணி மேலும் வளர்வேன்

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

என்ன சொல்வது? வேறு துணை வேண்டும் என வலியுறுத்துவேன் உடனே அல்ல வலி மறைந்த பின்

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

புத்தகம்,பாட்டு,முகநூல்..... 
 

பூங்கொடி

பூங்கொடி
------------------
சின்னக்கொடி நான்
சீராக வளரும் முன்னே
சீரழிச்ச கொடுமைய..
பார்த்துகிட்டு இருக்குமோ
தமிழினம்..

தூ..தூ...நீங்களும் உங்க
பண்பாடும்..

இலங்கையிலதானேன்னு
கண்டுக்காம விட்டீங்க..

சென்றாயன் பாளையம்னு
வேடிக்கை பார்க்குறீங்களே

பிள்ளையும் இழந்து
ஊர்கொடுமையும் தாங்குற
அப்பாவ தனியா போராட
விடுறீங்களே

 சீச்சீ நீங்கள்லாம்
மனுசங்கத்தானா

கொடுமைய கேட்காத பாவிகளே
உங்க வீட்லயும்
பெண்பிள்ளைக்கு வாராதோ
என் நிலைமை...

குடிசை ஓட்டையில்
நிலவைப்பார்க்க
தங்கையோட போட்டியிட்டு

கிழிந்த போர்வைக்குள்ள
அண்ணணோட தங்கையும்
சேர்ந்து தூங்கிய என்னை

கதவு இல்லாக் குடிசையில
காலன் போல வந்து
காமவெறி பிடித்த கும்பலொன்று

கதற கதற தூக்கிப் போய்
இருவர் கை பிடிக்க
இருவர் கால் பிடிக்க
அரக்கன் போல மேல் விழுந்தொருவன்
வளராதநெஞ்சுல
வாய வைத்துக் கடித்தான்
வலியோட கத்துனேனே
கொடூரன் விட்டானில்லையே

காலிடுக்கில்
ரத்தம் வர ரத்தம் வர
மாறி மாறி
ராட்சன்களாய் குதறி வச்சானுங்களே

அழக்கூடத்திராணியின்றி
மயங்கிவிழுந்தவளை
மிருகம் போல கடிச்சு
தூக்குல தொங்கவிட்டானுங்க...

இதுதான் தமிழன் பண்பாடா
சிறுகுழந்தை வாழத்தகுதியில்லா
தமிழ்நாட்டி பெருமையைப்
பேசாதீர் வாய் திறந்தினி...

ஊர்கூடித் துரத்திட
என் தந்தை பயந்தோட
துணைவந்தீரோ
தமிழர்களே
ஈழத்தேசமோ இது..?

அரக்கர் கூட்டமோ
அங்குமிங்கும் அலைகின்றது
அடுத்த சிறுமியைத் தேடி
காவலர்களுக்கும் பெண் குழந்தையுண்டு
காசு வாங்கி காமுகர்களை
சுதந்திரமாய்அலையவிடும்
 துரோகிகளைக் கொண்ட

தமிழ்நாடு தீக்கிரையாகி
அழிந்து போகட்டும்
மதுரை போல...
எரிந்து மடியட்டும்
இலங்கை போல..

 சேலம் அருகே சென்றாயன் பாளையத்தில் கதவு
இல்லாக் குடிசையில்தூங்கிக் கொண்டிருந்த சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்முறை செய்து தூக்கில்
தொங்கவிட்டுள்ளனர்.காமவெறிப் பிடித்த மிருகங்கள்.

Friday, 20 June 2014

பசி

பசி ஆணுக்கானது...

நரன்

நஞ்சையிட்டு
நஞ்சையை
நஞ்சாக்கி
நஞ்சையளித்த
நஞ்சையுண்டு
நஞ்சாகும்
நரன்

Thursday, 19 June 2014

சொல்



வானில் மிதந்திட

பூமியில் புதைந்திட

ஒரே ஒருசொல்
போதும்...

அணிச்சமலரணைய
வாழ்வில்