World Tamil Blog Aggregator Thendral: ஹதீஜா

Saturday, 31 May 2014

ஹதீஜா

                                                          சென்ற வருடம் ஆறாம் வகுப்பில் குழந்தைகள் சேர்க்கை.வேறு பள்ளியிலிருந்து புதிதாய் இங்கு வருவார்கள் .பரபரன்னு புத்தாடையில் முதுகில் பையைச் சுமந்தபடி,கண்களை அகல விரித்தபடி,அம்மாவின் பின்னே ஒளிந்தபடி வரும் சிட்டுக்குருவிகளை காண்பதே தனி அழகு.
                                           ஒரு அம்மா தனது குழந்தையைச் சேர்க்கும் போது அவள் வகுப்பிலேயே இருக்க மாட்டாம்மா...வெளியே அடிக்கடி ஓடிடுவா ,வகுப்புல மட்டும் உட்கார வச்சுடுங்கம்மான்னு கண்கலங்கி கூறிய போது அவளைப் பார்த்தேன் அணில் குட்டியின் பற்களோடு அழகு முகத்துடன் அம்மாவின் பின்னே ஒளிந்து கொண்டிருந்தாள்.நான் பார்த்துகிறேன் கவலைப்படாதீங்கன்னு அனுப்பி வைத்தேன்.அவளை இங்க வாடா உன் பேர் என்ன என்றதற்கு மெதுவாய் ஹதீஜா என்றாள்.அழகு குட்டியா இருக்கியே என்றதற்கு நம்ப முடியா ஒரு பார்வையை என்மீது தூக்கிப் போட்டுச் சென்றாள்.வகுப்பில் குளிக்காது,கலைந்த தலையும் ,அவிழ்ந்த ரிப்பனுடன்,பின் குத்தாத ஷாலைத் தூக்கித் தூக்கி போட்டுக் கொண்டு,மோட்டு வளையை வெறித்துப் பார்த்துக்கொண்டு என் முகத்தைப் பார்க்க பிடிக்காதவள் போன்று அமர்ந்திருப்பாள்.எழுத்துக்கள் அவளை மிரட்டும்...இவளைப்போன்று தான் ரிஸ்வானா பானுவும்,ஹாஃப்ரின் சிபாயாவும்.

ஐந்தாம் வகுப்பு வரை படிக்க மாட்டா,ஊர் சுத்தி,புத்திசரியில்லாப் பெண் என்றே ஒதுக்கி வைக்கப்பட்டவள் என பி,ஆர்.டி.ஆசிரியரும் கூறினார்கள்.
 
 சுட்டியாய் கற்பூரமாய் சில ,கொஞ்சம் மந்தமாய் சில ,எதைச் சொன்னாலும் யாருக்கோ சொவது போல் வெறித்த பார்வையுடன் சில என கதம்பமாய் மணத்தது ஆறாம் வகுப்பு...

.ஐந்தாம் வகுப்பு வரை ஓடி ஆடி ஆசிரியரைச் சுற்றியே இருந்தக் குழந்தைகளை மேசைக்குள் திணித்து உட்கார்ந்தே இருக்க வேண்டும் என கூறுவது கூண்டிலடைப்பதற்கு சமம்.பறந்த வெளியில் உலகை அறிமுகப் படுத்த முடியாத என் இயலாமை.தடுமாறும் குழந்தைகளை என் வழிக்கு கொண்டு வர முதலில் நான் அவர்கள் வழிக்குச் செல்ல வேண்டும் .ஒரே ஆட்டமும் பாட்டும் தான் ஒரு மாதத்திற்கு....வேற வழி...

ம் என்றால் போதும் மேசை மேல் ஏறி என் பக்கத்தில் வந்து என் சேலையைத் தொட்டுக்கொண்டே இருப்பதில் என்ன சுகமோ? வார்த்தைகளாய்ப் படித்து வந்தவர்களிடம் வாக்கியங்களாக எழுதக் கூறினால் திருவிழாக் கூட்டத்தில் தொலைந்த குழந்தயைப் போல் திருதிருவென விழிப்பார்கள்.கொஞ்சம் கூடுதலாய் எழுதிப்போட்டாலோ டீச்சர் கையை வலிக்குதுன்னு எழுத மறுக்கும் போது என்ன செய்வதெனத் தெரியாமல் நான் விழிக்க நேரிடும்.

ஒரு வழியாக பாடல் ஆடல் என இரு மாதங்களுக்குப்பின் என் வழிக்கு வந்து விட்டனர்.ஹதீஜா எப்பவும் என் அருகில் தான் அவள் கைபிடித்து எழுத்து பழக்கி தானாக எழுத ஆரம்பித்தாள் .சாக்லேட் எனக்கு உதவியது அவளை எழுத வைக்க....நான் சாக்லேட் கொடுக்க மறந்து விட்டால் அவளே சாக்லேட் வேண்டுமென உரிமையாய் கேட்க ஆரம்பித்து விட்டாள் .அவளுக்காய் ஒரு பாக்கெட் இனிப்பு எப்போதும் இருக்கும் ...நினைவாற்றல் குறைவு அவளுக்கு என்பதால் அவளுக்கு நான் தரும் கவனத்தை மற்ற குழந்தைகளும் கொடுக்க ஆரம்பித்தனர்...

மெதுவாய் அவளின் தயக்கம் விலகியது...அவளை ஆட வைக்க வகுப்பே  சேர்ந்து ஆடியது...

பி.ஆர்.டி .டீச்சர் முதல் பருவம் முடிந்த பின் வந்த போது நம்ப முடியாமல் என்னைப் பார்த்தார்கள் .ஹதீஜாவா இது ..நல்லா எழுதுறாளே என்ற போது மனம் நிறைந்தது.அவள உட்கார வச்சி ,பேச வச்சி,எழுதவும் வச்சுட்டீங்களேன்னு ஆச்சரியப்பட்டார்கள்.
இப்போது அவள் வகுப்பின் செல்லக் குழந்தை.ஆங்கில வார்த்தையை எழுதப்படிக்க சிரமப்பட்ட குழந்தை இன்று 12 வரி ஆங்கிலப் பாடலை சிறிது சிறிதாகப் படித்து எழுதிக் காட்டிய போது நானே நம்ப முடியாது மலைத்தேன்.முதல் பாடத்தை அழகாக வாசித்துக்காட்டினாள்.தொடர்ச்சியாக அவள் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது தான் ஆனால் அவளால் படிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கி விட்டேன் என்ற நிறைவு.

பாராட்டும், அன்பும் அவளை வண்ணத்துப்பூச்சியாக மாற்றிவிட்டது.
தினமும் குளித்து,சீராகத்தலைவாரி,கவனமாய் ஷாலைப் பின் செய்து அவள் பள்ளிக்கு வரும் அழகே தனி...

ஒரு மாத விடுமுறை இந்த பூக்களை காணாமல் கழிப்பது சிரமமாய்த் தான் இருந்தது...

நாளை பள்ளித் துவக்கம் புத்தம் புதிய பூக்கள் சுட்டியாய் குதித்த படி, ஆடியபடி
பறக்கும் சிட்டுக்கள் இந்த வருடமும் வரும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன்...


4 comments :

 1. சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. நன்றி சார்

  ReplyDelete
 3. சிறப்பான பணி! இந்த ஆண்டும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. புதிய கல்வியாண்டு தொடங்குகிறது
  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...