Saturday, 31 May 2014

ஹதீஜா

                                                          சென்ற வருடம் ஆறாம் வகுப்பில் குழந்தைகள் சேர்க்கை.வேறு பள்ளியிலிருந்து புதிதாய் இங்கு வருவார்கள் .பரபரன்னு புத்தாடையில் முதுகில் பையைச் சுமந்தபடி,கண்களை அகல விரித்தபடி,அம்மாவின் பின்னே ஒளிந்தபடி வரும் சிட்டுக்குருவிகளை காண்பதே தனி அழகு.
                                



           ஒரு அம்மா தனது குழந்தையைச் சேர்க்கும் போது அவள் வகுப்பிலேயே இருக்க மாட்டாம்மா...வெளியே அடிக்கடி ஓடிடுவா ,வகுப்புல மட்டும் உட்கார வச்சுடுங்கம்மான்னு கண்கலங்கி கூறிய போது அவளைப் பார்த்தேன் அணில் குட்டியின் பற்களோடு அழகு முகத்துடன் அம்மாவின் பின்னே ஒளிந்து கொண்டிருந்தாள்.நான் பார்த்துகிறேன் கவலைப்படாதீங்கன்னு அனுப்பி வைத்தேன்.அவளை இங்க வாடா உன் பேர் என்ன என்றதற்கு மெதுவாய் ஹதீஜா என்றாள்.அழகு குட்டியா இருக்கியே என்றதற்கு நம்ப முடியா ஒரு பார்வையை என்மீது தூக்கிப் போட்டுச் சென்றாள்.

Thursday, 29 May 2014

உலக சாதனை கவியரங்கம் 22.05.14-25.05.14

தமிழக கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தென்றல் சமூக அறக்கட்டளை இணைந்து நடத்திய உலக சாதனைக்கான தொடர்
கவியரங்கம்
22.05.14 முதல்-25.05.14 முடிய 77 மணி நேரம் தொடர்ச்சியாக கவிதை வாசித்து கின்னஸ் ரெக்கார்ட் பதிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது

400 கவிஞர்களுக்கு மேல்

4000கவிதைகளுக்கு மேல்

இடைவெளியின்றி தொடர்ச்சியான கவிதைகள் சரம் சரமாய் தொடுக்கப்பட்டன.

கவிதை வாசித்தவர்களுக்கு உடனுக்குடன் புத்தகமும்,சான்றிதழும் அளித்து பாராட்டினர்.

எனக்கு புதிய அனுபவம் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஏற்பாட்டாளர்களின் பங்கு பாராட்டுதற்குரியது.



நிறைய கவிஞர்களைப் பார்த்தது,நிறைய கவிதைகளைக் கேட்டது மனதிற்கு நிறைவான நிகழ்வு.

Wednesday, 28 May 2014

குழவி2

குவலயம் மறக்கும்
குழவியின்
பிறைச் சிரிப்பில்

குழவி1

அள்ளி வைத்த
பொம்மைக்கூடையை
தலையில் கொட்டிச்
சிரித்த பூவைச்
சிந்தாமல் வாரிக்கொண்டேன்
கார்முகிலாய்

Tuesday, 20 May 2014

கொடை

காய்த்த காய்களை
சுற்றத்திற்கு வழங்க
கொடைவள்ளலென
பட்டமெனக்கு.
மரமோ
கேலியாய். ..!


இனி இந்த நேரத்தில போவேன்...?




நேற்று தோழி வீட்டுக்கு நீண்ட நாள் கழித்துச் சென்றேன் .வழக்கம் போல் பேசிய சிறிது நேரத்தில் அக்கா டி,வி. பாக்கலாமா என்று விஜய் டி.வி ல மகாபாரதம் பாக்க அழைத்தாள்.

திரௌபதியின் சேலையை உருவும் காட்சியாம்...2 குழந்தைகளும் வைத்த கண் அகலாது பார்த்துக் கொண்டு அதில் கேட்டது ..கர்ணன் .துரியோதனன் ,துச்சாதனன்,மூவரும் மாற்றி மாற்றி திரௌபதியை தாசி,வேசி என சொல்லிக் கொண்ட்டே இருந்ததைப் பார்த்து குழந்தை கேட்டாள்

தாசின்னா என்ன ?
தோழி சங்கடமாய் என்னை பார்த்தாள்
5பேர கல்யாணம் பண்ணதால அவள அப்படி கூப்புடுறாங்க..
2பேர பண்ணாலும் அப்படித்தானா?
ஆம் என்றேன்...

கொஞ்சம் சிந்திக்கும் குழந்தை அடுத்து என்ன கேட்பானோன்னு அச்சத்தில் நான்..
தசரதனுக்கு 60,000 மனைவியாமே....அவனுக்கு என்ன பேர் என்றான்

சக்கரவர்த்தி என்றேன் ....
நல்ல வேளை தாசி என்பது பெண்களை திட்டும் இழிவான சொல் என தெரியவில்லை...
என்ன சொல்வது...?

கடைசில சேலைய உருவலன்னு கவலையுடன் எப்படியும் இந்த வாரத்திற்குள் உருவிடுவான்னு சமாதானம் செய்து கொண்டே எழுந்தாள்

மனதிற்குள்...கொதித்தது..
பெண்களை அரச சபையில் நிர்வானப்படுத்துவது போன்று எழுத ஒரு ஆணால் தான் முடியும்.எந்த பெண்கவிஞரும் இப்படி எழுத மாட்டார்கள்.....

சிலம்பின் கண்ணகியா
இருந்தா  என்ன செய்வான்னு ஏன் எனக்கு தோணுச்சு..தெரியல

Monday, 19 May 2014

உலக சாதனைக்கான 75 மணி நேரத் தொடர் கவியரங்கம்!

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும்
 தென்றல் சமூகநல அறக்கட்டளை
இணைந்து நடத்தும்

உலக சாதனைக்கான 75 மணி நேரத் தொடர் கவியரங்கம்!

நாள்;மே 22,23,24,25 காலை 9.00மணி
இடம்:மீனாட்சி மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளி,அண்ணாநகர் மேற்கு,சென்னை.

கவியரங்கை தொடக்கி வைத்து சிறப்புரை:
     
           உயர்திரு உ.சகாயம் இ.ஆ.ப. அவர்கள்

இக்கவியரங்கைப் பற்றி கவிஞர். பொன்னையா அவர்கள் 2013 ஆம் வருடக் கடைசியில் கூறி நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதன் பேரில் என் கவிதைகளை அனுப்பி வைத்தேன் தேர்வாகும் கவிதைகளையே கவியரங்கில் படிக்க முடியும் என்பதால்.”.எங்கே போவேன்”,கவிதையை மெய்ப்புத் திருத்தும் பொழுதே என்னிடம் மிகவும் நன்றாக உள்ளதென கூறினார்கள்.

23ஆம் தேதி அன்று என் கவிதைகளைப் படிக்க அழைத்துள்ளனர்.
என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அன்று அமையும் .இதற்கு என்னை அறிமுகம் செய்த கவிஞர் .பொன்னையா மற்றும் என் கவிதைகளைத் தேர்ந்தெடுத்த கவியரங்க அமைப்புக்குழுவினருக்கும் என் மனம் நிறைந்த நன்றிதனை உரித்தாக்குகின்றேன்.


Sunday, 18 May 2014

சிறகுகள்

பயமற்ற வெளியில்
பறக்கத் துடிக்கும்
என் சிறகுகள்
பறிக்கப்படுகின்றன..
உன்னால்
அறிந்தோ ,அறியாமலோ..!

அறிந்தும் மருகியே
சகிக்கின்றேன்
உன்னினத்தையும்...!

இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறையும் பதிவர்கள் சந்திப்பும்

இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறையும் பதிவர்கள் சந்திப்பும் 

புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழாசிரியர் கழகம் சார்பாக இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை 17,18.05.2014 (சனி, ஞாயிறு) இரு தினங்களும் நடைபெற்றதை நண்பர்கள் நன்கறிவீர்கள்.

Saturday, 17 May 2014

னை,ணை



திடீர்னு என் மடிக்கணினிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல ...னை,ணை,லை,ளை றா ,ணா ,ன்னு தும்பிக்கை வச்ச எழுத்துக்களா வந்து என்ன பழைய காலத்துக்கு இட்டுக்கிட்டு போகுது..

எப்படி மாத்துறது?
இப்ப உள்ள குழந்தைகள் பார்த்தா நான் தமிழ் எழுத்துக்களில் மாற்றம் செஞ்சுருக்கேன்னு நினக்கத்தோணாது.!

இந்த லை  போட டீச்சர் கிட்ட என்னா மொத்து வாங்கிருக்கேன்னு நினசாலே கலங்குது.நல்ல வேளை இப்ப உள்ள குழந்தைகள் தப்பித்தார்கள்.பெரியாருக்கு தெரிஞ்சுருக்கு ..பாவம் அவரும் கஷ்டபட்டுருப்பாரு போல...
தும்பிக்கையெல்லாம் வளைச்சுட்டாரு...

இப்ப உள்ள எழுத்துக்களை எழுதவே இங்கீலீசு மீடியக் குழந்தைகள் எவன் டா இந்த தமிழ் மொழியக் கண்டுபிடிச்சான்னு திட்டிக்கிட்டே எழுதுதுங்க..
இதுல இந்த பழைய எழுத்துக்களப் பார்த்தா மயங்கியே விழுந்துடுங்களே

Friday, 16 May 2014

இனிய காலை வணக்கம்..



இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை-புதுக்கோட்டை.

17.05.14,18.05.14. -இருநாட்கள்

வலைத்தளத்தில் எங்களை முழுமையாக ஆர்வமூட்டிய பயிற்சிக் காலங்கள் மீண்டும்...மகிழ்வாய் மனம்...

பயிற்சிக்கு வருகைத்தரும் வலைத்தள நண்பர்களையும்,முகநூல் நண்பர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.

Wednesday, 14 May 2014

கல்லும் நானும்

சிறுவயதில் எங்கள் ஆத்தாவிடம் விடுமுறை நாட்களில் போரடிக்குதுன்னா, வாம்மான்னு சொல்லி துவரை,உளுந்து பயிர்களோடு திருகை கல்லுடன் உட்கார்ந்துடுவாங்க .என்னையும் பக்கத்துல உட்கார வச்சி நீ இந்த பயிற எல்லாம் திருகையில போடுவியாம் ,நான் உனக்கு கதை சொல்லுவேணாம்னு சொல்வாங்க .நாங்களும் ஆவலா உட்கார்ந்துகிட்டு கல்லுல கொஞ்சம் கொஞ்சமா பயிற போட்டுக்கிட்டே அரிச்சந்திரன் கதை,பஞ்ச தந்திரக்கதை எல்லாம் கேட்போம்.கொஞ்ச நேரத்தில பயிறெல்லாம் பருப்பா உடைச்சிடுவாங்க.ஒரு கல்லுல ரெண்டு மாங்கால்ல...மாவு கூட திருகையிலேயே அரைப்பாங்க...




அப்படியா....?உண்மையா?



கட்டாயத்தின் பேரிலாவது ஏதாவது தெரிஞ்சுக்கலாமேன்னு மே மாதத்தில் படிப்பது வழக்கம்.அதன் விளைவாக இன்று படித்தது...

நாட்டுப்புறவியல் கல்வியும் களப்பணியும்--அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பாட நூலில்....இருந்து....

”தமிழ்நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள்,இஸ்லாமியர்கள் நீங்கலாக ஏனையோர் இந்து சமயத்தவராகக் கருதப்படுவது ஒருபொதுவான மரபாக உள்ளது.ஆனால்,உண்மையில் இந்து சமயமென்ற சொல்லுக்குள் பெரும்பாலான தமிழர்களை அடக்குவது ஒரு வசதியின் பொருட்டே அன்றி உண்மையின் அடிப்படையில் அல்ல.தமிழ்நாட்டின் சமய வரலாற்றில் வேத சமயம்,சைவ சமயம்,வைணவ சமயம் என்ற மூன்று முக்கியச் சமய நெறிகள் வழக்கில் இருந்தமை மறுக்க முடியாத வரலாற்றுண்மையாகும்.”

“காலப்போக்கில் சில அரசியல்.பொருளாதாரச் சூழல்களுக்கேற்ப இச்சமயங்களை இணைத்து,இவையனைத்தும் ஒரே சமயம் என்ற புறத்தோற்றத்தை உருவாக்க முயன்றதன் வெளிப்பாடே இந்து சமயமாகும்”என்பார் ஆ.சிவசுப்பிரமணியன்.

இன்று இந்தியத் துணைக்கண்டத்தில் இந்துக்கள் ,இந்து சமூகத்தினர் என்றழைக்கப்படும் மக்கள் ஆங்கிலேயரின் வருகைக்கு முன் அவ்வாறு தம்மை அழைத்துக்கொள்ளவில்லை.

அவர்கள் பல்வேறு அடையாளங்களுடன் பல்வேறு சமூகங்களாக வாழ்ந்தனர்.அவர்கள் வாழ்ந்த இடங்கள்,பேசிய மொழிகள்,அவர்களது சாதிகள்,தொழில்கள்,சமய நெறிகள் அவர்கள் சார்ந்திருந்த சமயக் குழுக்கள் முதலியவைதான் அவர்களது அடையாளங்களை வரையறுத்தனேவேயன்றி.அவர்கள் அனைவரையும் ஒரே திணைக்குள் கொண்டு வருகிற ‘இந்துக்கள்’ என்ற சொல் அல்ல.பார்ப்பனிய தர்ம சாத்திரத்திலும் கூட இந்து சமூகம் என்பது ஏதும் குறிக்கப்படவில்லை என்பார் தே.லூர்து.

இதிலிருந்து இந்தியாவில் ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பு இந்து சமயம் என்ற ஒரு மரபு இல்லை என்பதை அறிகின்றோம்.”

மேற்கூறியதனைத்தும் பல்கலைக்கழக பாட நூலில் உள்ள கருத்துக்கள் தான்.

நானா ஏதும் சொல்லலப்பா....

Tuesday, 13 May 2014

மனுதர்மம்

நான்கு வருணம்
ஒன்று சேர்ந்து
ஒரே வருணமாகையில்
சாதியொழிந்து
சனங்கள் சேர்ந்து
மகிழ்ந்து நாமும்
 கூறுவோம்
இந்து நாம் என்றே...!

கூறவைக்குமா
மனுதர்மம்...?

அதுவரை
மதமும்,சாதியும்
மறுத்து நாமும்
மனிதன் என்றே
கூறுவோம்...!

Sunday, 11 May 2014

சேனல் 4


--------------------------
ரத்த குளத்தில் தமிழனின்
 படுக்கை.....

சிதறிவிழும் உறுப்புகள்
சிங்கத்தின் உணவாய்..

பதுங்கு குழிக்குள்
நெருப்புக்கோழியாய்
தலைமறைத்து..

ஷெல் முத்தமிட்ட
குழந்தைகள்....

துவக்குகளின் பசிவெறிக்கு
தமிழனின் உயிர்.....


கருகும் தமிழனை
காணாது
களித்து வாழும் தமிழினம்
சுரணையின்றி....

ஈழ தமிழரின்
ஈரம் துடைக்காத
ஈன வாழ்க்கை...

இருக்கிறோம் நாமும்
இல்லாமலே.....

Saturday, 10 May 2014

உணருமா அரசு?


---------------------------------
.12ஆம் வகுப்பு வரை இலவமாக ,கட்டிட வசதியின்றி,கழிப்பறை வசதியின்றி,ஆசிரியர் பற்றாகுறையில் ,வீட்டுப்பிரச்சனைகளை மனதில் சுமந்து,பசியுடன் படித்து,வறுமையில் வாழ்க்கையே போராட்டமாய் போராடிப் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே அண்ணா பல்கலையில் இடம் என அறிவிக்குமா அரசு.தனியார் பள்ளி மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொள்ளட்டுமே...உணருமா அரசு?

உயர்கல்வியில் அண்ணா பல்கலையில் பயிலுவதற்காகவே தனியார்பள்ளியில் 12ஆம் வகுப்பை 2 வருடம் படித்து அதிக மதிப்பெண் பெறும் குழந்தைகளும்  ,எந்த வசதிகளுமின்றி ஒரு வருடம் மட்டும் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களும் இணையாவார்களா?
அரசு பள்ளியையே நம்பி படிக்கும் மாணவர்களை கைவிடலாமா?
நியாயமா?

பறை

தமிழனின்
மணத்திலும்
மரணத்திலும்
ஒலித்த பறை....


ஒதுங்கிப்போனது
சென்டையால்.....

தமிழனைப்போல்

முல்லைப்பெரியாறு

நன்றி கூறி
பென்னிகுயிக் நினைவிடத்தில்

முல்லை பாலையாகாமல்
முல்லையானது















Friday, 9 May 2014

மனம்

....
---------
நான் நானென்று
இல்லாதொன்றை
இருப்பதாய் எண்ணி
பிதற்றியே வாழும் சில..

தான் யாரென்று
அறியாமலே
வாழ்ந்து மறையும் சில..

தான் அறிந்தும்
தளும்பாமல் வாழ்ந்து
நிலைக்கும் சில....

Thursday, 8 May 2014

செய்வோமா?



இன்று பிளஸ் டூ தேர்வு முடிவு.எத்தனை உயிர்கள் பலி தரப்போகின்றோமோ என்ற கவலையில் ...

தன் குழந்தைகள் பெறும் மதிப்பெண்களே தங்களின் ஸ்டேடஸை கூட்டுவதாக நடுத்தர குடும்பங்களின் கவலையிலும் வேண்டுதல்களிலும் இன்றைய பொழுது விடிந்துள்ளது .பல நாட்களாகத் தூங்காது தவிக்கின்றனர் பெற்றோர்களும் ,எவ்ளோ எடுத்தாலும் போதாதென்றே கூறுவார்களே என்ற தவிப்பில் மாணவர்களும்.

இந்த மாய வலையான மதிப்பெண் சுனாமியிலிருந்து விடுபடும் நாள் எப்போது.இயந்திரங்களை உருவாக்கும் கல்வி நோக்கி ஓடாமல் பண்பாடுகளை வளர்க்கும் கல்வியை எப்போது திரும்பி பார்க்கப் போகின்றோம் .நானும் இந்த வலையில் வீழ்ந்தவள் என்பதால் இதன் தாக்கத்தை உணர முடிகின்றது.

ஒரு குழந்தையின் வேண்டுதலாய் இன்று யாரும் போன் செய்து மார்க் எவ்ளோன்னு கேட்காம இருக்க வேண்டுமே என...

உறவினர்கள்,நண்பர்களின் குழந்தைகள் பெறும் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் தோன்றுவது இயற்கை தான் .ஆனால் அது குழந்தைக்கு எவ்ளோ மன அழுத்தத்தை உண்டாக்குகிறது என்பது நாம் அறிந்தோமில்லை

.நிறைய மதிப்பெண்கள் வாங்கும் குழந்தைகளே அறிவாளி என்று மதிப்பிடும் நிலை குழந்தையை மரணத்தை நோக்கித் தள்ளும் பாதை.

முகநூல் நண்பர்கள் இதை மற்றவர்களிடமும் கூறி யாரும் யாரிடமும் மதிப்பெண்கள் பற்றி கேட்க வேண்டாம் எனக் கூறுங்கள்.அவர்களே கூறும் வரை பொறுமை காக்கச் சொல்லுங்கள்.எந்த குழந்தையையும் இன்றைய தேர்வு முடிவு பறிக்காமல் பாதுகாப்பது நம் கடமை.செய்வோமா?

Wednesday, 7 May 2014

மழையில் வர்றீங்களா..



நேற்று உறவினர் நெடுநாட்களாக அழைத்ததனாலும், மழை நேர பேரூந்து பயணத்தை நேசித்தும் தூறலில் கிளம்பினேன்.

பேரூந்தில் ஓரச் சீட்டை பிடித்து அமர்ந்து யாரும் வந்து எழுப்பிட கூடாதென்ற நினைவில் இருக்கையில்.ஒரு கையில் மஞ்சள் துணியால் சுற்றப்பட்ட சொம்புடன் ஒரு சிறுவன் எல்லோரிடமும் காசு கேட்டு வந்தவன் என்னை பார்த்தது வேகமாக நகர்ந்தான். சிரித்து கொண்டேன் .ஏன்னா அவன பார்க்கும் போதெல்லாம் பள்ளிக்கூடத்துல சேர்க்கிறேன் வா படிக்கலாம்பான்னு சொல்வேன் என்பதால் என்னை பார்க்காமல் கடந்தான்.

மெதுவாக என்னை கடந்தோடின கட்டிடங்களும் மரங்களும் .மழை நீண்ட நாள் கழித்து வந்த மகிழ்வில் வேகமாக நாட்டிய மாடியது.கண்கள் போதவில்லை.இது கோடைக்காலமென்பதை மறக்க வைத்து சிரித்தது.என்னைத் தானே ரசிக்க வந்தாய் என்று குறும்பு சிரிப்புடன் பேரூந்துக்குள்ளும் புகுந்து என்னை நனைத்து அணைக்க ரசித்தேன் அதன் சேட்டையைஅரசு பேரூந்தாச்சே வேற வழி.

ஒரு வழியாக உறவினர் வீட்டிற்கு சென்றால் மழழைகள் கூட்டம். மழையில் மழழைகளின் சேட்டைகள் மிகவும் இனிமையானது,என் பால்ய கால விடுமுறை நாட்களை நினைவூட்டினர்.

எனக்காக காத்திருந்தது மழை தூறலாய்...அவர்களின் அன்பு பிடியிலிருந்து என்னை பிடுங்கி கொண்டு விடைபெற்று மீண்டும் பேரூந்தில் ஏற, இனிமையான பாட்டுக்களைப் போட்டு பயணத்தை மேலும் சுகமாக்கினார் ஓட்டுநர்.கையில் ஜெயமோகன் நாவலா ?பாட்டா? என மனம் தவிக்க என்னைப்பாரேன் என மழை காத்திருக்க.. ...வாழ்க்கை சொர்க்கம் தான் சில நேரங்களில்..

அறந்தாங்கியில் பேரூந்து மாறி அமர்ந்தேன் .கடலை விற்ற சிறுவன் பேரூந்தில் எனைக் கடந்தான் .மழைத் தூறலில் சூடான கடலை ஆசை வந்தும் வேண்டாமென நாவலில் நான் மூழ்க.மீண்டும் அவன் என் அருகில் ஏதோ சிந்தனையுடன் .வழக்கமாய் கேட்பது போல் படிக்கிறியாப்பா என்றதற்கு பதிலாய் ஓ ஒன்பதாப்பு என்றான்.நல்ல ஆடை உடுத்தியிருந்தான்.அவன் வயது சிறுவர்கள் சட்டென்று என் கண்முன் வந்து போனார்கள்.இவன் கையில் உள்ள பொட்டலங்கள் சிறுவனை கவலையில் ஆழ்த்தி விட்டன போலும் .

ஏன்பா ஒரு பாக்கெட் வித்தா உனக்கு எவ்ளோ கிடைக்குமென்றேன்.ஒரு ரூபாக்கா .ஒரு நாளைக்கு ஐம்பது பாக்கெட் விற்பேன் ஐம்பது ரூபா கிடைக்கும்னு அந்த குழந்தை கூறிய போது மனம் வலித்தது.இரவில் ,மழைத்தூறலிலும் அவன் உழைக்க வேண்டிய கட்டாயம்.ஆனால் அவன் உழைக்க தயாராக இருந்தான் என்பதை அவன் முகத்தில் உணர்ந்தேன் .கொஞ்சம் பொட்டலங்களே கையில் வைத்திருந்தான் .இது எல்லாம் வித்தாச்சின்னா வீட்டுக்கு நீ போலாம்ல என்ற கேள்விக்கு அவன் முகம் பிரகாசமாகி ஆமாக்கா என்றான். அப்படின்னா எல்லாத்தையும் கொடு என்றேன் நம்ப முடியாமல் பார்த்தான் .கொடுப்பான்னு வாங்கிய போது பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் இது கிறுக்கா என்பது போல் பார்த்தனர். அவன் படிக்கும் பள்ளியில் வேலை பார்க்கும் என் தோழியின் பெயரைக்கூறி தெரியுமான்னு கேட்டேன் .ஓ தெரியுமே என்றான். நீ நல்லா படிக்கனும் நான் ,உன் டீச்சர் கிட்ட கேட்பேன் என்றேன் ,வேகமாக தலையாட்டி வீட்டுக்குச் செல்லும் மகிழ்வில் ஓடினான்.மழை தந்த மகிழ்வை விட உழைப்பை கேவலமாக எண்ணாத சிறுவனைக் கண்ட மகிழ்வில் நான் மீண்டும் நாவலிலும் .மழைத்தூறலிலும்..

சமூகம் இந்த குழந்தைக்கு நல்ல வழி காட்டுமாவென்ற கவலை மனதில் ஓடியதைத் தவிர்க்க முடியவில்லை

Tuesday, 6 May 2014

மெழுகாய்

குத்துவிளக்கிற்கு உயிர் கொடுத்து
மெழுகுவர்த்தி உயிர்விட்டது
தொண்டனைப் போல்

அக்னிநட்சத்திரம்

வாட்டிய அக்னி மறைய
வாராது வந்த மாரியால்
மாறியதுவேனில்
மாரிக்காலமாய்...

மலைக்குள் வர்றீங்களா...




.

 அழகர்சாமியின் குதிரை,மைனா,கும்கி படம் எடுத்த மலையில் பயணம்....
பாதைகளற்று பாறைகளில்
ஏறி இறங்கி எங்களை அதிர வைத்தது ஜீப்.ஓட்டுநரோ சரளமாய் ,அன்பாய் பேசிக்கொண்டே ...மனமோ பாதைய பாத்து ஓட்டுப்பா...என பதறியது.இருந்தாலும் மனம் சுவாரசியத்தில்..திகிலில்,பரவசத்தில்...பெரியவர்களோடு குழந்தைகளும் அலறிக்கொண்டே பயணத்தில்...இயற்கையின் மடி புகுவதென்றால் சும்மாவா...கண்களுக்கு எட்டிய தூரம் வரை அண்ணாந்து பார்த்து மலைக்க வைத்தது மலை.

ஒரு வழியாக ஏறி இறங்கிய இடமோ மலைக்குடிமக்கள் வாழும் பகுதி.போகும் வழியில் உள்ளமலைவாழ் பெண்கள் வண்டியைக்கண்டதும் முகம் காட்ட மறுத்தனர்.ஏன் என்பதற்கு நாட்டாரிடம் முகம் காட்ட மாட்டார்களாம் கட்டுப்பாடு.

களிமண்ணில் குச்சிகளை நடுவில் வைத்து கட்டிய குடிசை வீடுகள்..எளிமையுடன்..அழகாய்..
 சுற்றிலும் மலை சூழ நடுவில் நாங்கள்...
தூய்மை,சுத்தமான மூலிகைகள் கலந்த காற்று,எளிமையான வாழ்க்கை...யாருக்கும் எந்த தீங்கும் தராத மலைமக்கள்..
அவர்களும் தற்போது டாஸ்மார்க்கு காலையிலேயே வருவதாக ஓட்டுநர் கூறிய போது வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

அங்கிருந்த பள்ளிக்கூடமோ பூட்டியிருந்தது ஒரு ஆசிரியர் மட்டும் தானாம்.மாணவர்கள் வரவே மாட்டார்களாம்.பூட்டியே நிறையநாள் கிடக்குமாம்.பார்த்த கணத்தில் ஏதும் அந்த குழந்தைகளுக்கு செய்ய வேண்டுமே என மனம் ஆசைப்பட பேசாம நீ இங்க மாறுதல் பெற்று வந்துடுன்னு கூட வந்தவர்கள் கலாய்க்க .....ஓட்டுநரோ 10 நாட்களுக்கு மேல் உங்களால் இங்க இருக்க முடியாதென சவால் விட்டார்...
ஒரு பக்கம் வரலாமென மனம் நினைத்தாலும் கடினமென்றே அறிவு கூறியது...
  எங்கு நோக்கினும் பச்சைபச்சை...கண்களில் விழுங்கி ,மனதை நிறைத்துக்கொண்டோம்,.யாருமே இல்லாத காட்டில் கும்கி,அழகர்சாமியின் குதிரை,மைனா இன்னும் நிறைய படங்கள் இங்கு எடுத்ததாகவும் ,அவர்கள் பட்ட சிரமங்களையெல்லாம் கூறிய போது...
இதையெல்லாம் அறியாமல் எவ்ளோ எளிதாக படம் நல்லால்லன்னு
கூறிவிடுகிறோம்னு வருத்தம் வந்தது.

வண்டுகளின் ரீங்காரம் மலைகளில் எதிரொளிக்க மரங்களினூடே புகுந்து சிற்றோடையில் மீன்களாய் மாறி மகிழ்ந்து எழ மனமின்றி வீழ்ந்து கிடந்தோம் காலம் நகர்வதறியாமல்,பசியறியாமல்..ஓட்டுநர் போலாமென விரட்டும் வரை..

காட்டெருது மனிதர் எதிரில் வந்தால் மலையில் ஏறிவிடும் என்றும் ஏற முடியவில்லையெனில் மனிதரை கொன்று விடும் எனவும் கூறி மனதை உறையவைத்தார் ஓட்டுநர் பாஸ்..

ஓட்டுநரும் எங்களில் ஒருவராய் மாறி மலையின் ரகசியத்தை விளக்கிய போது வியப்பில் விழிகள் விரிந்தன.நடையே மறந்த நகரத்து வாழ்வில் நடை மட்டுமே வாழ்வாய் வாழும் மக்கள் அதிசயமாய் தெரிந்தனர்.விண் தொடும் மரங்கள் என்னை பார்த்து நக்கலாய் சிரிப்பது போல் உணர்ந்தேன்.

இயற்கையுடன் வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும்.சில மணி நேரமாவது இருக்கும் வாய்ப்பு கிடைத்ததே என்ற ஆறுதலில் மீண்டும் வரத் திட்டமிட்டு கண்கள் கலங்க உறவை பிரியும் வேதனையுடன் பிரியாவிடைப் பெற்றோம் மலைத்தாயிடம்...



Monday, 5 May 2014

மலைநாட்டினில்


கண்கள் பசுமையின்
குளிர்மையைத் தாங்கி
 உடலெங்கும்  பரவச் செய்த
பரவசத்தில்...

மலையின் அழகை
வார்த்தைகளில் வடிக்க
வளமற்றவளாய்..

 விண்முட்டும் மரங்களையும்
மலைகளையும்
விண்ணுடன் சேர்த்தணைக்கும்
மேகங்கள்....


காற்றும் ,கதிரவனும்
நுழைய முடியாத
காட்டின் அடர்வுக்குள்
உள்நுழைந்து பசுமை
குடித்து வந்த மகிழ்வில்...

எட்டும் வரை தேயிலை
தோட்டப்பாய் விரித்து
மனதைக் கொள்ளையடிக்க...

விழித்து கொண்ட
அறிவு கூற்றாய்...

அளவற்ற மரங்களின் தியாகத்தில்
காட்டின் அழிவில் உதயமாய்
தேயிலைத்தோட்டம்...

குடிக்கும் தேநீரின் சிவப்பில்
மரங்களின் கண்ணீரும்
மனிதர்களின் செந்நீரும்..

எதையும் ஏற்கும் கம்பீரமாய்
பல்லுயிரிகளின் புகலிடமாய்
மலைக்காடு