Wednesday, 14 May 2014

கல்லும் நானும்

சிறுவயதில் எங்கள் ஆத்தாவிடம் விடுமுறை நாட்களில் போரடிக்குதுன்னா, வாம்மான்னு சொல்லி துவரை,உளுந்து பயிர்களோடு திருகை கல்லுடன் உட்கார்ந்துடுவாங்க .என்னையும் பக்கத்துல உட்கார வச்சி நீ இந்த பயிற எல்லாம் திருகையில போடுவியாம் ,நான் உனக்கு கதை சொல்லுவேணாம்னு சொல்வாங்க .நாங்களும் ஆவலா உட்கார்ந்துகிட்டு கல்லுல கொஞ்சம் கொஞ்சமா பயிற போட்டுக்கிட்டே அரிச்சந்திரன் கதை,பஞ்ச தந்திரக்கதை எல்லாம் கேட்போம்.கொஞ்ச நேரத்தில பயிறெல்லாம் பருப்பா உடைச்சிடுவாங்க.ஒரு கல்லுல ரெண்டு மாங்கால்ல...மாவு கூட திருகையிலேயே அரைப்பாங்க...






அப்போலாம் டி.வி.கிடையாது.பொழுதுபோக்குன்னா கோவிலும் ,சினிமாவும் தான்.புதுப்படம் வந்துட்டா நானும் என் பக்கத்துவீட்டு தோழிகளும் அம்மாகிட்ட சினிமாக்கு போணும்னு தொல்ல பண்ண ஆரம்பிச்சிடுவோம்.அவங்களும் கூட்டிட்டு போறேன் ஆனா ஒரு கண்டிசன்பாங்க என்னம்மா என்றால் இட்லிக்கு அரிசி மாவு அரைச்சு தந்தேன்னா போலான்னுடுவாங்க.வேற வழி என் தோழி தள்ளிவிட வேகவேகமா அரிசி மாவ ஆட்டிடுவோம்.உளுந்து மாவ அம்மா அரச்சிடுவாங்க...

                                                   
இது மட்டும் போதாதுன்னு அம்மா நினச்சா
குளிக்கும் அறைதொட்டில நூறு வாளி தண்ணி ஊத்துனாதான் நிறையும் அதையும் நிறைக்கனும்னு கண்டிஷன்   ....ம்...னு போட்டிபோட்டு நிறைச்சிடுவோம்
                                    
எங்களின் சுகமும் துக்கமும் உரலுக்குத்தான் தெரியும் எப்போதும் அதில் தான் அமர்ந்திருப்போம்...உரல்ல உட்காராதடி வீட்டுக்கு ஆகாதுன்னு அம்மா சொன்னாலும் கிணறுக்கு பக்கத்தில் உள்ள உரல் தான் எனக்கு மிகவும் பிடித்த இடம்....
இட்லி பொடி ,மற்ற பொடிகள் எல்லாம் அதுல தான் இடிப்பாங்க...உலக்கை என்னுடன் அதிகம் உறவாடிய ஒன்று....மாதவிலக்கு நாட்களில் உலக்கைய போட்டுத்தனியா உட்கார வச்சிடுவாங்க...ஜாலிதான் கையில புத்தகத்தோட பொழுது போகும் .விழா நாட்களில் இப்படி உட்கார நேர்ந்தால் ,தனியா வேலையச் செய்யனுமே என்ற கவலையில் அம்மா மூதேவி நல்லநாள் அதுவுமா ஒதுங்கி உட்கார்ந்திருக்கு பாருன்னு ஒரே திட்டு தான் ...ஆனா நான் புத்தகத்துல மூழ்கிட்டேனே எனக்கு கேட்காது எதுவும்...கையில சாப்பாடு வரும் ..வேறென்ன வேண்டும்....
வீட்ல சொந்தக்காரங்க வந்துட்டா தடபுடல் தான் சாப்பாடு..சுடச்சுட இட்லிக்கு எங்க அம்மா அம்மில அரைச்ச மிளகாய்ச்சட்னிய வச்சா இட்லி பத்தவே பத்தாது....
என் சிறு வயது வாழ்க்கையோடு கலந்து விட்ட கல் கருவிகள் இப்போது மிக்ஸியாகவும் கிரைண்டராகவும் மாறி என் வேலைச்சுமையைக் குறைத்தாலும் அந்த மகிழ்வைத் தரமுடியாது எப்போதும்....




2 comments:

  1. திருகை, அம்மி ,ஆட்டுக்கல் எல்லாம் படங்களில் மட்டுமே காணுகின்ற பொருட்களாகிவிட்டன
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி
    கல் கருவிகள் எல்லாம் காட்சிப் பொருட்களாக மாறி விட்டது. மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தால் தங்கள் மகிழ்ச்சி மீட்டெடுக்கப்படும். மக்களின் சோம்பேறி தனமும். நேர மேலாண்மையாலும் எல்லாம் மாறி விட்டது. இளமை கால படிப்பு தான் தங்கள் உயர்த்தியிருக்கிறது என்பதை எண்ணும் போது மிகுந்த மகிழ்ச்சி சகோதரி. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...