Wednesday, 7 May 2014

மழையில் வர்றீங்களா..



நேற்று உறவினர் நெடுநாட்களாக அழைத்ததனாலும், மழை நேர பேரூந்து பயணத்தை நேசித்தும் தூறலில் கிளம்பினேன்.

பேரூந்தில் ஓரச் சீட்டை பிடித்து அமர்ந்து யாரும் வந்து எழுப்பிட கூடாதென்ற நினைவில் இருக்கையில்.ஒரு கையில் மஞ்சள் துணியால் சுற்றப்பட்ட சொம்புடன் ஒரு சிறுவன் எல்லோரிடமும் காசு கேட்டு வந்தவன் என்னை பார்த்தது வேகமாக நகர்ந்தான். சிரித்து கொண்டேன் .ஏன்னா அவன பார்க்கும் போதெல்லாம் பள்ளிக்கூடத்துல சேர்க்கிறேன் வா படிக்கலாம்பான்னு சொல்வேன் என்பதால் என்னை பார்க்காமல் கடந்தான்.

மெதுவாக என்னை கடந்தோடின கட்டிடங்களும் மரங்களும் .மழை நீண்ட நாள் கழித்து வந்த மகிழ்வில் வேகமாக நாட்டிய மாடியது.கண்கள் போதவில்லை.இது கோடைக்காலமென்பதை மறக்க வைத்து சிரித்தது.என்னைத் தானே ரசிக்க வந்தாய் என்று குறும்பு சிரிப்புடன் பேரூந்துக்குள்ளும் புகுந்து என்னை நனைத்து அணைக்க ரசித்தேன் அதன் சேட்டையைஅரசு பேரூந்தாச்சே வேற வழி.

ஒரு வழியாக உறவினர் வீட்டிற்கு சென்றால் மழழைகள் கூட்டம். மழையில் மழழைகளின் சேட்டைகள் மிகவும் இனிமையானது,என் பால்ய கால விடுமுறை நாட்களை நினைவூட்டினர்.

எனக்காக காத்திருந்தது மழை தூறலாய்...அவர்களின் அன்பு பிடியிலிருந்து என்னை பிடுங்கி கொண்டு விடைபெற்று மீண்டும் பேரூந்தில் ஏற, இனிமையான பாட்டுக்களைப் போட்டு பயணத்தை மேலும் சுகமாக்கினார் ஓட்டுநர்.கையில் ஜெயமோகன் நாவலா ?பாட்டா? என மனம் தவிக்க என்னைப்பாரேன் என மழை காத்திருக்க.. ...வாழ்க்கை சொர்க்கம் தான் சில நேரங்களில்..

அறந்தாங்கியில் பேரூந்து மாறி அமர்ந்தேன் .கடலை விற்ற சிறுவன் பேரூந்தில் எனைக் கடந்தான் .மழைத் தூறலில் சூடான கடலை ஆசை வந்தும் வேண்டாமென நாவலில் நான் மூழ்க.மீண்டும் அவன் என் அருகில் ஏதோ சிந்தனையுடன் .வழக்கமாய் கேட்பது போல் படிக்கிறியாப்பா என்றதற்கு பதிலாய் ஓ ஒன்பதாப்பு என்றான்.நல்ல ஆடை உடுத்தியிருந்தான்.அவன் வயது சிறுவர்கள் சட்டென்று என் கண்முன் வந்து போனார்கள்.இவன் கையில் உள்ள பொட்டலங்கள் சிறுவனை கவலையில் ஆழ்த்தி விட்டன போலும் .

ஏன்பா ஒரு பாக்கெட் வித்தா உனக்கு எவ்ளோ கிடைக்குமென்றேன்.ஒரு ரூபாக்கா .ஒரு நாளைக்கு ஐம்பது பாக்கெட் விற்பேன் ஐம்பது ரூபா கிடைக்கும்னு அந்த குழந்தை கூறிய போது மனம் வலித்தது.இரவில் ,மழைத்தூறலிலும் அவன் உழைக்க வேண்டிய கட்டாயம்.ஆனால் அவன் உழைக்க தயாராக இருந்தான் என்பதை அவன் முகத்தில் உணர்ந்தேன் .கொஞ்சம் பொட்டலங்களே கையில் வைத்திருந்தான் .இது எல்லாம் வித்தாச்சின்னா வீட்டுக்கு நீ போலாம்ல என்ற கேள்விக்கு அவன் முகம் பிரகாசமாகி ஆமாக்கா என்றான். அப்படின்னா எல்லாத்தையும் கொடு என்றேன் நம்ப முடியாமல் பார்த்தான் .கொடுப்பான்னு வாங்கிய போது பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் இது கிறுக்கா என்பது போல் பார்த்தனர். அவன் படிக்கும் பள்ளியில் வேலை பார்க்கும் என் தோழியின் பெயரைக்கூறி தெரியுமான்னு கேட்டேன் .ஓ தெரியுமே என்றான். நீ நல்லா படிக்கனும் நான் ,உன் டீச்சர் கிட்ட கேட்பேன் என்றேன் ,வேகமாக தலையாட்டி வீட்டுக்குச் செல்லும் மகிழ்வில் ஓடினான்.மழை தந்த மகிழ்வை விட உழைப்பை கேவலமாக எண்ணாத சிறுவனைக் கண்ட மகிழ்வில் நான் மீண்டும் நாவலிலும் .மழைத்தூறலிலும்..

சமூகம் இந்த குழந்தைக்கு நல்ல வழி காட்டுமாவென்ற கவலை மனதில் ஓடியதைத் தவிர்க்க முடியவில்லை

5 comments:

  1. நெகிழ வைத்த பகிர்வு! உழைத்து படிக்கும் அந்த சிறுவனுக்கு வாழ்த்துக்கள்! பதிவை பத்தி பிரித்து எழுதினால் படிக்க வசதியாக இருக்கும். ஓர் ஆலோசனைதான்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆலோசனைக்கு நன்றி சார்.பிரித்து விட்டேன்

      Delete
  2. உழைப்பின் உன்னதத்தை உணர்ந்த அச்சிறுவனுக்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே
    கண்ணில் படும் சிறுவர்களை எல்லாம், படிக்கப் பள்ளிக்கு அழைக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி சார்

    ReplyDelete
  4. ஆம்தோழி சிலநேரங்களில் இயற்கை நமை வியக்கவைக்கும் ரசிக்கவைக்கும், மலைக்கவைக்கும், மகிழ்விக்கும்,உறங்கி
    கிடக்கும் வாலிபர்கள் மத்தியில் உழைக்க வந்தஅச்சிறுவன்
    வளமோடு வாழட்டும் பல்லாண்டு ,

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...