Tuesday, 6 May 2014

மலைக்குள் வர்றீங்களா...




.

 அழகர்சாமியின் குதிரை,மைனா,கும்கி படம் எடுத்த மலையில் பயணம்....
பாதைகளற்று பாறைகளில்
ஏறி இறங்கி எங்களை அதிர வைத்தது ஜீப்.ஓட்டுநரோ சரளமாய் ,அன்பாய் பேசிக்கொண்டே ...மனமோ பாதைய பாத்து ஓட்டுப்பா...என பதறியது.இருந்தாலும் மனம் சுவாரசியத்தில்..திகிலில்,பரவசத்தில்...பெரியவர்களோடு குழந்தைகளும் அலறிக்கொண்டே பயணத்தில்...இயற்கையின் மடி புகுவதென்றால் சும்மாவா...கண்களுக்கு எட்டிய தூரம் வரை அண்ணாந்து பார்த்து மலைக்க வைத்தது மலை.

ஒரு வழியாக ஏறி இறங்கிய இடமோ மலைக்குடிமக்கள் வாழும் பகுதி.போகும் வழியில் உள்ளமலைவாழ் பெண்கள் வண்டியைக்கண்டதும் முகம் காட்ட மறுத்தனர்.ஏன் என்பதற்கு நாட்டாரிடம் முகம் காட்ட மாட்டார்களாம் கட்டுப்பாடு.

களிமண்ணில் குச்சிகளை நடுவில் வைத்து கட்டிய குடிசை வீடுகள்..எளிமையுடன்..அழகாய்..
 சுற்றிலும் மலை சூழ நடுவில் நாங்கள்...
தூய்மை,சுத்தமான மூலிகைகள் கலந்த காற்று,எளிமையான வாழ்க்கை...யாருக்கும் எந்த தீங்கும் தராத மலைமக்கள்..
அவர்களும் தற்போது டாஸ்மார்க்கு காலையிலேயே வருவதாக ஓட்டுநர் கூறிய போது வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

அங்கிருந்த பள்ளிக்கூடமோ பூட்டியிருந்தது ஒரு ஆசிரியர் மட்டும் தானாம்.மாணவர்கள் வரவே மாட்டார்களாம்.பூட்டியே நிறையநாள் கிடக்குமாம்.பார்த்த கணத்தில் ஏதும் அந்த குழந்தைகளுக்கு செய்ய வேண்டுமே என மனம் ஆசைப்பட பேசாம நீ இங்க மாறுதல் பெற்று வந்துடுன்னு கூட வந்தவர்கள் கலாய்க்க .....ஓட்டுநரோ 10 நாட்களுக்கு மேல் உங்களால் இங்க இருக்க முடியாதென சவால் விட்டார்...
ஒரு பக்கம் வரலாமென மனம் நினைத்தாலும் கடினமென்றே அறிவு கூறியது...
  எங்கு நோக்கினும் பச்சைபச்சை...கண்களில் விழுங்கி ,மனதை நிறைத்துக்கொண்டோம்,.யாருமே இல்லாத காட்டில் கும்கி,அழகர்சாமியின் குதிரை,மைனா இன்னும் நிறைய படங்கள் இங்கு எடுத்ததாகவும் ,அவர்கள் பட்ட சிரமங்களையெல்லாம் கூறிய போது...
இதையெல்லாம் அறியாமல் எவ்ளோ எளிதாக படம் நல்லால்லன்னு
கூறிவிடுகிறோம்னு வருத்தம் வந்தது.

வண்டுகளின் ரீங்காரம் மலைகளில் எதிரொளிக்க மரங்களினூடே புகுந்து சிற்றோடையில் மீன்களாய் மாறி மகிழ்ந்து எழ மனமின்றி வீழ்ந்து கிடந்தோம் காலம் நகர்வதறியாமல்,பசியறியாமல்..ஓட்டுநர் போலாமென விரட்டும் வரை..

காட்டெருது மனிதர் எதிரில் வந்தால் மலையில் ஏறிவிடும் என்றும் ஏற முடியவில்லையெனில் மனிதரை கொன்று விடும் எனவும் கூறி மனதை உறையவைத்தார் ஓட்டுநர் பாஸ்..

ஓட்டுநரும் எங்களில் ஒருவராய் மாறி மலையின் ரகசியத்தை விளக்கிய போது வியப்பில் விழிகள் விரிந்தன.நடையே மறந்த நகரத்து வாழ்வில் நடை மட்டுமே வாழ்வாய் வாழும் மக்கள் அதிசயமாய் தெரிந்தனர்.விண் தொடும் மரங்கள் என்னை பார்த்து நக்கலாய் சிரிப்பது போல் உணர்ந்தேன்.

இயற்கையுடன் வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும்.சில மணி நேரமாவது இருக்கும் வாய்ப்பு கிடைத்ததே என்ற ஆறுதலில் மீண்டும் வரத் திட்டமிட்டு கண்கள் கலங்க உறவை பிரியும் வேதனையுடன் பிரியாவிடைப் பெற்றோம் மலைத்தாயிடம்...



2 comments:

  1. மலையழகை ரசித்து பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. நன்றி சார்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...