ஐடியல் பள்ளியில் விழா
அசத்தும் குழந்தைகளின்
அணிவகுப்பில் அசந்தே போனோம்
மகிழ்வில் நாங்கள்
அழுதுகொண்டே,
ஆடிக்கொண்டே பேசமறுத்து
அருள்செய்த முருகன்கள்..
கடமையைச்சொன்ன,
சொல்லவந்ததை மறந்த,
செல்லின் தீமையைக்கூறிய
காவலர்கள்..
அழுகையுடன் அழகாக
ஆலோசனைக்கூறிய
மருத்துவர்கள்..
மேடை ஏறவே மறுத்து,
வெண்ணெய் தின்ற வாயுடன்
திருதிருவென முழித்த
கிருஷ்ணன்கள்..
மெல்ல பறந்து வந்தது
வண்ணத்துப்பூச்சி ஒன்று
அழகாக குதித்துவந்த
திராட்சைக்கொத்துகள்
வீரமுடன்ஆர்வமுடன்
வசனம் பேசிய ஜான்சிராணிக்கள்
மக்களைப்படிக்க வந்த
செய்தித்தாட்கள்
நச்சென்று வந்த
கோல்கேட்பாய்
நகரவாசிகளைப் பார்த்து
திகைத்து நின்ற காட்டுவாசி
மாணவர்களைப் பார்த்து
வெட்கிச்சிவந்த ஆசிரியர்
அச்சமில்லைப் பாடலை
அச்சத்தோடு பாடிய பாரதியார்கள்
ஒலிவாங்கியில் முகம் காட்ட
மறுத்தோடிய விவசாயி
ருத்ர தாண்டவம் ஆடி
அசத்திய அம்மன்
அழிக்கவேமுடியாதென்றே
ஆர்ப்பரித்த கொசு
ஊசிமணிபாசி விற்று
குழந்தையை ஐடியல்
பள்ளியில் சேர்க்க வந்த குறத்திக்கு
போட்டியாக வந்த குறவன்
ஏ.டி.எம்.கார்டால் கணவனை
இழந்த நவீனக்கண்ணகி
இப்போடிகளைக்காண வந்த
சரோஜினி நாயுடு
கொடியைக்காத்து உயிர் விட்ட
குமரன்கள்
தமிழகத்தின் வீரமங்கை
தனியொருத்தியாக
வெள்ளையரை வெற்றிகொண்ட
வேலுநாச்சியார்
தொடர்ந்து வந்த குழந்தைகளின்
வரிசையில் மதிமயங்கியே
வாழ்த்திமகிழ்ந்தோம்
வாழ்க ஐடியல் பள்ளி..
வளர்க அதன் புகழ் ...
அறந்தாகி ஐடியல் மெட்ரிக் பள்ளியில் மாறுவேடப்போட்டிக்கு நடுவராக செல்ல வேண்டுமென தோழி ஜெயாவின் வேண்டுகோளுக்கிணங்கி நான்,அனு,விஜிஅக்கா மூவரும் சென்றோம்.காலையில் 10 மணிக்குத் துவங்கியது ஐடியல் நர்சரிப்பள்ளிகளின் மாறுவேடப்போட்டி...160 குழந்தைகள் 60வதுக்கும் மேற்பட்ட மாறுவேடங்களில் மேடையேறியக் காட்சி மிக அருமை....மிகவும் ரசித்தோம் குழந்தைகளையும், அவர்களின் அம்மாக்கள் தங்கள் குழந்தைகள் வெற்றி பெற கீழிருந்து ஆடிக்காட்டிக் கொண்டிருந்தனர்...
அசல் மரம் போல் ஒரு மாணவன் முகத்தில் பச்சை வண்ணம் தீட்டி மேடை ஏற, அவனது தந்தை அவன் பேசுவதை வீடியோ எடுக்க காத்திருக்க, அவனோ வாயைத்திறவாது நிற்க,இவர் தவித்த தவிப்பு சொல்டா சொல்டா வீட்ல சொன்னீல சொல்டான்னு கெஞ்ச, அவன் எதற்கு வாய் திறவாது கீழே இறங்கி விட்டான்...
மதியம் ஐடியல் மெட்ரிக் பள்ளிக்குழந்தைகளின் மாறுவேடப்போட்டி அனைத்துக்குழந்தைகளும் அசத்தி விட்டார்கள்.அப்பள்ளியின் தாளாளர் குழந்தைகளை மட்டுமல்ல அவர்களின் பெற்றோர்களையும் அன்பாக கண்டித்த காட்சி கண்டு வியந்தேன்..பெற்றோர்களும் கேட்டுக்கொண்டு அமைதி காத்தனர்...கேட்டதற்கு பெரும்பாலானவர்கள் அவர்களிடம் படித்தவர்கள் என்பதால் என அவர் சிரித்துக்கொண்டே கூறினார். விழா முடிந்தபின் அப்பள்ளியின் பொங்கல் விழா காட்சிகளை கணினியில் பார்த்தோம் அனைத்துக் குழந்தைகளும் தமிழர்களின் பாரம்பரிய உடையில் வேட்டி ,தாவணியில் இருந்தது கண்கொள்ளாக்காட்சி..குழந்தைகளோடு குழந்தையாக இவரும் உரியடிக்க செல்ல,குழந்தைகள் ஏமாற்றியகாட்சி அப்பள்ளி ஒரு குடும்பம் போல் செயல் படுவதை உணரமுடிந்தது.
1600 குழந்தைகள் ,100 ஆசியர்கள் மற்றும் பணியாளர்களைக்கொண்டு அப்பள்ளி இயங்கி வருவதாக கூறினார்.பணம் பிடுங்கும் பள்ளியாக இல்லாது குழந்தைகளின் மனம் விரும்பும் பள்ளியாக விளங்குவதைஅறிந்து மிகவும் மகிழ்வாக இருந்தது. பல மெட்ரிக் பள்ளிகள் பெற்றோர் பணம் கட்டும் இயந்திரமாக மட்டும் எண்ணி செயல்படுகையில் சில பள்ளிகள் இப்படியும் இருக்கின்றன.
இப்பள்ளியில் 100 குழந்தைகள் இலவசமாகப்படிப்பதாக அறிந்தோம்...உண்மையில் சிறந்த பள்ளி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..தமிழை புறக்கணிக்காத,தமிழர் பண்பாட்டை போற்றும் பள்ளியாகத்திகழ்கின்றது...
தான் ஒரு முஸ்லீம் என்பதை விட நான் ஒரு தமிழன்...மதமனைத்தும் பிறகு வந்தது தானே என்று கூறிய போது ஆச்சரியமாக இருந்தது..இவரின் மனைவியின் பெயர் செல்வி என்றும் ,மகளின் பெயர் தேன்மொழி என்றும் அறிந்த போது மதப்பற்று மறுத்து தமிழ்ப்பற்று கொண்ட ஒரு தமிழரைக்கண்ட நிறைவு...ஜெயாவிற்குத்தான் என் நன்றிகளைக்கூற வேண்டும்...நன்றி ஜெயா..