Wednesday, 25 February 2015

பாரதி கண்ட புதுமைப்பெண்-தடாகம் இலக்கியவட்டம்

முகநூலில் தடாகம் கலை இலக்கியவட்டம் நடத்தும் போட்டிக்கான என்கவிதை.
பாரதி கண்ட புதுமைப்பெண்
---------------------------------------------





நிலம் பார்க்க நடந்தவளே
விண்ணில் நடைபயின்றாள்...

இமயம் தன் காலடியிலென
இனிதே அரைக்கூவினாள்..
காலெனப்  பறக்கின்றாள்
காமுகர்களின் மத்தியில்..
கட்டிவைத்த மடமைகளை
காட்டுத்தீயாய் கருகிடச்செய்தாள்
எதையும் துணிவாய் முடிக்கின்றாள்
எள்ளியவர்களின் வாயடைத்து..
சந்ததி வளர்த்திடும் சக்தியானவள்
சரித்திரம் படைக்கவே புறப்பட்டாள்
சாத்திரத்தின் சகதியை துடைக்கவே
சங்கென முழங்கி உயர்ந்திட்டாள்
இனியவள் பாதை தெளிவாக
இனிதே புன்னகை புரிந்திட்டாள்
தன்னோடு தன்குடும்பத்தையும்
தரணிப்புகழச்செய்திட்டாள்

காலம்

கூட்டிமாளமுடியவில்லை
திட்டவும் மனமில்லை
ஆடைமாற்றும் காலம்

Monday, 23 February 2015

அனைவருக்கும் நன்றி

நம்ப தான் முடியவில்லை ...501 ஆவது பதிவில்
என் மனம் நிறைந்த நன்றி..

2012  திசம்பரில்  தற்செயலாக வலைப்பூ என்றால் என்னனு முழுசா தெரியாம எனது www.velunatchiyar.blogspot.com ஐ ஆரம்பித்தேன்.

2013இல் 76 பதிவுகள்..நான் தான் எழுதினேனா...நம்பமுடியல..ஆகஸ்ட் வரை 3 பதிவுகள் எழுதியிருந்தேன்..அக்டோபரில் கல்வித்திறை சார்பில் எங்களுக்கு வலைப்பூ பயிற்சி கொடுத்தபின் தான் பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாகத்துவங்கியது...

2014 இல் 320 பதிவுகள் எழுதியுள்ளேன்..

2015இல் நாற்பது பதிவுகள் ஆகி 500 பதிவுகள் எழுதியுள்ளேன் .குட்டி குட்டியாக என் மனதில் இருப்பவற்றை எழுதிய பதிவுகள் இவை.ஆனால் இன்னும் என் பதிவு அனைவருக்கும் பயன்படும் வகையில் தரமாக எழுத ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கின்றேன்...

முகநூல் நண்பர்களும் ,வலைப்பூ நண்பர்களும் கொடுத்த உற்சாகமே எனது வலைப்பூ வளர நீரூற்றியது...தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டி எனது நன்றி மலர்களை சமர்ப்பிக்கின்றேன்....

Sunday, 22 February 2015

இன்று வீதி கலை இலக்கியக் களத்தின் 13ஆவது கூட்டம்





இன்று வீதி கலை இலக்கியக் களத்தின் 13ஆவது கூட்டம்

கூட்ட அமைப்பாளர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தார்.அனைவரையும் வரவேற்று சென்ற மாத அறிக்கையை வாசித்தார்.

சிறுகதை வாசித்தல் -பகுதியில் அண்டனூர் சுரா அவர்கள் தினமலரில் பரிசு பெற்ற மஞ்ச அட்ட என்னும் பூம்பூம் மாட்டுக்காரக் குழந்தையின்  கல்வி உதவித்தொகை பெறுவதற்காக சாதிச்சான்றிதழ் பெற அலைகின்ற நிலையை உணர்த்தும் சிறுகதையை கண்முன் காட்சிகளைக்கொண்டு வந்து நிறுத்துவது போல் வாசித்தார்.அவரின் சிறுகதையை மேலும் சிறப்பாக்க  கூறப்பட்ட விமர்சனங்கள் ஒரு சிறுகதையை எப்படியெல்லாம் பார்க்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக,இருந்தது..சிறப்பான முடிப்புடன் கதை இருந்தது என்றும் மேலும் சிறப்புடன் எழுத வாழ்த்துகள் கூறினார்கள்...

கவிதை வாசிப்பில்- செல்லத்துரை அவர்கள் மூன்று கவிதைகள் வாசித்தார்..கவிதையில் அவர் பயன்படுத்திய மழைக்கல்,புழுதிச்சூறாவளி,போன்ற வார்த்தைகள் எடுத்துக்கூறப்பட்டன...

பாதித்த சம்பவத்தில் -மாலதி அவர்கள் அரசுப்பள்ளியில் தான் முதன்முதலாக பணியேற்றபோது நடந்தவற்றை வாழ்வில் மற்க்க முடியாத சம்பவமாகக் கூறினார்....இப்படியும் இருக்கும் அரசுப்பள்ளி என்பது போல இருந்தது..

இலக்கியவாதி அறிமுகத்தில்-புலவர் நாகூரார் அவர்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் படித்த பொழுது ஆசிரியராக இருந்த ச.பாலசுந்தரம் அய்யாவை அறிமுகம் செய்தார்..எல்லோரும் உவமைக்கு இலக்கியத்தைக்கூறுவார்கள் ஆனால் பாலசுந்தரன் அய்யா இலக்கணத்தை உவமையாகக்கூறுவார் என்று கூறி தலைவனை தலைவி சந்திக்கும் பொழுது வெட்கம் ஓடிவிடுமாம் அதற்கு உவமையாக ”உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடுவது” போல் என எடுத்துக்காட்டும் கூறி அவரின் நடுநிலையான தன்மையையும் அருமையாகக்கூறினார்..மிதியடிக்கு தொடுதோல் என்ர புதிய சொல்லை பயன்படுத்துவார் என்றும் கூறினார்.
நன்றி-முத்துநிலவன் அய்யா அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.


Friday, 20 February 2015

தால் தால்

தால் தாலென
தத்தித் தத்தி நடந்து
விழுந்தெழுந்து கூவுகின்றான்
விரைந்து வாங்கி
வீட்டிற்குள் நுழைந்தபின்னும்
அவனது இசை ஓயவில்லை....
எல்லோருக்கும் அது
தாலானது தன் பெயர்
துறந்து.....

Wednesday, 18 February 2015

கேட்டீகளோ?

தண்ணி குடிக்கத்தான்
தலை கவிழ்ந்தேன்....
தடுமாறி விழுவேன்னு
நினைக்கலியே....


கண்ணுமணி குஞ்சுக
கண்விழிக்காம
வாய்திறந்து கத்துதுகளே
குளத்த ஏரிய காயவிட்டீகளே
குஞ்சுகளின் கதறல் கேட்டீகளோ



தெரியாத்தனமா டிவிய போட்டா

தெரியாத்தனமா டிவிய போட்டா

சன் டிவி யில் நாதஸ்வரம் தொடரில் காதலிப்பவர்களுக்கு பெற்றோர் ஆதரவாகவும் சாதிச்சங்கத்தலைவர் தான் எதிர்த்து தகராறு செய்வதாகவும் காட்சி வந்தது....சரின்னு

பிரியமானவள் நாடகத்துல பாத்தா ஆடு கழுத்தறுபட்டது போல ஒரு சத்தம்  தன் மகளுக்கு  காதல் திருமணம் என பத்திரிக்கை வந்த பெற்றோர்களை பார்த்து சத்தம் போடுறார்..அவர் தான் சாதிச் சங்கத்தலைவராம்..பத்திரிக்கைய கிழிச்சு போட்டு இந்த கல்யாணம் நடக்க விட மாட்டேன்னு...கத்துறார்..... 

ஆக மொத்தத்துல தலைவர் தான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்ல வர்றாங்களா...
ஒண்ணு மட்டும் உண்மை சாதி
எல்லோரையும் வாழவைக்குது பெரியத்திரை முதல் சின்னத்திரை வரை...அப்றம்...நான் சொல்ல மாட்டேன்...பா
ஆமா அதெப்படி எல்லா இயக்குநர்களும் ஒரே மாதிரி சிந்திக்கிறாங்க?

Tuesday, 17 February 2015

பால்யம்

சில்லென்ற சாரலாய்
சிறுவயது தோழமைகளோடு
கலந்து கடந்தகால
கனவுகளை மீட்டெடுப்பது
வாழ்க்கையின் வசந்தகாலமாய்

சீண்டி சமாதானப்படுத்தி
சிரிக்க வைத்து....
சட்டென்று பால்யத்திற்குள்
சரித்து சிரிக்கின்றது காலம்

பள்ளிவயது கோபத்தை
பட்டென்று காட்டி
அடித்துச்சிரித்த
அத்தைமகளை
அள்ளி அனைத்து மகிழவே
ஆசைப்படுகின்றது மனம்.

தோளுக்கு மேல் வளந்தவளிடம்
தாயின் சேட்டையைக்கூற
விழிவிரித்துக் கேட்கின்றாள்
உனக்கு விளையாடக்கூடத்
தெரியுமா அம்மா..?



Friday, 13 February 2015

காதல்-14.02.15 இன்று நடந்த த.மு.எ.க.ச 11ஆவது மாநாட்டில் வாசிக்கப்பட்ட கவிதை

காதலர் தினமாமே
காதலைக்கேட்டேன்
ம்கும் என
சலித்துக்கொண்டது

கைத்தொடுவதும்
உடல் உரசுவதும்
மெய்தீண்டுவதும்
காதலென்று நினைப்பவர்களால்
அழிகின்றேன் நான் என்றது..

எங்கு வாழ்கிறாய்
என் கேள்விக்கு ....

விழி பருகி
மனதில் பதிந்து
உயிரில் கலந்த
உண்மைக்காதலில்
உயிர்க்கின்றேன் என்றது..

தடம் பதிக்கும்
காதலே அழிவில்லாதது என்றது
 புரியவில்லை என்றேன்

புன்னகைத்து என் கரம் கோர்த்து

மாமல்லனின் சிற்பக்காதல்
இராஜராஜ சோழனின் 
சிவன்  காதல்
இளங்கோவடிகளின்  தமிழ்க்காதல்
நம்மாழ்வாரின் பயிர்க்காதல்
பகத்சிங்கின் நாட்டின் காதல்
இவைகளை விட...
சிறந்தது எது

காதல் அழிவில்லாதது
இன்று காதலின் தினமல்ல
காதலர்களின் தினம் தானே

காதல் காமமல்ல
காமத்தை காதலென்று
கற்பிக்கும் கயவர்களை
வெறுக்கின்றேன் என்றே பகர்ந்து
 பறந்தது காதல்

புதுகைத் தென்றல்

சென்னையில் வெளியாகும் புதுகைத் தென்றல் இதழில் எனது கவிதை.
 

Tuesday, 10 February 2015

துணை

தொடப்படாத உன் ஸ்பரிசத்தில்
தொட்டோடும் இதழ்களின் சந்திப்பில்
காற்றை மறுக்கும் நெருக்கத்தில்
மனம் கலந்த இணைதலில்
மடைமாற்றி பெயர்கின்றது
இரவின் பனியைக் கரைக்கும்
வெப்பம்

Monday, 9 February 2015

ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான் கவிதை நூல் -வைகறை

ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான்   கவிதை நூல் -வைகறை

வெளீயீடு பொள்ளாச்சி இலக்கிய வட்டம்.ரூ50

வைகறை முகநூல் நண்பராகி தற்போது  புதுக்கோட்டையில் ஆசிரியராகப்பணி புரிகின்றார்...நந்தலாலா.காம் என்னும் இணைய இதழையும் நடத்தி வருகின்றார். ”ஒரிஜினல் தாஜ்மகால்,”நிலாவை உடைத்தக்கல்”ஆகிய இரண்டு கவிதை நூல்களைத்தொடர்ந்து இந்நூலை வெளியிட்டுள்ளார்.எனது ஒரு கோப்பை மனிதம் நூலுக்கு அழகான மதிப்புரை எழுதிதந்தவர்.சிறந்த ஆசிரியர்.சென்னை புத்தகக் கண்காட்சியில் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளீயிட்ட நூலகளை டிஸ்கவரி பதிப்பகத்தில் வாங்கினேன்..நிதானமாக படிக்க எண்ணி இத்தனை நாட்களுக்குப்பின் வாசித்தேன்...

தனது மகன் ஜெய்குட்டிக்கும் இவருக்கும் ஊடாடும் பாச வலையில் நம்மையும் வீழ்த்தி நம் குழந்தைகள் மட்டுமல்ல...பார்க்கும் குழந்தைகளையெல்லாம் ஜெய்குட்டியின் மனநிலையில்,ஒரு மகனை ரசித்து வளர்க்கும் தந்தையின் மனநிலையில் அழைத்துச்சென்று விடுகின்றார்... ஜெய்குட்டியுடன் இணைந்து பறந்து கொண்டிருக்கின்றேன் படித்து முடித்தபின்..இங்கு இவர் கவிஞராக வெற்றி பெறுகின்றார்...இவரது” நிலாவை உடைத்தக்கல்” நூலைப்பற்றி தோழர் எட்வின் சிலாகித்து சொல்வார்...அதற்கு சற்றும் குறைந்ததல்ல இந்நூலும்..

குழந்தைகளை வானவில்லாக,செல்லக்குட்டியாக ,குட்டி தேவதையாகக் காணும் இவரின் பார்வையில் ஜெய்குட்டியின் மூலம்

தனது பால்யத்தை தரிசனம் செய்கின்றார்.
வனம் புக குழந்தை அஞ்சி அடுத்தப்பக்கத்தை புரட்டுவதாக ஆரம்பிக்கும் கவிதை நம்மை சற்று வனவாசலில் நிற்கவைத்து நிகழ்காலத்தில் நடக்க வைக்கின்றார்.

அடம் பிடித்து வாங்கிய பறவையை சுதந்திரமாகப் பறக்கவிட்டு சிரிக்கின்ற சிரிப்பே சிறகாக மாறி பறப்பதை உணரவும் வைக்கின்றார்.

காகித வண்ணத்துப்பூச்சிக்கும் வானத்தை வழங்கி தன் ஜெய்குட்டியிடம் கொடுக்கும் அழகு அருமை

வானத்தை வழங்கலாம்
----------------------------------------
அந்த வண்ணத்துப்பூச்சியின்
இறகு நிறைய தூசி
அவ்வப்போது வந்து கொஞ்சம்
துடைத்துப்போகிறது
இறகில் அமரும் ஈ

புதிதாய் வருபவர்கள்
பாராட்டியபிறகு
அது
உறங்கத் தொடங்குகிறது

சுவரையே
 வானமென நினைத்து
ஒட்டப்பட்ட அதற்கு
சுவரே சிறையாய்

என்றாவது ஒரு நாள்
சலிப்பின் உச்சத்தில் என்னால்
பிடுங்கி எடுக்கப்படும் அதற்கு
நான் வானத்தை வழங்கலாம்
ஜெய்குட்டியிடம் விளையாடக்கொடுத்து.

என்ற கவிதை நுண்மையான ரசனையை மனதினில் ஓட விடுவதைத் தடுக்க முடியாது யாராலும்....

இரவை பகலாக்கும் ஒளி வெள்ளத்தின் ஊடுறுவலில் மெழுகு வர்த்தியினை அணைத்து இரவை இரவாக்குவதாகக் கூறுகின்றது
இரவு மலர்க்கவிதை...

“மின்சாரமற்ற இரவு
மெழுகுவர்த்தியை
ஊதியணைத்தவன்
இரவாக்குகிறான்
இரவை”

குழந்தையை இரசிக்காதவர் யாரும் இருக்க முடியுமா..அதுபோல.இந்நூலை
ரசிக்காமல் யாரும் கடந்து போக முடியாது...மனதினில் ஊடுறும் மென்மையான உணர்வை வழங்கி நம் மனதை கொள்ளை கொள்ளும் இக்கவிதை நூலைப் படித்தவர்கள் பாக்கியவான்கள்....

ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான்  ----வைகறை 
பொள்ளாச்சி இலக்கியவட்டம்
பில்சின்னாம்பாளையம்
சமத்தூர்-642 123
பொள்ளாச்சி
90955 07547

Sunday, 8 February 2015

31.1.15 tagore school

31.01.15 இன்று தாகூர் பள்ளியில் நடனப்போட்டிக்கு நடுவராகச்சென்றிருந்தேன்.மறக்க முடியாத நாளாக இன்று.குழந்தைகள் பாட்டு போட்டதும் உடனே ஆட வேண்டும்..எந்த பாட்டு எந்த குழந்தைக்கு வருமென யாருக்கும் தெரியாது..காலை 10மணி அளவில் போட்டித் துவங்கியது..பாட்டு போட்டதும் உடனே ஆடத்துவங்க வேண்டும்.பாடலுக்கு தகுந்த நடனமாக அமைய வேண்டும் என்பது விதி...

அத்தனை குழந்தைகளும் அருமையாக ஆடினர்...ஒரு குழந்தைக்கு “என்னை விட்டு ஓடிப்போக முடியுமா “என்ற பழைய பாடல் ...அந்த பாடலை அந்தக்குழந்தை கேட்டிருக்கவே வாய்ப்பில்லை..கையை பிசைந்து கொண்டு நின்றுவிட்டாள் .பாவம் அவள் ஆடவே இல்லை...இறுதியில் அவளுக்கு போட்டியின்றி ஆடச்சொல்லி குழந்தையின் கவலையைத்தீர்த்தார் பள்ளியின் நிறுவனர்.

குழந்தைகள் மேடையில் ஆடும்போது கீழே அமர்ந்திருந்த குழந்தைகள் கைதட்டி உற்சாகமாக ஆடுகின்ற குழந்தைகளை ஊக்கமூட்டினார்கள்..நடன அசைவுகளையும் சொல்லித்தந்து ஆடவைத்தனர் ஆச்சர்யமாக இருந்தது ..எப்பேர்பட்ட உயர்ந்த குணத்துடன் குழந்தைகள் பிறக்கின்றார்கள்...போட்டி என்பது திறமைக்காட்டுவதாக இருக்க வேண்டுமே ஒழிய குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையை விதைப்பதாக இருக்க கூடாது..என்பதற்கு எடுத்துக்காட்டாக குழந்தைகள் வெற்றி பெற்ற குழந்தைகளை தோல்வியடைந்தோர் பாராட்டினர்..மிகவும் மகிழ்வாக இருந்தது..

குழந்தைகள் உயரிய குணத்தோடுதான் பிறக்கின்றார்கள்...இவ்வாய்ப்பைத்தந்த பொன்.தங்கராஜ் சாருக்கு மிக்க நன்றி

7.2.15 மாறுவேடப்போட்டி

ஐடியல் பள்ளியில் விழா
அசத்தும் குழந்தைகளின்
அணிவகுப்பில் அசந்தே போனோம்
மகிழ்வில் நாங்கள்
அழுதுகொண்டே,
ஆடிக்கொண்டே பேசமறுத்து
அருள்செய்த முருகன்கள்..

கடமையைச்சொன்ன,
சொல்லவந்ததை மறந்த,
செல்லின் தீமையைக்கூறிய
காவலர்கள்..

அழுகையுடன் அழகாக
ஆலோசனைக்கூறிய
மருத்துவர்கள்..

மேடை ஏறவே மறுத்து,
வெண்ணெய் தின்ற வாயுடன்
திருதிருவென முழித்த
கிருஷ்ணன்கள்..

மெல்ல பறந்து வந்தது
வண்ணத்துப்பூச்சி ஒன்று

அழகாக குதித்துவந்த
திராட்சைக்கொத்துகள்

வீரமுடன்ஆர்வமுடன் 
வசனம் பேசிய ஜான்சிராணிக்கள்

மக்களைப்படிக்க வந்த
செய்தித்தாட்கள்

நச்சென்று வந்த
கோல்கேட்பாய்
நகரவாசிகளைப் பார்த்து
திகைத்து நின்ற காட்டுவாசி

மாணவர்களைப் பார்த்து
வெட்கிச்சிவந்த ஆசிரியர்

அச்சமில்லைப் பாடலை
அச்சத்தோடு பாடிய பாரதியார்கள்

ஒலிவாங்கியில் முகம் காட்ட
மறுத்தோடிய விவசாயி

ருத்ர தாண்டவம் ஆடி
அசத்திய அம்மன்

அழிக்கவேமுடியாதென்றே
 ஆர்ப்பரித்த  கொசு

ஊசிமணிபாசி விற்று
குழந்தையை ஐடியல்
பள்ளியில் சேர்க்க வந்த குறத்திக்கு
போட்டியாக வந்த குறவன்

ஏ.டி.எம்.கார்டால் கணவனை
இழந்த நவீனக்கண்ணகி

இப்போடிகளைக்காண வந்த
சரோஜினி நாயுடு

கொடியைக்காத்து உயிர் விட்ட
குமரன்கள்

தமிழகத்தின் வீரமங்கை
தனியொருத்தியாக
வெள்ளையரை வெற்றிகொண்ட
வேலுநாச்சியார்

தொடர்ந்து வந்த குழந்தைகளின்
வரிசையில் மதிமயங்கியே
வாழ்த்திமகிழ்ந்தோம்
வாழ்க ஐடியல் பள்ளி..
வளர்க அதன் புகழ் ...

அறந்தாகி ஐடியல் மெட்ரிக் பள்ளியில் மாறுவேடப்போட்டிக்கு நடுவராக செல்ல வேண்டுமென தோழி ஜெயாவின் வேண்டுகோளுக்கிணங்கி நான்,அனு,விஜிஅக்கா மூவரும் சென்றோம்.காலையில் 10 மணிக்குத் துவங்கியது ஐடியல் நர்சரிப்பள்ளிகளின் மாறுவேடப்போட்டி...160 குழந்தைகள் 60வதுக்கும் மேற்பட்ட மாறுவேடங்களில் மேடையேறியக் காட்சி மிக அருமை....மிகவும் ரசித்தோம் குழந்தைகளையும், அவர்களின் அம்மாக்கள் தங்கள் குழந்தைகள் வெற்றி பெற கீழிருந்து ஆடிக்காட்டிக் கொண்டிருந்தனர்...

அசல் மரம் போல் ஒரு மாணவன் முகத்தில் பச்சை வண்ணம் தீட்டி மேடை ஏற, அவனது தந்தை அவன் பேசுவதை வீடியோ எடுக்க காத்திருக்க, அவனோ வாயைத்திறவாது நிற்க,இவர் தவித்த தவிப்பு சொல்டா சொல்டா வீட்ல சொன்னீல சொல்டான்னு கெஞ்ச, அவன் எதற்கு வாய் திறவாது கீழே இறங்கி விட்டான்...

மதியம் ஐடியல்  மெட்ரிக் பள்ளிக்குழந்தைகளின் மாறுவேடப்போட்டி அனைத்துக்குழந்தைகளும் அசத்தி விட்டார்கள்.அப்பள்ளியின் தாளாளர் குழந்தைகளை மட்டுமல்ல அவர்களின் பெற்றோர்களையும் அன்பாக கண்டித்த காட்சி கண்டு வியந்தேன்..பெற்றோர்களும் கேட்டுக்கொண்டு அமைதி காத்தனர்...கேட்டதற்கு பெரும்பாலானவர்கள் அவர்களிடம் படித்தவர்கள் என்பதால் என அவர் சிரித்துக்கொண்டே கூறினார். விழா முடிந்தபின் அப்பள்ளியின் பொங்கல் விழா காட்சிகளை கணினியில் பார்த்தோம் அனைத்துக் குழந்தைகளும் தமிழர்களின் பாரம்பரிய உடையில் வேட்டி ,தாவணியில் இருந்தது கண்கொள்ளாக்காட்சி..குழந்தைகளோடு குழந்தையாக இவரும் உரியடிக்க செல்ல,குழந்தைகள்  ஏமாற்றியகாட்சி அப்பள்ளி ஒரு குடும்பம் போல் செயல் படுவதை உணரமுடிந்தது.

1600 குழந்தைகள் ,100 ஆசியர்கள் மற்றும் பணியாளர்களைக்கொண்டு அப்பள்ளி இயங்கி வருவதாக கூறினார்.பணம் பிடுங்கும் பள்ளியாக இல்லாது குழந்தைகளின் மனம் விரும்பும் பள்ளியாக  விளங்குவதைஅறிந்து மிகவும் மகிழ்வாக இருந்தது. பல மெட்ரிக் பள்ளிகள் பெற்றோர் பணம் கட்டும் இயந்திரமாக மட்டும் எண்ணி செயல்படுகையில் சில பள்ளிகள் இப்படியும் இருக்கின்றன.

இப்பள்ளியில் 100 குழந்தைகள் இலவசமாகப்படிப்பதாக அறிந்தோம்...உண்மையில் சிறந்த பள்ளி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..தமிழை புறக்கணிக்காத,தமிழர் பண்பாட்டை போற்றும் பள்ளியாகத்திகழ்கின்றது...


தான் ஒரு முஸ்லீம் என்பதை விட நான் ஒரு தமிழன்...மதமனைத்தும் பிறகு வந்தது தானே என்று கூறிய போது ஆச்சரியமாக இருந்தது..இவரின் மனைவியின் பெயர் செல்வி என்றும் ,மகளின் பெயர் தேன்மொழி என்றும் அறிந்த போது மதப்பற்று மறுத்து தமிழ்ப்பற்று கொண்ட ஒரு தமிழரைக்கண்ட நிறைவு...ஜெயாவிற்குத்தான் என் நன்றிகளைக்கூற வேண்டும்...நன்றி ஜெயா..









Friday, 6 February 2015

விளையாட்டுவிழா

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள்[ 4.2.15-6.2.15 ]

 மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள்புதுக்கோட்டையில்.22 இடங்களில்  நடந்தன..ஒருமாதமாய் இதற்கான பணிகளில்கல்வித்துறை அதிகாரிகள் எல்லோரும் ஈடுபட்டிருந்தனர்...

 கல்வித்துறை அதிகாரிகள் குழு அமைத்து, திட்டமிட்டு மிகச்சிறப்பாக விழா நிகழக்காரணமாயிருந்தனர்....வழக்கம் போல் சான்றிதழ் குழுவில் நானும்....திரு இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான  கூடைப்பந்து போட்டிகள் நடந்தன.அங்குதான் எனக்குப்பணி.முதல் நாள் 4 போட்டிகளும் அடுத்த நாள் 5 போட்டிகளும் நடந்தன...இறுதிப்போட்டிகள் சண்முகநாதன் இஞ்சினியரிங் கல்லூரியில் இன்று நடந்தன.தஞ்சை அணி மிகச்சிறப்பாக ஆடி வெற்றிக்கோப்பையைப் பெற்றது.

பல மாணவிகள் தலைமுடியை கிராப் வெட்டிக்கொண்டு ஆண்பிள்ளைகள் போல் அடிக்கடி தலையை அழகாக கோதிக்கொண்டு வெற்றிபெரும் நோக்கோடு விளையாடியக்காட்சி என்னை பால்யத்துக்கு இட்டுச்சென்றது...எத்தனைபேர் தடுத்தாலும் கோல் போடுவதிலேயே குறியாய் இருந்தனர்..

எத்தனைமுறை கீழே விழுந்தாலும் கலங்காது சட்டென்று துள்ளி ஓடினார்கள்....சுற்றியிருந்த குழந்தைகள் அவர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தனர்...

ஏன் விளையாட்டு மட்டுமே பாடமாக வைக்க கூடாது...எனத் தோன்றும் அளவிற்கு குழந்தைகள் மிக மகிழ்வாக இருந்தனர்.ஒரே ஆரவாரமும் ஆர்பாட்டமும்.இத்தனை சுறுசுறுப்பான குழந்தைகளை மரச்சட்டங்களுக்கு நடுவில் புகுத்தி கொடுமை படுத்துகின்றோம்...

இத்தனை மகிழ்வையும் வகுப்பறை பிடுங்கிக்கொள்கின்றதே என வருத்தப்பட்டேன்.நிறைய பள்ளிகள் படிப்பது மட்டுமே நோக்கமாகக் கொண்டு  விளையாடவிடாது குழந்தைகளின் குழந்தமையைக்கொன்றுவிடுகின்றன என்பது வருத்தப்பட வேண்டிய உண்மை.

.நன்கு படிக்கும் மாணவிகள் வகுப்பறையை விரும்பினாலும், எழுத்துக்களுக்கு கட்டுப்படாத  மாணவிகளுக்கு வகுப்பறைச்சிறைதான் ...

ஆசிரியரை நான்கு சுவற்றுக்குள் மட்டும் செயல்பட வைக்காமல்,  இயற்கையை குழந்தைகட்கு அறிமுகப்படுத்துபவராக ஏன் மாற்றக்கூடாது.?

எல்லாப்பள்ளிகளிலும் குழந்தைகள் விரும்பும் ஆசிரியர்களாக விளையாட்டு ஆசிரியர்,தையலாசிரியர்,ஓவிய ஆசிரியர்,பாடலாசிரியர்களே உள்ளனர்.

ஹெலன்கெல்லர்இயற்கையைத்தொட்டுப்பார்த்து அனுபவித்து படித்தது நினைவிற்கு வருகின்றது..மனனம் செய்யும் பாடத்திட்டம் எப்போது மாறும்?.

இயற்கையை நேசிக்க,சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள ,பிற உயினங்களிடத்தில் அன்புகொள்ள,மனிதர்களிடத்தில் மனித நேயத்துடன் நடந்து கொள்ள எப்போது குழந்தைகட்கு கற்றுத்தரப்போகின்றோம்..?

.மதிப்பெண்களிடம் சிக்கித்தவிக்கும் குழந்தைகளை எப்படி மீட்கப்போகின்றோம்?

Wednesday, 4 February 2015

ஹைக்கூ

ஈரக்காட்டைத் தொலைத்த
மணற்காடும் மரணித்தது
மனிதக்காடுகளால்...

ஹைக்கூ

கட்டிலின் கண்ணீரை
துடைத்தழித்தது
அலைபேசி......

Tuesday, 3 February 2015

விருது நகரில் இயங்கி வரும் நீலநிலா இலக்கிய காலாண்டிதழ்


விருது நகரில் இயங்கி வரும் நீலநிலா இலக்கிய காலாண்டிதழ்

நிறுவனர் நீலநிலா செண்பகராமன் அவர்கள் எனது கவிதை நூல்களைப்படித்து விட்டு என்னிடம் பேசினார்.சென்ற மாதம் அவர் தனது இதழுக்காக என்னைப் பேட்டி எடுத்தார்..மாணவர்கள் பகுதிக்கென ஒரு பக்கம் ஒதுக்கி இளம் கவிஞர்களை வளர்க்கின்றார்..நல்ல செய்திகளுடன் தரமான இதழாக நீல நிலா மிளிர்கின்றது.வாழ்த்துகள் .ஆசிரியர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களுக்கும் வாழ்த்துகளும் என் மனம் நிறைந்த நன்றியும்.

நீல நிலா இதழில் எனது நேர்காணல்

புதுகை முழு நிலா முற்றம்..03.02.15









 புதுகை நிலா முற்றம்..03.02.15

சென்ற ஆண்டில் பெரம்பலூர் செல்வகுமார் தோழர் நிலா முற்றம் என்ர தலைப்பில் நடுரோட்டில் நிலவின் ஒளியில் நிகழ்ந்த கூட்டத்தை பற்றி ஒரு பதிவு ....எழுதியிருந்தார்..நிலா எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று .நிலவின் ஒளியில் இலக்கியம் பருகுவதென்றால் அதைவிடவேறு சிறப்பு என்ன உள்ளது. ஏக்கத்துடன் படித்தேன்..

திடீரென வைகறை மற்றும் நிலவன் அய்யாவிடமிருந்து ஒரு மின்னஞ்சல்..இன்று நிலா முற்றம் நிகழ்வு புதுக்கோட்டை புதுக்குளத்தில் என...ஆஹா எனக்கூடிவிட்டோம்...
இதமான நிலவு எங்களை  மேற்பார்வையிட ..புதுக்குள நடைப்பாதையில் முத்துநிலவன் அய்யா மற்றும் அவர்கள்துணைவியார் மல்லிகா மற்றும் வைகறையுடன் புதுக்குளத்தில் புதுகைக் கவிஞர்கள் அனைவரும் கூடினோம் ..இனிய நிகழ்வாய்..கவிஞர் செல்வா அவர்களின் இனிய கவிதையுடன் துவங்க..சுவாதி கவிதை வாசிக்க.என் கவிதைகளுடன் கவிஞர் நீலாவின் இனிய அனுபவங்களுடன் நிலா முற்றம் இனிமையாகி மாலதியின் குழந்தைகளுடனான அனுபவங்களுடன் அழகாக நிகழ்ந்தது நிலா முற்றம்...

இனி தொடர்ந்து நிகழும் நிலாவுடனான தொடர்பு..

Sunday, 1 February 2015

மாதொருபாகன்

மாதொருபாகன் நாவலுக்கு இத்தனை எதிர்ப்பு கிளம்பியதற்கு காரணம்....!?

எங்கே பெண்கள் எல்லாம் குழந்தை இல்லை என்பதற்காக வேறு ஆண்களை நாடி விடுவார்களோ என்ற அடிப்படை அச்சமே காரணமோ ?

ஆண்கள் குழந்தை இல்லை என்கையில் வேறு திருமணம் செய்து கொள்வது போல் பெண்களும் கிளம்பி விட்டால் என்ன செய்வது என்ற அச்சமே...உண்மையான விசயத்தை ஆத்திரமாக மறைக்கின்றதோ?

இதையே ஆண்கள் செய்வதாக எழுதியிருந்தால் இத்தனை எதிர்ப்பு கிளம்பியிருக்குமா?

அப்படி எதிர்ப்பதென்றால் முதலில் மகாபாரதம் எழுதியவரை அல்லவா எதிர்த்து....போராடியிருக்க வேண்டும்.

பெண்களுக்குத்தான் கலாச்சாரம் உண்டு போல தமிழினத்தில்...

பெண்குழந்தைகள் பாலியல் வன்முறையால் சிதைக்கப் படுவதைக் கேட்டும் ,பார்த்தும் ...மௌனமாய் இருக்கும் சமூகம் இப்போது மட்டும் கொதிப்பது ஏன்?

திரையுலகில் அரைகுறைஆடையில் வருவதை எதிர்க்காத சமூகம் இப்போது மட்டும் ஏன் கொதிக்கின்றது?

மதுவால் ஏற்படும் சீரழிவுகளைப் பார்த்து ரசிக்கும் சமூகம் இப்போது ஏன் கொந்தளிக்கின்றது?

கண்டன ஆர்ப்பாட்டம்



01.02.15
இன்று எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டை த.மு.எ.க.ச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஒரு சிறந்த சமூக சிந்தனை உள்ள எழுத்தாளருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் போராடும் நிலைதான் இன்றும் ஜனநாயக நாடு என சொல்லிக்கொள்ளும் நம்நாட்டில்....

கைகள் இணைகின்றன....குரல்கள் ஒலிக்கத்துவங்கிவிட்டன...கருத்துரிமைக்காக்க..

”பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம் “14ஆம் ஆண்டு இலக்கியத்திருவிழா



”பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம் “14ஆம் ஆண்டு இலக்கியத்திருவிழா

31.01.15 அன்று புதுகை நகர்மன்றத்தில் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது.புதுகை யோக பாண்டியன் அவர்களின் மாணவர்கள் சிறப்பாக யோகா செய்து மகிழ்வித்தனர்...அவ்விழாவில் இயக்குனர் திலகம் கே.பாக்கியராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.,எங்களின் வலைப்பூ தந்த உறவாய் நாங்கள் மிகவும் மதிக்கும்  பிரான்ஸ் நாட்டின் கம்பன் கழக நிறுவனர் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்களின் ”ஏக்கம் நூறு”மற்றும் ”கனிவிருத்தம்”ஆகிய கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன...புதுகையின் கவிஞர் பெருமக்கள் வாழ்த்த விழா சிறப்புடன் நடந்தது..
அனைவரையும் வரவேற்கும் பொறுப்பு எனக்கு கவிஞர் முகேஷ் அவர்கள் அளித்திருந்தார்கள்.

இவ்விழாவில் அய்யாவை சந்தித்தது மிக மகிழ்வான ஒன்று.அய்யா எங்களுக்காக நேரம் ஒதுக்கி மரபிலக்கணத்தின் ஐயங்களைக் களைந்தார்...தொடர்ந்து பயில இருக்கின்றோம்.புதுகையைச் சுற்றிப்பார்ப்பதை விட எங்களுக்கு தமிழ் கற்று கொடுப்பது தான் மகிழ்ச்சி என 4 மணி நேரம் அயராது வகுப்பெடுத்தார்..தமிழ் மொழி இனிது ...கற்று கொடுப்பது ,கற்றுக்கொள்வதும் ....நன்றி அய்யா..

இயக்குனர் திலகம் பாக்கியராஜ் அவர்களை வரவேற்க ...நான் எழுதிய கவிதையாக

ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரனாய்
ஒண் தமிழ் உலகம் போற்றும்
எங்கசின்ன ராசாவே..
அன்பு ராசுக்குட்டியே
வேட்டிய மடிச்சுக்கட்டி
பாரிஜாதமாய் மனம் மணக்கும்
எங்களின் சொக்கத்தங்கமே
ரத்தத்தின் ரத்தமே

ஒருகை ஓசையை நீ கூற
பலகைகள் இணைந்தே வரவேற்கின்றோம்
அந்த ஏழுநாட்களில்
மௌனகீதங்கள் பாடி
ஆயிரம் பொருள் தந்தாய்
தூறல்நின்னு போச்சு என்றே
தாவணிக்கனவுகள் சிறகடிக்க
அம்மா வந்தாச்சு என
முந்தானை முடிச்சு போட்டாய்
முருங்கைக்காய் பெற்றது புகழே

டார்லிங் டார்லிங் டார்லிங் எனக்கொஞ்சி
வீட்ல விசேஷம் என
சுந்தரகாண்டம் பாடி
ஆராரோ ஆரிரரோ என்றே
தாலாட்டு பாடிய தயாளனே

கிழக்கே போகும் ரயிலேறி
புதிய வார்ப்புகளில்
சுவர் இல்லாத சித்திரங்கள் வரைந்தாய்
பவுனு பவுனுதான்னு
சின்னவீடு தந்தாய்

இது நம்ம ஆளு என்றே
திரையுலகம் கொண்டாடியத் தலைவா
புதுகை பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம்
பண்புடனும் பாசத்துடனும்
அன்புடனே வரவேற்கின்றது உனையே
எங்கள் பாக்கியமே வருக வருக..
இயக்குனர் திலகமே வாழ்க வாழ்க...