Friday, 6 February 2015

விளையாட்டுவிழா

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள்[ 4.2.15-6.2.15 ]

 மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள்புதுக்கோட்டையில்.22 இடங்களில்  நடந்தன..ஒருமாதமாய் இதற்கான பணிகளில்கல்வித்துறை அதிகாரிகள் எல்லோரும் ஈடுபட்டிருந்தனர்...

 கல்வித்துறை அதிகாரிகள் குழு அமைத்து, திட்டமிட்டு மிகச்சிறப்பாக விழா நிகழக்காரணமாயிருந்தனர்....வழக்கம் போல் சான்றிதழ் குழுவில் நானும்....திரு இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான  கூடைப்பந்து போட்டிகள் நடந்தன.அங்குதான் எனக்குப்பணி.முதல் நாள் 4 போட்டிகளும் அடுத்த நாள் 5 போட்டிகளும் நடந்தன...இறுதிப்போட்டிகள் சண்முகநாதன் இஞ்சினியரிங் கல்லூரியில் இன்று நடந்தன.தஞ்சை அணி மிகச்சிறப்பாக ஆடி வெற்றிக்கோப்பையைப் பெற்றது.

பல மாணவிகள் தலைமுடியை கிராப் வெட்டிக்கொண்டு ஆண்பிள்ளைகள் போல் அடிக்கடி தலையை அழகாக கோதிக்கொண்டு வெற்றிபெரும் நோக்கோடு விளையாடியக்காட்சி என்னை பால்யத்துக்கு இட்டுச்சென்றது...எத்தனைபேர் தடுத்தாலும் கோல் போடுவதிலேயே குறியாய் இருந்தனர்..

எத்தனைமுறை கீழே விழுந்தாலும் கலங்காது சட்டென்று துள்ளி ஓடினார்கள்....சுற்றியிருந்த குழந்தைகள் அவர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தனர்...

ஏன் விளையாட்டு மட்டுமே பாடமாக வைக்க கூடாது...எனத் தோன்றும் அளவிற்கு குழந்தைகள் மிக மகிழ்வாக இருந்தனர்.ஒரே ஆரவாரமும் ஆர்பாட்டமும்.இத்தனை சுறுசுறுப்பான குழந்தைகளை மரச்சட்டங்களுக்கு நடுவில் புகுத்தி கொடுமை படுத்துகின்றோம்...

இத்தனை மகிழ்வையும் வகுப்பறை பிடுங்கிக்கொள்கின்றதே என வருத்தப்பட்டேன்.நிறைய பள்ளிகள் படிப்பது மட்டுமே நோக்கமாகக் கொண்டு  விளையாடவிடாது குழந்தைகளின் குழந்தமையைக்கொன்றுவிடுகின்றன என்பது வருத்தப்பட வேண்டிய உண்மை.

.நன்கு படிக்கும் மாணவிகள் வகுப்பறையை விரும்பினாலும், எழுத்துக்களுக்கு கட்டுப்படாத  மாணவிகளுக்கு வகுப்பறைச்சிறைதான் ...

ஆசிரியரை நான்கு சுவற்றுக்குள் மட்டும் செயல்பட வைக்காமல்,  இயற்கையை குழந்தைகட்கு அறிமுகப்படுத்துபவராக ஏன் மாற்றக்கூடாது.?

எல்லாப்பள்ளிகளிலும் குழந்தைகள் விரும்பும் ஆசிரியர்களாக விளையாட்டு ஆசிரியர்,தையலாசிரியர்,ஓவிய ஆசிரியர்,பாடலாசிரியர்களே உள்ளனர்.

ஹெலன்கெல்லர்இயற்கையைத்தொட்டுப்பார்த்து அனுபவித்து படித்தது நினைவிற்கு வருகின்றது..மனனம் செய்யும் பாடத்திட்டம் எப்போது மாறும்?.

இயற்கையை நேசிக்க,சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள ,பிற உயினங்களிடத்தில் அன்புகொள்ள,மனிதர்களிடத்தில் மனித நேயத்துடன் நடந்து கொள்ள எப்போது குழந்தைகட்கு கற்றுத்தரப்போகின்றோம்..?

.மதிப்பெண்களிடம் சிக்கித்தவிக்கும் குழந்தைகளை எப்படி மீட்கப்போகின்றோம்?

2 comments:

  1. பகிர்வுக்கு நன்றி! உங்களை போன்ற நல்லாசிரியர்கள் முயற்சித்தால் நல்லதே நடக்கும்!

    ReplyDelete
  2. தொடரட்டும் விளையாட்டுகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...