பாடநூல் தயாரிப்புக் குழுவில் ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடநூல் குழுவில் மதிப்பிற்குரிய உதயச்சந்திரன் அய்யாவின் கீழ் பணி செய்த காலங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.
ஒவ்வொரு நாளும் பாடங்களின் தன்மை குறித்து மாணவர்களின் மனநிலையில் நின்று அவர் படும் கவலை வியப்பாக இருக்கும்.
இரவு ஒரு மணிக்கு கூட நாங்கள் எழுதித்தந்த பாடங்களைத் திருத்தம் செய்து அனுப்புவார்கள்...எப்போது தான் தூங்குவார்கள் என்ற சந்தேகம் வரும்.
தமிழ் எழுத்துகளில்' ரகர ' எழுத்து பிழையாகவே அச்சிடப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய போது , ஏன் இதை இத்தனை நாட்களாக கவனிக்க வில்லை என்று கூறி உடனே அச்சு இயந்திரத்தில் மாற்றம் நடவடிக்கை எடுத்தார்.
தமிழ் மொழி மீது அவர் கொண்டிருந்த தீராக்காதலை அவரின் செயல்களில் ஒவ்வொரு முறையும் உணர முடிந்தது..
உங்கள் அறிவை எல்லாம் பாடநூலில் காட்ட வேண்டாம் என்று நினைக்காதீர்கள்.அவர்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் அவர்கள் விரும்பி படிக்கும் படி வண்ணப் படங்களுடன் கண்களைக் கவரும் வகையில் பாடநூல் அமைய வேண்டும் என்று வலியுறுத்துவார்...
அவரது நல்ல எண்ணத்தை செயலாக்கம் செய்ய பிடிவாதமாக இருப்பார்.அவரது எண்ணப்படியே பாடநூல்களில் புதிய பல கருத்துக்கள் செயலாக்கம் பெற்றன.
மகத்தான தலைமையின் கீழ் பணிபுரியும் பெருமையுடன் ஏற்பட்ட அத்தனை சிரமங்களையும் புறந்தள்ளி புன்னகையுடன் வலம் வருவோம்...
பாடநூலில் தொழில்நுட்பங்களைப் புகுத்தி விரைவுக்குறியீடைப் பயன் படுத்தி இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ அவரது சீரியத் தலைமையின் கீழ் முனைவர் நா.அருள்முருகன் அய்யா வழிநடத்த பணிபுரிந்த காலங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.
அவரது அனுபவங்களைத் தொகுத்து 'மாபெரும் சபைதனில்' என்ற நூலில் அவர் சந்தித்த எளிய மனிதர்களின் உன்னதமான பண்புகளை எழுதியுள்ளார்...
எந்த நிலையிலும் குறை கூறாமல் நிறையை மட்டுமே கூறும் அவரது பண்பு போற்றத்தக்கது...
இரு மாதங்களுக்கு முன்பு வீதி கலை இலக்கியக் களம் நிகழ்வில் அவரது 'மாபெரும் சபைதனில்'நூல் அறிமுகம் செய்த போது முழுமையாக கலந்து கொண்டு தனது ஏற்புரையைக் கூறிய போது ஒரு மயிலிறகு வருடலாக அவரது தன்மையை உணர்ந்தோம்....
அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்களில் முதன்மையான நூல் அது.
இன்று மதிப்பிற்குரிய ஆட்சியர் இறையன்பு அவர்களின் உடன் பணியாற்ற உள்ளார்...
தொழில் நுட்பங்களின் உதவியோடு தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க உள்ளது .
தகுதியான அதிகாரிகளைத் தேர்வு செய்து ஆட்சி செய்ய புறப்பட்டுள்ள மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களின் பண்பாடு அனைத்து மாநிலத்திற்கும் எடுத்துக்காட்டாக அமையும் என்பது மறுக்க முடியாத உண்மை...