World Tamil Blog Aggregator Thendral: January 2021

Tuesday, 26 January 2021

திரை விமர்சனம் The last colour

The last colour -Hindi film 2019

மனதை விட்டு நீங்காத படிமமாக மனதில் உறைந்து நிற்கிறது..
சமூகத்தின் மறைக்கப்பட்ட பக்கங்களை யாரும் அறிந்திராத அல்லது அறிய விரும்பாத ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வினை கண் முன் காட்சிப் படுத்துகிறது" தி லாஸ்ட் கலர் ."
எழுதி, இயக்கி ,தயாரித்த விகாஸ் கண்ணாவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ஒளிப்பதிவாளர் subhrasnu kumar dass
நீனா குப்தா நூராக,
Princy suthakaran நூர் சக்ஸேனாவாக
,Aqsa Siddique,சோட்டியாக ,சிண்ட்டுவாக ராஜேஸ்வர் கண்ணா ,ருத்ராணி செட்ரி அனார்கலியாக,ராஜாவாக aslam shaik வாழ்ந்துள்ளனர்.
ஏன் மதத்திற்கு எதிராக, சமூக பண்பாட்டிற்கு எதிராக போராடுகிறீர்கள் என்ற கேள்வியுடன் படம் துவங்குகிறது.
எந்த மதமும் ஒருவரை மோசமாக நடத்த அனுமதிக்காது.யாருக்கு எதிராகவும் போராடவில்லை.உரிமைக்காக போராடுகிறேன் என்று கூறும் நூர் சக்ஸேனா திருநங்கைகளுக்கான ,தெருவோர குழந்தைகளுக்காக போராடி வெற்றி பெற்ற வழக்கறிஞர்.
தற்போது விதவைகளும் ஹோலி பண்டிகை கொண்டாட உரிமை கேட்டு போராடி வெற்றி பெறுகிறார்.
இதனால் இந்தியாவில் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு இது துவக்கம் என்ற பதில் மாற்றத்திற்கு விதையாகிறது.
விதவை நூராக நடிக்கும் நீனா குப்தா அவரது மென்மையான உணர்வுகளை எளிதாக நம்மீது கடத்தி விடுகிறார் இயல்பான நடிப்பால்.யாரோடும் பேசாமல் மந்திரங்களைக் கூறிக்கொண்டு உணர்வற்ற சடப்பொருளாக வாழும்  நூரை, சோட்டி தனது அன்பால் அவரது இறுகிய மனதில் வேர் விட்டு பாசத்தால் கட்டிப் போடுகிறாள்.
படிக்கத்தெரியாத நூர் தாகூரின் கீதாஞ்சலி புத்தகத்தோடே வாழ்கிறாள்.தாத்தா படிக்க வைக்க ஆசைப்பட்டும் குடும்பத்தினர் சம்மதிக்காத காரணத்தால் படிக்க முடியாத நூர் படிக்க கற்றுத்தர ஆசிரமத்தலைவியிடம் கேட்கும் காட்சி பெண்கல்விக்கான வித்து.
ஏன் வண்ணங்களைப் பிடிக்காது என்றவளின் கேள்வி சமூகத்தின் முகத்தில் அறையப்படுகிறது.

நூருக்கு பிடித்த பிங்க் வண்ணம் பூசி ஹோலி கொண்டாட நினைக்கும் சோட்டியின்  வாழ்க்கை படிக்க காசு சேர்ப்பதற்காக கழைக்கூத்தாடியாக கயிற்றிலும் வாழ்விலும் ஊசலாடுகிறது.
நண்பனாக சோட்டியைக் காக்கும் சிண்ட்டு தவிக்கும் தவிப்பு நம்மையும் தவிக்க வைக்கிறது.
தெருவோர குழந்தைகளின் வலியை ,திருநங்கைகளின் துயரங்களை நாம் அறியாத சமூகத்தை அறிய வைக்கிறது இப்படம்.
பெண்குழந்தை பிறக்காததற்காக காவலராக வரும் ராஜாவின் மனைவி படும் துயரம்,கல்விக்காக பெண்குழந்தைகள் ஏங்கும் நிலை,கணவனை இழந்த பெண்களின் நிலை ,திருநங்கைகளின் நிலை, தெருவோரக் குழந்தைகள் நிலை என ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வியலைக்  காட்சிப்படுத்துகிறது.
இறுதியாக வழக்கறிஞராகி அம்மாவாக நினைத்த நூரிடம் கொடுத்த  உங்கள் மீது நிச்சயமாக ஹோலியன்று வண்ணம் பூசுவேன் என்ற வாக்குறுதியை ,சட்டத்தின் துணைகொண்டு ஆசிரமத்தில் வாழும் அத்தனை விதவைகளுடன் வண்ணங்களை இறைத்து பூசி கொண்டாடி நிறைவேற்றுகிறாள் பெயரே இல்லாது வாழ்ந்த சோட்டி .
வயதான ஆண்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து அவர்கள் இறந்த பிறகு விதவையாக்கி அவர்களை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்குவது எந்த மதமாக இருந்தாலும் ஏற்க முடியாத ஒன்று...
Water என்கிற படத்தை சமீபத்தில் பார்த்து முடித்த நிலையில் The last colour என்ற இந்தி படம் பெண்கள் சட்டங்களை வெறும் பேப்பரில் மட்டுமே படிக்காமல் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பதாக உள்ளது.

இன்னமும் தமிழ்ப்படங்கள் நான்கு பாடல்கள்,நான்கு சண்டைகள் என்று ஹீரோயிசத்தை ஒழித்து சமூகத்திற்கான பாதையில் எப்போது பயணிக்கப்போகிறது என்பதை காலம் தான் உணர்த்த வேண்டும்.

மு.கீதா