World Tamil Blog Aggregator Thendral: July 2015

Friday, 31 July 2015

முழுநிலா முற்றம் -கூட்டம் 7

முழு நிலா[நீலநிலா] முற்றம்- கூட்டம் 7
நாள்[31.7.15]

இன்று முழுநிலா முற்றத்தின் ஏழாவது கூட்டம் சகோதரர் வைகறை வீட்டு மொட்டைமாடியில் நிகழ்ந்தது....வாசலில் கலர்கோலமிட்டு அனைவரையும் வரவேற்றார் சகோதரி ரோஸ்லின்.

முதலில் மதிப்பிற்குரிய அப்துல்கலாம் அவர்களுக்கும்,மதுக்கடை ஒழிப்பிற்காக போராடி உயிர் நீத்த அய்யா சசி பெருமாள் அவர்களுக்கும் ஒருநிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.







நிகழ்வுகள்

1]படித்தபுத்தகம் பற்றி கூறும் நிகழ்வில்

கீதா  பாலகுமாரனின் ”உடையார் ”நாவல் குறித்தும்,

கவிஞர் மீனாட்சி அண்டனூர் சுராவின் ”மாண்புமிகு மதிப்பெண் “கதைக்குறித்தும்,
கவிஞர் ஈழபாரதி -தி இந்துவின் ”கடல்” நூல் குறித்தும்,

சகோதரர் கஸ்தூரிரெங்கன்” முஸ்லீம் தீவிரவாதிகளா?”என்ற நூல் பற்றியும்,

கவிஞர் சோலச்சி  -அன்வர் பாலசிங்கம் எழுதிய ”கறுப்பாயி என்கிற நூர்ஜஹான் ”உண்மைக்கதைக்குறித்தும்

கவிஞர் பொன்.க அய்யா மற்றும் கவிஞர் அப்துல் ஜலீல் இருவரும் கலாமின் ”எழுச்சிதீபங்கள் “குறித்தும்,
கவிஞர் நீலா “தேவதாசியரும் கட்டமைக்கப்பட்ட வரலாறும்”நூல் குறித்தும்,
கவிஞர் வைகறை “ஜப்பான்” என்ற சிறு நூல் குறித்தும் தங்களின் கருத்துகளைக்கூறினார்கள்.

2]கதைக்கூறல்
தங்கை மைதிலி “புத்தவிக்ரகம்’பற்றி வலைப்பூ நண்பர் திண்டுக்கல்தனபாலன் எழுதிய கதைக்குறித்து பகிர்ந்தார்.

திருச்சியிலிருந்து இருந்தபோதும் எப்படியாவது இந்நிகழ்விற்கு வந்துவிடவேண்டுமென்ற ஆவலில் சிரமப்பட்டு வந்து கலந்துகொண்ட தோழி ஜெயா எஸ்.ராவின்” வளையல்”பற்றியக்கதையைக்காட்சிப்படுத்தி அசத்தினார்.

3]பாடல்

முழுநிலாமுற்றத்தின் முக்கியத்துவம் பெற்றதாக கவிஞர் நீலாவின் ”பால் போல் நிலா”என்ற திருமணத்திற்குமுன் கனவு காணும் பாடல்கள் தொகுப்பைப்பாடி அனைவரின் சிறுவயது கனவுகளை மீட்டியது மிக அருமை .

கவிஞர் நாகநாதன் ”கவிதைபாடுகுயிலே” என்ற பாடலைப்பாடினார்.

முழுநிலாமுற்றத்தின் செல்லமகள் தமிழ் ஓவியா தனது தாத்தா எழுதிய “எல்லைத்தாண்டி வேதாரண்யம்”என்ற சமூகப்பாடலை இனிமையாகப்பாடினார்.

 கூட்டத்தின் புதிய அறிமுகம் கணேசன் [என் மாணவன்] நான் கொண்டகாதலடி என்ற கிராமியப்பாடலைப்பாடி அனைவர் மனதையும் கவர்ந்தார்.

4]கவிதை வாசித்தல்

நாகநாதன்---” யாரின் அனுமதி இன்றி”என்ற கவிதையும்

மீனாட்சி--”-உலகப்பார்வையை தன்மீது
                     திருப்பியத்தலைவர்”கலாம் குறித்த கவிதையும்
பொன்.க அவர்கள் ”மரணதண்டனைக்கூடாதென”- மது இன்னும் எத்தனை உயிர்களைக்குடிக்கும் எனக்கேட்டார்.

நீலா எழுதிய ”நான்கு ஜாமங்களின் கதை” மதுவால் கணவன் மனைவி இடையே தாம்பத்ய உறவில் ஏற்படும் சிரமங்களைக்காட்டிய விதம் அருமை.

கீதா.”தங்கத்தட்டென்றேன்”என்ற .நிலா பற்றியக்கவிதை வாசித்தார்.

அமிர்தாதமிழ் எழுதிய “எங்கள் தலைக்கொய்து”என்ற ரோஜாக்கவிதை அருமை.

கவிஞர் செல்வா தான்  கேட்டு அதிர்ந்த மாணவன் கூறிய ”அப்பாக்கு தெரியாம”என்ற கவிதையைப் பகிர்ந்தார்.

5]நிகழ்வின் புதுமையாக கவிஞர் வைகறை

ஹைக்கூ வாசித்தல் என்ற தலைப்பில் ஹைக்கூ கவிதை அடங்கிய தாள்களை அனைவருக்கும் தந்து படிக்கக்கூறி அவர்களுக்கே அக்கவிதை என்றார் .அனைவரும் மகிழ்வுடன் கலந்து கொண்டு வாசித்தனர்...

தக்கமுன் தாயாரிப்புடன் அனைவரும் வந்து நிகழ்வைச்சிறப்பித்தது முழுநிலா முற்றத்தின் வளர்ச்சி சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது என்பதை உணரமுடிந்தது....நடுவில் வந்து விண்மீனாய்  வெளிச்சம்தர முனைந்தது மின்மினிப்பூச்சி...மனநிறைவுடன் முழுநிலா எங்களை வழி அனுப்பி வைத்தது...

நிகழ்வை செவிக்குணவுடன் வயிற்றுக்கும் கோதுமைப்பாலும் ,பிஸ்கட்டும் தந்து சிறப்புடன் நடத்திய வைகறை மற்றும் ரோஸ்லின் ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றி


Wednesday, 29 July 2015

kalam.1

என்னசெய்தால் மகிழ்வார் கலாம்?
--------------------------------------------------------------

நேற்று வகுப்பில் கலாமின் நினைவுகளைப்பகிர்ந்து கொண்ட போது...

மாணவிகள் உண்மையை உணர்ந்து யோசிக்க ஆரம்பித்தனர்.

          இன்றோடு அவரை மறந்து விடாமல் எத்தனை எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.....நாம் ஆடம்பரமான வாழ்க்கைக்கு அடிமையாகிவிட்டோம்..இனியாவது நாம் நம் கடமையை சிறப்பாக முடித்து ..அவருக்காக நாம் வருத்தப்பட்டது உண்மையான ஒன்று என்பது நிரூபிக்கவேண்டும்....

அவரின் கனவை நிறைவேற்ற மாணவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு ,வருந்தும் ஒவ்வொருவருக்கும் உண்டு...

 நேர்மைக்கும் எளிமைக்கும் ,மனிதநேயத்திற்கும் கிடைத்த மரியாதையைக்கண்டு இனியாவது அரசியவாதிகள் மாற முயற்சிப்பார்களா?அல்லது போலியாக வருந்தி மறந்துவிடுவார்களா?

மதங்களைக்கடந்து உயர்ந்து நிற்கும் மனிதரைக்கண்டு மதத்தலைவர்கள் இனியாவது மனிதநேயத்தோடு நடந்து கொள்வார்களா?

மக்களின் மேல் உண்மையான அக்கறை உள்ள ஆட்சி நடக்குமா இனியாவது?

மக்களின் மனதில் உயர்ந்து நிற்கும் அவருக்கு புகழ் பாடுவது,சிலைவைப்பதை விட மக்களுக்காக  நேர்மையாக வாழ அனைத்துக்கட்சிகளும் உறுதி ஏற்குமா?

எந்த கட்சியிலும் இல்லாமல் இந்தியமக்களின் மனதில் இடம் பிடித்த அவரைப்போல் இனி யார் வருவார்?

மாணவிகளாகிய நீங்கள் தான் இனி பொறுப்புள்ள அரசியல்வாதிகளாக உருவாக வேண்டும்...விவசாயத்தை நோக்கி நம் பார்வை திரும்பவேண்டும்...இதுதான் நீங்கள் அவருக்கு செய்யும் உண்மையான கடமை என்றேன்....யோசிக்க வைத்துள்ளேன்...

ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் முயன்றால் முடியாததும் உண்டோ..!

உறுதி ஏற்போம்....அனைவரும்..


முயற்சிக்கிறோம் அய்யா...வளமையான வருங்காலத்தை உருவாக்க..
போய்வாருங்கள்....கனத்த மனதுடன் வழி அனுப்புகின்றோம்...வேறு வழியின்றி..

Tuesday, 28 July 2015

amma

அம்மா..............
எட்டாண்டுகளாச்சு
எனைவிட்டுச்சென்று
நம்பவே முடியலம்மா

நீதான் என் தைரியம்
நீதான் என் மகிழ்வு
நீதான் என்னுயிர்
நீதான் என்வாழ்க்கை
நீதான் நான் என்பது
 உனை இழந்த பின்னே
உணர்கின்றேன்ம்மா

உன்னை காயப்படுத்திய வடு
என்னை கொல்லாமல் கொல்கிறதம்மா
காலம் உன்னிடமிருந்து என்னை
காலன் பிரித்த கொடுமை
தாங்காது துடிக்கிறேன்மா....
உன்னிடம் வரவே
உன்கை தொடவே
என் பேராசையாய்
உள்ளதம்மா...

அம்மா
வரம் கேட்கிறேன்மா
மீண்டும் நான் கருவாய்
உன்னில் பிறக்க...
என்னைச்சுமப்பாயா அம்மா....

Monday, 27 July 2015

kalam...

தெற்கின் விதையாகி
வடக்கே விருட்சமாகி
தமிழரின் புகழை
தரணியெங்கும் நிலைநாட்டியவர்..

குழந்தைகளோடு குழந்தையாய்
மாறி கலக்க அவரால் மட்டுமே
முடியும்..

அரசுப்பள்ளியின் நம்பிக்கைநட்சத்திரம்
கனவு காணச்சொன்னவர்
கனவாய் மாறினார்....

முதியோர்களினால் பயனில்லை என
மாணவர்களைப்பண்படுத்தியவர்..

”யாதும் ஊரே யாவரும் கேளிர்”
தமிழனின் குரலாய் அன்னிய தேசத்தில்
தழைத்தோங்கியத்தலைவா...

அக்னிச்சிறகுகள் உனைத்தழுவிக்கொண்டதோ

உனைப்போல உயர
உன்னதகுழந்தைகளை உருவாக்க
நீயே சாட்சியானாய்...

குழந்தைகளின் முக்கியத்துவத்திற்கும்
கிராமங்களின் உயர்வுக்கும்
காரணமானவரே.....

எளிமைக்கே எளிமையாய் வாழ்ந்தவரே
நீ இருந்தபோது மட்டுமே
குடியரசு மாளிகை பெருமையாலும்
எளிமையாலும் புகழ்பெற்றது,,,

தன் குருவைமறக்காத குருவே
உன் வாழ்க்கையே தமிழருக்கு
வழிகாட்டியாய்,
ஆசிரியராய்,விஞ்ஞானியாய்,
இந்தியாவின் முதல் மகனாய்
வாழ்ந்தவரே...

உங்களின் பிரிவால் கலங்கி நிற்கின்றோம்...அய்யா..

Friday, 17 July 2015

இது கூட தெரியாதா?

இது கூட தெரியாதா?
------------------------------------
முன்பெல்லாம்  குடும்ப மருத்துவர்கள் இருந்தார்கள்.குடும்ப விசயம் அனைத்தும் அவர்களுக்குத்தெரியும் ....மரணத்தருவாயில் இருப்பவர்களைக்கூட உங்களுக்கு ஒன்றுமில்லை கவலைப்படாதீர்கள் என ஆறுதல் கூறி அவர்களின் வாழ்நாளை நீட்டிப்பார்கள்.இது உளவியல் முறை....ஒருவருக்கு தன்னம்பிக்கை தான் அவரது உயிரைக்காப்பாற்றும்...

இப்போதுள்ள நன்குபடித்த மருத்துவர்கள் நோயாளியிடமே உங்களுக்கு இனி வைத்தியம் இல்லை ...அவ்ளோ தான்...ஆபரேசன் செய்தால் பெரியதொகை செலவாகும் அப்படி செய்தாலும் கொஞ்ச நாள் தான் என்று கூறி அவர்களை மனதால் சாகடித்துவிடுகின்றனர்.....

என் அம்மா மிகவும் தன்னம்பிக்கை நிறைந்தவர்.போராட்டக்குணம் மிக்கவர்...அவருக்கு கல்லீரல் பாதிப்பு வந்த போது....அவரிடமே இப்படிக்கூறி அவரை மனதால் சாகடித்து விட்டனர்....நாங்கள் எவ்வளவோ  உங்களுக்கு ஒண்ணுமில்லமா..நல்லாருப்பீங்கம்மா...மனசால நினைங்கமா எங்ககூட வாழனும்னு என்று கதறிய போது...உதட்டைப்பிதுக்கி டாக்டர் சொல்லிட்டாரும்மா அவ்ளோ செலவு எதுக்கும்மா...நான் பிழைக்க மாட்டேன்ம்மான்னு ....முணகியபடிக்கூறிய போது தாங்கமுடியாது ..துடித்தோம்...
.அவர்கள் நம்பிக்கையைக்கொல்வது அவரையே கொல்வதற்கு சமம் என்பதை அறியாதவர்களா...இவர்கள்....என்ன படித்து என்ன நோயாளியிடமே இப்படிக்கூறுவது சரியா?

கடவுளுக்கு இணையாக மருத்துவர்களை அனைவரும் நம்பும் போது அவர்களின் உயிரில் விளையாட வேண்டாம்...

..மருத்துவ நண்பர்களுக்கு தயவுசெய்து மரணத்தின் வாசலில் நீங்கள் இருக்கின்றீர்கள் என நோயாளியிடமே கூறவேண்டாம்...

தொடர்கிறது இவ்வேதனை...


Tuesday, 14 July 2015

நம்பிக்கை நிறைவேறட்டும்

நம்பிக்கை நிறைவேறட்டும்
-----------------------------------------------
என் மாணவனும் முகநூல் நண்பனுமான Ramkrishnan அடிக்கடி என்னுடன் பேசும் போதெல்லாம் கட்டாயம் மாணவர்களை சிறந்த அரசியல்வாதியாக உருவாக்கனும்னு அன்பாக கட்டளையிடுவான்.

மாணவிகளின் எதிர்காலம் பற்றி நான் கேட்கும் போதெல்லாம் அனைத்து தொழில்களையும் விட நாட்டுக்கு சேவை செய்யக்கூடிய சிறந்த அரசியல்வாதியாக ஆக வேண்டும் என்றுதான் வலியுறுத்துவேன்.

இன்று காலை அவன் பேசும் பொழுதும் இன்னும் ஐந்து வருடங்களுக்குள் நீங்கள் உருவாக்கியிருக்க வேண்டும் என்று கால எல்லை வைத்தான் ...சரிப்பா ஆனா நான் இருப்பது பெண்கள் பள்ளியாச்சே பெண்குழந்தைகள் முன் வந்தாலும் அவர்களின் பெற்றோர் ஒத்துழைக்க மாட்டாங்களே என்றேன் வருத்தமாய் உடனே நீங்க மாணவிகளைத்தயார் செய்யுங்க அவர்களின் பெற்றோர்களை நான் மாற்றுகிறேன் என்றான் நம்பிக்கையுடன்...ஆச்சர்யமாக இருந்தது அவனது தன்னம்பிக்கைக்குறித்து....

இன்று காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடும் இவ்வேளையில் இக்கருத்தை வலியுறுத்திக்குறப்போகின்றேன்...
முயற்சிப்போம் .....நல்ல அரசை அமைக்கக்கூடியத்தூண்களை உருவாக்க.....

Monday, 13 July 2015

manam

மண்ணும் முகிலும்
புணரும் வாசமாய்

காற்றை வருடும்
தீபக்கரங்களென

நினைவலைகளின்
ஓயாத பேரிரைச்சைலில்

மேல்தொட்டு கீழிறங்கும்
மனதின் மௌன ஊஞ்சலில்
ஊசலாடும் உன் அண்மை..


Wednesday, 8 July 2015

வலைப்பதிவர்கள் சந்திப்பு

ஒவ்வொரு கணமும் மனதை நிறைத்திட அன்பானவர்களின் சந்திப்பால் மட்டுமே முடிகின்றது.

இன்று மாலை கவிஞர் முத்துநிலவன் அவர்களின் இல்லத்தில் இனியவர்கள் கூடிய இனிமையான சந்திப்பு .

அபுதாபியிலிருந்து வந்த” தேவக்கோட்டைகில்லர்ஜி” அவர்கள் தான் இந்த சந்திப்பிற்கு முக்கிய காரணம்.மதுரையில் நடந்த சந்திப்பில் தான் இவரைப்பார்த்தோம்....பேரு மட்டுமல்ல ஆளும் பார்க்க பெரிய மீசையுடன் பயமுறுத்துபவராய்...பழகிய பின் தான் எவ்ளோ ஏமாந்து விட்டோம்னு தெரிந்தது....கடுமையான முகத்திற்கு பின் அமைதியான, நகைச்சுவையான ,  வலைப்பூவில் கலகலன்னு கலக்குபவராக அவரின் பரிமாணங்கள்....புதுக்கோட்டை வலைப்பதிவர்களை குடும்ப உறவுகளாக மாற்றிக்கொண்ட தன்மை....அவர் எங்களைக்காண இங்கு வந்தது....மகிழ்வானதும் பெருமையானதும் கூட ...



தஞ்சையிலிருந்து வந்த சகோ கரந்தை.ஜெயக்குமார்..எங்களுக்கு வலைப்பூ துவங்க வகுப்பு எடுத்தவர்...அவரின் ஊக்கத்தாலும் ,திண்டுக்கல் தனபாலன் சார் அளித்த பயிற்சியாலும் புதுகையில் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

 முனைவர் ஜம்புலிங்கம் அய்யா விக்கிபீடியாவில் இருநூறு கட்டுரைகளுக்கு மேல் எழுதி தமிழுக்கு வளம் சேர்த்துள்ளார்..அவரின் கட்டுரைகள் அனைத்தும் ஆகச்சிறந்த கட்டுரையாக அமைந்துள்ளன.விக்கி பீடியா குறித்த அவரின் கருத்து முக்கியமானதொன்றாக இருந்தது.

திருச்சியிலிருந்து வந்த தமிழ் இளங்கோ சார் வலைப்பதிவாளர்களில் மிகச்சிறந்தவர் அவரும் எங்களைக்காண வந்தது மகிழ்வான ஒன்று.

எங்களைக்காண வந்தவர்களைக்காண புதுகையில் உள்ள சகோ.. கஸ்தூரிரங்கன்,ஆசிரியர் அப்துல்ஜலீல்,கவிஞர் வைகறை,கவிஞர் சோலச்சி,கவிஞர் .மகா.சுந்தர்,கவிஞர் செல்வா,கவிஞர் நீலா,மீனாட்சிசுந்தரம்,தோழிகள் ஜெயா,மாலதி ஆகியோருடன் நானும் கலந்து கொண்டது மனதிற்கு நிறைவாக இருந்தது.

விரைவில் புதுக்கோட்டையில் வலைப்பதிவர்களின் மாபெரும் சந்திப்பு நிகழ்ச்சி துவங்குவதற்கு இந்த சந்திப்பு  அடித்தளமிட்டுள்ளது.கவிஞர் மல்லிகா,  மருமகள்கள் வால்கா மற்றும் இலட்சியாவின் அன்பான வரவேற்பு மனதை நிறைத்தது.

                                         ”   நிலவன் வீட்டில்
                                            சூரியக்குடும்பம்”-
                                   என்ற கவிஞர் செல்வாவின் கவிதை
உண்மையானது..

Tuesday, 7 July 2015

வலைப்பூ நண்பர்கள் கூடும் மகிழ்வான மாலை

வலைப்பூ நண்பர்கள் கூடும் மகிழ்வான மாலை
--------------------------------------------------------------------------------
நாளை வலைப்பூ நண்பர்களான சகோ. கில்லர்ஜி,சகோ .கரந்தை ஜெயக்குமார்,முனைவர் ஜம்புலிங்கம் ஆகியோர் புதுகையில் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் இல்லத்தில்  வலைப்பூநண்பர்கள் அனைவரையும் சந்திக்க உள்ளனர்.வலைப்பூ நண்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்...

நாள்:8.7.15 புதன்கிழமை
காலம்:மாலை 6.00 அளவில்
இடம் கவிஞர் முத்துநிலவன் அவர்களின் இல்லம்,மச்சுவாடி.

மாற்றம் ஒன்றே மாறாதது

மாற்றம் ஒன்றே மாறாதது
---------------------------------------------
முன்பெல்லாம் பெண் குழந்தைகளின் படிப்புக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்காத காலம்...அம்மா சொல்லும் வீட்டு வேலைகளைச்செய்து ,சமையல் கற்றுக்கொண்டு திருமணத்திற்கு தயாராக்கப்பட்ட காலங்கள்..

ஆண்கள் வெளியே போய் வேலை பார்ப்பது மட்டுமே சிறப்பு என்றும்,வீட்டு வேலை செய்வதையோ,குழந்தைகட்கு பணி செய்வதையோ அவமானம் எனக் கருதிய காலம் ..கொஞ்சம் வேலை செய்தாலும் பொட்டைபய என தன் குடும்பத்தினரால் வசை வாங்கிக்கொண்ட காலம்....

Friday, 3 July 2015

இயற்கை

முழுநிலா முற்றத்தில் வாசித்த கவிதை
---------------------------------------------------------------------

           இயற்கை

உன்னைப்பற்றி என்ன எழுத
இயற்கையிடம் கேட்டேன்.

மென்மையாக சிரித்து
பெண்ணைப்பற்றி எழுதென்றது..

ஏன் என்றேன்?

நானும் பெண்ணும் ஒன்றேயென
நகைத்தபடி கூறியது...

எப்படி என்றேன்?

இயற்கையையும் பெண்ணையும்
அனைவரும் ரசித்து மகிழ்வர் தானே?

ஆம்.

இருவரையும் போற்றிப்புகழ்வர் தானே?

ஆம்.

இருவராலும் பலனடைவர் தானே?

ஆம்.

இருவரும் சந்ததியைப்பெருக்குவோம் தானே?

ஆம் ஆம்

இருவரையும் கொஞ்சம் கொஞ்சமாய்
அழித்து சிதைத்து மகிழ்வர் தானே?

ம்ம்..

அழித்தாலும் அழியாமல்
மென்மேலும் உயர்வோம் தானே?

வியந்து ஆம் ஆம் உண்மை என்றவளை
இதமாய் கரம் கோர்த்து மகிழ்ந்தது
இயற்கை

Thursday, 2 July 2015

2.7.15 இன்று என் வகுப்பு மாணவிகளுக்கு மறக்க முடியாதநாள்












2.7.15 இன்று என் வகுப்பு மாணவிகளுக்கு மறக்க முடியாதநாள்
----------------------------------------------------------------------------------------------------------
ஆம், இன்று அவர்கள் மகிழ்வின் எல்லையை, வியப்பின் உச்சத்தை தொட்டு வந்தார்கள்....

காலை 10 மணியளவில் 42 குழந்தைகளும், நான்கு ஆசிரியர்களும் தொல்பழங்காலமறிய புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய அருங்காட்சியகத்திற்கு  சென்றோம்....

ஆறாம்வகுப்பு வரலாற்று பாடத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ,சிந்துசமவெளி நாகரிகம் ஆகிய பாடங்களுக்குக்கான ஆதாரங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இருந்தன.

கண்கள் விரிய ஒவ்வொன்றையும் ரசித்து வியந்து குதித்து கும்மாளமிட்டதைக்காண கண்கள் கோடி வேண்டும்..

இந்த வருடம் புது வரவாக அருங்காட்சியகத்தில் டைனோசர் ஒன்று வந்து எங்களை உருமி வரவேற்றது ..முதலில் குழந்தைகள் பயந்தாலும் பிறகு ஆசையுடன் அதனுடன் விளையாட வேண்டுமென கூறினார்கள்...பேசவே பேசாத சுகன்யா டைனோசரின் முதுகில் உட்கார்ந்து சறுக்கி விளையாடனுமென்கிறாள்...
பிரியதர்ஷ்னிக்கு அதன் அசையும் வயிறு தான் பிடித்துள்ளதாம்.ஒரு குட்டி அதன் வாயில் விரல வைக்கனுமாம்...

பதப்படுத்தப்பட்ட பாம்புகளைப்பார்த்து அச்சத்தில் ஒதுங்கினர்...எல்லா குழந்தைகட்கும் பறவைகளும்,மயிலும் பிடித்திருந்தன...

இரண்டு தலைகளுடன் பிறந்திருந்த கன்றுகுட்டி,ஆட்டுக்குட்டியைப் பார்த்து அதிசயித்தனர்.

இசைக்குருவிகளும்,போர்க்கலத்தில் அணியும் இரும்பு உடைகளும்,துப்பாக்கிகளும்,பீரங்கியும் ,ஈட்டியும் வாட்களும்....குழந்தைகளை வரலாற்றுக்காலத்திற்கு அழைத்துச்சென்றன.

முதுமக்கள் தாழியை அச்சத்தோடு எட்டிப்பார்த்தது ஒரு குட்டி...

தமிழெழுத்துகள் வளர்ந்த விதம்.கற்சிலைகள்,உலோகப்பொருட்கள்...எல்லாவற்றையும் கண்டு மகிழ்ந்தனர்...

வாழ்க்கையில் மறக்கவே முடியாதும்மா என்றதுடன் வகுப்புத்தோழிகளுடன் பார்த்தது தான் மிகவும் பிடித்திருப்பதாகக் கூறினர்..

இக்காலத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்துச்சென்று பத்திரமாக வருவென்பது சிரமமான ஒன்று என்பதால் அனைவரும் விரும்புவதில்லை..ஆனாலும் குழந்தைகளை அழைத்து செல்கின்றேன் எனக்கேட்டவுடன் அனுமதி வழங்கி எல்லாவற்றையும் குழந்தைகள் பார்க்க வேண்டுமென்று கூறிய எங்கள் பள்ளித்தலைமையாசிரியருக்கும்,என்னுடன் வந்து குழந்தைகளை பார்த்துக்கொண்ட ஆசிரியர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்...

முழு நிலா முற்றம் -6ஆவது கூட்டம்


முழு நிலா முற்றம்  -6ஆவது  கூட்டம்

நாள் 1.07.15

இடம் :கவிஞர் நா.முத்துநிலவன் அய்யா இல்லம்

மாலை 6 மணி அளவில் அய்யாவின் வீட்டில் முழுநிலா முற்றம் துவங்கியது.எங்களுக்கு முன் நிலா வந்து காத்திருந்தது..

.மொட்டைமாடியில்....மழைக்காற்று வருட தென்னங்கீற்றின் சலசலப்பில் கூட்டத்தின் பாடல் நேரம்....

கவிஞர் முத்துநிலவன்  மதுரை மீனாட்சிக்கு கல்யாணம் மற்றும் அச்சமும் நாணமும் என்ற முற்போக்கு சிந்தனையுள்ள பாடல்களைப்பாட,

கவிஞர் நீலா பச்சை மரகத பட்டுமற்றும் மயிலும் குயிலும் என்ற பாடல்களைப்பாடி தனது இனியக்குரலால் அனைவர் மனதையும் சுண்டியிழுக்க,

தமிழாசிரியர் சண்முகம் அவர்கள் கண்ணுக்கு குளமேது என்ற கர்ணன் பட பாடலைப்பாட,

சிறந்த படிப்பாளியாகிய சுதந்திரராஜன் சிந்துநதியின் மிசை நிலவினிலே என்ற பாரதியின் பாடலைப்பாட ,

கவிஞர் நாகநாதன் சங்கீதஜாதிமுல்லையைப்பாட,

கவிஞர் சோலச்சியின் கிராமத்து பாடலும்,கவிஞர் மகா.சுந்தர் அமுதே தமிழே என்ற பாடலும்...

முதல்முறையாக  சீவிசிங்காரிச்சு என்ற சிறுவயது குழந்தைத்திருமணம் பற்றிய பாடலை கவிஞர் கீதா பாட, முழுநிலா முற்றம் கலைக்கட்டியது...

சிறிது வயிற்றுக்கும் என்ற வகையில் பப்பாளிப்பழம்,கொய்யாப்பழம்,மாம்பழம் தட்டில் தவழ்ந்து வந்தன...தேநீருடன்...மருமகள் இலட்சியாவின் அன்பு நிறைந்த கைகளில்

கவிதை நேரம்

தமிழ் ஓவியா” லாவண்யாவின் கூந்தல்” என்ற கவிதையில் கருநிற அருவி என வர்ணித்தாள்...

எம்ஃபில் மாணவர் நாகநாதன்” அந்திமாலைப்பொழுதில் /திரும்பத்திரும்ப கண்ணடித்தது/தெருவிளக்கு”என்ற கவிதையுடன்.மேலும் பலகவிதைகளையும் தந்தார்.

கவிஞர் ஈழபாரதி" நிலா" பற்றியக்கவிதையைப்படித்தார்.

கவிஞர் கீதா" இயற்கை "பற்றிய கவிதையை வாசித்தார்.

கவிஞர் வைகறை படித்ததில் பிடித்த கவிதை என கூறியதில் ஒன்று
”ஏதேனுமொரு மின்னலின்/கிளைகளைப்பிடித்துக்கொண்டு/கீழிறங்கி விடுகிறது/மழை என்ற கவிதையை ச .மணி எழுதிய ”வெயிலில் நனைந்த மழை” என்ற நூலில் இருந்து கூறினார்.

மழைப்பற்றி கவிதை படிக்கையில் மழையும் வந்து ரசித்தது.
இந்நூலை கவிஞர் முத்துநிலவன்  அறிமுகம் செய்ய தமிழாசிரியர் சண்முகம் பெற்றுக்கொண்டார்.
கவிஞர் வைகறை எழுதிய
”சிலேட்டில் விழுந்த முட்டை “கவிதை அருமை.

கவிஞர் மல்லிகாவின் “ஆணாதிக்கம் கவிதை சிறப்பு,

சோலச்சியின் கவிதை குடும்பத்தகராறில் குழந்தையின் வலியைக்கூறியது,தனது” முதல்பரிசு “என்ற சிறுகதை நூல் வெளியீட்டு விழா பத்திரிக்கையை சோலச்சி வழங்கி அனைவரையும் விழாவிற்கு அழைத்தார்
தங்கை மைதிலி  சுடச்சுட எழுதிய கவிதையில்”நதி நடுங்கியது “என்ற சொல்லாடல் அனைவராலும் பேசப்பட்டது.

மீனாட்சிசுந்தரம் அவர்களின் மணவுறவு,தலைக்கவசம்,

பொறியியல் மாணவர் இராமதாஸ் எழுதி வாசித்த”உழவனின் வேதனைப்பற்றிய கவிதையும்,

ஆசிரியர் அமிர்தாவின் ”இயற்கை பேச”என்ற கவிதையும்

கவிஞர்ரேவதியின் “வான்நிலா எட்டிப்பார்த்து”என்ற கவிதையும் கவிதை நேரத்தை சிறப்பித்தன.

ஆணாதிக்கம் பற்றிய கவிதையுடன் ,மழைநேரத்தில் சுடச்சுட மசாலாபோண்டா தந்து பசியை போக்கினார் சகோ மல்லிகா.

மருமகள் இலட்சியா அனைவருக்கும் அழகாய் அன்புடன் பரிமாறினார்.

சகோதரர் கஸ்தூரி ரங்கன் தங்கை மைதிலியுடன் வந்தபோது அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆங்கிலத்தில் அனைவரும் வாழ்த்த ,அவரோ தமிழில் இன்னும் கண்டுபிடிக்கல வாழ்த்துபாடல் என கவலைப்பட உடனே முத்துநிலவன் அய்யா தமிழில் பிறந்தநாள் வாழ்த்து பாடி சகோவின் மனக்குறையை  நீக்கினார்....”வெயிலில் நனைந்தமழை “முழுநிலா முற்றத்தின் பரிசாக தங்கை மைதிலியால் சகோ கஸ்தூரிரங்கனுக்கு வழங்கப்பட்டது..
சுதந்திரராஜன் அவர்கள் தான் படித்த “காலம் தோறும் பிராம்மணீயம்”,”அசுரா”,”சரயு “ஆகிய நூல்களைப்பற்றிய கூறியது மிகச்சிறப்பாய் அமைந்தது,
மீனாட்சி,சோலச்சி,கீதா ஆகியோர் தங்களது அனுபவங்களைப்பற்றிக்கூற முழுநிலா முற்றம் குடும்ப சந்திப்பாக இனிதாய் முடிந்தது.நிகழ்ச்சியைக்கண்டு மகிழ்ந்த நிலா சிரித்துக்கொண்டே மறைந்தது கருமுகிலின் பின்....