05.09.2014
நகரத்தார் திருமண மண்டபம்...
நல்லாசிரியர் விருது வழங்கும் விழா
மாலை 6 மணி அளவில் விழாத்துவங்க முன் முந்திக்கொண்டு மழை ஆரவாரத்துடன் வந்து வாழ்த்தியது.மழைவாழ்த்தைப் பெற்று விழா துவங்கியது.
அறக்கட்டளையின் அறங்காவலரும் விழா அமைப்பாளருமான முருகபாரதி அவர்கள் வரவேற்று அறக்கட்டளை எதன் அடிப்படையில் விருது பெறுவோரை தேர்ந்தெடுக்கின்றது என்பதைக்கூறி இதுவரை 8 ஆண்டுகளில்
46 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பித்துள்ளதாக கூறினார்.இவ்வாண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஆசிரியர்களை தேர்வு செய்ததையும் கூறினார் .
தேசியக்கவிஞர் முனைவர்.திரு கஸ்தூரிநாதன் அவர்கள்
தலைமையேற்று சிறப்பித்தார்.
விருது பெறுவோர் அறிமுகம் துவங்கியது...
திருமிகு.சா.விஸ்வநாதன் அவர்களை அறிமுகம் செய்தார் அவரின் மாணவரே..
திருமிகு.இரா.பாலசுப்ரமணியன் அவர்களை அறிமுகம் செய்தார் பாலஸ்ரீ ஹரிமோகன் ...
திருமிகு.சி.குருநாதசுந்தரம் அவர்களை அறிமுகம் செய்தார் திரு.மகா.சுந்தர் அவர்கள்
திருமிகு.சு.சாந்தகுமாரி அவர்களை அறிமுகம் செய்தார் திரு.கஸ்தூரிரெங்கன்
அவர்கள்.
என்னை அறிமுகம் செய்தார் திரு.வள்ளியப்பன் அவர்கள்...அறிமுகத்தில்
சுதந்திரத்திற்காக பாடுபட்ட கும்பகோணத்தைச் சேர்ந்த தியாகி .மாணிக்கம் அவர்களின் பெயர்த்தி ஆவார்.
இவருக்கு பிடித்தவையாக இருப்பது குழந்தைகளும் புத்தகங்களுமே.
முருகேசன்
- சுசிலா இணையரின் மகளாக 08.01.1969 ஆம் ஆண்டு, அரியலூரில் பிறந்தவர்
ஆசிரியர் மு.கீதா. எம்.ஏ.தமிழ்., எம்.ஏ.பொருளியல்., முடித்து, எம்ஃபில்.,
எம்.எட் பட்டம் பெற்றவர். அரியலூரில் தொடங்கி, 26 ஆண்டு காலமாய்
ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதில் 17 ஆண்டுகள் கிராமங்களில் அடக்கம்.
தற்போது புதுக்கோட்டை, சந்தைப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்
பள்ளியில் பணியாற்றுகிறார்.
சமூகச்
சிந்தனை, பகுத்தறிவுச் சிந்தனை, பெண்ணியச் சிந்தனைகள் இவரது தளம்.
மாணவர்களுக்குப் பாடங்கள் மட்டுமின்றி, பல்வேறு வகையிலும் அவர்களை முழு
மனிதராக ஆக்கும் பொருட்டு செயற்பட்டு வருபவர். மாணவர்களுக்குப் பொருளியல்
ரீதியாகத் தொடர்ந்துப் பங்களிப்பு செய்பவர்.
ஆசிரியர் பணி மட்டுமின்றி, இவர் ஓர்
சிறந்த எழுத்தாளரும் ஆவார். "வேலுநாச்சியார் சிந்தனையில் பெண்ணியம்"
என்பது இவரின் முதல் படைப்பாகும். புதுக்கோட்டை உலகத்திருக்குறள்
பேரவை வெளியிட்டுள்ள நூல் தொகுப்பில், இவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகி
உள்ளன. சென்னையில் தென்றல் சமூக நல அறக்கட்டளையின் சார்பில், கின்னஸ்
சாதனைக்காக 77 மணி நேரம் கவிஞர்கள் கவிதை வாசித்தனர். அதில் சிறப்பாகக்
கவிதை வாசித்து “புரட்சித் தென்றல்” விருதைப் பெற்றவர்.
கனல், இயல்பினி எனும்
புனைப்பெயர்களில் சிற்றிதழ் மற்றும் மாத இதழ்களில் இவரின் படைப்புகள்
வெளியாகி உள்ளன. வேலுநாச்சியார் பெயரில் வலைப்பூ (Blogspot) தொடங்கி,
ஏராளமான கதை,கவிதை, கட்டுரைகளை எழுதி வருபவர்.
முகநூலில் தேவதா தமிழ்
எனும் பெயரில் சமூகச் சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார். ஓவியம்
வரைதலும், கைவினைப் பொருள்கள் தயாரிப்பதும் இவரின் கூடுதல் அம்சங்களாகும்.
பைந்தமிழ் அறக்கட்டளை எனும் அமைப்பு
இவரால் உருவாக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டையில் சிறப்பாகச் செயற்பட்டு
வரும் மரகதவள்ளி - மணிமன்ற அறக்கட்டளை, வீதி கலை இலக்கியக் களம், உலகத்
திருக்குறள் பேரவை ஆகியவற்றில் இவர் உறுப்பினராகத் தம் பங்கை ஆற்றி
வருகிறார்.
சுய
வாழ்க்கைக்கும், சொந்தச் சமூகத்திற்கும் ஏற்ற வண்ணம் மாணவர்களை
உருவாக்குவதே இவரின் தொடர் முயற்சியாக இருக்கிறது. அதற்கேற்ப தொடர்ந்து
உழைத்தும் வரும் ஆசிரியர் மு.கீதா அவர்களை வெகுவாகப் பாராட்டுகிறோம் என்றார்..
சிறப்புரையாக பேராசிரியர் மு.இராமச்சந்திரன் அவர்கள் நல்லாசிரியரின் பண்புகள் ஒரு ஆசிரியர் எப்படி மாணவர்கள் மனதில் இடம் பெற முடியும் என்பதை தனக்கெ உரிய நகைச்சுவையான பேச்சால் அரங்கத்தை அதிர வைத்தார்.
விழா இனிதே நிறைவுற்றது...
2002இல் நான் புதுகையில் உள்ள மழையூரில் ஆசிரியாகப் பணிமாறுதலில் வந்தேன்....2005இல் தற்போது பணிபுரியும் சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளிக்கு மாறுதல் பெற்றேன் இது என் 5ஆவது பள்ளியாகும்..
புதுகை என்னை எனக்கே அறிமுகம் செய்தது.ஒரு கவிஞராக என்னை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.என் முன்னேற்றத்தில் என் குடும்ப நண்பர்களுக்கும்,தோழர்களுக்கும்,இலக்கிய நண்பர்களுக்கும் மிகுந்த பங்குண்டு...
துன்பங்களும் துரோகங்களும் எனை சூழ்ந்த கணத்தில் ஒரு தாயாய் எனை தாங்கி நான் வீழாமல் எனை அரவணைத்த பல நல்ல உள்ளங்கள் சூழ வாழ்வது நான் பெற்ற வரமே..
இன்று நல்லாசிரியராக என்னை அடையாளப்படுத்தியுள்ளது.
விருது பெற்றதை கூற நான் கூச்சப்பட்ட நிலையில் என் பெருமையை எனக்கே கூறி என்னை தட்டிக்கொடுத்த நல்ல உள்ளங்கள் மத்தியில் நான். இந்த விருதுக்கு நான் மேலும் தகுதியானவளாக மாற வேண்டிய கடமையும் பொறுப்பும் வந்துள்ளது..
புதுகையை எனது தாய் வீடாகக் கருதுகின்றேன் ...நன்றி புதுகை மக்களுக்கும் கவிராசன் அறக்கட்டளையினருக்கும்