World Tamil Blog Aggregator Thendral: 2026

Wednesday, 7 October 2026

திரைப்படம்

டோராதி
டோரதி திரைப்பட பற்றி கேள்விப்பட்டு அவசியம் பார்க்க வேண்டும் என்று நினைத்து நேற்று சனிக்கிழமை மாலை காட்சிக்கு சென்றோம் .
முதல் பாதி அடிதடி வன்முறை ,ஆணாதிக்க சிந்தனை, சாதீயம் என செம்மண் காட்சிகளோடு கிராமத்து மக்களின் சாதியச் சிந்தனைகளை பெண் அடிமைச் சிந்தனைகளை சித்திரமாக தீட்டி அஸ்திவாரமிட்டு அதன்  மேலே எழிலான வண்ண வீடு போல இரண்டாம் காட்சி மெதுமெதுவாக மனதிற்குள் குடி புகுந்தது சுப்புவை கொன்று விட்டேன் என்று கூறும் கார்த்திக்கின் வலி நிறைந்த மனதுடன் சுப்புவோடு அவன்  வாழ்ந்த இளமைக் கால நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே லாரியில் நாம் கார்த்திக்குடன் பயணிக்கிறோம்.

 இப்படத்தில் இரண்டாம் பாதியில்  டோரதி என்று பெயருடைய அண்ணன் மனைவியான கீர்த்தி சுரேஷிடம் கொண்டிருந்த நட்பு, தன்னுடன் படித்த தோழியுடன் கொண்டிருந்த நட்பு என சுப்புவின் மறைக்கப்பட்ட பெண் தன்மையை இருவரும் உணர்ந்தவர்களாக, இருவரிடம் மட்டுமே வெளிப்படுத்திய சுப்பு தனக்கு விருப்பமான நண்பன் கார்த்திக் நட்பை இழந்து விடக்கூடாது என்பதற்காக பெண் தன்மையில் ஆண் வேடமிட்டு உன்னுடன் இருந்தேன் என்று கூறும் காட்சியில் அவனது உள்ளார்ந்த நட்பை, காதலை இயக்குனர் மனதில் பதிய வைத்து விடுகின்ற அற்புதம் நிகழ்ந்துவிடுகிறது.
 சுப்புவை வெறுக்கும் கார்த்தி, சுப்புவை கொலை செய்ய சுப்புவின் அப்பா கட்டாயப்படுத்தி அனுப்பிய போதும் ஒவ்வொரு முறையும் கொல்ல முடியாமல் அவன் மீது கொண்டிருந்த அன்பு தடுக்க,முதலில் கோபமாக இருந்து மெல்ல மெல்ல அவனைப் புரிந்து கொண்டு அவனுடன் இணைந்து பயணிக்கும் காட்சி அற்புதம் .
படத்தை சித்திரமாக நம் மனதில் வரைந்து விடுகிறார் இசைஞானி இளையராஜா தனது இசையாலும் உயிரை உருக்குகின்ற குரலாலும் படத்தை பார்த்த பின்னும் நீண்ட நாட்கள் படம் பற்றிய அழுத்தமான சிந்தனையை உண்டாக்கி ,திருநங்கைகள் குறித்த இந்தச் சமூகம் கற்பித்த பார்வையை புரட்டிப் போடுகின்ற வல்லமை படைத்தவராக இசையால் நம்மை மூழ்கடிக்கும் இளையராஜாவின் இசைத்திறன் முன்னால் அனைவரும் அடிமையாகி விடுகிறோம் என்பதே உண்மை .
படத்தின் கருத்தும் இளையராஜாவின் இசையும் இந்த சமூக மாற்றத்திற்கு சமூக பார்வைக்கு வித்திடுகின்றன என்பது உண்மை.
 எனக்கு தெரிந்து சிறுவயதில் ஒருதலை காதல் படத்தில் திருநங்கைகளை கும்மி அடித்து பாடுகின்ற அந்த காட்சி பின்னாளில் அவர்களை கேளிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்குவதாக, அவர்கள் மீது ஒரு எள்ளலை உண்டாக்குவதாக, அவர்கள் மீது ஒரு அருவருப்பை உண்டாக்குவதாக, அவர்களைப் பற்றி தவறான சிந்தனையை பரப்புவதாக வந்த அத்தனை திரைப்படங்களும் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்களும் இந்த படத்தை பார்க்கும் பொழுது ஏன் நாம் இவர்களைப் புரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு காட்சிகளை அமைத்தோம் என்று எண்ணத்தக்க வகையில் கார்த்திக் சுப்புராஜ் மிகச்சிறப்பாக டோரதி படத்தை ஒரு சிறந்த விருதுக்கான படமாக அமைத்து இருப்பது பாராட்டுதற்குரியது அதில் நடித்த அத்தனை பேரும் அதில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே உண்மை விசில் அடித்துக் கொண்டிருக்கக் கூடிய அப்பாவாகட்டும் சண்டையிட்டுக் கொண்டிருக்கக் கூடிய அண்ணன்கள் ஆகட்டும் ஏன் சிலிர்த்துக்கொண்டு முட்டி மோதும் சேவல் ஆடுகள் உள்ளிட்ட அத்தனையும் இயல்பாக எதார்த்தமான கிராமத்தை கண் முன்னே நிறுத்துவது உண்மை .

வீதி நிகழ்விற்கு தோழர் பிரியா பாபுவை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்த புதுகை செல்வா தோழர் பத்து ஆண்டுகளுக்கு முன்பே திருநங்கைகள் குறித்த உரையாடலை வீதியில் துவங்கி வைத்தார்.
அதற்கு பிறகு தோழர் நர்த்தகி நடராஜ் அவர்களின் நட்பு விரிந்த பார்வையை உண்டாக்கியது .

டோரதி அனைவரும் பார்க்க வேண்டிய படம் நன்றி

Thursday, 23 July 2026

மாமன்னர் கல்லூரி

"தமிழ் நாட்டின் சிற்பி காமராசர் " 
என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நேற்று பேச வாய்ப்பு கிடைத்தது.
மதிப்பிற்குரிய முதல்வர் முனைவர் சேதுராமன், முனைவர் கணேசன் முனைவர் ஆதவன் பேராசிரியர் பாலமுருகன் முனைவர் இரவிச்சந்திரன் ஆகியோர் நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தினர்.

முதலாண்டு அறிவியல் கணினிப்பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

எனது உரையில் உங்களில் எத்தனை மாணவர்களின் தாத்தா பாட்டி படித்துள்ளனர் என்று கேட்டேன் ஒருவரும் கை தூக்கவில்லை . உங்கள் பெற்றோரில் எத்தனை பேர் கல்லூரியில் படித்து உள்ளனர் என்று கேட்டேன்.ஏழு பேர் மட்டுமே கை உயர்த்தினார்கள்.சங்க காலத்தில் அத்தனை பேர் பாட்டு எழுதும் அறிவு பெற்றிருக்க இரண்டாயிரம் ஆண்டுகளாக நம் தாத்தா பாட்டிகள் படிக்காததன் காரணம் என்ன என்று யோசியுங்கள்.

Zee tamil தொலைக்காட்சியில் சுமன் என்ற மாணவன் தனக்கு கிடைத்த எதுவும் என் தந்தைக்கு கிடைக்கவில்லை .பண்டிகை நாளன்று நிம்மதியாக வயிறு நிறைய சோறு சாப்பிட்டதில்லை என்று கூறி தனது தாத்தாவையும் தந்தையையும் மேடைக்கு அழைத்தார்.

கை கட்டிக்கொண்டுகூனிக்குறுகி நின்ற  தாத்தாவிடம் இனி யார் முன்னாலும் கை காட்டாதீர்கள் என்று கையை விலக்கி விட்டார்.தாத்தா கண்கலங்க தமுக்கடித்து வாழ்ந்தவன் நான் என் பிள்ளையை கல்லூரியில் சேர்க்க காசில்லாமல் அத்தனை கஷ்டப்பட்டேன்.ஆனால் இன்று என் பேரன் கொண்டு தாத்தா என்ற எனது பெயரை பாடகரின் தாத்தா என் மாற்றி விட்டேன் என கண்கலங்கி கூறினார்...

ஏன் அவர்கள் இப்படி கூனிக்குறுகி வாழ வேண்டும்...

இவர்களின் மேன்மைக்காக பாடுபட்ட எளிய மனிதர் கர்ம வீரர் காமராஜர்..

தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆனதும் உடனே கல்வியில் முன்னேற பள்ளிகளைக் திறந்து கல்லூரி மருத்துவக்கல்லூரி தொழிற்கல்லூரி என ஒருபக்கமும் மறுபக்கம் அவர்கள் வெளியே வந்தால் வேலை கொடுக்க மத்திய மாநில உதவியுடன் மாவட்டந்தோறும் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள்,தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் கிடைக்க நீர் மின் நிலையம், அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையம் என மின்துறை வளர்ச்சி மேலும் நீர்ப்பாசனத்திற்காக ஒவ்வொரு நதி தோறும் கட்டப்பட்ட அணைகள் வியக்க வைக்கும் அரசியல் அறிவு...

என் மாமனிதர் காமராஜர் பற்றி உரையாற்றினேன். 

காமராஜரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள நல்வாய்ப்பு.

மன நிறைவான நாளாக 22.7.26 அமைந்தது.

Wednesday, 18 March 2026

பெயர்

தமிழில் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட தேவையான இணையத்தளம்.

தற்போது பள்ளிகளில் 1000 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் 10% மாணவர்கள் பெயர் மட்டுமே தமிழில் உள்ளது.

ஸ்ரீ ஜ ஷா ஸ ஹ க்ஷ இல்லாத பெயர்களே இல்லை எனும் அளவிற்கு புரியாத பெயர்களில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது இக்காலத்தில் நடைமுறை வழக்கமாக உள்ளது.

உனது பெயரின் பொருள் என்ன என்று கேட்டால் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியாத நிலை.

தமிழரின் பண்பாட்டில் பெயர்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன.அவர்கள் எங்கு சென்றாலும் தனது ஊர் பெயர்களையே சுமந்து செல்லும் வழக்கம் என்பது ஆய்வின் முடிவு.

படித்த பெற்றோர்கள் அதிலும் 90%ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்ப்பெயர்களின் அருமை தெரிவதில்லை.

உங்கள் குழந்தைக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்டி இதோ தமிழ் நாடு அரசு வழிசெய்துள்ளது.

பகிர்வு
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதற்கான பெயர்கள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்கள் - தமிழக அரசின் அசத்தல் முயற்சி

குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வசதியாக தமிழ்நாடு அரசின் சார்பாக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

முதலமைச்சரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேசமயம் தமிழ் மொழியின் பெருமையை உலகறியும் வண்ணம் பல வகைகளில் திட்டங்களை வகுத்து வருகிறது. இப்படியான நிலையில் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி திமுக பிரமுகர் மயிலை வேலு இல்ல திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அவரின் பேச்சை சுட்டிக்காட்டி நிதின் சிற்றரசு என்ற இணைய பயனாளர் ஒருவர், "குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க நினைத்தாலும், குழந்தை பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்துகொள்ள சரியான சமூக வலைதளங்கள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வலைத்தளம் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் தலைவரே!” என தெரிவித்திருந்தார்.

அவரது ட்வீட்டை மேற்கோள் காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், “குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் - அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்!” என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் பெயர்களுக்கு பிரத்யேக இணையதளம்
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின்படி, குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை தேர்வு செய்யும் வகையில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், “அன்புக் குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்கள் மற்றும் அவற்றின் பொருள் அடங்கிய பிரத்யேக இணையப் பக்கத்தைத் தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கியுள்ளது. நமது மழலைச் செல்வங்களுக்குச் சூட்டி மகிழ, தனித்துவமான தமிழ்ப் பெயர்களைத் தேடுபவர்கள் https://tamildigitallibrary.in/tamilnames இந்தத் தளத்தைப் பயன்படுத்தி பயன்பெறுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைத்தளத்தில் ஆண், பெண் ஆகிய பாலினம் அடிப்படையிலும், அகர வரிசையில் இரண்டு பாலினமும் இணைந்த பெயர்களும் அதன் அர்த்தங்களுடன் இடம் பெற்றுள்ளது. இந்த இணைய தளத்தை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

மேலும் 2 வலைத்தளங்கள்
அதோடு மட்டுமல்லாமல் அதிக எண்ணிக்கையிலான தமிழறிஞர்கள், எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நூல்களைப் பெருமளவில் வாசகர்களிடம் கொண்டுசேர்க்க தமிழ் வளர்ச்சித் துறை நிதிநல்கையுடன் 'நாட்டுடைமை நூல்கள்' சிறப்பு இணையப் பக்கம் (https://tamildigitallibrary.in/nationalisedbooks) உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு பண்பாட்டு மின் நிலவரை ஏடு (https://tamilculturalatlas.in) திட்டத்தில், முதல் கட்டமாக மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள கோவில்கள், தொல்லியல் தளங்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், கைவினைக் கலைகள் முதலியவற்றின் விவரங்கள், புகைப்படங்கள், காணொலிகள் ஆகியவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கும் பண்பாட்டு ஆர்வலர்களுக்கும் பயன்படும் வகையில் இத்தளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.