Wednesday, 31 December 2014

2015

2015
இன்று பிறந்தாய்
இனிமையாகவே வளர்..
குருதி மறுத்து
அன்பு குடித்து வளர்...

போதும் சென்ற ஆண்டு
பலி கொடுத்த உயிர்கள்
பாலியல் வன்முறையிலும்
துவக்குகளின் ருசியிலும்
பிஞ்சுகளை இழந்தோம்
செல்லும் முன் கூட
காற்றில் பறந்த உயிர்களை
கடலில் கரைத்துக் குடித்தாய்

மனித மனதின்
வக்கிரம் துடை
இயந்திரமான மனங்களை
மனித நேயமாக்கு
மதங்கள் கடந்து
மனிதம் நேசிக்க கற்றுக்கொடு.

வாழ்க புத்தாண்டே..

2015....புதுயுகம் பிறக்கட்டும்

வலைப்பூ தோழமைகள் அனைவருக்கும் இனிய 2015 ஆம் ஆண்டின்  வாழ்த்துகள்...

உங்களின் பாராட்டுக்களே எனது மேன்மைக்கு காரணமாய் அமைந்தது..தினம் தினம் உங்களின் கருத்துகளால் பாராட்டுக்களால் மிளிரத்துவங்கியது...என் கவிதைகள்...மட்டுமல்ல என் மனமும் .அக்கறையும் அன்பும் முகம் காணாமலே செலுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றது முகநூலும் வலைப்பூவும்..முகநூல் மற்றும் வலைப்பூ தந்த தோழமைகள் பல...எங்கு சென்றாலும் அங்கு ஒரு நட்பு இருக்கும் என்ற எண்ணமே பலத்தை தருகின்றது..இனி.எப்பொழுதும் எங்கும்  அன்பே திகழட்டும்...அனைவருக்கும் வாழ்த்துகள்.

2014 ஆண்டின் நினைவலைகள்

.

சனவரியில்

*நீண்ட நாள் ஆசையான சென்னை புத்தகக்கண்காட்சிக்கு சென்று கைநிறைய புத்தகங்கள் வாங்கி வந்தது  மறக்க முடியாத ஒன்று....

*12.01.14இல் ஆலங்குடி முகநூல் நண்பர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரையும் அறிந்து கொண்டது.

*எனது பிறந்த நாளை பள்ளிக் குழந்தைகள்  கொண்டாடியது...

பிப்ரவரியில்

*கறம்பக்குடியில் த.மு.எ.க.ச வின் கவிதைப்பயிலரங்கில் கலந்து கொண்டது.

*வழி தவற இருந்த பதினொன்றாம் வகுப்பு மாணவிகளை நல்வழிப்படுத்தியது.

மார்ச்சில்

* தஞ்சை புத்தகக்கண்காட்சியில் கரந்தை அண்ணா ஜெயக்குமார் மற்றும் அவர்களின் துணைவியாரைச் சந்தித்தது..

*30.03.14 இல் தூப்புக்காரி நாவலாசிரியர் மலர்வதியிடம் பேசியது.

Monday, 29 December 2014

மூன்றாம் காது

மெல்ல சிணுங்குகின்றாள்
செல்லமாகத்தடவினால்
மகிழ்ந்து உறவாடுகின்றாள்

உறவுகளின் அருமையை
உணர்த்தும் அவளின்
அண்மையை அனைவரும்
நேசிக்கின்றனர்...

மௌனமாய் இருக்க வேண்டிய
நேரத்திலும் செல்லமாய் சிணுங்கி
எரிச்சலை மூட்டினாலும்
பிரிய சம்மதமில்லை
எங்களுக்கு...
உங்களுக்கு?

இப்படியும் சில ஜென்மங்கள்..


இப்படியும் சில ஜென்மங்கள்..

2014 ஜூலை மாதம் கின்னஸ் ரெக்கார்டுக்காக கவிதை வாசிக்கச் சென்னை சென்றபோது ,அங்கு வந்திருந்த  சீர்காழியைச் சேர்ந்த ஒருவர் எனது விழி தூவிய விதைகள் நூலை பெற்றார்.

சில மாதங்களுக்கு பின் அலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் கவிதைகள் அருமை என்று பாராட்டி பேசினார்.மகிழ்ச்சி என்றேன்...வரும் சனவரியில் சென்னையில் பாராட்டு விழா வைக்கின்றோம் அதில் உங்களுக்கு விருது கொடுக்க உள்ளோம் என்றார்.

எதை வைத்து எனக்கு விருது கொடுக்க அழைக்கின்றீர்கள்...என்னை பற்றி எதுவும் தெரியாத நிலையில் மேலும் நான் இன்னும் வளர வேண்டும் என்று கூறி மறுத்துவிட்டேன்.மறுபடி அடிக்கடி பேசி உங்களுக்கு தெரிந்த வேறு யாரவது இருந்தால் அவசியம் சொல்லுங்கள்.ரூ3000 கொடுத்தால் போதும் என்றார்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டேன்..

Saturday, 27 December 2014

லயனஸ் மண்டல சந்திப்பு-27.12.14

                      லயனஸ் மண்டல சந்திப்பு-27.12.14                                       


                      லயனஸ் மண்டல சந்திப்பு-27.12.14                                      

                          ஆனந்த ஜோதியில் பத்திரிக்கையின் மூலம் எனக்கு அறிமுகமான  மூத்த கவிஞரும், கண்ணதாசன் மேல் மாறாப்பற்று கொண்டவருமான ஆ.ச. மாரியப்பன் அய்யா அவர்கள் ஒரு நாள் எங்கள் பள்ளியில் என்னைக்காண வந்திருந்தார்.அவர் விடும் மூச்சே கண்ணதாசன் புகழ் பாடும்.

என்னை பார்த்து அம்மா மணப்பாறை லயனஸ் மண்டல சந்திப்பில் நீங்க பேசனும்மா என்றார்கள்.என்ன அய்யா திடீரென்று எனக்கேட்டேன். என்நண்பன் நவநீதம் கேட்டார்கள் நான் உங்களைச்சொன்னேன்மா பேசுங்கள் என்றார்.

கவிஞராக இருந்த என்னை உங்களால் பேச முடியும் பேசுங்கள் என்று ஊக்கமளித்து மேடையும் கொடுத்தார்கள் என் மேல் உள்ள நம்பிக்கையில் .பெண்கள் சந்திப்பு அதுவும் பெண்ணியக்கருத்துகள் என்றதும் ஒத்துக்கொண்டேன்...

ஒருவாரமாக இதே சிந்தனையில்...இதற்கான தயாரிப்பில் ...நகைச்சுவை என்பது மருந்துக்கூட வராத நான் எப்படி பார்வையாளர்களைக்கவரும் படி பேசுவது என்ற கவலையில்.

மணவை மதி.உதயன் சார் மற்றும் நவநீதம் சார் ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு நிகழ்வு குறித்து பேசினார்கள்.லயனஸ் பிரமிளாவும் அன்புடன் அழைத்த போது கொஞ்சம் துணிவு பிறந்தது...என் தோழமைகள் என்னை விடவும் என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள்...அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் நேற்று எனது முதல் பேச்சு சிறப்புடன் அமைந்தது.

ஆசிரியராக மட்டுமே இருந்த என்னை கவிஞராக ,எழுத்தாளராக ,பேச்சாளராக வளர்க்கும் புதுக்கோட்டையில் வாழும் அன்பு உள்ளங்கள் என் வாழ்வின் முன்னேற்றத்திற்கு காரணமாய்..அமைந்துள்ளனர் என்பதை மனம் நெகிழக்கூறிக்கொள்கின்றேன்..

 புதுகைச் சான்றோர்கள் என் திறமைகளை வெளிக்கொணர்ந்து தட்டித்தட்டி தங்கமாக்குகின்றனர்...அவர்களுக்கு  என் மனம் நிறைந்த நன்றிகள்.

மாலை வீட்டிற்கு வந்ததும் அலைபேசியில் சம்பத்குமார் சார் அவர்கள் அழைத்து இன்று நீங்கள் கம்பன் கழக கவியரங்க நிகழ்வில் ரேவதி என்பவருக்கு மாற்றாக கலந்து கொள்ள வேண்டும் என்ற போது முடியுமா என்று யோசித்த போது முடியும் செய்யுங்கள் என்று ஊக்கமளித்து வைத்துவிட்டார்.ஆனால் எப்படி முன் தயாரிப்பின்றி ஒருமணி நேரத்தில் ...ஆனாலும் ஏற்றுக்கொண்டதை செய்ய வேண்டும் என்ற உறுதியில் மேடை ஏறி விட்டேன் ..

கவிதையில் கரை கண்டவர்கள் முன் ...நான் முன் தயாரிப்பின்றி..மனதிலிருந்த அச்சத்தை மறைக்க .. கடினமாக இருந்தது..ஆனாலும் ..எல்லோரும் என்னை ஊக்கப்படுத்துவது போலவே பாராட்டி தொடருங்கள் என்ற போது அவர்களின் மேன்மை பண்பை உணர முடிந்தது..புதுக்கோட்டைக்கு பணி மாறுதல் காரணமாகவே வந்தவளை ...இவ்வளவு ஊக்கமளித்து என் உயர்விற்கு காரணமாயிருக்கும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்





Thursday, 25 December 2014

tsunami-2004-டிசம்பர் 26



2004-டிசம்பர் 26

சுனாமியில் சிக்குண்ட மனம்
சுற்றிசுற்றி தேடுகின்றது
உறவுகளின் வாசத்தை..
முகர முடியாது
நகர்கின்றது மணலாறாய்...

Wednesday, 24 December 2014

velunatchiyar -வேலு நாச்சியார் நினைவு நாள்

வேலு நாச்சியார் நினைவு நாள்

ஜான்சி ராணியை போற்றும் நாம்,அவளுக்கு முன்பே 75 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிவகங்கையின் அரசி, ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற வீரமங்கை வேலுநாச்சியாரை அறியாமல் இருப்பது வேதனையே..

எனது எம்ஃபில் ஆய்விற்காக வேலுநாச்சியாரை தேர்ந்தெடுத்த போது என்னில் நுழைந்து என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மாவீரப்பெண்மணி....

காளையார்க்கோவிலில் ஆங்கிலேயன் பான்ஜோர், தனது கணவர் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரையும் இளையமனைவி கௌரி நாச்சியாரையும் மறைந்திருந்து சூழ்ச்சியாக கொலை செய்து விட்டபின் ஆங்கிலேயரைப்பழிவாங்க விருப்பாட்சி மன்னர் உதவியுடன் எட்டு ஆண்டுகள் மறைந்திருந்து,திப்புசுல்தான் உதவி பெற்று பெரும் படைகளுடன் போராடி வெற்றி பெற்ற வீரத்திருமகளின் நினைவுநாள் இன்று...

வீரமங்கை மட்டுமல்ல,தன்னைக்காட்டி கொடுக்க மறுத்ததற்காக தனது உயிரை இழந்த உடையாளுக்காக, தனது கணவன் இறந்த போதும் கழற்றாத தாலியைத் தனக்காக உயிர்நீத்த உடையாளுக்காக அர்ப்பணித்த தாயவள்.....


Monday, 22 December 2014

சூரியன்

இருளில் உறைந்த
குளிரை உறிஞ்சி
சூடானது சூரியன்

Saturday, 20 December 2014

pinam-பிணம்

இவ்ளோ தான் மனித நேயம்
---------------------------------------------------
 நிகழ்ந்த ஊரிலேயே செய்யுங்கள்
இங்கே தானே வசிக்கின்றோம்
வேறெங்கே தூக்கிச்செல்வது...
வாடகை வீட்டு
பிணம்..

உன் மனதுக்கு நீண்ட நாள் வாழனும் கிருஷ்.வாழ்த்துகள்பா

உன் மனதுக்கு நீண்ட நாள் வாழனும் கிருஷ்.வாழ்த்துகள்பா
----------------------------------------------------------------------------------------------------
என் மாணவன்...15 வருடங்களுக்கு முன் நான் மேலப்பழூரில் பணி புரிந்தபோது என்னிடம் 6-8 வகுப்பில் பயின்றவன்.. வறுமையான சூழ்நிலையில் உள்ள மாணவர்கள்  தான் படித்த அனைவரும் ...

மேற்படிப்பு படித்து முடித்து தற்போது இத்தாலியில் பணி புரிகின்றான்...என்னுடன் எப்போதும் தொடர்பில் பேசிக்கொண்டு இருப்பான்...நான் எனது வகுப்புக்குழந்தைகளைப்பற்றி பேசும் போதெல்லாம் சிறந்த அரசியல்வாதியாக உருவாக்குங்கள்  என்று வேண்டுகோள்  விடுப்பான்..

Thursday, 18 December 2014

குழந்தைகளுக்கான நாடில்லையா இது.?..யார் பொறுப்பு இதற்கெல்லாம்.?.

இணையும் கரங்களின் குரலாய்..


குழந்தைகளுக்கான நாடில்லையா இது.?..யார் பொறுப்பு இதற்கெல்லாம்.?.

கேட்க முடியவில்லை...ஆறாம் வகுப்பும்,பத்தாம் வகுப்பும் ...?!

ஆசிரியர்களின் கைகளைக்கட்டிப்போட்டு அவர்கள் மாணவர்களின் வன்முறையை பார்வையாளராய்ப் பார்க்கும் நிலை தொடர்ந்தால் இன்னும் சீரழியும் சமுகம்...

பாலுணர்வு போதையாய் வளரும் சந்ததிகளை  அழிப்பதை யார் கேட்பது?

மதிப்பெண்களை நோக்கி ஆசிரியர்களை ஓடவைப்பதை விட மாணவர்களின் மனதை நோக்கி ஓடவைத்து அவர்களை மடைமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்..

மாணவர்களுக்கு சமூகத்தில் பொறுப்பை அளித்து,சமூகக்கடமையை உணரவைக்கும் பாடத்திட்டம் எப்போது வரும்?

சமூக வலைத்தளங்கள் குழந்தைகள் மனதில் விடத்தை விதைக்கின்றன.சீன நாட்டில் இத்தகைய விடக்கிருமிகளை அனுமதிப்பதில்லை..நமக்கு தானா தெரியலன்னாலும் பார்த்தாவது...கத்துக்க எப்போது முயலுவோம்?


நினைவுகளின் பாதையில்..

மருதையாற்று
பாலத்தின் மேல்
புழுவென நெளிந்து
கருகிய உடல்களை
கண்முன் கொணர்ந்தது...
கண்கள் வியர்க்க...

Wednesday, 17 December 2014

எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ----கடலும் கிழவனும்-

எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ----கடலும் கிழவனும்-

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க நாவல் தமிழில் ச.து.சு.யோகியார்.

15.12.14அன்று  கங்குலில்சென்னையிலிருந்து புதுகை நோக்கிய தொடர்வண்டிப்பயணம்...மெதுவாய் அந்தி மறைந்து பூமியை இருள் போர்வையால் இயற்கை மூடும் தருணம்...பறவைகளின் கீதம் மெதுவாய் குறைய ...வயல்களில் கூட்டமாய் எழும்பிப்பறந்தன நாரைகளின் கூட்டம் வெண்மேகமாய்..
விதவிதமான குரல்கள்...கோபம்,மகிழ்ச்சி,அரட்டை என ...கலவையான மனநிலையில் ...ஒருகணம் புத்தகத்தில் மூழ்க முடிவெடுத்து கடலும் கிழவனும் நாவலைப் படிக்கத் துவங்கினேன்...தரைப்பயணத்திலிருந்து..கடல் பயணத்துக்கு அழைத்துச்சென்று இன்னும் கடலுக்குள்ளேயே என்னை மூழ்கடித்த அந்த எழுத்தின் வன்மையை என்ன சொல்ல...அணுஅணுவாய்....கிழவன் தன்னோடு தானே உரையாடுவது ,மீனோடு உரையாடுவது,இயற்கையோடு உரையாடுவது என ஒரு நாவலையே படைத்து அதற்கு நோபல் பரிசும் கிடைத்துள்ளதென்றால் அதன் சிறப்பு அளவிட முடியாதது..

கடலும் கிழவனும்-கதையில்

Tuesday, 16 December 2014

பாகிஸ்தானில்

அந்த மாமா
அன்புடன் அழைச்சாக
ஐஸ்கிரீம் தரத்தான்னு
நினைச்சேன்மா...

உடல் சிதற
உறுப்புகள் பறக்க
உதிர்த்ததேனம்மா..

பயத்தில் மேசைக்கு அடியில்
நானும் நண்பனும்
ஏம்மா சுட்டாங்க
என் தோழர்களை..?

மனிதர்கள் மிருகங்களா
மாறியதை கூறாமல்
மறைத்ததேனம்மா...!

Wednesday, 10 December 2014

கனவு

வண்ணத்துப்பூச்சிக்கனவு
பலித்தது
புழுவிற்கு

Tuesday, 9 December 2014

-பேரூந்து எப்படி இருக்கும் சார்?




பேரூந்து எப்படி இருக்கும் சார்?


                                                            சார் பாத்ரூம் போனும்...இங்க ரெஸ்ட்ரூம் இல்லயாமேப்பா..வெளியே போய்ட்டு வர்றீங்களா?

 ....ம் என கூறி வெளியே போய்விட்டு திரும்பிய குழந்தைகளைக் கல்லூரியின் காவலர் உள்ளே விட மறுத்து வெளியே துரத்துகின்றார்... காலில் செருப்பின்றி கசங்கிய சீருடையுடன் காணப்பட்ட அவர்கள் அந்த ஆடம்பரச்சூழலுக்கு ஒவ்வாதவர்களாகத்தெரிந்தனர்.

ஏனெனில் அவர்கள் அந்தியூர் அருகே உள்ள கோங்காடை மலைக்கிராமத்தில்  குழந்தைத்தொழிலாளருக்கான  முறை சாராப்பள்ளியில் படிக்கின்றனர். இதுவரை முறைசார்ந்த பள்ளியையே பார்த்தறியாதவர்கள்..அது மட்டுமல்ல ...பேரூந்து,தொடர்வண்டி எதுவும் பார்த்தறியாக்குழந்தைகள் இந்த பயணத்தில் தான் பார்க்கின்றனர், விழிகள் வியப்பில் விரிய நகரத்து மக்களை சந்தித்தனர். அவர்களின் எளிமை காரணமாக அவமானப்படுத்தப்படுவதைத்   தாங்கவியலாது...

அவர்களை அழைத்து வந்த தோழர் செல்வா இக்காட்சியைக்கண்டு மனம் கலங்கி ...உடனே தனது நண்பர் பஷீர் அலி அவர்களிடம்  இக்குழந்தைகட்கு புதிய ஆடை வாங்கித்தரமுடியுமா எனக்கேட்க.உடனே அவர் சம்மதித்து வாங்கிதந்துவிட்டார்...

காலில் செருப்பு வாங்க யாரை அணுகுவது என்ற நினைவில்..தோழர் செல்வா இருக்க..

Monday, 8 December 2014

.மனிதம் துளி- 1

இன்றைய சிந்தனையாய்...

கிராமத்து சொலவடைகளில் தன்னம்பிக்கை வரிகளாய்.பெரியதைக்கூறி கடினச்செயலைச் சிறியதாக்கும் சொல்வன்மையை யாரிடம் கற்றார்கள் நம் முன்னோர்கள்?.போகின்ற போக்கில் வாழ்வியலை தூவிச் செல்லும் கிராமத்து கீதமாய்...

பட்டப்படிப்பு படித்தும் தற்கொலையை நாடும் கல்வியின் முன் இச்சொலவடை தலைநிமிர்ந்து நிற்கின்றது.

கல்வியாளர் ச.மாடசாமி அய்யாவின் சொலவடைகளும் சொன்னவர்களும் நூலிலிருந்து...

”அண்டத்தை சுமக்கிறவனுக்கு
சுண்டைக்காய் பாரமா?”

”ஆத்தைத் தாண்டுனவன்
குளத்தைத் தாண்டுனவன்
வாய்க்கா தாண்ட எம்மாத்திரம்?”

மனிதம் துளி-2

இன்றைய சிந்தனை

மனிதம் துளி-2

ப்ரீத்தி ஸ்ரீநிவாசன்...

.நீங்கள் அறிந்தவர் தான் .17 ஆண்டுகளுக்கு முன் 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழகக்கிரிக்கெட் அணியின் கேப்டன்..சிறந்த நீச்சல் வீராங்கனை .ஹூஸ் இஸ் ஹூ அமாங் அமெரிக்காஸ் ஸ்டூடண்ஸ் திட்டத்தின் கீழ் படித்தவர் ப்ரீத்தி.அமெரிக்க பணியை நிராகரித்து கிரிக்கெட்டில் கவனம் சேர இந்தியாவிற்கு வந்தவர்.1997இல் அவர் 19வயதுக்குட்பட்டோருக்கான மாநில அணியின் நியமிக்கப்பட்டு தேசிய அளவிலும் வெற்றி பெற்றார்.


Sunday, 7 December 2014

குளம்

குளம் விலக்கி
நீரோடையில் நீந்தும்
மீனின் கேள்வியாய்...
நலமா?
 இதழ் விரித்து
புன்னகைத்தது குளம்...

Saturday, 6 December 2014

சைவமா?அசைவமா?ஆரோக்கியமா?

சைவமா?அசைவமா?ஆரோக்கியமா?
----------------------------------------------------------------------
நேற்று மாலை என் சகோதரியும் தோழியுமான புவனேஸ்வரியின் தம்பி மகள் சீர்த்தியின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்றிருந்தோம்..விழா சிறப்புடன் நிகழ்ந்தது.என்னிடம் வந்து நீ இன்று அரிசி இல்லாத இயற்கை உணவை உண்ணப்போகின்றாய் என மென்மையாக கூறிவிட்டு போய்விட்டார்கள்..அய்யோடா என்ன கொடுக்க போகின்றார்களோ என்ற அச்சத்தில் இலையின் முன் உட்கார்ந்தோம்...

முதலில் வாழைபழம் வைத்தார்கள் அடுத்து ஒரு குவளையில் பச்சையான திரவம் தந்தார்கள்...ஒரு தட்டில் இரண்டு பணியாரம் போல இருந்தது லேசான பச்சை நிறத்தில் ..திரவம் சூப்தான் குடி என்றார்கள் என்னருகிலிருந்த ஜெயாவோ நீ சாப்பிட்ட பின் தான் நான் சாப்பிடுவேன் என்பது போல என் முகத்தையே..பார்த்துக்கொண்டு மிளகுத்தூள் வாசத்துடன் உண்மையிலேயே அருமையாக இருந்தது மூலிகைக்கீரை சூப்பாம்...அடுத்து பணியாரம் பத்துவகை தானியங்களால் செய்யப்பட்டது அதுவும் நல்லசுவையுடன்...இப்படியாக

திணை பால்பணியாரம்,

சாமை வெண்பொங்கல் இது மிகவும் அருமையாக இருந்தது,

குதிரைவாலி இட்லி,

முடக்கற்றான் சோளதோசை,

வரகு பயறு அடை,

தானியங்கள் +காய்கறி சுண்டல் இது ஜெயாவிற்கு ரொம்ப பிடித்திருந்தது

ஆவாரம்பூ சாம்பார்

பூசனி தயிர்சாதம்

தக்காளிச்சட்னி

தேங்காய் சட்னி

என ஆரோக்கியமான அதிக எண்ணெயில்லாத சிறப்பான விருந்தை அளித்து வியப்பில் ஆழ்த்திவிட்டார்கள்..சைவமா அசைவமா ஆரோக்கியமா என்று கேள்விக்கு ஆரோக்கியமே என்று கூறும்படி செய்து விட்ட அக்காவிற்கு மனம் நிறைந்த நன்றி...

விருந்து முடிந்து வெளியே வந்தால் அனைவருக்கும் மரக்கன்று அளித்து மகிழ்ந்து மகிழ்வித்தார்கள்.

Friday, 5 December 2014

பத்தாம் வகுப்பு தமிழ்ச் செய்யுள் பகுதி--- படமாக.....

மறக்க முடியாத அனுபவமாக

பத்தாம் வகுப்பு செய்யுள் பாடம்--- படமாக.....

ஒருவாரமாக பத்தாம் வகுப்பு பாடத்தில் உள்ள கம்பராமாயணம்-குகப்படலம்,பெரியபுராணம்-அப்பூதியடிகளை திருநாவுக்கரசர் சந்திக்கும் காட்சி,சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதை ஆகியவற்றை மாணவர்கள் நடிக்க படமாக்கும் பணி நேற்றுடன் சிறப்புடன் முடிந்தது...சிறு புள்ளியாக துவங்கி விரிந்து விரிந்து மிக அருமையாக வந்துள்ளது.

சென்ற28.11.14 வெள்ளிக்கிழமையன்று தமிழாசிரியர் மகா.சுந்தர் அவர்கள் எனை அலைபேசியில் அழைத்து கல்வித்துறைச் சார்ந்த இப்பணியைச்செய்யலாமா எனக்கேட்ட போது...சாதாரணமாக நாம் செய்வது தானே என செய்யலாமே எனக்கூறி..ஆசிரியர்கள் ரேவதி மற்றும் துரைக்குமரன்..மற்றும் கிருஷ்ணவேணி,சுமதி ஆகியோர் இணைந்த குழு அதற்கான பணியில் ஈடுபடத்துவங்கியது.



கம்ப ராமாயணக்காட்சிகளை புதுக்கோட்டையின் மன்னருக்குச்சொந்தமான பண்ணை இடத்தில் நடத்த அனுமதி கேட்ட போது மகிழ்வுடன் கொடுத்ததுடன் படப்பிடிப்பிற்குத்தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து சிற்றுண்டி கொடுத்து உபசரித்த பாங்கு அனைவரையும் மனம் நெகிழ வைத்தது. மதிப்பிற்குரிய.மன்னருடன் சேர்ந்து புகைப்படமெடுக்க குழந்தைகள் விரும்ப மகிழ்வுடன் ஒத்துழைத்தார்கள்...














மாலை கிளம்பும் போது எதிர்பாராத விதமாய் நாங்கள் நேசிக்கும் மதிப்பிற்குரிய இராணியம்மா மாணவர்களை சந்தித்து பாராட்டி அவர்கள் நடித்த காட்சியைப் பார்த்து வியந்து வாழ்த்தியது அனைவராலும் மறக்க முடியாத ஒன்று...ஒரு குட்டி சுற்றுலா போல எங்கள் பள்ளி ஆசிரியர் சுதாவசந்தி வழக்கம் போல் தனது வேனைக்கொடுத்து சென்று வர உதவினார்கள்.
 வேன் கொடுத்து உதவிய ஆசிரியர் சுதா வசந்தி

மாலை 6 மணி அளவில் தனது மஹாராஜா திருமண மஹாலில் சிலப்பதிகாரம் செய்யுளை படமெடுக்க அனுமதி தந்து உதவினார்கள் எங்கள் புதுக்கோட்டையின் கொடை வள்ளலாக விளங்கும் திரு சீனு .சின்னப்பா அவர்கள்.இரவு 9 மணியளவில் சிலப்பதிகாரம் இனிதே படமாக்கப்பட்டது.


மறுநாள் அப்பூதியடிகள் வீட்டிற்கு திருநாவுக்கரசர் வரும் காட்சி .முற்றம் வைத்த வீடு தான் வேணுமென்று படமெடுக்கும் சகோதரர் செல்வா கூறியதால் வீடு தேடி துவங்கியப்பயணம் மதியம் ஒரு வீட்டைக்கண்டு பிடித்து அதில் ...நடந்தது.பசிகளைப்பிலும் குழந்தைகள் எங்களுடன் ஒத்துழைத்தனர்...

மாலை எங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள உலகநாத சுவாமி கோவிலில் நாவுக்கரசர் அப்பூதியடிகளைச் சந்திக்கும் காட்சி படமாக்கப்பட்டதுடன் முடிந்தது..எங்கள் பணி....

நேற்று பத்தாம் வகுப்பு வாழ்வியல் திறன்களை கலந்துரையாடல்களாக படமெடுக்கப்பட்டது.

ஒளிப்பதிவாளர்களின் சிரமங்களை,நடிகர்களின் சிரமங்களை மாணவர்கள் நேரில் கண்டு உணர்ந்தனர்.

மிக அருமையாக செல்வா படமெடுத்துள்ளதை பார்த்த போது அவர் எந்த அளவு இதையே சிந்தித்து எடுத்துள்ளார் என்பதை உணர முடிந்தது.

எங்கள் பள்ளித்தலைமை ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து குழந்தைகளைப்பாராட்டினார்கள்.

இவற்றிற்கெல்லாம் காரணமாய் எங்களின் முதன்மைக்கல்வி அலுவலர்...மதிப்பிற்குரிய நா.அருள்முருகன் அய்யா அவர்களே...
எங்களின் திறன்களை வெளிக்கொணர இவர்கள் போன்ற அதிகாரிகளே முழுமுதற்காரணமாய் உள்ளனர் என்பதை இத்தருணத்தில் மனம் நெகிழக்கூறிக்கொள்கின்றேன்...

வகுப்பறை விட்டு குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது தான் அவர்களின் குழந்தமையை  முழுமையாக உணரமுடிகின்றது..வண்ணத்துப்பூச்சிகளை கூண்டில் அடைத்து தேனெடுக்க சொல்லித்தருவதைப்போல...









Wednesday, 3 December 2014

மது

மகளென்ன?
தாயென்ன?
மதுவுண்ட மிருகத்துக்கு.....

Monday, 1 December 2014

anil-அணில்


இரவு நிகழ்வு கண்முன்
கதவருகில் கிடந்த
அணிலின் வால்...