Saturday, 11 March 2017

மகளிர் தின உரை-வழக்கறிஞர்கள் சங்கம் அறந்தாங்கி 8.3.2017

மகளிர் தின உரை-வழக்கறிஞர்கள் சங்கம் அறந்தாங்கி

வாதாடுபவர்கள் முன்
சொல்லாடும் கவி நான்
வார்த்தைகளால் வாழ்கின்றோம்
ஆம் ..வார்த்தைகளால்
வானத்தையும் வில்லாக்கும்
வழக்குறைஞர் நீவிர்
தலைகுனியா நீதி வழங்கி
தலைநிமிர்ந்து நடக்கும் நீதிபதிகள்.

 வானவில் குழந்தைகளை
வளப்படுத்தும் ஆசிரியர் நான்.

சமூகத்தை வழக்குகளால்
சந்திக்கும் உங்களிடத்தில்

சமூகத்தை கவிதையால்
சங்கமிப்பவள் வாழ்த்துகின்றேன்
இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

” மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக்கொளுத்துவோம்” என்றான் பாரதி..ஆனால் பாரதிக்கே மாதரின் இருப்பை அறிவுறுத்தியவர் சகோதரி நிவேதிதை..அவர்களது சந்திப்பிற்கு பின்னே தான் பாரதியின் பாடல்களில் பெண்ணியச்சிந்தனை அதிகம் கலந்தது என்றால் மறுக்க முடியாது.



ஏன் மகளிர் தின விழாவைக்கொண்டாட வேண்டும்...மகளிரின் இத்தனை ஆண்டுகால போராட்டத்தை நினைவு கூறும் விழா..மகளிரின் போராட்ட வாழ்வை வருங்காலச் சந்ததிகளுக்கு எடுத்துக்கூறும் விழாவாக நாம் கொண்டாட வேண்டும்.

போருக்கு எதிரான குரலாக அன்று ஒலித்தது இன்றும் தொடர்கின்றது..கார்கில் போரில் தனது தந்தையை இழந்த குர்மெஹத் கவுர் என்னும் புது டெல்லியைச்சேர்ந்த கல்லூரி மாணவி மவுனப்போராட்டத்தை இணையத்தில் நடத்தி வருகின்றார்..அவர் எனது தந்தை ராணுவத்தில் இறக்க பாகிஸ்தான் காரணமல்ல போர் தான் காரணம் ..என்ற பதாகையைத்தாங்கி இணையத்தில் பகிர்கின்றார்..அவள் மீது வன்முறைகளை ஏவி துன்புறுத்தும் அதிகாரிகள்.

அமைதியை விரும்புவர்களாக பெண்கள் இருக்கின்றனர்.ஆண்களுக்கிடையே நடக்கும் போரில் முதலில் பாதிக்கப்படுவர்களாக பெண்களும் குழந்தைகளும் உள்ளனர்.
அநியாயத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் எப்போது பெண்களும் கலந்து கொள்கின்றார்களோ ,அப்போது அந்த போராட்டம் வெற்றி பெறும் என்பதற்கு உதாரணம் அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம்.

அப்போராட்டத்தில் நிறைய பெண்கள் குழந்தைகளோடு பெண்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் கலந்து கொண்ட போராட்டமாக திகழ்ந்தது..மிகவும் வியப்பாக இருந்தது. அத்தனை ஒரு சுயக்கட்டுப்பாட்டோடு,ஒழுங்கோடு, கண்ணியமிக்கவர்களாக அவர்கள் பெண்களை நடத்திய விதம் ,இதுவரை அவர்களை பொறுப்பற்றவர்களாக, பெண்களை கிண்டல் செய்பவர்களாக,நடிகர்கள் பின்னே அலைபவர்களாக கருதியிருந்த சமூக எண்ணத்தை அடியோடு அழித்தது...

எங்கோ ஒரு இடறல் மனதில் ,இப்படிப்பட்ட தன்மையுள்ள மாணவர்களை சமூக அமைப்பு பெண்களுக்கு எதிரான ஒன்றாக இருப்பதன் காரணமாகவே ஆண்களால் பெண்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

நீங்கள் சொல்வது போல சுதந்திரம் உங்களுக்கு இருக்கு, நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள், வெளியே வாருங்கள் என்கிறீர்கள்..ஆனால் வெளியே வந்த நிர்பயாவிற்கு நேர்ந்த கொடுமை எங்களை மறுபடி வீட்டிற்குள்ளே தள்ளுகின்றது .

நள்ளிரவில் இரவை அனுபவிக்க பெண்களுக்கு அனுமதி உள்ளதா?இந்த சமூகத்தில் .பகலிலேயே முடியவில்லையே..ஒருகாலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர் என்று நீங்கள் கூறினால் அவர்கள் எதுவுமே பேசாத குரலற்றவர்களாக இருந்ததால் சமூகம் அவர்களை பாதுகாத்தது...ஆனால் இன்று பெண்களின் குரல் ஒலிக்கத்துவங்கி விட்டதால் எழுகின்ற, அச்சமே மேலும் பெண்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குகின்றது.

ஆறாம் வகுப்பு,ஏழாம் வகுப்புக் குழந்தைகளிடத்தில் கேட்கையில் அவர்கள் எவ்வாறு அவர்களைச்சுற்றியுள்ளவர்களால் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதைக்கேட்கையில் மனம் பதைக்கின்றது..சமீபத்தில்” தி இந்து” செய்தித்தாளில் ஒரு குடும்பத்தில் கனவன் போதைக்கு அடிமையாக இருப்பதால் மனைவி வேலைக்குச் செல்லும் போது குழந்தையை கணவனிடத்தில் விட்டுச்செல்கின்றாள்...இரண்டு மூன்று நாட்களுக்குப்பின் அக்குழந்தை யாரைப்பார்த்தாலும் பயந்து மிரளுகின்றது..காரணம் என்னவென அக்குழந்தை படிக்கும் பள்ளியில், சுற்றத்தில் விசாரிக்கின்றனர். முடிவில் அக்குழந்தையின் தகப்பனே குழந்தையை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய கொடுமையை அறிகின்றனர். வீட்டில் கூட குழந்தைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை..பெண் உடல் சார்ந்த பொருளாகவே இச்சமூகம் காண்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.பெண்கள் வார்க்கப்படுவதன் விளைவே ...

ஆப்பிரிக்க நாட்டில் ஒரு தாய் தன் மகள் மலர்ந்துவிட்டாள் என பெருமையோடு அனைவரிடமும் கூறி விருந்து வைத்து மகிழ்கின்றாள்.வீட்டின் உள்ளே மூலையில் கால்கள் இறுகக்கட்டிய நிலையில் பத்துவயது குழந்தை வலியில் துடித்து அழுது கொண்டுள்ளது ...இது தான் மலர்ந்த குழந்தை...அக்குழந்தையின் பெண் உறுப்பை எந்த வித மயக்க மருந்தும் கொடுக்காமல் வீட்டிலிருக்கும் கத்தியால் அறுத்து, தைத்து கழிவு பொருள் போக சிறிய ஓட்டை மட்டும் வைத்து சிதைக்கும் கொடுமையைத்தான் மலர்ந்து விட்டாள் என மகிழ்வாகக்கூறுகின்றாள்...அக்குழந்தையின் திருமண நாளின் போது கணவனே அத்தையலை பிரிக்க வேண்டும் ...அப்போது தான் அவள் கன்னித்தன்மை உள்ளவளாம்..எத்தகையக்கொடுமை இது.நான்கு முதல் பத்து வயதிற்குள் அத்தனை பெண் குழந்தைகளும் இக்கொடுமையை சந்திக்கின்றனர்.

நம் வீட்டை மட்டும் எண்ணி பெண்ணுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என்றால் ,தன் வீடு தன் பெண்டு தன் குழந்தை என பாரதிதாசன் சொன்னது போல் சின்னதொரு கடுகு உள்ளம் கொண்டவர்களாவோம் .உலக அளவில் விரிந்த விசாலமான பார்வையோடு நோக்கினால் பெண்கள் படும் பாடு சொல்லி மாளாத ஒன்றாகும்.

மிகச்சிறந்த பத்திரிக்கையாளராக உலக அளவில் பேசப்படுகின்ற லிடியா காச்சோ என்பவர் ”பெண் எனும் பொருள்” விற்பனைக்கு :பெண்கள் குழந்தைகள் என்ற நூலில் உலக அளவில் பாலியல் தொழிலுக்காக குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கும் மாஃபியா கும்பலால் பாதிக்கப்படும் பெண்கள் குழந்தைகள் குறித்து விரிவாக அந்நூலில் ஓவ்வொரு நாட்டிலும் பாலியல் தொழிலுக்காக விற்கப்ப்ட்டு துன்பப்பட்ட குழந்தைகள் ,பெண்களை நேரிடையாகச்சென்று பேட்டி எடுத்து ஆதாரங்களோடு நிரூபித்துள்ளார்..அரசாங்கங்களே இதற்கு துணை போவது தான் மிகப்பெரிய துயரம்.

இங்கு மட்டுமென்ன அன்று மாதவி விலை பொருளானாள்..கோவலனிடம்..இன்றோ பத்து வயது குழந்தையை சென்னையில் ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கொடுமையை அண்மையில்” தி இந்து” செய்தித்தாளில் படித்த போது என்ன சொல்வது..?

ஆண்களின் இச்சைக்கு பலியாகும் பெண்ணினத்தை மீட்க முடியாது சுதந்திரம் பேசி என்ன பயன்?

இன்று தெய்வங்களாக  வழிபடும் பெண்தெய்வங்கள் அனைத்திற்கும்  நேர்ந்த கொடுமைகளே அவர்களை தெய்வமாக்கி வழிபடும் நிலையை உண்டாக்கி உள்ளன.


திரைப்படங்களும் ,ஊடகங்களும் அழகு நோக்கி பெண் குழந்தைகளைத் தள்ளுகின்றன..அவர்களை நாங்கள் அறிவை நோக்கி இழுக்கையில் சிலர் சாதனையாளர்களாக உருவாகின்றனர் ,பலர் பாதிக்கப்படுவதால் நாம் இன்று இவ்விழாவை கொண்டாட வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

வாழ்க்கையை சொல்லித்தராத கல்வியையே இன்றளவும் கற்பிக்கப்படுகின்றன..மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் கல்வி தோல்வியை தாங்க முடியாது தற்கொலைக்கு மாணவர்களை தூண்டும் கொடுமையை எப்போது அழிக்கபோகின்றோம்?

கல்வி சரியில்லை,தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் ஊடகங்கள் சரியில்லை என்று எப்போது அனைவரும் ஒன்றிணைந்து போராடப்போகின்றோம்..
பெண்களைக்குறித்த சமத்துவப்பார்வை எப்போது ஆண்களிடத்தில் உண்டாக்க போகின்றோம்.. ?











10 comments:

  1. மிக விவரமான ஆழமான உரை...

    ReplyDelete
  2. வணக்கம்

    கருத்துமிக்க உரை பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நல்லதொரு உரை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அருமையான... ஆழமான உரை அக்கா.

    ReplyDelete
  5. அருமை.சமூக அக்கறை போற்றத்தக்கது

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு.உங்களின் தேடலும் சமூக சிந்தனையும் புதுகை மண்ணிற்கு பெருமை சேர்க்கிறது.தொடருங்கள்

    ReplyDelete
  7. இந்தக் கொடுமையை எல்லாம் யார் தடுத்து நிறுத்துவது ?

    ReplyDelete
  8. விரிவான தகவல்களுடன் இருக்கும் உரை
    தொடர்க பயணம்
    தம

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...