Sunday, 22 March 2015

கவியரங்கக்கவிதை 21.30.15 விழிப்போமா?


கவிதைக்கு கரு தேடி
கண்ணயர்ந்த காலம்

வான்வெளியில் மிதந்து
வான் புகழ் தமிழகம் நோக்க

தாங்குமோ தமிழகம்
தரைதட்டிப்போகுமோ பயிர்கள்
தமிழகத்தின் நெற்களஞ்சியப்
பசுமை வயல்களில் இனி
பாயுமோ ஆறென
மீத்தேன் உருளைகள்

காய்ந்து கருகுமினிக்
காயும் கனியும்
நாளும் நாளும்.

நிலத்தடி நீரை உறிஞ்சி
நிலக்கரி மீதில் படர்ந்த
மீத்தேன் வாயுவை உறிஞ்ச
அரசின் துணையுடன்
அமைதியாய் நுழையுது
அரியானாவின் நிறுவனமொன்று

காவிரி மறந்த நிலமாய்
நீரற்று வெடித்து விரிய
விலைநிலமானது விளைநிலம்

நிலக்கரித்தோண்டவே
கள்ளத்தனமாய் நுழையுது
காலனாய்.....

உணவுக்கொடை தந்தோர்
உண்ண வயல் எலியின்றி
சோமாலியா நாடென
உருமாறிடுமோ தமிழகம்.

தேனியில் கூடும் தேனிக்களின்
தேனிசை நாதமற்று இனி
நியுட்ரினோவின் சத்தமே
நித்தம் நித்தம் ஒலிக்குமோ..

மலையைக் குடைந்து
சுரங்கம்  அமைத்து
நியுட்ரினோவின் நிறை காண
பிரபஞ்சத்தின் தோற்றமறிய
பித்தேப்பிடித்து அலையுது
மூளைப்பெருத்த ஞானிக்கூட்டம்

மனிதன் வாழும் நிலமழித்து
மந்தி மான் வாழும் வனமழித்து
ஆர்ப்பரிக்கும் அலைக்கழிக்கும்

மலை வீழ்ந்தது
வயல் அழிந்தது
கடலும் வீழ வீழ்ந்ததே
கூடங்குளம்....

சுவாசிக்க வழியின்றி
மீன்களும் மீணவர்களும்
துடிக்க துடிக்க
சூழுமோ அணுக்கதிர்கள்
தமிழகத்தை...

தமிழ் மொழி மறந்த
தமிழினம் தமிழ்நாடும் இழந்து
தவிக்கும் காலம் வரும் முன்
விழிப்போம் காப்போம்
நம் தமிழையும் ,தமிழ்நாட்டையும்..


4 comments:

  1. வரும் முன் விழிப்போம் ...

    ReplyDelete
  2. சமூகப் பிரக்ஞை உள்ள இது போன்ற கவிதைகள் இன்று அத்தியாவசியம் கவிஞரே!
    தொடருங்கள்.
    த ம 2

    ReplyDelete
  3. அருமையான வரிகள் சகோ.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...