Monday 23 January 2017

இப்படியொரு போராட்டம் இனி வருமா?

இப்படியொரு போராட்டம் இனி வருமா?

எத்தனையோ ஆசிரிய சங்கப்போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கின்றேன்...

கைது செய்கிறோம் என்ற பெயரில் பயணியர் மாளிகையில் அல்லது திருமணமண்டபங்களில் தங்க வைத்து பின் விடுதலை செய்து விடுவார்கள்..

அப்போது அடையாத ஒரு உணர்வை கடந்த ஒரு வார கால போராட்டத்தில் உணர்கின்றேன்..

மாணவர்களின் மாண்பை உணர வைத்த போராட்டம்..
தலைவனின்றி ,எந்த வித தகராறுமின்றி ஒன்றுபட்டு அமைதியாக அறவழியில்,அகிம்சையில் போராடிய போராட்டம்...
சல்லிக்கட்டு குறித்த மாற்றுகருத்து இருந்தாலும் மாணவர்களோடு துணை நிற்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் முழு மனதோடு உறுதுணையாய் நின்ற காட்சி..

பெற்றோர்கள் தங்களது பெண்குழந்தைகளை நம்பிக்கையோடு போராட்டத்தில் கலந்து கொள் என்று கூறவைத்த போராட்டம்...

தலைவணங்குகிறேன்...பிள்ளைகளே..உங்களை நாங்கள் தான் தவறாக பொறுப்பற்றவர்களாக ,பெண்களுக்கு எதிரியாக எண்ணியதற்கு..

பெண்களை அத்தனை காபந்து செய்து காப்பதை பெருமிதத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.

சினிமாக்களால் சீரழிந்து விட்டீர்களோ என்ற என்னைப்போன்ற ஆசிரியர்கள் பட்ட கவலையை ஒரு போராட்டத்தின் மூலமாக துடைத்தெறிந்து விட்டீர்கள்...

கொட்டும் மழையிலும் போராட்டத்தை மேலும் வலிமையாக்கியது உங்களின் உறுதி..

அத்தனை பெற்றோர்களும் உங்களுக்கு ஏதேனும் வழியில் துணைநிற்க வேண்டுமென சிற்றுண்டியும் தேநீரும் அளித்து தங்களை ஆற்றிக்கொண்டனர்.

அரைமணிநேரமாவது பிள்ளைகளோடு இருந்துவிட்டு போனால் தான் நிம்மதியாக தூங்கமுடியும் என்று அத்தனை பேரையும் உங்கள் பின்னே வரவழைக்கும் மாண்பை யாரிடம் கற்றீர்கள்..
நாங்கள் உங்களுக்கு எந்த வித நன்மையும் தராத போதும்..சூடு சுரணையுள்ளவர்கள் நீங்கள் என்பதை உணர்த்திவிட்டீர்கள்..

நீங்கள் உற்சாகமிழக்கக்கூடாதென உங்களை உற்சாகப்படுத்த சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலைநிகழ்ச்சிகள் நடத்தி ,உங்களை ஆர்வமூட்டியது மனம் நெகிழ வைத்தது..

நாட்டின் நன்மை தீமைகளை சீர் தூக்கி பார்க்கும் பொறுப்பை உணர்ந்துள்ளீர்கள்..

இனியாவது சினிமாக்காரர்களின் பின்னே உங்களின் வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள்..
அத்தனை அமைதியாக நடந்த போராட்டத்தில் சலசலப்பு ஏற்பட அவர்களும் ஒரு காரணமாயிருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை..

நாட்டிற்கு ஒரு நல்ல தலைமைப்பண்புள்ளவர்கள் கிடைக்கமாட்டார்களா என்ற எங்களது ஆதங்கத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தலைவர்கள் ஒன்றிணைந்து போராட முடியும் என்று நிரூபித்துவிட்டீர்கள்.

போராட்டத்திற்கு பின்னேயும் உங்களின் அறப்பண்பு நீடித்தால் மட்டுமே...உங்களின் அறப்போராட்டம் நிலையானது..வெற்றியை நோக்கி நடைப்போடுகிறது என்பதை எல்லோரும் உணர்வார்கள்...

தடம் மாறும் இளைஞர்களுக்கு வழிகாட்டுங்கள்..

டாஸ்மார்க்கின் வாசலை மிதிக்காது வாழக்கற்றுக்கொடுங்கள்.

முட்டாள்களால் ஏமாற்றப்படுவதை உணர்ந்து இனியும் ஏமாறாமல் இருக்க வழிகாட்டுங்கள்..

சிறு பிள்ளை வெள்ளாமை நாட்டை கரை சேர்க்கும் என பழமொழியை மாற்றுங்கள்..

நாட்டில் நடக்கும் அநீதிகளை ஒன்றிணைந்து தட்டிக்கேட்க
உங்களின் சகோதர சகோதரிகளைப்பழக்குங்கள்..


2020 இல் தமிழ்நாடு தல்லைநிமிரட்டும்..இந்தியா வல்லரசாகட்டும்.

வாழ்த்துக்கள் மாணவர்களே ...

உங்களுடன் இணைந்து போராடிய நாட்கள் வாழ்வில் அர்த்தமுள்ள நாட்களாகட்டும்..






5 comments:

  1. நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. டாஸ்மாக் - அடுத்த இலக்காக இருக்க வேண்டும்...

    ReplyDelete
  3. பொறுப்புள்ள நல்லாசிரியரான தாங்கள் ஒவ்வொன்றையும் மிகவும் நன்கு யோசித்து, ஒரு தாய் தன் சொந்தப் பிள்ளைகளுக்குச் சொல்லும் இனிய ஆதங்கத்துடன் கூடிய அறிவுரையாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.

    இந்தக் கட்டுரையைப் படித்ததும், மனதுக்கு ஓர் ஆறுதலுடன் கூடிய புது நம்பிக்கை பிறக்கிறது.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...