Thursday 28 May 2015

போய் வா பவித்ரா

போய் வா பவித்ரா..

என்னிடம் அவள் வந்த போது நன்கு மஞ்சள் தேய்த்து குளித்த முகத்தில் பொட்டு வைத்து திருநீறு வைத்து இரண்டு குடுமி போட்டு அதில் நிறைய பூ வைத்து இருந்தாள்.வாம்மா என்றேன் தலையை மட்டும் நீட்டி அச்சத்தில் உடலை தன் அம்மாவிற்கு பின்புறம் மறைத்துக்கொண்டு நின்றாள்.எல்லோரையும் விட கொஞ்சம் வித்தியாசமானவளாக தெரிந்ததால் முதல் பெஞ்சில் என் மேசைக்கு அருகில் அமர வைத்தேன்..

எதற்கெடுத்தாலும் முந்திக்கொண்டு நான் சொன்னதையே சொல்வாள் ...குழந்தைகளிடம் விசாரித்த போது அவ அப்படித்தான் மிஸ்.என்றனர்.அவளுக்காக சாக்லேட் எப்போதும் மேசையில் இருக்கும் என்பது தெரிந்ததால் சொன்னதெல்லாம் செய்வாள்.சில நேரம் தமிழ் வகுப்பில் கணக்கு அல்லது அறிவியல் புத்தகத்தை எடுத்து கொண்டு இருப்பாள்.ஏன்மா என்றாள் நான் இதப்படிக்கிறேன் என்பாள்.படிப்பு என்பது அவளின் விருப்பமாய் இருந்தது.



பட்பட்டென்று எதற்கும் பதில் சொல்வது பள்ளிக்குழந்தைகளுக்கு வித்தியாசமான விளையாட்டாய் தெரிய அவளை பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் கூட வம்பு செய்து மகிழ்ந்தனர்.ஒருநாள் மாணவிகள் ஓடி வந்து டீச்சர் பவித்ரா எல்லோரையும் கல்லெடுத்து அடிக்கிறா என்றனர்..வேகமாக ஓடினேன் .என்னை பார்த்ததும் அமைதியாக என்னுடம் வந்தாள்.என்னம்மா என்றதும்,மற்ற மாணவிகள் டீச்சர் அக்காக்களெல்லாம் அவளை வம்பு செய்யுறாங்க  அதான் என்றனர்.இவளைபார்த்த போது கண்களில் கண்ணீர் மெல்ல கரை கட்ட நான் அடிப்பேனோ என நினைத்து நடுங்கினாள்.அவளை மெல்ல அணைத்து உன்னை வம்பு செய்தா என்னிடம் கூறும் மா நான் அவர்களை கண்டிக்கிறேன் என்றதும் கோழிக்குஞ்சென ஒட்டிக்கொண்டாள்.

எல்லா வகுப்பிலும் போய் அவளை நான் சாக்லேட் கொடுத்து அன்பா வச்சுருக்கேன் முடிந்தால் நீங்களும் கொடுங்க வம்பிழுக்க கூடாது எனக் கூறி விட்டு வந்தேன் .அதற்கு பின் எல்லா குழந்தைகளும் பிரியமாக நடத்த துவங்கினார்கள்.
நான் மாற்று பணியில் சென்றிருந்த ஒருநாள் பள்ளியில் பிஆர்டி டீச்சர் வந்து குழந்தைகள் திறனை சோதித்த போது இவளிடம் தெரிந்த மாற்றத்தை வியந்து கூறினர்.ஏனெனில் அவளை மனவளர்ச்சி குறைந்த மாணவிகளுக்காக நடத்தும் சிறப்பு வகுப்பில் சேர்க்க சொல்லியிருந்தார்களாம்...ஆம் அவள் சற்று வித்தியாசமானக்குழந்தைதான்.

மற்ற டீச்சர்கள் தெரியாமல் வாடி என்றாள் போடி என சட்டென்று கூறிவிடுவாள்.அவளால் தொந்தரவா இருக்கு வகுப்பு எடுக்க முடியலன்னு புலம்பினார்கள்.மேலும் வலிமை குறைந்த மாணவிகளைச்சட்டென்று அடித்து விடுவாள்.ஒவ்வொரு முறையும் அவளிடம் எடுத்து கூறினாலும் இது தொடரத்தான் செய்கின்றது.
அழகாக எழுத மட்டுமே தெரிந்தவள் தற்போது படிக்கவும் செய்கின்றாள்.
ஒருமுறை அவளது அம்மாவிடம் இவளின் பிரச்சனைகளைக்கூறி இங்க இருந்தா இவளின் முரட்டுத்தனம் அதிகமாகும் அவளைச் சிறப்பு பள்ளியில் சேர்க்கலாமே என்றேன்..அவர்கள் தன் குழந்தை அப்படி  என்பதை ஏற்க முடியவில்லை.மேலும் இங்கன்னா அவளே வந்துடுவா நீங்க சொல்ற பள்ளி தூரமாயிருப்பதால் என்னால் இயலாது...இங்கயே படிக்கட்டும் டீச்சர்னு கெஞ்சிய போது என்னால் மறுக்க முடியவில்லை.
 நான் காட்டும் அன்பை வகுப்பு குழந்தைகள் அனைவரும் அவளிடம் காட்டினார்கள்.அனைத்து ஆசிரியர்களுக்கும் செல்லக்குழந்தையானாள்.
இரண்டு நாட்கள் விடுப்பில் இருந்து பள்ளிக்கு சென்ற போது நீங்க வரலன்னா பவித்ராவை சமாளிக்க முடியல...பாத்ரூம்ல போய் தாழ்ப்பாள் போட்டுக்குறா...அவளின் முரட்டுத்தனம் அதிகமாகுது என்ற போது கவலையானது...நான் இருக்கும் போது அமைதியாக அவளே படிப்பாள் உனக்கு என்ன படிக்க விருப்பமோ அதையே படிம்மா என்று கூறிவிடுவேன்.சென்ற வருடம் கதீஜா என்ற மாணவி இந்த வருடம் பவித்ரா இவர்கள் எல்லோரும் அன்பின் அரவணைப்பில் வளர வேண்டியக்குழந்தைகள்...

இருபத்தேழு வருட ஆசிரியப்பணியில் அன்பால் இவர்களை படிக்க வைக்கலாம் என எனக்கு கற்றுத்தந்தவர்கள்...நான் கொஞ்சம் முகம் வாடியிருந்தாலும் எனக்காக அதிகம் துடிப்பவர்கள்....அவள் என்னை விட்டு ஏழாம் வகுப்பு செல்லப்போகின்றாள்  இதே கவனிப்பும் அக்கறையும் இருந்தால் மட்டுமே அவளை சமாளிக்க முடியும் மனதில் சற்று கவலை அரும்புகின்றது.ஒரு வகுப்பு ஆசிரியராக...அவள் நல்ல படியா வளரனுமே என....

போய் வா பவித்ரா...பல்லாண்டு புன்னகைக்கும் முகத்துடனே வாழ வாழ்த்துகள்.

10 comments:

  1. மருத்துவரிடம் அழைத்துப் போவது இன்னும் பலனைத் தரும்

    ReplyDelete
    Replies
    1. அவளின் அம்மாவிடம் கூறியுள்ளேன் தோழர்.

      Delete
  2. உங்கள் வலை முகவரியை வாசிப்பதற்கு வசதியாக என் வலையின் முக்கப்பில் வைத்திருக்கிறேன்

    ReplyDelete
  3. தாங்கள் அந்தக்குழந்தையையும் அனுசரித்து புரிந்துகொண்டு அன்புடன் நடந்துகொண்டது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.

    எல்லோரும் இதுபோல எப்போதும் அன்புடன் அனுசரித்துப் போவார்களா என்பது சந்தேகமாகவும் கவலையாகவும் உள்ளது.

    புன்னகைக்கும் முகத்துடனே பல்லாண்டு அந்தக்குழந்தையும் இந்த சமூகத்தில் சுமுகமாக பிறர்போல வாழ வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை மிக்க நன்றி..தங்களின் மேலான வருகைக்கு.

      Delete
  4. பவித்ராவைத் தாங்கள் பக்குவமாகக் கையாண்ட விதம் அருமையாக இருந்தது. அனைத்து ஆசிரியர்களும் இவ்வாறான நிகழ்வுகளை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முன்னுதாரண ஆசிரியை என்று நிரூபிக்க இவை போன்ற நிகழ்வுகள் உதவும். பாராட்டுகள்.

    ReplyDelete
  5. அவர்கள் நல்லபடியாக வளரட்டும்...

    ReplyDelete
  6. பாராட்டுக்குறிய செயல்
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  7. போய் வா பவித்ரா
    பல்லாண்டு புன்னகைக்கும் முகத்துடனே பவித்ரா வாழ நாமும் வாழ்த்துகிறோம்.
    தங்கள் ஒப்பில்லாத பணி உயர்வடையட்டும் சகோ!
    த ம 5
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...