Thursday 2 April 2015

கலை இலக்கிய இரவு-1.4.15

கலை இலக்கிய இரவு-அறந்தாங்கி த,மு,எ,க,ச நடத்திய விழா நேற்று அறந்தாங்கியில் சிறப்புடன் நடந்தது.அவ்விழாவில் நான் வாசித்த கவிதை

எழில் கொஞ்சும் அவளின் மேனியெங்கும்
ஏற்றமிகு கலைவண்ணம் கொண்டாள்

பொங்கி வழிந்த அன்பையெல்லாம்
பிரபஞ்சமெங்கும் அள்ளி வீசினாள்

அவளால் உயிர்த்த உயிர்கள்
அளவில்லா வளங்களால்
உயிர்த்து உயிர்த்து உறவாடின

உள்ளம் மகிழ்ந்தவளின்
உயிர் பருகத் துடித்தன சில

நோயாளி ஆக்கி உறிஞ்சி
மகிழ்ந்தன சில

ஊடுருவி சிதறடித்து
சிரித்தன சில

வற்றாத வளங்களை
வற்றச்செய்தோமென
குதித்தன சில

காக்கின்றவளின் மேனிங்யெகும்
கொதிக்கின்ற தார் ஊற்றி
மகிழ்ந்தன சில

அப்போதும் புன்னகை புரிந்தவளின்
அழகை அழித்து ஆர்பரித்தன

மகிழ்வையே தந்தவள்
மருகி மருகி வாடினாள்

உள்ளங்களால் இணைந்த உறவுகள்
ஊதியங்களால் பிரிந்து
தாண்டவமாடுகையில்

தறுதலையாய்ப் போன மகனைத்
தட்டி கேட்கவியலா தந்தையெனத்
தலைகுனிந்தாள்

ஆர்ப்பரித்து விழுங்க காத்திருந்த
ஆழியிலிருந்து காத்தவளை
ஆறறிவு ஆழிக்குள் மூழ்கவைக்க
ஆய்கிறது அலைகிறது

வியர்வையால் தன் தாகம் தீர்த்தவனின்
வயிற்றுச்சுருக்கமென வெடித்துப்
பிளந்து வாடுபவளை

அப்படியே விழுங்கிட
ஆணையிட்டு காத்திருக்கிறது அரசு

தன் ரத்தமே தன்னைக் குடித்தால்
தாங்குவாளா.....

விட்டுவிட்டு தேடுவானோ விவசாயி
விடமாட்டான் விடமாட்டான்
உயிர்போகும் வரை

உணர்வில்லாத் தமிழா
உப்பிட்டுத்தானே உண்கிறாய்

உன் தாய் நிலம் வீழ -நீ
உறங்கியது போதும்

விழித்தெழு
தடைதகர்த்திடு
நிலம் காத்திடு...

3 comments:

  1. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. உன் தாய் நிலம் வீழ -நீ
    உறங்கியது போதும்

    விழித்தெழு
    தடைதகர்த்திடு
    நிலம் காத்திடு...

    அருமை
    அருமை
    நிலம் காத்திடுவோம்
    தம 1

    ReplyDelete
  3. அருமையான கவிதை. பாராட்டுகள்.

    த.ம. +1

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...