Saturday 28 March 2015

ஆரோவில் மழலையர்ப்பள்ளியின் ஆண்டு விழா




Aeroville kids -international play school.

இரண்டாம் ஆண்டு ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா இன்று புதுகை நகர்மன்றத்தில் காலை 10.30 மணி அளவில் துவங்கியது.சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.குட்டீஸ்கள பார்ப்பது வரமே...சரியென்றேன்...என்னுடன் ரமா.ராமநாதன் சாரும்,பாஸ்டின் சாரும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
பள்ளியின் முதல்வரான வசந்தா அவர்கள் பம்பரமாக சுழன்று விழாப்பணிகளைச் சுறுசுறுப்பாகச் செய்தார்.குழந்தைகளுக்குச் சிறப்பாக ஒப்பனை செய்து இருந்தனர்.அனைத்து ஆசிரியர்களும் குழந்தைகளோடு குழந்தையாக இயங்கினார்கள்.
குழந்தைகளே வரவேற்புரை,நன்றியுரை,அறிமுகம் செய்தல்  ஆகியவற்றைச் செய்தது மிகச்சிறப்பாக இருந்தது.மழலை மொழியில் அவர்கள் பேச மறந்து போனதை எடுத்துக்கொடுத்தார் முதல்வர்.

pre k.g குழந்தைகள் கண்ணன் ராதை வேடமணிந்து மேடைக்கு வந்தனர்...சிறு குழந்தைகள் அச்சத்தில் அழுது கொண்டே இருந்தனர்.அழுத பிள்ளையை மேடைக்கு நடுவே விட அவன் மீண்டும் ஓட ,ஒரு குழந்தை கால்களை உதைத்து கொண்டு அழ பெற்றோர் மேடையில் ஏற்ற ஆசிரியர் பிடிக்க அவன் கீழே இறங்குவதிலேயே குறியாய் இருந்து இறங்கிவிட்டான்.ஒரு ஆட்டிஸக்குழந்தை கீழே அமர்ந்து கொண்டு புல்லாங்குழலை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது.பத்து ஜோடிகளில் ஒரு ராதை மட்டும் ஆடி நடனத்தை முடித்தாள்...குழந்தைகள் மேடையில் நிற்பதையே பெருமையாகக் கருதி பெற்றோர்கள் தங்களது செல்லில் படம் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அடுத்து வந்த குதிரைக்குட்டி ஆட்டத்தில் குதிரையைத் தவிர அனைத்து குழந்தைகளும் ஆடினர்.ஒருவன் தனது அப்பாவையே பார்க்க அவர் ஆடு என்க மாட்டேனென்று தலையசைத்து சிரித்துக்கொண்டே நடனத்தை முடித்தான்.

l.k.g குழந்தைகளின் ஆண்டாள் நடனம் ஒரு சிறு கதைநடனமாக இருந்தது.சிவன் பார்வதி,பிரம்மா சரஸ்வதி இருபுறமும் நிற்க நடுவே சயனநிலையில் திருமாலும் திருமகளும்..இவர்களுக்கு பூச்சொரிந்து கொண்டு இருவர் இருவராக 6 குழந்தைகள்.பிள்ளையார் உட்கார்ந்து கால்களை உதறிக்கொண்டு முகமூடி அணியமாட்டேனென அடம் பிடித்து ஓடி வந்து விட்டார்.ஒரு வேளை தனக்கு மட்டும் ஜோடி கொடுக்கலன்னு கோவம் போல. பார்வதி மேல் பூவைத்தூவிக்கொண்டிருந்த அய்யரை முறைத்துக்கொண்டேயிருந்தாள்...சிவன் எனக்கென்ன என கவலையின்றி நின்றுகொண்டு இருந்தார்...சிறு குழந்தைகள் அசைந்தாலே கவிதைதானே....அழகாக இருந்தது...இவர்களை எப்படித்தான் ஆடப்பழக்கினார்கள் என்பது புதிர்தான்.

u.k.g குழந்தைகளின் அறுவடை குறித்த நாட்டுப்புறப்பாட்டு நடனம்  மிக அருமையாக இருந்தது...வயலில் ஏர் உழுவதிலிருந்து அறுவடை செய்வது வரை நடனத்திலேயே காட்டினர்...மாடுகளாக மாணவர்களே நடித்தது அருமை.

இறுதியாக பட்டமளிப்பு விழா....இப்படி நான் பார்ப்பது முதல் முறை என்பதால் எனக்கு வியப்பாக இருந்தது....வித்தியாசம் காட்ட எப்படி எல்லாம் முனைகின்றார்கள்....ஏழு பட்டங்கள் பெற்றிருந்தும் பட்டமளிப்பு விழாவிற்குச் சென்றிராத நான் இன்று இந்தக்குழந்தைகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது புதிய அனுபவமாக இருந்தது.அழகாக உடையணிந்து பெற்றோர் பெருமிதத்துடன் நிற்க விழா சிறப்புடன் முடிந்தது.
குழந்தைகளைக்கையாளுவதென்பது ஒரு கலையே , இப்பள்ளியின் ஆசிரியர் குழந்தைகளை கோபிக்காமல் இயங்கிய விதம் மிகச்சிறப்பு...

வாழ்த்துகள் ஆசிரியர்களுக்கும் குழந்தைகட்கும்....

6 comments:

  1. கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு நிகழ்வை ஜி எம் பி ஸார் பதிவில் படித்து விட்டு வருகிறேன்.

    மகிழ்ச்சியூட்டும் அனுபவங்கள்.

    ReplyDelete
  2. நல்ல விழா. பகிர்வுக்கு நன்றி. குழந்தைகள் என்றால் குதூகலம்தானே?

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும்,... சிறப்பு விருந்தினரான தங்களுக்கும்...

    ReplyDelete
  4. அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  5. வணக்கம்
    குழந்தைகள் என்றால் எப்போதும் கலகலப்புத்தான்... த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...