World Tamil Blog Aggregator Thendral: ஒரு கோப்பை மனிதத்தில் ...ஒரு துளி

Saturday 17 January 2015

ஒரு கோப்பை மனிதத்தில் ...ஒரு துளி

அன்புள்ள மு.கீதா ( தேவதா தமிழ் ) அத்தை அவர்களுக்கு
தங்கள் “ ஒரு கோப்பை மனிதம்” படித்தேன். முற்றிலும் களைப்புற்று, நா வறண்ட நிலையில் ஒரு கோப்பை தேநீர் தந்த நிறைவை அடைந்தேன். நீங்கள் “என்னுரையில்” என் மனதில் தைத்த அம்புகள் என குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த அம்புகள் தைத்த வலி “ பருவத்தின் வாயிலில்” கவிதையில்
“ கண்ணீரில் மிதந்த கண்களுடன்
குழறலாய்க் கூறினாள்
சிறகுகள் வெட்டப்பட்டதை”
எனும் பொழுதும், “ எரிமலைக்குழம்பாய்” மற்றும் “ சமத்துவம் “ கவிதையிலும் உணர முடிந்தது.
பாலை நிலத்திற்கு இலக்கணத்தில் வரையறை இல்லை என நினைக்கிறேன். உங்கள் கவிதையில்
“ எனக்கும் மண்ணுக்குமான
உறவை மனிதன்
தீர்மானிக்க பிறந்த
பாலை. “
என பாலை நிலத்திற்கு இலக்கணம் கூறியது மிகவும் பிடித்திருந்தது.
பல கேள்விகளுக்கு சமுதாயம் பதிலளிப்பதில்லை. கேள்விகளை தட்டிக்கழித்துவிடுகிறது அல்லது கேட்பவரை அலட்சியப்படுத்துகிறது. சிலசமயம் பிறப்போடு முடுச்சு போட்டு தப்பித்துவிடுகிறது.
“தோட்டிச்சி பாட்டிக்கு சோப்பு
வாங்க யார் கொடுப்பா காசு?”
என்று நீங்களும் கேள்வியை சமுதாயத்தை நோக்கி வீசியிருக்கிறீர்கள். விடையையும் “ மனுதர்மம்” என்ற கவிதையில் கூறியுள்ளீர்கள். ஆனால் பலசமயம் சமுதாயம் விடைகளையும் ஏற்றுக்கொள்வதில்லை!. உங்களது “இந்து நாம்...?” கனவு பலிக்கட்டும்.
விதையின் விடாமுயற்சியை நமக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மழையை, மழைக்கு தாயான வானத்தை மறைத்திருப்பார்கள். மாணவர்கள் வேண்டுமானால் ஏணியாய் இருந்த ஆசிரியர்களை மறந்திருக்கலாம். ஆனால் நீங்கள் மறக்கவில்லை.
“ விண் தொடும் விதையின்
முயற்சிக்கு
கை கொடுக்கும் விண்....
மழை”
என பாடுகிறீர்கள். அருமை!
அந்நிய மண்ணில் நமது தொழிலாளர் அவலங்களை எழுதியுள்ளீர்கள். நமது நாட்டில் தொழிலாளர் படும் அவலங்களையும் நீங்கள் எழுத வேண்டும். எங்கள் இடிந்தகரையை பாடியதற்கும் நன்றி!.
நிச்சயமாக இக்கவிதை நூலை படித்தவர்கள் ஒரு கோப்பை மனிதம் பருகியிருப்பார்கள் அல்லது பரிமாறியிருப்பார்கள். சமுதாயம் முழுவதும் மனிதம் பரிமாறப்பட வேண்டும் என்பதே என் ஆசை.
அன்புடன்
முத்துதிலக்.
— 

4 comments :

  1. அருமையான விமர்சனம்! புத்தகக் கண்காட்சியில் தங்களிடம் நூல் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்! அவசரத்தில் மறந்துவிட்டேன்! விரைவில் வாங்கிக் கொள்ள தொடர்பு கொள்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  2. வணக்கம்
    விமர்சனம் சிறப்பாக உள்ளது.. வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம்....நாங்களும் வாசித்துக் கொண்டிருக்கின்றோம்....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...