Saturday, 16 November 2013

படிக்க முடியல டீச்சர்

குழந்தைகளின் சமூகம் எப்படி உள்ளதென அறிய முற்பட்ட ஒரு நாளில்
தமிழ் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களை மாணவர் அம்மாவென அழைப்பதாலேயே அவர்களிடம் மிக நெருக்கமாகிவிடுகின்றனர் மாணவர்கள்.எனக்கும் அந்த பாக்கியம் உண்டு.


எப்போதும் மாணவர்களின் உளம் நிறைந்த ஆசிரியராக வாழ்கிறேன் என்ற மகிழ்வு உண்டு.ஆனாலும் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற ஆசை அடிக்கடி தோன்றும்.
 வெளியூர் செல்லும் போது கடைகளில் பார்க்கும் பொருட்களில் இது என் மாணவர்களுக்கு பயன்படுமா என்ற பார்வையிலேயே பொருட்களை வாங்குவேன்.
மாணவிகளின் பிரச்சனைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தைகள் தினத்தன்று மாணவிகளுக்கு சாக்லேட் வாங்கித்தந்து வாழ்த்து கூறினேன் .அவர்களிடம் உங்களுக்கு ஏதும் குறை இருந்தால் ஒரு தாளில் எழுதி தரவும் உங்கள் பெயர் தேவையில்லை என்று கேட்ட போதுமிகுந்த  தயக்கத்துடன் எழுதி கொடுத்தனர்.அவற்றை படித்த போது மனம் கலங்காமல் இருக்க முடியவில்லை.

 எத்துணை பாரங்கள் இந்த பிஞ்சுகளின் மனதில். பாடம் கற்பித்தல்,செயல்பாடுகள் செய்யச்சொல்லி வாங்குதல் என்ற வேலைப்பளுவில் மாணவர்களின் மனதை புரிந்துகொள்ள நேரம் கிடைப்பதில்லை.

மாணவிகளின் மனச்சுமைகளில் சில...

பொதுவான பிரச்சனைகள்

வறுமை ,நினைவாற்றல் குறைவு,பசியின்மை,வீட்டு வேலை ,தோழிகளின் பிரிவுஎன தொடர்கிறது.சில கடிதங்கள் அதிர்வைத் தந்தது.

ஒரு மாணவியின் கடிதம்

அம்மா ,எனக்கு அப்பாயில்லம்மா அம்மா மட்டும் தான்.அம்மாவிற்கு மனநிலை சரியில்லை. நான் பெரியம்மா வீட்டில் இருந்து தான் படிக்கிறேன்.அண்ணன் இதய நோயாளி.அக்கா காலேஜ் படிக்குதும்மா.அண்ணன் கஷ்டப்பட்டு படிப்ப நிறுத்திட்டு வேல பாக்குறாங்க.அப்பா இறந்தவுடன் பெரியம்மா வீட்டில் தான் வளர்கிறேன் .நான் ஏதாவது சொன்னா என் கூட படிக்கிறவங்க அப்பாவ கூட்டி வரேன் அம்மாவ கூட்டிவாரேன்னு சொல்வாங்கம்மா. நான் யாரை கூட்டி வருவது.பெரிய பிள்ளைங்க கூட அம்மா ஊட்டிவிட்டாதான் சாப்பிடுவேன்னு சொல்லும் போது ,எனக்கு, எங்க அம்மாவ 5 வயசுக்கு மேல நாம தொட்டது கூட இல்லையேன்னு அழுகையா வருதும்மா.என்னப் போல யாரும் அம்மா அப்பா இல்லாம வளரக்கூடாதும்மா.ஆனா என் பிரண்ட்ஸ்கிட்ட என் கவலைய சொல்லவே மாட்டேன்மா நான் நல்லா படிச்சு பெரிய ஆளா வந்து காட்டுவேன்மா.இந்த வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றிம்மா.....

இதை படித்த போது அந்த குழந்தையின் வேதனையை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்ல.

ஒன்பதாம் வகுப்பு மாணவியின் மடலொன்று

அம்மா,நான் பள்ளிக்கு வரும் போதும் போகும் போதும் 4 பேர் கிண்டல் செய்யுறாங்க.இவர்களில் 2 பேர் ரூ 500 தர்றேன் வாரியானு கேட்குறாங்கம்மா.ஆட்டோ சேக் வந்து என்ன கல்யாணம் பண்ணிக்கன்னு யாரும் இல்லாதப்ப வந்து மிரட்டுறாம்மா. வீட்ல யாரும் இல்லாதப்ப வந்து என்னிடம் தவறா நடக்குறாங்க அம்மா கிட்ட சொல்ல பயமாயிருக்கும்மா எனக்கு உதவி செய்யுங்கம்மா.

என்ன சொல்வதென்றே தெரியாமல் அப்படியே உறைந்து விட்டேன்.எத்தனைச் சிக்கல்களுக்கு மத்தியில் இந்த குழந்தைகள் பள்ளிக்கு வருகின்றனர்.இதை வெளியில் சொல்ல முடியாமல் மனதிலேயே வைத்து புழுங்குவது எத்தனைக் கொடுமை.
இது மட்டுமல்ல அப்பாகுடிகாரர் பெரும்பாலான குழந்தைகளுக்கு அம்மாவின் துன்பம் தாங்கிக்கொள்ள முடியலன்னு சில குழந்தைகள்.விடுதியில் படிக்கும் குழந்தைகளின் ஏக்கங்களைச் சொல்லி மாளாது.

இந்த பிரச்சனைகள் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அரிதாகவே இருக்கும்.வேறு வகையான குழப்பங்கள் அவர்களைச் சூழ்ந்திருக்கும் .வளரும் சந்ததிகள் கவலையில்லாமல் வளர வாய்ப்பில்லையா?

4 comments:

  1. சிந்திக்க வேண்டிய வேதனையான விஷயம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் நலமாக இருக்கின்றீர்களா?

      Delete
  2. எத்தனை எத்தனை சுமைகள் பிஞ்சுகளுக்கு!! உங்கள் வகுப்பு மாணவர்களுக்காவது நீங்கள் ஆசிரியர் என்ற ஒரு நல்ல விசயம் கிடைத்துள்ளதே..தெரிந்த ஆசிரியர்களிடம் எல்லாம் சொல்கிறேன்..நீங்கள் செய்ததைப் போலச் செய்யச்சொல்லி...
    நன்றி கீதா!

    ReplyDelete
  3. Thangalin Pakirthal migavum payanullathu. Thangalai pondravarhalidam Iraivanai kankiren. Thangalin vaguppu Kulazanthaigan Migavum Bagyasaligal. Oru Magonnatha Thayin pani Thodaravum Vetri perayum Iraivanai prarthikkiren.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...