World Tamil Blog Aggregator Thendral: கன்னித்தமிழ் கணினிப்பயிற்சி

Monday, 7 October 2013

கன்னித்தமிழ் கணினிப்பயிற்சி

கணினித்தமிழ் பயிற்சி

வெங்கடெஸ்வரா தொழில் பயிற்சிக்கல்லூரியில் 2 நாட்கள் நடக்குது வரனும்என்று நான் பெரிதும் மதிக்கும் முத்துநிலவன் அய்யாவும் ,சுவாதியும் அழைத்தபோது நான் சாதாரணமாகவே சரி, நாமும் கத்துக்க சரியான வாய்ப்பு என்ற நினைவில் பயிற்சிக்கு சென்றேன் .
2 நாட்களும் டீ குடிக்க, மதியம் சாப்பிட என எதுவும் நினைவிற்கு தோன்றவில்லை.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த புதுகை தமிழாசிரியர் கழகம் எங்களை புதிய உலகத்தில் தூக்கி போட்டுவிட்டனர்.
25வருட ஆசிரியப்பணியில் இவ்ளோ ஆர்வத்துடன் நிமிடம் போவது கூடத்தெரியாமல் ஒரு பயிற்சியில் கலந்து கொண்டதேயில்லை.

மின்னஞ்சல் வலைப்பூ பற்றி அழகாக தெளிவாக விளக்கமாக விரைவாக கூறி பயிற்சியில் கலந்து கொண்ட40 பேர்களும் மின்னஞ்சல் துவங்கவைத்துவிட்டார் முனைவர் பழனியப்பன் அய்யா.

பிரமிப்பு நீங்கும் முன் அடுத்து வந்தார் திண்டுக்கல்தனபாலன்
அவர் வலைப்பூ விரிவாக்கம் பற்றி கேட்ட, கேட்காத கேள்விகளுக்கெல்லாம் விடை தந்தார்.உண்மையில் வலைப்பூவில் இத்தனை சிறப்புள்ளதா? நம்பவே முடியவில்லை.நிறைந்த பொறுமையுடன் விளக்கியதுடன் இன்னும் கூறவேண்டும் நேரமில்லையே என்ற அரைகுறை மனதுடனே சென்றார்.
முதல்நாள் பயிற்சி இனிதே முடிந்தது .மின்னஞ்சல் துவக்கிய ஆசிரியர் பலர் இரவே வலைப்பூவும் துவங்கிவிட்டனர் என்றால் பாருங்களேன்.

6.10.13காலை 9மணிக்கு வந்துவிட்டோம்.ஒரு வலைப்பூவில் எழுதுவதால் என்னென்ன செய்ய முடியுமென்பதை திரு.எட்வின் அவர்கள்கூறிய போதுதான் அதன் வீச்சு எவ்வளவு பரந்தது?அப்பப்பா நம்ப முடியவில்லை.
சமுக அவலங்களை, மனக்குமறல்களை உலகுக்கு தெரிவிக்கும் கருவியாக வலைப்பூ அமைவதை உணரமுடிந்தது .
அவர் கூறிய அனைத்து செய்திகளும் உண்மையை,எழுத்துலக அரசியலை,வெட்டவெளிச்சமாக்கியது.
அழகாக பாரதி ,வா.ரா சந்திப்பை ”,அப்போது ஆங்கிலத்தில் பேசிய வா.ரா.வை பாரதி இன்னும் எத்தனை காலம் தான் தமிழனும் தமிழனும் சந்திக்கும் போது ஆங்கிலத்தில் உரையாடுவான்”
என வெகுண்டதை கூறி, 100 வருடங்கள் ஆயிற்று ,ஆனால் இன்னும் தமிழன் மாறவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிக்காட்ட வலைப்பூ பயன்படுவதை அழகாக உணர்வுபூர்வமாக, மெய்பாடுகளுடன், அவர் அருவியென கொட்டியபோது இமைக்க மறந்து செவியின் சுவை உணர்ந்தோம்.

அடுத்து முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் கருத்துக்கள் எங்களை பண்படுத்துவதாகவும் ,பக்குவப்படுத்துவதாகவும் அமைந்தது.அவர் தந்த பயனுள்ள கருத்துக்களை தனியாகவே தந்துள்ளேன்

சிற்பியே உன்னை செதுக்குகிறேன் என கூறிக்கொண்டு சுண்ணக்கட்டிகளால் மாணவர்களின் கண்களை மூடுகின்றோம்” என்ற யதார்த்தை, தொன்மையில்கருத்துக்கள் வெளிப்பட்ட முறைகளை ,அழகாக படக்காட்சியுடன் விளக்கினார்.

”ஒரு அறிவியல் ஆசிரியர் ஆய்வகம் சென்று பொருட்களை கையாளுவது போல ஏன் ஒரு தமிழாசிரியர் பள்ளியில் உள்ள நூலகத்தில் உள்ள நூல்களை கையாளுவதில்லை?” என்று கேட்ட போதுதான் எங்கள் தவறை உணர்ந்தோம்

தமிழாசிரியர்கள் வைத்திருக்க வேண்டிய நூல் பட்டியல்களையும் தந்த போது ,எங்களை மட்டுமல்ல நாங்கள் உருவாக்கும் மாணவர்களுக்கும்அவர் வழிகாட்டியாக உள்ளதை உணர்ந்து மகிழ்ந்தோம்.

அடுத்து கரந்தை யிலிருந்து வந்த ஜெயக்குமார் அவர்கள்
நம் வாழ்க்கை செய்திகளை ,மகிழ்வை ,துக்கங்களை
பகிர்ந்து கொள்ள வலைப்பூ பயன்படுவதை விளக்கினார்.

தோழர் ராசி பன்னீர் செல்வம் அவர்கள் மின்னஞ்சலை வடிவமைத்த சிவா,வலைப்பூ தோன்றிய முறை பற்றியும்,
சங்க இலக்கிய பாடல்களை நவீன வாசிப்பிற்கு உட்படுத்துவது குறித்தும் அவருக்கே உள்ள பாணியுடன் சிறப்பாக விளக்கினார்.

தமிழாசிரியர்கள் தங்களின் இணைய அனுபவங்களை
கேளாரும் கேட்ப மொழியும் சொல்லென பகிர்ந்தனர்.

திறமை இருந்தும் குடும்பச்சூழல்களால் அதை வெளிப்படுத்தமுடியாத ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி மிகுந்த பலனைத்தரும் என்பதில் மாற்றமில்லை .
இதற்கு காரணமாக இருந்த ,தானும் உயர்ந்து ,தன்னைச்சார்ந்தோரையும் உயர்த்தும் சிறந்த பண்புள்ள
முத்துநிலவன் அய்யாவிற்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுதல்களும்.

இப்பயிற்சிக்கு காரணமாயிருந்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.

1 comment :

  1. இதை எடுத்து அப்படியே எனது தளத்தில் இட்டிருக்கேன் பார்த்து இன்னும் சிறப்பாக எழுத, தொடர வேண்டுகிறேன். http://valarumkavithai.blogspot.in/2013/10/blog-post_8.html

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...