Thursday, 12 March 2020

பெண் வரலாறு

வரலாற்றில் பெண் கொடுமைகள்
புலவர் கோ .இமயவரம்பன்.
சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் தலைப்பில் ஐந்து கட்டுரைகளும்.
, குழந்தை திருமணம் தொடர்பாக நான்கு கட்டுரைகள் கொண்ட சிறிய நூல்.
கேள்விப்பட்ட கொடுமைகள் தான் என்றாலும் புள்ளிவிவரங்களுடன் படிக்கையில் மனம் கனத்த நிலை.
ஆங்கிலேயர்கள் வந்தது நமக்கு நன்மையோ என்று எண்ண வைக்கும் நிதர்சனம்.
மனிதன் இறந்த பிறகு மறுஉலகிலும் ஏவல் செய்ய பணியாட்கள், வாழ்க்கை நடத்த மனைவிகள், மந்திரிகள் அவனோடு பயன் படுத்திய குதிரைகள் அனைத்தும் எரித்தோ அல்லது புதைத்தோ....
சிறு வயதில் பார்த்த படம் ஒன்று நிழலாடியது 
பிரமிட்டின் உள்ளே இறந்த கணவனுடன் மனைவி அமர்ந்திருந்த காட்சியை ஏற்க முடியாது இன்றும் மனம் பதைக்கின்றது.
150 வருடங்களுக்கு முன் வரை ஏன் 80 களில் சதி கொலை செய்யப்பட்ட ரூப்கன்வரை மறக்க முடியுமா?
தர்ம சாஸ்திரங்கள், ரிக் வேதத்தில் , கருடபுராணத்தில், விஷ்ணு புராணம்,விஷ்னுஸ்மிருதி,காதிக்காண்டம் என அனைத்தும் சதியை போற்றி புகழ்கின்றன.
மணிமேகலை கூறும் கணவன் இறந்த உடன் உயிரை விடும் தலையாய கற்பு,தீப்பாய்ந்து இறக்கும் இடையாய கற்பு,கைம்மை நோன்பு நோற்கும் கடையாய கற்பு வரிகள்.... என்ன சொல்வது.
உடன்கட்டை ஏறும் பெண்ணின் கணவன் குடும்பத்து தந்தை வழியிலும்,தனது தாய் வழியிலும் மூன்று தலைமுறைகளில் அவர்கள் செய்த பாவங்களை எல்லாம் உடன் கட்டை ஏறுதல் மூலம் போக்கி விடலாம் என்று உருவாக்கப்பட்ட நம்பிக்கையை,அப்படியின்றி விதவைகள் உயிரோடு இருந்தால் பழியும் 
பாவமும்சாபக்கேடும் வரும் என்ற நம்பிக்கையை விதைத்தவர்கள் யார்?
உடன்கட்டை ஏற மறுக்கும் பெண்களின் உணர்வுகளை அழிக்க அபின் போன்ற போதைப்பொருட்களைத் தந்து மயக்கத்தில் தள்ளாடும் பெண்ணை சிதையில் கணவனுடன் கட்டிவைத்து எரியும் போது எழுந்து ஓடாமல் தடுக்க இருவர் கட்டையை வைத்து அடித்து அவளது அலறல் கேட்காமல் இருக்க கொட்டு மேளம் அடித்து சதியை நிறைவேற்றும் காட்சியை எழுத கைகள் நடுங்குகின்றன.
புராண இலக்கியங்களில் உடன்கட்டை ஏறும் காட்சிகள் இரண்டாம் கட்டுரை.
மகாபாரத பாண்டு மன்னன் மனைவி மாத்திரி ,பூதப்பாண்டியன் மனைவி கோப்பெரும் பெண்டு,சுந்தரச்சோழனின் மனைவி வானவன் மாதேவி உடன்கட்டை ஏறியதைக் கூறும் திருக்கோயிலூர் கல்வெட்டு.
மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜி கி.பி 1680 இல் இறக்கும் போது இட்ட ஆணையில் பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டேஇறக்க வேண்டும்.தம்முடன் தமது மனைவியர்கள் உடன்கட்டை ஏறுவதை யாரும் தடுக்க கூடாது என்று கூறியதாக குவார்தா என்பவனின் கூற்று.
இப்படி தொடரும் கொடுமைகள்...கி.பி மதுரையை ஆண்ட நாயக்க மன்னன் இறந்த போது 700 மனைவிகள்,திருமலை நாயக்கன் கி.பி 1659 இல் இறந்த போது 200 மனைவிமார்கள் உடன்கட்டை ஏறியதாக பிரோயின்ஸா என்னும் பாதிரியார் கூற்று.
இராமநாத புர மன்னன் கிழவன் சேதுபதி இறந்த போது 47 மனைவிமார்கள், புதுக்கோட்டை அரசி ஆயி அம்மாய் ஆயி தனது கணவர் இராஜ விஜயரெகுநாத  தொண்டைமான் என்னும் மன்னர் இறந்த போது தனது குழந்தைகளை ஆங்கிலேய அதிகாரி கேப்டன் பிளாக் பர்ன்  பொறுப்பில் விடச்சொல்லி உடன்கட்டை ஏறியது,மன்னர்குடும்பம் மட்டுமின்றி புதுக்கோட்டை வைணவ கோமுட்டி பெண்ணுக்கு தான் அபின் கொடுத்து அவள் கணவனை மூன்று சுற்று சுற்றி வருகையில் மயங்கி விழு சிதையில் இழுத்து தள்ளிக் கொன்ற உண்மை எப்படி முடிந்தது.உயிருடன் எரியும் பெண்ணின் கோரக்குரலைக் கேட்க...
சதியை எதிர்த்த இராஜாராம் மோகன் ராயின் அண்ணன் மனைவியை உடன்கட்டை ஏற்றிய கொடுமையே அவரை எதிர்ப்பாளராக்கியது
மராட்டிய பார்ப்பன பெண் கோகிலாவை உடன்கட்டை ஏற அழைத்து செல்லும் போது ஆங்கிலேய இராணுவத்தினர் காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் ஏற்க மறுத்ததால் திருநெல்வேலி ஸ்வாட்ஸ் பாதிரியாரால் ஞானஸ்நானம் 1778 இல் அளிக்கப்பட்டு இராயல் குளோரிந்தாள் என்ற பெயரில் சுவிசேஷ ஊழியம் செய்த யதார்த்தம்.
சதி பற்றிய வெளிநாட்டார் குறிப்புகள், முஸ்லீம் மன்னர்களின் முயற்சி, ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் பாதிரியார்களின் முயற்சியும் வெற்றியும் என்ற தலைப்பில் இரத்த சகதியை நம்மீது தெளித்து சிதறும் இந்தியப் பெண்களின் வரலாறு...
இறுதியில் லார்ட் வில்லியம் பெண்டிங் தனது உறுதியான உத்தரவால் சதி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது.
இதை எதிர்த்து பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகள் என உண்மையை ஆதாரத்துடன் வெளிச்சமிட்டு காட்டுகிறது.

குழந்தை மணம் கொடுமைகள்

"8 வயது பெண்ணை மணம் செய்து கொடுப்பவன் சுவர்க்கலோகத்தையும்,9 வயது பெண்ணை  விவாகம் செய்து கொடுப்பவன் வைகுண்டத்தையும்,10 வயது பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் பிரமலோகத்தையும், அடைகிறான்.அதற்கு மேற்பட்டு விவாகம் செய்து கொடுப்பவன் ரௌரவாதி நரகத்தை அடைகிறான்"
           - பராசுரர்
மனு, மனு ஸ்மிருதி,தேவதா,பிரகஸ்பதி,ஆஸ்வலாயனர்,தர்ம சாஸ்திரம், களவியல் உரையாசிரியர் கூறுகின்றனர்.பார்ப்பன சமூகத்தில் இருந்த இந்த பழக்கம் நாளடைவில் உயர் சாதியினர் பின்பற்ற செய்தனர்.
மகாராஷ்டிரா நானா பர்னவிஸ் 60 வயதுக்கு மேல் இறக்கும் போது அவனது இருமனைவிகள் வயது 14வயது ,9வயது.
இராமகிருஷ்ணர் பரமஹம்சர் மனைவிக்கு திருமணமாகும் போது வயது 5 .
காந்தி-கஸ்தூரி பா வயது 7 ஆக இருக்கும் போது நிச்சயதார்த்தம் 13 வயதில் திருமணம்.
1921 கணக்கெடுப்பின்படி
இந்திய உபகண்டத்தில் நான்கு கோடி பால்ய விதவைகள்.
1 வயதுக்கும் கீழ்-612
1 முதல் 2 வயதுக்குள்-498
4முதல் 5 வயதுக்குள்-6,858
5முதல் 10 வயதில்-85,580
10முதல் 15 வயதில் -2,33,533 விதவைகள்.
குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி புணர்ந்ததால் இறந்த குழந்தைகள் ஏராளம்.
திருவல்லிக்கேணியில் சம்மதிக்காத குழந்தையை தீயிலிட்டு பொசுக்கிய  கொடுமை நடந்துள்ளது.இதை எதிர்த்து 12 வயது தான் பெண்ணின் சம்மத வயது என்ற சட்டமியற்றிய ஆங்கிலேயர்கள் மீது கிறித்தவ மதத்தைத் திணிக்க பார்க்கின்றனர் என்று புரளியை கிளப்பினர்.இந்தியாவெங்கும் வைதீகர்களின் கிளர்ச்சி.அதில் பூனாவில் நடந்த கிளர்ச்சிக்கு தலைமை வகித்தவர் பெரிய தேசியத் தலைவர் என்று புகழப்படும் லோகமான்ய பாலகங்காதர திலக்.
34 ஆண்டுகளுக்கு பின்னர் 13 வயது பெண்ணின் சம்மத வயது.என்று 1925 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது.
மேலை நாட்டு மருத்துவர்கள் குழந்தை தாய்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்த கொடுமைக் கண்டு வருந்தினர்.குழந்தை மணத்தை எதிர்த்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர்.
சங்கராச்சாரியார் 12 வயதுக்கு பிறகு பெண்களுக்கு திருமணம் செய்தால் மதமே கெட்டுப்போகும் என்று வைசிராய்க்கு தந்தி கொடுக்க வைத்துள்ளார்.
பண்டித மாளவியா,கேல்கார் டாக்டர் மூஞ்சே, மோதிலால் நேரு,எம்.கே . ஆச்சாரியார்,கே.வி ரெங்கசாமி அய்யங்கார்,எஸ் . சத்தியமூர்த்தி போன்றவர்கள் குழந்தை மணத்தடைச்சட்டம் வராமல் தடுக்க பல முயற்சிகளை செய்துள்ளனர்.
சம்மத வயது கமிட்டியின் முன் பெண்களுக்கு 10,12 வயதுக்கு முன்பே திருமணம் செய்து விட வேண்டும் இல்லையெனில் பாவம் வந்து சூழும் என்று பராசரர் எழுதி இருக்கிறார்.நாங்கள் பாவத்திற்கு கட்டுப்படுவோமா? உங்கள் சட்டத்திற்கு பயபபடுவோமா? என்று வாதிட்டுள்ளார்.குழந்தை மணத்தடை மசோதாவுக்கு எதிராக சுதேச மித்திரன் மற்றும் இந்து பத்திரிக்கைகள் பாடுபட்டுள்ளன.
இப்படிப்பட்ட நிலையில் இந்து பத்திரிக்கை 10 வயது பெண்ணோ அல்லது 12 வயது பெண்ணோ ஒருவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று விளம்பரம் செய்தது.
சுயமரியாதைக்காரர் ஒருவர் இப்படி செய்யலாமா என்று கேட்டதற்கு"10 அல்லது 12 வயது பெண்ணை இப்போது விவாகம் செய்வதாகக் காணப்படுவது விவாகச் சடங்கல்ல.அது ஒரு நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது.பெண்ணையும் மாப்பிள்ளையையும் கூடச் செய்யும் முதலிரவு தான் விவாகம் என்று எழுதியுள்ளது.
வெறும் நிச்சயமாக இருப்பின் கணவன் இறந்தால் தாலியறுத்து மொட்டை அடித்து மூலையில் உட்கார வைப்பது ஏன் என்ற கேள்விக்கு இந்து பத்திரிக்கை பதில் தரவில்லை.1930 இல் சாரதா சட்டம் நிறைவேற்றப்பட்டது 14 வயது பெண்ணுக்கும் 18 வயது ஆணுக்கும் திருமண வயது ஆக அறிவித்தது.
சட்டம் வரப்போகிறது என்று தெரிந்த பிறகும் நடந்த திருமணங்கள் ஏராளம்.
1921 ஆம் ஆண்டு விதவைகள் எண்ணிக்கையை விட 1931 ஆம் ஆண்டு விதவைகள் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகம்.
இன்றும் குழந்தை திருமணங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்தில் இன்றும் குழந்தை திருமணங்கள் நடப்பதை கண்கூடாக காணலாம்.
இந்திய நாட்டில் தான் ஆறுகளுக்கு, நிலத்திற்கு என எல்லாவற்றிற்கும் பெண் பெயரை வைத்து கொண்டாடி வருகிறோம் என்று பேச்சாளர்கள் பேசும்போது.....
வரலாற்றில் பெண் பட்ட பாடுகள் சொல்லில் அடங்காத உண்மைகள் .
இன்றும் பதினைந்து வயது குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை கையறு நிலையில் கடக்கிறோம் .....
பெரியாரின் பாதையில் மணியம்மையாருக்கு அடுத்த நிலையில் இருந்து தொண்டறம் செய்தவரின் ஆய்வு நூல்.
புத்தகம் "வரலாற்றில் பெண் கொடுமைகள்"
எழுதியவர் : புலவர் கோ.இமயவரம்பன்
பதிப்பு: பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு.
நன்கொடை:₹25






2 comments:

  1. மனம் பதறும் கொடுமைகள்...

    ReplyDelete
  2. பெண் வரலாறு சொல்லும் செய்திகள் அதிர்ச்சி என்றால், நாம் வியந்து போற்றும் தலைவர்கள் எதிரணி பட்டியலில் இருப்பதைப் பார்த்தால் பேரதிர்ச்சியாக இருக்கிறது.. சொற்கள் தொலைந்து மனம் ஸ்தம்பிக்கிறது.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...