Sunday, 10 April 2016

கள்ளம்

குழந்தமையில் விதையாக நுழைந்திருக்கலாமது
அப்பாவின் பேனா மறைத்து வைத்த கணத்தில்...
 அம்மாவின் வளையலை உடைத்து விட்ட கணத்தில் வேர்விட்டிருக்கலாமது.....
 என்னுடனே வளர்ந்த அது தனது வேரை
 ஆழப்படுத்தியிருக்க வேண்டும்..
வகுப்பறையில் புத்தகங்களுக்கு நடுவில்
கதைப்புத்தகங்களை வாசித்த கணத்தில்..

 தனிப்படிப்பிற்கு செல்லாமல்
சிற்றோடையில் நனைந்த கணத்தில்
குற்ற உணர்வுகளை தனது கிளைகளால்
துடைத்து விடும் முயற்சியிலது..

 பள்ளித்தேர்வின் போது
அச்சமின்றி திரையரங்கில் அமர
அது தான் இடம் தேடியிருந்திருக்க வேண்டும்...

நண்பர்களோடு வெண்புகை வளையங்களை விடும் கணம்
தனது வேரை நிலைநிறுத்திய
வெற்றிப்புன்னகையோடது..

 பருவத்தின் அலைக்கழிப்பில்
தாவணியின் பின்னோடச்செய்து
பள்ளியைத்துறக்கச்செய்ததை
 இக்கணம் உணர்த்துகின்றது...

 மெதுவாய் மதுவை சுவையுணர்த்தி
 மெல்ல எனை அதில் மூழ்கடிக்க வைத்து
 விருட்சமாய் வளர்ந்து
கிளையசைத்து சிரிக்கின்றது..
 அதுவாய் நானும் ,
நானாய் அதுவும் மாறிய போழுதில்
மரணத்திற்கு கள்ளத்தனமாய்
வாசலை திறந்து வைத்த கள்ளத்தை
வேரோடு சாய்க்கும் திராணியற்ற நிலையில் ....
 மரணத்தை தழுவியபடி...
எனது பயணம்..

5 comments:

  1. ’கள்ளம்’ என்ற தலைப்பும், கள்ளத்தனமாக சிறு வயதில் அவ்வப்போது தடம் மாறிச்சென்ற செயல்களும், அதனால் நிகழ்ந்த இறுதிப் பயணமும், படிக்கப்படிக்க மனதை நெகிழவைக்கிறது. இறுதியில் ஓர் மொட்டை மரப்படம் நல்ல தேர்வு.

    அருமையான ஆக்கம். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. ஒவ்வொருவர் வாழ்விலும் நடந்திருக்கக் கூடிய நிகழ்வுகளை, கள்ளத்தனத்தை அற்புதமாக படம்பிடித்து கவிதையாக வடித்திருக்கிறீர்கள். அருமையான கவிதை.
    பகிர்வுக்கு நன்றிகள்!
    த ம +1

    ReplyDelete
  3. கள்ளத்தனம் கூட அழகிய கவிதையாய்...அருமை சகோ

    ReplyDelete
  4. கள்ளம் என்ற தலைப்பில்
    சிலரின் வாழ்க்கையை
    கவி வரிகளாக உணர்த்தி
    இருக்கீங்க அக்கா....
    வாழ்த்துக்கள் ....
    மேலும் சிறப்பான படைப்புகள்
    படைக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...