Sunday, 20 April 2014

வீதி கலை இலக்கிய களத்தின் ஏப்ரல் மாதக் கூட்டம்







இன்றைய வீதி கூட்டம் மிகச் சிறப்பாய் நிகழ்ந்தது.மனதிற்கு நிறைவாகவும் அமைந்தது.

மரபுக்கவிதையில் அருவியென சுவாதிஅனைவரையும் வரவேற்ற விதம் அருமை.
சென்ற மாத கூட்ட அறிக்கையை பொன் .கருப்பையா அய்யா தனக்கே உரிய நடையில் வாசித்தார்,
உறுப்பினர்கள் அறிமுகத்தை அடுத்து” மோசம்” என்ற தலைப்பில் சமூக சிக்கல்களை கவிதையாக வடித்தார் முனைவர்.வி.கே.கஸ்தூரிநாதன் .






2795ல் நிலவில் பூமியில் வாழும் மனிதர்களைப் பற்றிய முற்போக்கு சிந்தனையுள்ள சிறுகதையினை காலம் கடந்தும் நிற்கும் சாதீயப் பாகுபாடுகளை காட்டும்வகையில் எழுத்தாளர் சுஜாதாவின் பாணியை   நினைவு கூறும் வகையில் எழுத்தாளர் ராசி.பன்னீர்செல்வம் தந்தவிதம் மிகச்சிறப்பு.





ஈழப் பெண்போராளிகளின் கவிதை தொகுப்பு நூலை நான் விமர்சனம் செய்தேன் .என் வாழ்வில் மறக்க முடியாத நூலாய் ஆனது.அதை முத்துநிலவன் அய்யா கொடுத்து இது சாதாரணக்கவிதைகள் அல்ல வாழ்வியல் போராட்டம் இதை படித்து கூறுங்களென்றபோதுகூட நான் பெரிதாக நினைக்கவில்லை ஆனால் படிக்க படிக்க என்னை ஈழநாட்டின் போர்க்களத்தில் தன்னம்பிக்கை நிறைந்த மாபெரும் பெண்போராளிகளை அடையாளம் காட்டியதுடன் தமிழ் பெண்களின் வீரத்தை காட்சிப்படுத்தியது.



சுரேஷ்மான்யாவின்  தொலைதூரம் சென்றவர்களின் அன்பைப்பற்றிய கவிதை பாராட்டுக்குரிய ஒன்றானது.

சிசிலியன் நாவல் எவ்வாறு பீமா மற்றும் சுப்ரமணியபுரம் திரைப்படமாக மாறியதை கூறிய விதம் மூலம் படம் பார்த்த அனுபவத்தை தந்து பாராட்டுக்களைப் பெற்றார்  கஸ்தூரிரெங்கன்.






”தாழ்ந்த என் நாயகமே “என்ற நூலை திருப்பதி அய்யா விரிவாக அறிமுகம் செய்தார்.

வீதியின் அடுத்த கட்ட செயலாய் சங்க இலக்கியங்களில் புதுகையின் பெருமையை வெளிப்படுத்தும்  செயல் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும்,திட்டங்களை அமைக்கும் முறை குறித்தும்,நிகழ்வுகள் செம்மையாக அமைய ஆலோசனைகளையும் முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர்.அருள்முருகன் அவர்கள் கூறினார்கள்.









விழாவில் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வீதியின் தனித்தன்மையினை பாராட்டி ,ஆலோசனைகளையும் நல்கினார்.
முகவரிகள் கிடைக்காத நிலையில் அலைபேசியில் அழைத்தமைக்காகவே வந்து கூட்டத்திற்கு பெருமை சேர்த்தார் இலக்கிய ஆர்வலரான கம்பன் கழக சம்பத்குமார்அவர்கள்.
,பாண்டியன்{ புத்த அகம்} அவர்கள் கருத்துக்கள் கூறியதுடன் ஒரு சிறுகவிதையும் வாசித்தார்.கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறினர்.

 ,எழுத்தாளர் நீலா, ஜெயலெட்சுமி ஏ.இ.ஓ,கெஜலெட்சுமி,கார்த்தி நண்பா அறகட்டளை மற்றும் தமிழாசிரியர்கள் என புதியவர்கள் வருகையினால் வீதி களை கட்டியது.
இறுதியாக பிரியதர்ஷினி நன்றிகூற கூட்டம் நிறைவாக முடிந்தது.

செவிக்குணவோடு சிறிது வயிற்றுக்கும் அளிக்க  கோதுமைப்பால் வழங்கப்பட்டது அதற்கான செலவை உரிமையோடு ஏ.இ.ஓ ஜெயலெட்சுமி அவர்கள் நான் தான் தருவேனென பகிர்ந்து கொண்டார்கள் .

இக்கூட்டம் சிறப்பாக அமைய முத்துநிலவன் அய்யா முழுமுதற்காரணம்.
கூட்டச் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் அக்கறை கொண்டு வழிநடத்தினார்.வீதிக்கான பதாகையை வடிவமைத்து கூட்டத்தின் சிறப்பை மேலும் கூட்டினார்.தான் வளர்வதை விட மற்றவர்கள் முன்னேற வழிகாட்டுவதில் அவருக்கு நிகரில்லை.

புதிதாக வண்ணம் பூசப்பட்ட ஆக்ஸ்போர்ட் கல்லூரி வீதியின் எழிலைக்கூட்டியது.மறுக்காமல் இடம் தந்து உதவிய ஆக்ஸ்போர்ட் சுரேஷ் அவர்களுக்கும் எனது நன்றி
 கூட்டம் சிறப்புடன் நடக்க ஒத்துழைத்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.முகநூலில் வாழ்த்து கூறிய தோழமைகளுக்கும் மிக்க நன்றி.




6 comments:

  1. கூட்ட நிகழ்வின் வெற்றியில் முதற்பங்கு உங்களுடையது. கடந்த 10நாள்களாக உங்களின் ஈடுபாடு மிகுந்த கேள்விகளையும், உழைப்புடன் கூடிய செயல்பாட்டையும் பார்த்து மகிழ்ந்திருந்தேன். வெற்றி என்பதன் பொருள் 40பேருக்கு மேல் வந்திருந்ததல்ல. நல்ல படைப்பாளிகள், விமர்சகர்கள் வந்ததைத்தான் சொல்கிறேன். இன்னும் இன்னும் முன்னேற நீங்கள் வழி அமைத்துவிட்டீர்கள். நல்லதே நடக்கும் நன்றி. உங்கள் கட்டுரையை வலையேற்றுங்கள் அது முக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி சார்.விரைவில் கட்டுரையை எழுதிவிடுகின்றேன்

      Delete
  2. வணக்கம் சகோதரி
    இலக்கிய சந்திப்பு பேசி கலைந்து போகும் நிகழ்வாக இல்லாமல் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று கூறிய முதன்மைக்கல்வி ஐயா அவர்களின் பேச்சு வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்வுக்கு தங்களின் பங்களிப்பு உண்மையில் பெருமையாக இருந்தது சகோதரி. தங்களுக்கு நன்றிகள். நமது பயணம் சரியான வழித்தடத்தில் நகர்வது மகிழ்வளிக்கிறது. அடுத்த கூட்டம் நீங்கள் தான் நடத்துகிறீர்கள், என்ன பார்க்கீறீங்க உங்க தம்பிக்கு யாரு உதவி பண்ணுவா! நீங்க தான் வழிகாட்ட வேண்டும். பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக.நான் செய்கிறேன் இன்னும் சிற்ப்பாக நடத்தலாம் சகோ.நன்றி

      Delete
  3. அருமையான பதிவு கவிஞரே..

    ReplyDelete
  4. படங்களுடன் அருமையான பதிவு. அருமையான தகவல்கள். நன்றி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...